2016: மீள்பார்வை: படிப்பினைகள்

30 12 2016

2016: மீள்பார்வை: படிப்பினைகள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

காலம் கனிவுடன் நடந்துகொள்வதில்லை. காலம் யாருக்கும் எதற்காகவும் கருணை காட்டுவதுமில்லை. காலம் கடந்துபோன பின்னர், கடந்து போன காட்சிகளும் காலமும் வரலாறாகின்றன. கடந்து போன அனைத்தும் வரலாறாவதுமில்லை. அந்தச் சலுகையை வரலாறு செய்வதில்லை. கடந்து போன காலத்தின் நிகழ்தல்கள் பல. பதியப்பட்டவை அதில் சில; மறக்கப்பட்டவை பல; மறைக்கப்பட்டவை மிகப்பல. இவற்றைத் தாண்டி வரலாற்றில் இடம்பெறுபவை மிகச் சொற்பம். ஆனால், வரலாறு காலத்தின் கண்ணாடியாய்த் தன்னைப் பிரதிபலிக்கும் போது, எதிர்பார்த்தவைகளையும் எதிர்பாராதவைகளையும் சேர்த்தே வழங்கிவிடும். வரலாறு செய்யும் மாயங்களில் அதுவும் ஒன்று.

கடந்து போகும் 2016 ஆம் ஆண்டை வரலாறு எவ்வாறு தன்னுள் உட்பொதிந்து கொள்ளும். வரலாற்றில் 2016 எவ்வாறு பிரதிபலிக்கும். இவை இன்றைய காலத்தின் கேள்விகள். ஒவ்வொரு ஆண்டும் போலவே இவ்வாண்டும் சில முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. அரசியல் மாற்றங்கள், படுகொலைகள், போர்கள், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாதச் செயல்கள் என எல்லாம் கலந்த கலவையாய் இவ்வாண்டும் கடந்து போகிறது. இவ்வாண்டை மீட்டுப் பார்க்கையில் இதை வெறும் சம்பவங்களின் தொகுப்பாய் நோக்குவது உலக அரசியல் அரங்கை விளங்கப் போதுமானதல்ல. இம்மீள்பார்வை அடுத்த ஆண்டுக்கான திசைவழியைக் காட்டுவதாய் இருக்க வேண்டியதோடு, மக்களின் பார்வையில் அமைவதும் முக்கியமானது. அவ்வகையில் உலக அரசியல் அரங்கின் போக்கில் கோட்பாட்டு ரீதியிலான நான்கு அடிப்படைகளை நோக்குவதோடு, கடந்தாண்டு இடம்பெற்ற நம்பிக்கை தரக்கூடிய நான்கு மக்கள் போராட்டங்களின் அனுபங்களையும் விளங்குவதும் இம்மீள்பார்வையின் நோக்கமாகும். இவ்வாண்டின் அரசியல் அரங்கைப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பே.

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான வாக்கெடுப்பை நடாத்தத் தீர்மானித்ததிலிருந்து, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறாது என்றும் பிரித்தானியர்கள் அவ்வாறானதொரு வெளியேற்றத்துக்கு அனுமதிக்கமாட்டார்கள் என்றும் தொடர்ந்தும் சொல்லப்பட்டது. அதுவொரு முடிந்த முடிவாகவே இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் ‘பிரிக்ஸிட்’ என அழைக்கப்பட்ட பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான சர்வசன வாக்கெடுப்பை நடாத்தத் தீர்மானித்தார். இறுதியில் பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சியளித்தனர். ஐரோப்பிய ஒன்றியம் என்ற கூட்டமைப்புக்கும் நிறுவனமயமான அரசியலுக்கும் விழுந்த பலத்த அடியாக இது நோக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான குரல்கள் வலுத்துள்ளன. பிரித்தானியப் பிரதமர் பதவி விலகியதோடு பிரித்தானியாவின் ஐரோப்பாவின் பிரதான அரங்காடி என்ற நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதேபோல இத்தாலியப் பிரதமர் மற்றெயோ றென்சி இத்தாலியின் வினைத்திறனான ஆட்சிக்கு அரசியல் யாப்புத் தடையாயிருக்கிறது என்ற அடிப்படையில் புதிய யாப்புத் திருத்தங்களை முன்மொழிந்து, அதற்கான ஆணையைப் பெறுவதற்குச் சர்வசன வாக்கெடுப்பைப் கோரினார். அதில் தோல்வியும் அடைந்து பதவி விலகினார். இத்தேர்தல் முடிவு ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான அரசியல் சக்திகளின் வளர்ச்சியும் மக்களிடையே அவர்கட்குள்ள ஆதரவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. அடுத்து, மிகப்பெரிய ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடிக்கான பொறியைத் தட்டும் நிலையில், ஏற்கெனவே தடுமாறும் இத்தாலிய வங்கிகள் உள்ளன. இவையனைத்தும் பொருளாதார ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலிமையை, சவாலுக்குட்படுத்தியுள்ளன.

