சாதிய அமைப்பு அரசியல் -1

14 09 2016

சாதிய அமைப்பு அரசியல் -1

யமுனா ராஜேந்திரன்

யாழ்ப்பாணத்தில் சாதிய அமைப்பு பற்றி ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி முதல் தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த (Casteless or Caste-blind?: Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka : 2009)1 ஆய்வுகள் வரை நிறைய கல்வித்துறை சார் நெறியுடன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மேற்கத்தியர்களும் காலனியக் காலம் முதல் விடுதலைப் புலிகளின் காலம் வரை வடகிழக்கில் சாதி குறித்த ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சூழலில் விடுதலைப் புலிகளின் சாதி பற்றிய அரசியல் கேள்விகளை முதன் முதலில் எழுப்பியவர் (அன்றைய நிறப்பிரிகை வட்டம் சார்ந்த தலித்தியக் கோட்பாட்டாளரும், இன்றைய விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினருமான) பா.ரவிக்குமார்தான் (Himal South Aasia : Auguest 2002)

விடுதலைப் புலிகள் சாதி காப்பவர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, அப்புறமாக ஆதவன் தீட்சண்யா வரை எழுப்பும் கூக்குரல்களின் துவக்கம் ரவிக்குமாரின் கட்டுரைதான் என்று தயங்காமல் சொல்லலாம். புகலிட புலி எதிர்ப்பாளர்களின் தலித்தியக் கோட்பாட்டு வரையறை கூட ரவிக்குமாரை மேற்கோள் காட்டியே கட்டமைக்கப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் இன்றைய சட்டமன்ற உறுப்பினரான, விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் கொண்ட ரவிக்குமாரது அபிப்பிராயங்களும் காலமாற்றத்தில் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது என நாம் கொள்ள வேண்டிய அவசியமும் இன்று இல்லை.

2009 ஆம் ஆண்டு, தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த நூலில் விடுதலைப் புலிகளின் சாதியம் குறித்து விவாதிக்கிற (pages in between 50 to 78)3 ஒரு அத்தியாயம் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழ் சாதியப் பிரச்சினை அல்லது யுத்த காலத்தின் இடையில் யாழ்ப்பாணத்தில் சாதியப் பிரச்சினை பற்றி புள்ளியியல் அடிப்படையில் (statistically) ஆய்வு செய்வதில் ஆய்வாளர்கள் இரண்டு விதமான இடர்களை எதிர்கொள்கிறார்கள்.

முதல் இடர் ஏராளமான இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருக்கும் போர்ச் சூழலில் அந்த மக்களுக்கிடையில் ஆய்வுகளின் சாத்தியமின்மை. இரண்டாவது இடர் விடுதலைப் புலிகள் 1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை (banned caste descrimination and criminalised it)தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரையிலும் சாதி-நிலம்-பெண்ணொடுக்குமுறை தொடர்பாக உள்ளுர் மத்தியஸ்த குழுக்களின் உதவியுடன் வழக்குகளைக் கவனித்து வந்த விடுதலைப் புலிகள், 1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக நெறிகளையும் உருவாக்குகிறார்கள். சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள் (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code 1994 : Tamil Net : 30 October 2003).

