தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 38) முதலாவது குடியரசு அரசியல் யாப்பும் சிறுபான்மையினரும்
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 38) முதலாவது குடியரசு அரசியல் யாப்பும் சிறுபான்மையினரும்
என்.கே.அஷோக்பரன் LLB (Hons)முதலாவது குடியரசு யாப்பின் கீழ் நீதித்துறை
சோல்பரி அரசியல் யாப்பின் கீழ், பிரதம நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமரின் ஆலோசனையின் பேரில் அரச தலைவரினால் நியமிக்கப்படுவர் என்ற விடயத்தில், 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. 1946ஆம் ஆண்டு முதல், பிரதம நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அல்லாத ஏனைய நீதித்துறை உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம், பதவிநீக்கம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன, நீதிச்சேவை ஆணைக்குழு வசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் முதலாவது குடியரசு யாப்பு மாற்றமொன்றை ஏற்படுத்தியது. நீதிச் சேவை ஆணைக்குழுவுக்குப் பதிலாக, ஐந்து பேரடங்கிய நீதிச் சேவை ஆலோசனைச் சபை ஒன்றையும், மூன்று பேர் கொண்ட நீதிச் சேவை ஒழுக்காற்றுச் சபையொன்றையும் ஸ்தாபித்தது. இரண்டுக்கும் பிரதம நீதியரசர் தலைமைதாங்கினார்.
நீதிச்சேவை உத்தியோகத்தர்களின் நியமனம் பற்றிய பரிந்துரைகளை, நீதிச் சேவை ஆலோசனைச் சபை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும், நீதிச் சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டது. நீதிச் சேவை ஆலோசனைச் சபை பரிந்துரைகளை மீறி, அது பரிந்துரைக்காத நபர்களைக் கூட நியமிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு இருந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்கான காரணத்தை தேசிய அரச சபையில் (முதலாவது குடியரசு யாப்பின் கீழ் சட்டவாக்கத் துறையான நாடாளுமன்றம், தேசிய அரச சபை என்றழைக்கப்பட்டது) சமர்ப்பித்தல் வேண்டும். நீதித்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கு அதிகாரம் நீதிச் சேவை ஒழுக்காற்று சபைக்கு இருந்ததுடன், தேசிய அரச சபையின் தீர்மானத்தின்படி, நீதிச் சேவை உத்தியோகத்தர் ஒருவரை பதவிநீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.
ஆகவே, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பின் கீழ் நீதித்துறையின் மீது, சட்டவாக்க மற்றும் நிர்வாகத் துறையின் ஆதிக்கம் திணிக்கப்பட்டது. இது பற்றி, 'இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் (ஆங்கிலம்)' என்ற தனது நூலில் கருத்துரைத்த ஜே.ஏ.எல்.குரே: '1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றமானது, சுதந்திரமான நீதித்துறைச் செயற்பாட்டுடன் இயைபுறுவதாக அமையவில்லை' என்கிறார். நீதித்துறையின் சுதந்திரத்தை இல்லாதொழித்து, அதனுள் அரசியல் தலையீட்டை முதலாவது குடியரசு யாப்பு ஏற்படுத்தியது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
முதலாவது குடியரசு யாப்புச் சட்டம் தொடர்பிலான நீதி மறு ஆய்வு அதிகாரம் தொடர்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. குறித்தவொரு சட்டமானது, அரசியலமைப்புக்கு முரணானது எனின் அதனை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருந்தது. முதலாவது குடியரசு யாப்பானது இது தொடர்பில் சில மட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. சட்டம் தொடர்பிலான நீதி மறு ஆய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு வழங்கியதுடன், சட்ட மூலமொன்று தேசிய அரச சபையில் நிறைவேற்றப்பட முன்பதாக, அச்சட்டமூலம் தேசிய அரச சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு வார காலத்துக்குள் மட்டுமே அதனை நீதி மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தேசிய அரச சபையினால் நிறைவேற்றப்பட்டு, சட்டமானதன் பின்னர் அதனை நீதி மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்றும் கூறியது.
அது மட்டுமல்லாது, தேசிய நன்மை கருதிய அவசரச் சட்டமூலம் என்று அமைச்சரவையால் தீர்மானிக்கப்படும் சட்டமூலங்கள் மீதான அரசியலமைப்பு நீதிமன்றின் கருத்தை, நீதிமன்றம் கூடிய இருபத்து நான்கு மணிநேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, 55ஆவது சரத்து கூறியது. இந்த நடைமுறை பொதுவாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை, இது நடைமுறையிலுள்ள நாடுகளில் நாம் காணலாம்.
