இலங்கையில் ஜனநாயகம் பெயரளவிலேயே உள்ளது! ஐநா விசேட பிரதிநிதியிடம் விக்னேஸ்வரன்

tamilwin.com 19 02 2014 இலங்கையில் ஜனநாயகம் பெயரளவிலேயே உள்ளது! ஐநா விசேட பிரதிநிதியிடம் விக்னேஸ்வரன்

இலங்கையில் ஜனநாயகம் பெயரளவில் தான் வந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக்கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அரசியல் விவகாரங்களுக்கான யு.என்.ஏயின் பணிப்பாளர் மேரி ஜமட்டா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறியை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதனையடுத்து யாழ்.கோவில் வீதியிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு முற்பகல் 11 மணியளவில் வருகைதந்த அவர்கள் வடக்கு மாகாண முதலiமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்தச் சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அரசியலில் எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். வடக்கு மாகாண சபைத்தேர்தலை நடத்திவிட்டதனால் இலங்கையில் ஜனநாயகம் வந்துவிட்டதாக கூறமுடியாது. இங்கு ஜனநாயகம் பெயரளவில் தான் வந்துள்ளது.

மாகாண சபை அமைந்த பின்பும் வடக்கிற்கு பல தடைகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது. மாகாண சபைக்கு அதிகாரங்களை பகிர்வதில் இருந்து பலவிடயங்களை எடுத்துக்கூறினோம் அத்தோடு இலங்கையின் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம் என்றார். இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கன், பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.