உலகின் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ஃபார்க் அமைப்பின் போராட்டம், இவ்வாண்டு கொலம்பிய அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் எட்டிய சமாதான உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்தது. எட்டப்பட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கிகாரத்தைக் கோரி, நடாத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பில் கொலம்பிய மக்கள், எட்டப்பட்ட உடன்படிக்கையை எதிர்த்து வாக்களித்து, அதிர்ச்சியளித்தன் மூலம், அமைதியின் சாத்தியமின்மையை மீண்டுமொருமுறை உணர்த்தினார்கள். அமைதி, எவ்வளவு கடினமானது என்பதை உலகுக்கு உணர்த்திய வாக்கெடுப்பாக இதைக் கொள்ளல் தகும். ஏனெனில் 52 ஆண்டுகளாக நடைபெறும் ஒரு போராட்டத்துக்கு எட்டப்பட்ட தீர்வை ஏற்க மறுப்பதை எவ்வாறு விளங்கிக் கொள்வது.

இந்நிகழ்வு கடந்தாண்டு சார்ந்து இரண்டு விடயங்களைச் சொல்கிறது. முதலாவது ஏற்கெனவே பிரித்தானியாவிலும் அதைத் தொடர்ந்து இத்தாலியிலும் நடைபெற்றது போல மக்கள் பொதுவிருப்புக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது சமாதானத்தை எட்டுவது என்பது ஒன்று, அதற்கு மக்கள் ஆதரவைப் பெறுவது என்பது இன்னொன்று.இதேபோல பிலிப்பின்ஸின் ஜனாதிபதித் தேர்தலில் யாரும் எதிர்பாராதவாறு ரொட்ரிகோ டுட்டார்ட் வென்று ஜனாதிபதியாகத் தெரிவாகியமை ஏற்படுத்திய அதிர்ச்சியலை அவரது வெற்றியிலும் பெரிது. மேயராக இருந்தபோது சட்டவிரோத ஆயுததாரிகளை ஏவலாளர்களாகப் பாவித்துக் குற்றவாளிகளைக் கொன்றதாக இன்னமும் அவர்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. கடுமையாகப் பேசும், கலக மனப்பாங்கான தண்டனை விதிப்பாளர் என அறியப்படும் ரொட்ரிகோ டுட்டார்ட்டின் தெரிவு, பிலிப்பினோ மக்களின் தெரிவு பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் பிரசாரத் தொடக்கத்தில் ஒரு பிரதான வேட்பாளராகக் கருதப்படாத, பிரசாரத்துக்குப் பணம் திரட்டுவதற்கே வழியற்ற ஒருவரின் வெற்றியை விளங்கிக் கொள்வது சிக்கலானது.