இந்த ஏற்பாடுகள் தேசிய அரசு சபைக்கு மிகப் பலம்வாய்ந்த அதிகாரங்களை வழங்கியதுடன், நீதித்துறையின் அதிகாரங்களைப் பெருமளவு மட்டுப்படுத்தியது. எந்தவொரு அரசியலமைப்பு ஜனநாயகத்திலும் நீதித்துறைக்கு சட்டங்களின் நீதி மறு ஆய்வு அதிகாரம் என்பது அவசியம் இருக்க வேண்டும். சட்டவாக்கத்துறையின் வல்லாதிக்கத்தை தடுக்கவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் இது அவசியமாகும். முதலாவது குடியரசு யாப்பு இந்த அதிகாரத்தையும் அர்த்தமற்றதொன்றாக்கியது.
முதலாவது குடியரசு யாப்பின் கீழ் பொதுச் சேவை
1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்புக்கு முன்பதாக, பொதுச் சேவை உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம், பதவிநீக்கம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன ஆளுநரினால் (அரச தலைவரினால்) நியமிக்கப்படும் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், முதலாவது குடியரசு யாப்பில் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டது. பொதுச் சேவை ஆலோசனைச் சபை மற்றும் பொதுச் சேவை ஒழுக்காற்றுச் சபை என இரண்டு சபைகள் நியமிக்கப்பட்டன.
பொதுச் சேவை ஆலோசனைச் சபையின் பரிந்துரையின் பெயரில் பொதுச் சேவைக்கான நியமன அதிகாரம் உரிய அமைச்சருக்கு வழங்கப்பட்டது. உரிய அமைச்சர், அவ்வதிகாரத்தை தமக்குக் கீழான அரச உத்தியோகத்தருக்கு வழங்கத்தக்கதாக இருந்தது. ஒழுக்காற்று நடவடிக்கைகள் பொதுச் சேவை ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரையின் பெயரில் செய்யப்பட்டது. ஆகவே, பொதுச் சேவையின் மொத்தமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது சுதந்திரப் பொதுச் சேவை என்பதை இல்லாதொழித்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட பொதுச் சேவையின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தது. உயர் மதிப்புமிகு சேவையாக இருந்த பொதுச் சேவை, அரசியல்மயமாக்கத்தின் பின்னர், அரசியல்வாதிகளின் ஆளுகைக்குட்பட்ட கூடாரமாக மாறியது என்பதுதான் நிதர்சனம்.
இது பற்றி தனது பொதுச் சேவை பற்றி அனுபவத்தை பகிர்ந்த கலாநிதி சுதத் குணசேகர 'இன்று அரசியல்வாதிகளும் பொதுச் சேவை உத்தியோகத்தர்களும், பொதுமக்களின் சேவகர்களாக இருப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அரசியலும் பொதுச் சேவையும் தனிப்பட்ட நலன்களுக்காக பொதுமக்களைச் சுரண்டும், கொள்ளையடிக்கும் விடயமாக மாறிவிட்டது. பொதுச் சேவையென்பது முழுநேரமாக அரசியல்வாதிகளுக்கு சேவை புரியும் ஒன்றாக மாறிவிட்டது, அது பொது மக்களுக்காக சேவையாற்றும் சுதந்திர பொதுச் சேவை அல்ல. அதனால் தனிப்பட்ட நலன்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்தலே நடைமுறையாகிவிட்டது' என, தனது 35 வருட கால பொதுச் சேவை அனுபவத்தின் அடிப்படையில் பதிவு செய்கிறார்.
சிறுபான்மை மக்களின் நிலை
1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பானது, இந்நாட்டின் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அதன் உள்ளடக்கத்தின் முக்கிய அம்சங்களை அலசிப்பார்த்தல் அவசியமாகியது. எந்தவொரு பிரகடனமும் அவசியப்பட்டு இருக்காத நிலையில், இலங்கையை ஒற்றையாட்சி நாடாகப் பிரகடனப் படுத்தியது முதல், பல மதங்களும் நம்பிக்கைகளும் உள்ள ஒரு நாட்டில், பெரும்பான்மையினர் பின்பற்றும் மதத்துக்கு முன்னுரிமை கொடுத்தமையும் பிரதானமாக இருமொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாட்டில், ஒரு மொழிக்கு மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அங்கிகாரம் கொடுத்தமையும், சிறுபான்மை மக்கள் பேசும் மொழியை இரண்டாந்தர நிலையில் வைத்தமையும், சிறுபான்மை மக்களுக்கு சோல்பரி அரசியல்யாப்பின் 29(2) பெயரளவிலேனும் வழங்கிய பாதுகாப்பை இல்லாதொழித்தமையும், எந்நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டிய மனித உரிமைகளை வெறும் அலங்காரமாக உருவாக்கியமையும், எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் தேவையான அதிலும் குறிப்பாக பல்லின மக்கள் வாழும் ஜனநாயக நாடுகளுக்கு அவசியமான நீதித்துறையின் சுதந்திரத்தைக் குறைத்தமையும், நீதி மறு ஆய்வு அதிகாரத்தை மட்டுப்படுத்தியமையும், சமத்துவமிக்க நாட்டுக்கு தேவையான சுதந்திரப் பொதுச் சேவையை இல்லாது செய்தமையும் என ஒட்டுமொத்தத்தில் இந்நாட்டு மக்களை, சிறுபான்மையினரை, குறிப்பாக தமிழர்களை வஞ்சித்த ஓர் அரசியலமைப்பாகவே 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு அமைந்தது என்பதுதான் நிதர்சனம். நாட்டின் பெரும்பான்மையினரான சிங்கள-பௌத்த வாக்கு வங்கியைக் கையகப்படுத்துவதற்கான போராட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகள் ஆளுக்காள் போட்டியிட்டு, பேரினவாதத்தின் நலன்களை முன்னிறுத்தின என்பதுதான் சுதந்திர இலங்கையின் உண்மை நிலைவரம்.
