மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 1

08 01 2017

மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 1

அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவுக்கு தேசிய, பொது மக்கள் பாதுகாப்பு , பொது ஒழுங்கு, பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு பரிந்துரைத் திருக்கும் விடயங்கள்: மாகாணங்கள் தோறும் மாகாணப் பொலிஸ் படை நிறுவப்படுவதுடன், மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுக்களையும் அமைப்பதற்கு தேசிய மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ,பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு பரிந்துரைத்திருக்கிறது.
சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவை தலைவராகக் கொண்டதும் 11 உறுப்பினர்களை உள்ளடக்கியதுமான இந்த உப குழுவுக்கு லங்கா சம சமாஜா கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசக் கூட்டணி, மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, இலங்கை மக்கள் முன்னணி, வட மாகாண சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தரணிகள் சங்கம், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் கூட்டமைப்பு, பாராளுமன்ற கூட்டு எதிர்க்கட்சி உட்பட கட்சிகள், அமைப்புகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு இந்த உப குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.உப குழுவானது மாகாணப் பொலிஸ் தொடர்பாக பரிந்துரைத்திருக்கும் விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.

*மாகாணப் பொலிஸ்

(அ)ஒவ்வொரு மாகாணத்திற்குமென மாகாணப் பொலிஸ் காணப்படும்.
(ஆ) மாகாணப் பொலிஸானது
(அம் மாகாணத்தின் பெயர்) மாகாணப் பொலிஸ் என அறியப்படும் ( உதா : சப்ரகமுவ மாகாண பொலிஸ்)
(இ) ஒவ்வொரு மாகாணப் பொலிஸும் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
* மாகாணப் பொலிஸ் தலைமைப் பணியகம்
* ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திற்குமான ஒரு மாவட்டப் பணியகம் ( பிராந்தியம்)
* முதலமைச்சர் மற்றும் உரிய மாகாணத்தின் பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றுடன் கலந்தாலோசித்து மாகாணப் பொலிஸ் ஆணையாளரினால் தீர்மானிக்கப்பட்டவாறான எண்ணிக்கையிலான தொழிற்பாட்டுப் பணியகங்கள்.
மாகாணப் பொலிஸ் பயிற்சி நிறுவகம்
(ஈ) மாகாணப் பொலிஸாரின் நிறுவனப் பிரசன்னமானது மாகாணப் பொலிஸ் தலைமையகம், பணியகங்கள், அலகுகள், பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் காவலரண்கள் என்ற வடிவங்களை எடுக்கும்.
(உ) மாகாணப் பொலிஸ் தலைமையகம், பணியகங்கள், அலகுகள், பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் காவலரண்கள் என்பன உரிய மாகாணப் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் முதலமைச்சருடன் கலந்துரையாடி உரிய மாகாணப் பொலிஸ் ஆணையாளரால் தீர்மானிக்கப்பட்டவாறாக அமைக்கப்படும்.
(ஊ) ஒரு மாகாணப் பொலிஸின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய மாகாணத்திற்குள் மாத்திரம் தமது அதிகாரங்களையும் தொழிற்பாடுகளையும் சாதாரணமாக செயற்படுத்துவர். எவ்வாறாயினும், மாகாண பொலிஸ் ஆணையாளருடனும் கலந்தாலோசித்து பொலிஸ் மா அதிபரால் இது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் பிரகாரம் அவரிடம் ஒப்புவிக்கப்பட்ட சட்டபூர்வமான கடமைக்கு விளைவுகொடுக்கும் நோக்கத்திற்காக மாகாணப் பொலிஸ் உத்தியோகத்தரானவர்கள் அவரது மாகாணத்திற்கு வெளியேயும் அதிகாரங்களையும் தொழிற்பாடுகளையும் ஆற்ற முடியும்.
(எ) பொலிஸ்மா அதிபருடன் கலந்தாலோசித்து விருத்தி செய்யப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாகாணப் பொலிஸார் தேசிய பொலிஸாருடன் ஒத்துழைத்துச் செயற்படுவர்.
(ஏ) இரண்டு அல்லது பல மாகாணப் பொலிஸாருக்காகவோ அல்லது தேசிய மற்றும் ஒரு மாகாணப் பொலிஸாருக்காகவோ அல்லது தேசிய மற்றும் இரண்டு அல்லது பல பொலிஸாருக்காகவோ ஒரு கூட்டு விசாரணையை அல்லது நடவடிக்கையை பொறுப்பெடுத்து நிறைவேற்றுவது சட்ட ரீதியானதாக இருக்கும்.
(ஐ) ஒரு இயற்கை அனர்த்தத்திற்குப் பதிற்செயற்பாடு காட்டுவது தவிர்ந்த ஏனைய நிலைமைகளில் ஒரு அரச அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்படுத்தும் பொழுது எழும் நிலைமைக்கான செயல் விளைவுடைய பதிற்செயற்பாட்டைச் செய்யும் நோக்குடன் பொலிஸார் பரிசோதகர் தலைமை அதிபதி ஒன்றோ அல்லது பலவோ மாகாணப் பொலிஸாரினை தனது நேரடிக் கட்டளையின் கீழ் கொண்டு வருவார்.
(ஒ) உரிய மாகாண ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதி உரிய மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து அங்கே முறைமை ரீதியானதும் பரந்துபட்டதுமான (அ) கீழ்ப்படியாமை அல்லது (ஆ) வேண்டுமென்ற மீறுகை அல்லது கடமைகள் மற்றும் தொழிற்பாடுகளில் பராதீனம் செய்தல் அல்லது (இ) புரட்சி அல்லது கலக நடத்தை அல்லது (ஈ) இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறைமை மீது தாக்குதல் அல்லது தாக்குதல் ஏற்படக் கூடிய நிலை என்ற எண்ணம் உருவாக்கப்படும் பொழுது ஜனாதிபதியின் இயைபுடன் அவர் உரிய மாகாணப் பொலிஸின் தொழிற்பாடுகளை இடைநிறுத்துவதற்கும் உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆயுதங்களைக் களைவதற்கும் படிநிலை எடுப்பார்.