ஆனால்,மூன்றாமுலக மக்களின் அரசியற் தலைமைத்துவத் தெரிவுகளை விளங்க பிலிப்பின்ஸின் ஜனாதிபதித் தேர்தல் வாய்ப்பாயுள்ளது. ஏனெனில், இதேபோன்ற கடும்போக்குவாதத் தலைவர்களுக்கான ஆதரவு, புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள ஓர் அரசியல் அலையைக் கோடுகாட்டுகிறது. ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்ற இரு கதையாடல்களிடையிலான போட்டியாகத் தெரிந்த, ஜனாதிபதித் தேர்தலில் டுட்டார்ட்டின் வெற்றியை, வெறுமனே மக்கள் சர்வாதிகாரத்தை விரும்புவதன் அறிகுறி எனச் சுருக்க முடியாது. செயற்றிறனற்ற தலைவர்கட்கும், வரன்முறையாகிவிட்ட ஊழலுக்கும் தொடர்ந்து நிறைவேற்றாத வாக்குறுதிகட்கும் பழக்கப்பட்ட பிலிப்பினோக்கள், வழமையான தெரிவுகளைத் தவிர்த்து, ‘வெளியாளாகக்’ கருதப்பட்ட ஒருவரை தெரிந்திருக்கிறார்கள். இது புதிதும் புதிரானதுமாகும்.

இன்னொரு வகையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் தெரிவும் இவ்வாறு நிகழ்ந்தவொன்றுதான். தேர்தல்கள் வரிசையில் முத்தாய்ப்பாய் கிடைத்த அதிர்ச்சி வைத்தியம், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் உறுதிசெய்யப்பட்ட வெற்றியாளராகிய ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து, அமெரிக்க அரசியல் நிறுவனமயமாதலுக்குள் இல்லாத வெளிநபரான டொனால்ட் ட்ரம்பின் வெற்றி, அமெரிக்க ஆளும் வர்க்கத்தை மட்டுமன்றி, மேற்குலகின் அரசியல் அடுக்குகளையே அசைத்துப்பார்த்த நிகழ்வாகும். ஒரு வியாபாரியின் அரசியல் பிரவேசம், அதன் தொடக்கந்தொட்டு விரும்பப்படவில்லை. குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவாவதில் தொடங்கிய ட்ரம்பின் கடும் முயற்சி, நிறைவில் அவரை அமெரிக்காவின் ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்தியிருக்கிறது. இது அமெரிக்க அரசியல் வரலாற்றின் முக்கிய நிகழ்வாகும். அதிதீவிரவாத வெள்ளை நிறவெறியை வெளிவெளியாகப் பேசக்கூடிய ஒருவரின் தெரிவு, அமெரிக்காவின் ஜனநாயக முகத்திரையை பொதுவெளியில் கிழித்துள்ளது.

மேற்சொல்லப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் சில திசைவழிகளை எமக்கு உணர்த்துகின்றன. முதலாவது தேர்தல்களில் கருத்துக் கணிப்புக்கள் எவ்வளவு தூரம் அரசியல் சார்ந்தவை என்றும் அவை எப்போதும் உண்மையை உரைப்பதில்லை என்பதையும் உணர்த்தியுள்ளன. எந்தவொரு கருத்துக்கணிப்பும் ட்ரம்ப் ஜனாதிபதியாவார் என்பதை கணிக்கவில்லை. இறுதியில் சுலபமாக, மிகுந்த இடைவெளியுடன் கூடிய வெற்றியை ட்ரம்ப் பெற்றார். அதேபோலவே, பிரிக்ஸிட் நடைபெறாது என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அவ்வகையில் கருத்துக்கணிப்புகள் நம்பகத்தன்மையை இழந்த ஆண்டாக இவ்வாண்டைச் சொல்லலாம்.

இரண்டாவது மக்கள் வழமையான நிறுவனமயப்பட்ட ஒழுங்குக்குட்பட்ட தெரிவுகளை மறுக்கிறார்கள். இது அரசியல் ரீதியாகப் புரட்சிகரமானதாக உள்ளபோது, அதை உந்திய காரணிகள் புரட்சிகரமானவை அல்ல. ஒருபுறம் பொருளாதார ரீதியான நெருக்கடிகளும் மறுபுறம் கடும்போக்குத் தேசியவாதம், அரசியல் மைய நீரோட்டத்தின் பிரதான இயங்குநிலைப் பாத்திரத்தை எடுப்பதற்கான சூழலும் உருவாகின.