விடுதலைப் புலிகளின் சாதி குறித்த பார்வைகளை ஆய்வு செய்வதற்கு முன்பாக புலிகளின் அமைப்பின் சாதிப் பண்பு (caste character like class character) என்ன என்ற கேள்வி எழுகிறது. புரட்சித் தலைமையின் வர்க்கப் பண்பு என்ன என்று ஆய்வு செய்வதைப் போன்ற கேள்வி இது. இதற்கும் முன்பாக, விடுதலைப் புலிகள் ஆளுகையின் கீழ் வடகிழக்குப் பிரதேசங்கள் அல்லது குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் வருவதற்கு முன்னால், அங்கு சாதியக் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது எனும் கேள்வியும் எழுகிறது. தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த நூலில் இது குறித்த வரலாற்றுரீதியான தரவுகள் தெளிவாகப் பதியப்படுகின்றன.
இந்திய பார்ப்பனர்களைப் போல் அல்லாமல், யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பில் நிலத்தைத் தம் வசம் வைத்திருந்த வெள்ளாளர்களே ஆதிக்க சாதியினராக இருந்தனர் இந்தியாவிலிருந்து கோயில் ஆகம காரியங்களுக்காக வெள்ளாளர்களால் அழைத்துவரப்பட்ட பார்ப்பனர்கள் வெள்ளாளர்களுக்குக் கீழாகவே சாதியப் படிநிலையில் இருந்தனர். வெள்ளாளர்களுக்குக் கீழான சாதியினை அவர்கள் குடிமக்கள் சாதியினராகவும் அடிமைகள் சாதியினராகவும் பிரித்திருந்தனர். குடிமக்கள் சாதியினர் வெள்ளாளர் வீடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். அடிமைச்சாதியினர் தீண்டத்தகாதவர்களாக இருந்தனர். பறையர், பள்ளர், நளவர் என இவர்களே அடிமைச்சாதியினர் எனத் திட்டவட்டமாக அறியப்பட்டனர். இவர்களுடன் அம்பட்டர், வண்ணார் ஆகியோர் சேர்ந்து பஞ்சமர், ஐந்து சாதியினர் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயரில் அறியப்பட்டனர். ஆய்வாளர்களும் இலங்கையில் தலித் எனும் பதம் அங்கீகரிக்கப்பட்டதாக இல்லாததால் பஞ்சமர் எனும் சொல்லிலேயே தலித் அடையாளத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதை மறுப்பது, பள்ளிக் கூடங்களில் படிப்பிக்க மறுப்பது, இரட்டைக் குவளை முறை போன்ற இந்திய பார்ப்பானிய சமூகத் தீண்டாமையின் வடிவங்கள் யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலைபெற்றிருந்தன. 1920 வரையிலும், பஞ்சமர் என யாழ்ப்பாணத்தில் வழங்கப்படுகிற தலித் மக்கள் இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடாமலேயே இருந்து வந்த நிலை இருந்தது. 1920 துவக்கம் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. என்.எஸ்.கந்தையா, பிற்பாடாக சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் கோயில் நுழைவுப் போராட்டம், பஞ்சமர்களுக்கெனப் பள்ளிக் கூடங்கள் அமைத்தல், இரட்டைக் குவளைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு, வெள்ளாள ஆதிக்கத்திற்கு எதிராகத் திரட்டப்பட்ட எதிர்ப்பை (organised resistence) தலித் சமூகத்தினர் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.
எழுபதுகளில் ஆயுதமேந்திய விடுதலை இயங்கங்களின் தோற்றம் என்பது அதுவரையிலான யாழ்ப்பாண அரசியல் தலைமையை வெள்ளாளர்களிடமிருந்து ஆயுதமேந்திய குழுக்களிடம் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகள் பிற இயக்கங்களை அழித்த பின்னால், வெள்ளாள அரசியல் தலைமை என்பது, விடுதலைப் புலிகளின் ஆரம்பக்காலத் தலைமையில் அதிகமும் இடம்பெற்ற இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கரையார் சாதியைச் சேர்ந்தவர். கரையார்களிலும் இந்துக்களும் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் இருந்தனர். விடுதலைப் புலிகளிடம் யாழ்ப்பாணத்தின் அரசியல் தலைமை வந்ததன் வழி வெள்ளாளர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது தகர்ந்தது.

விடுதலைப் புலிகள் தலைமையேற்றதிலிருந்து சாதியப் போராட்டம் தொடர்பான இரண்டு பண்புகள் வெளிப்படலாயின. முதலாவதாக விடுதலைப் புலிகள் சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தடை செய்தனர். இந்தத் தடையில் உள்ளார்ந்திருந்த பிறிதொரு அம்சம், சாதிப் பிரச்சினை என்பது தமிழீழ தேசிய ஒற்றுமையை முதன்மையாகக் கொண்டு இரண்டாம் பட்சமானது என அவர்கள் கருதி, சகல சாதியினரதும் மதத்தினரதும் ஒற்றுமையை வலியுறுத்தியதால், சாதியம் தொடர்பான எந்தவிதமான உரையாடல்களையும் விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்தார்கள்.

தொடரும்'.............

yarl,com 11 11 2015