அதற்குப் பின்பு அவர் உரிய மாகாணப் பொலிஸுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் தேசிய பொலிஸ் படையால் நிறைவேற்றப்படச் செய்வார். விசாரணையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் உரிய மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய முறையில் கடமைகளையும் அதிகாரங்களையும் தொழிற்பாடுகளையும் ஆற்றுகின்றனர் என்ற கருத்தை பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதி பெறுவாராயின் விதிக்கப்பட்ட இடை நிறுத்தத்தை அவர் பின்வாங்குவதுடன் உரிய மாகாணப் பொலிஸார் தமது தொழிற்பாட்டை மீளத் தொடங்குவார்.

மாகாண ஆளுநர், பிரதம அமைச்சர், மாகாணப் பொலிஸ் ஆணையாளர் என்போருடன் கலந்தாலோசிப்பதைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் இடைநிறுத்தத்தை அகற்றுவது பொருத்தமற்றது எனக் கருத்துக் கொண்டிருப்பாராயின் ஜனாதிபதியின் இணக்கத்துடன் உரிய மாகாண பொலிஸ் படை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் கடமைகள், அதிகாரங்கள், தொழிற்பாடுகள் என்பன தேசிய பொலிஸாரால் மேற்கொள்ளப்படும். கலைப்பைத் தொடர்ந்து உரிய மாகாணப் பொலிஸ் ஆணைக் குழுவிற்கு உரிய மாகாண பொலிஸினை மீள அமைத்துச் செயற்படுத்துவதற்குப் பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதி உதவுவார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு

(ச்) அரசியலமைப்பின் பிரகாரம் நிறுவப்பட்ட ஒரு தேசிய பொலிஸ் ஆணைக்குழு காணப்படும்.
(ஞ) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவானது அதன் தவிசாளர் மற்றும் ஏனைய நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
(ஞி) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும் உறுப்பினர்களும் ஜனாதிபதி யின் இணக்கத்தைப் பெற்றுக்கொண்டு அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்படுவர்.
(ஞீ) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும், உறுப்பினர்களும் பொலிஸ் முகாமைத்துவம், பொலிஸ் நிர்வாகம், குற்றவியல் நீதி, சமூகவியல் துறைகளில் அனுபவமுடைய ஆட்களாக இருப்பர்.
(ஞு) மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவாகப் பெண்கள் இருக்கக் கூடாது.
(ஞூ) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும் உறுப்பினர்களும் முழு நேர அடிப்படையில் சேவை புரிய வேண்டும்.
(ஞ்) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும் உறுப்பினர்களும் 5 வருட காலப் பகுதிக்கு பதவி வகிக்க வேண்டும்.
(ட) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அதன் செயலாளரும் ( தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ) அதன் செயலகமும் ஒத்துழைக்க வேண்டும்.
(டி) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தத்துவங்களும் பணிகளும் கீழ் வருவனவாக இருத்தல் வேண்டும்.
* தேசிய பொலிஸின் அலுவலர்களுக்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ( சேவையை முடிவுறுத்தல் உள்ளடங்கலாக) ஆகியவற்றுக்காக திட்டங்களை விருத்தி செய்தலும் வகுத்தமைத்தலும்.
* தேசிய பொலிஸின் பொலிஸ் அலுவலர்கள் தொடர்பாக மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
* மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களால் ஆக்கப்பட்ட மாகாண பொலிஸின் அலுவலர்களின் ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம் , பதவியுயர்வு , ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்காக திட்டத்தை அங்கீகரித்தல்.
* மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களால் மாகாண பொலிஸுக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ஏற்புறுதி செய்தல்.
* பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதியின் விதப்புரையின் பேரில் (அ) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆணையாளர் (ஆ) விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி மற்றும் ( இ) தேசிய பொலிஸின் தொழிற்பாட்டு மற்றும் பிரதேச பிரிவுகளின் தலைவர்கள் ஆகியவர்களின் நியமனம்
* உள்ளக அலுவல்கள் பிரிவின் பணிப்பாளரின் நியமனம்
* பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதியின் விதப்புரைகளுக்கு அமைவாக பொலிஸ் அலுவலர்களின் தேசிய பொலிஸின் உள்ளக இடமாற்றம்.
* உள்ளக அலுவல்கள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக் கருத்தில் கொண்டு, குற்றங்களுக்கும் இழைத்தமைக்குப் பொறுப்பானவர்கள் என கண்டுகொள்ளப்பட்ட பொலிஸ் அலுவலர்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து நிறுவனத்தின் பரிசீலனையை, சட்டத்துறை தலைமை அதிபதிக்கு விதந்துரைத்தல்.
* உரிய மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் ஒருப்பாட்டுடன் மாகாண பொலிஸின் பொலிஸ் அலுவலர்களை தேசிய பொலிஸ் படைக்கு உள்வாங்குதல்.
* உரிய மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் ஒருப்பாட்டுடன் உரிய மாகாண பொலிஸுக்கு உள்வாங்குவதற்காக தேசிய பொலிஸில் இருந்து பொலிஸ் அலுவலர்களை விடுவித்தல்.
(டீ) தெரிவு செய்தல், ஆட்சேர்ப்பு, நியமனம், பயிற்சி, பதவியுயர்வு மற்றும் பொலிஸ் அலுவலர்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு தொடர்பான மாகாண பொலிஸுக்கான வழிகாட்டு நெறிகள், விதிகள் மற்றும் ஒழுங்கு விதிகள் ஆகியவற்றை தேசிய பொலிஸ் ஆணைக்குழு மாகாண பொலிஸுடன் கலந்தாலோசித்து வகுத்தல் வேண்டும். ( இது தெரிவு செய்தல், ஆட்சேர்ப்பு, நியமனம், பயிற்சி, பதவியுயர்வு மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் போது தேசிய நியமனங்களுடனான பற்றுறுதியை உறுதிப்படுத்துவதற்காகும்).

தேசிய மற்றும் மாகாண பொலிஸின் பொலிஸ் அலுவலர்களுக்கு வழங்கப்படும் கவனிப்புகளையும் சம்பளங்களையும் ஏனைய வேதனாதிகளையும் தேசிய பொலிஸ் ஆணைக் குழு மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தால் தேசிய பொலிஸுக்கும் மாகாண பொலிஸுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு பங்கீடு செய்ய வேண்டும்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதன் பணிகளில் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டதையோ பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதிக்கு கையளிப்பதற்கு உரித்துடையதாக இருத்தல் வேண்டும்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முடிபுகள் நிர்வாக மேன்முறையீட்டு நியாயசபையில் மேன்முறையீடு செய்யப்பட முடியுமாக இருத்தல் வேண்டும். தேசிய பொலிஸ் ஆணைக் குழு உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கத்துடனும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் எழுத்தாணை பற்றிய நியாயாதிக்கத்துடனும் இசைந்து செல்ல வேண்டும்.

thinakkural.lk 06 12 2016
continue.......