மூன்றாவதாகத் தேர்தல்கள் உண்மையான ஜனநாயக நடவடிக்கையா என்ற கேள்வி மேலெழுந்து, ஜனநாயகம் தொடர்பான புதிய விளக்கத்துக்கான தேவை உணரப்பட்ட ஆண்டாக 2016 ஆம் ஆண்டைச் சொல்லாம். இன்னொரு வகையில் ஜெரமி பெந்தமின் ‘பெருந்தொகையானோரின் பெருவிருப்பு’ என்பதற்கெதிரான ஜோன் ஸ்டுவாட் மில்லின் ‘விருப்பு என்பது எண்ணிக்கை சார்ந்ததல்ல, தரம் சார்ந்தது’ என்ற விமர்சனத்தை உயிர்ப்பிக்கும் வகையினதாக அமைந்து விடுகிறது.

நான்காவதாக, இவ்வாண்டின் மிகப்பெரிய பலி ஊடகங்களின் நம்பகத்தன்மையாகும். பொதுப்புத்தி மனநிலையை வடிவமைக்கும் வேலையை ஆண்டாண்டு காலமாகச் செய்துவந்த ஊடகங்கள், நடுநிலை என்ற பெயரில் எவ்வாறு பக்கச்சார்பாக நடந்து கொள்வதோடு, செய்தித் திரிப்பையும் பொய்யான செய்திகளையும் வழங்கி வந்தார்கள் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் அறியக்கூடிய இவ்வாண்டு நிலவரங்கள் உருவாக்கின.

தேர்தல்கள் தொடர்பான செய்திகள் தொட்டு, சிரிய யுத்தத்தின் உண்மை நிலவரம் வரை மறைக்கப்பட்ட, பதுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, புனையப்பட்ட செய்திகள் உண்மை போல எவ்வாறு ஊடகவெளியை நிறைத்தன என்பது வெட்டவெளிச்சமாக்கிய ஆண்டாக இவ்வாண்டு முக்கியமானது. ஊடகங்கள் அதன் நம்பகத்தன்மையை இழந்துள்ளமையானது பாரம்பரிய ஊடகங்களின் இயங்குதளத்தை நெருக்கடிக்குள்ளாக்கியதோடு அபிப்பிராயங்களைக் கட்டமைப்பவர்களாக ஊடகங்கள் கொண்டிருந்த வலிமையான பங்கைச் சிதைத்துள்ளது.

இவை, இவ்வாண்டின் முக்கிய திசைகாட்டிகள். இவற்றின் தாக்கம் அடுத்த ஆண்டிலும் நிச்சயம் இருக்கும். இதேவேளை ஊடகங்களின் கவனங்களுக்கு எட்டாத அதேவேளை மக்களின் உரிமைகளுக்கும் வாழ்தலுக்குமான போராட்டங்கள் இவ்வாண்டு முழுவதும் நடைபெற்றுள்ளன. அவை வெவ்வேறு வடிவங்களில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவுகளில் இடம்பெற்றன. அவற்றில் சில வெற்றி பெற்றன. சில தோல்வியடைந்தன. பல இன்னமும் தொடர்கின்றன. அவ்வாறு வெற்றியளித்த போராட்டங்கள் போராடுகின்ற ஏனைய மக்களுக்கான உந்துசக்தியாக உள்ளன. அவ்வகையில் முக்கியமான வெற்றிகளைப் பெற்ற போராட்டங்களை நோக்கலாம்.