சிங்களத்துடன் தமிழும் சேர்த்து உத்தியோகபூர்வமொழியாக்கப்பட்டிருந்தால் மொழிப்பிரச்சினை எழுந்திருக்காது. பௌத்தத்துக்கு மட்டும் முன்னுரிமையளிக்காது, இலங்கையை மதச்சார்பற்ற அரசாக தொடர்ந்து வைத்திருப்பின் நிலைமைகள் வேறாக இருந்திருக்கலாம். சுதந்திர நீதித்துறை இருந்திருந்தால், இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படாது இருந்திருக்கலாம்.சுதந்திர பொதுச் சேவை இருந்திருந்தால், அரசியல் தொடர்பு அல்லது அரசியல்வாதிகளின் விருப்பு அல்லது தேவை என்ற அடிப்படைகளிலன்றி, தகுதி அடிப்படையில் பொதுச் சேவை நியமனங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இவை நடக்கவில்லை. பேரினவாத வாக்கு வங்கி அரசியலுக்கான போட்டியில் நாட்டு மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டனர். சிங்கள அரசியலில் சாதியும் குடும்பமும் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய நூலில் ஜனிஸ் ஜிகின்ஸ்,'1956 முதல் அடுத்த 20 வருடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்பாட்டை முழுமையாக அல்லது பெருமளவுக்கு தமது ஆதரவாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் அரசியல் தலையீடுகள் மூலம் தமது வாக்கு வங்கிக்கு இலாபங்கள் கிடைக்குமாறும் மேற்கொண்டனர்' என்று குறிப்பிடுகிறார்.
நாடு, நாட்டு மக்கள், நாட்டின் நலன் என்பதைத் தாண்டி, வாக்கு வங்கி என்பதற்குள் அதுவும் இனவாரி, மதவாரி, பிரதேசவாரி, சாதிவாரி வாக்கு வங்கிகளுக்குள், இலங்கையின் அரசியல் அடைபட்டுப்போனது. இதன் விளைவாக, பெரும்பான்மை மக்களான சிங்கள பௌத்தர்கள் நன்மைகளை அனுபவிக்க, சிறுபான்மையினர் பெரும் பாதிப்புக்களை சந்திக்க வேண்டியதாக இருந்தது. 'தனிச்சிங்கள'ச் சட்டம் வந்ததால்தான், கிராமத்திலிருந்த சிங்கள இளைஞனுக்கும் அரச வேலை கிடைத்தது என சிங்கள அரசியல் தலைவர்கள் 'தனிச் சிங்கள'ச் சட்டத்தின் புகழ் பாடுவதைக் காணலாம்.அது உண்மை. அனைவருக்கு தமது தாய்மொழியில் கல்வி கற்கும், தொழில் செய்யும், அன்றாட வாழ்க்கையின் பல்வேறு விடயங்களிலும் தொடர்பாடல் செய்யும் உரிமை அவனுடைய தாய்நாட்டில் இருக்கவேண்டும். ஆனால், சிங்கள இளைஞனுக்கு இருக்கும் அதே உரிமை, இந்நாட்டின் தமிழ் பேசும் இளைஞனுக்கும் வேண்டும் அல்லவா, இலங்கையிலுள்ள சிங்கள பௌத்தன் ஒருவனுக்குள்ள அதேயுரிமை, இலங்கையிலுள்ள சிங்களக் கத்தோலிக்கனுக்கும் தமிழ் இந்துவுக்கும் தமிழ் இஸ்லாமியனுக்கும் தமிழ் பௌத்தனுக்கும் தமிழ் கத்தோலிக்கனுக்கும் பறங்கியனுக்கும் மற்றும் எல்லாத்தரப்பினருக்கும் இருக்க வேண்டும் அல்லவா, இதை 1956 முதல் பதவிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் உணரத் தவறியதன் விளைவுதான் இலங்கையின் வரலாறு இரத்தக்கறையில் எழுதப்படவேண்டியதாக மாறியது.சிறுபான்மை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மீதான வஞ்சனைப்போக்கு, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்புடன் நின்று விடவில்லை. அதனைத் தொடர்ந்தும் இடம்பெற்ற பல விடயங்கள்தான் இந்நாட்டின் வரலாற்றின் கறுப்புப் பக்கங ;களை இரத்தக் கறைகொண்டு எழுதக் காரணமானது
yarl.com 09 05 2016