முதலாவது, கடந்த செப்டெம்பர் மாதம் இந்தியாவில் 150 மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நூற்றாண்டின், மிகப்பெரிய தொழிற்றுறை நடவடிக்கையாக அறியப்பட்ட இவ்வேலைநிறுத்தத்தால் அரசாங்க வங்கிகள், போக்குவரத்து என்பன முழுமையாக முடங்கின. தொழிலாளர் உரிமைகள், மறுக்கப்படுகிற போது எழும் தொழிற்சங்க நடவடிக்கைகள், நாசகாரச் செயல்களாகப் பார்க்கப்படுகிற சூழலில் இவ்வாறானதொரு நடவடிக்கைகள், உலகளாவிய உழைக்கும் மக்களுக்கு, சுரண்டலுக்கெதிராகப் போராடுவதற்கான நம்பிக்கையை வழங்கியுள்ளன.

இரண்டாவது, அமெரிக்காவின் வடக்கு டகொட்டாவில் பழங்குடி மக்களின் வாழ்விடங்களுக்கு ஊடாக அமைக்கப்படத் திட்டமிடப்பட்ட எண்ணெய்க்குழாய்க் கட்டுமானத்துக்கு எதிரான போராட்டம் முக்கியமானது. அமெரிக்கப் பழங்குடிகள் தங்கள் பகுதிகளின் குடிநீர் மாசாக்கம், சூழல் மாசடைவு என்பவற்றை இவ்வெண்ணெக்குழாய்களில் இருந்து வெளியேறும் கழிவுகள், கசிவுகள் உருவாக்கும் எனத் தெரிவித்து, அக்கட்டுமானத்துக்கு எதிராகக் கடும்குளிரையும் பொருட்படுத்தாது, தொடர்ந்து போராடுகின்றனர். அமெரிக்கப் பூர்வகுடிகளின் உரிமைக்கானதும் நீதிக்கானதுமான போராட்டமாக மாறியுள்ள நிலையில், இலாபத்தையும் சுரண்டலையும் வேண்டுகின்ற நவதாராளவாதத்துக்கும் சூழலியலுக்கும் இடையிலான பெரும்போரின் வடிவமாக இப்போராட்டம் தன்னைக் கட்டமைத்துள்ளது. இப்போராட்டத்தின் இடையறாத தன்மையும் அதற்கெதிரான ஒடுக்குமுறையின் வடிவங்களும் இனிவரும் காலத்தில் சூழலைக் காப்பதற்கான போராட்டத்துக்கான பாடங்களைத் தந்துள்ளன.

மூன்றாவது, அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான, பொலிஸ் வன்முறையையும் நிறவெறியையும் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளன. இவை, அமெரிக்காவைத் தாண்டி மேற்குலக நாடுகளின் கறுப்பர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உயிர்கொடுத்துள்ளதோடு, வெள்ளை நிறவெறிக்கெதிரான போராட்டத்தின் முக்கிய குறியீடாகியுள்ளன.

நான்காவது, கென்யாவில் ஆசிரியர்கள் தங்கள் தொடர் போராட்டங்களின் விளைவால் தங்கள் உரிமைகளை ஓரளவு பெற்றுள்ளார்கள். கென்யாவில் பாடசாலைகளும் கல்வியும் முழுமையாகத் தனியார்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இவர்கள் இவ்வாண்டு முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் போராடி வருகிறார்கள். இவை அரசாங்கங்கள் எவ்வாறு சமூகநலன்களைக் குறைத்துப் பொதுத்துறைகளைத் தனியாரிடம் கையளிக்கின்றன என்பதற்கான அபாய அறிவிப்பாக இருக்கின்றன. இப்போராட்டம் தனியார் மயமாக்கலுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களின் முக்கிய கண்ணியாகும்.

இவ்வாண்டு, எமக்குப் பல படிப்பினைகளைத் தந்து செல்கிறது. கற்பதும் கற்காமல் கண்மூடி இருப்பதும் எமது தெரிவு. ஆனால், வரலாறு திரும்பும்போது, நமது தவறுகளைத் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பை, அது வழங்குவதில்லை என்பது மட்டும் உண்மை. நம்பிக்கை என்பது தளராதவரையில் உலகம் வெற்றிகொள்ளக் கூடியதே.
tamilmirror.lk 29-12-2016