மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 2

18 01 2017

மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 2

மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்கள்
அரசியல் அமைப்புக்கிணங்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு மாகாண பொலிஸ் ஆணைக்குழு தாபிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.ஒவ்வொரு மாகாண பொலிஸ் ஆணைக்குழுவும் அதற்கான தவிசாளரையும் ஏனைய இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும். மாகாண முதலமைச்சரும் உரிய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து வழங்கிய பெயர் குறிப்பிடுதலை பரிசீலனை செய்த பின்னர் மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் உறுப்பினர்களும் அரசியலமைப்புப் பேரவையால் நியமிக்கப்படல் வேண்டும்.

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் உறுப்பினர்களும் முழு நேர அடிப்படையில் சேவை புரிய வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் உறுப்பினர்களும் 5 வருட காலப் பகுதிக்கு பதவி வகிக்க வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அதன் செயலாளரும் ( உரிய மாகாண பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ) அதன் செயலகமும் ஒத்துழைக்க வேண்டும்.
பொலிஸின் முகாமைத்துவம், பொது நிர்வாகம், பொலிஸ் சேவை மற்றும் குற்றவியல் நீதி ஆகிய துறைகளில் அனுபவங்களைக் கொண்டவர்களாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் இருத்தல் வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் தத்துவங்களும் பணிகளும் கீழ்வருவனவாக இருத்தல் வேண்டும்
உரிய மாகாண பொலிஸின் அலுவலர்களுக்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்காக திட்டங்களை விருத்தி செய்தலும் வகுத்தமைத்தலும் அத்தகைய திட்டங்களுக்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெறுதலும்.
உரிய மாகாண பொலிஸில் சேவை புரிவதற்காக பொலிஸ் அலுவலர்களை ஆட்சேர்ப்பதும் பதவியுயர்வு வழங்குவதும் மற்றும் குறிப்பிடப்பட்ட முடிவுகளுக்கான ஏற்புறுதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்வதும் அத்துடன், மாகாண பொலிஸ் ஒன்றில் சேவையாற்றுவதற்காக ஆட்களை ஆட்சேர்ப்பு செய்யுமிடத்து குறிப்பிடப்பட்ட மாகாண மக்களால் பேசப்படும் மொழிகளைக் கவனத்தில் கொண்டு தெரிவு செய்வதற்காக கருத்தில் கொள்ளப்படுகின்ற ஆளின் மொழியியல் ஆற்றல் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

உரிய மாகாண பொலிஸ் ஆணையாளரின் நியமனம் தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விதப்புரைகளை வழங்குதல்.
உரிய மாகாண பொலிஸ் ஆணையாளர்களின் விதப்புரையின் பேரில் மாகாண பொலிஸ் அலுவலர்களின் உள்ளக இடமாற்றம்,
உரிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு பொலிஸ் அலுவலர்களை ஒரு மாகாண பொலிஸிலிருந்து இன்னொரு மாகாண பொலிஸுக்கு இடமாற்றம் செய்தல்.
சேவையை முடிவுறுத்தல் உள்ளடங்கலாக உரிய மாகாண பொலிஸின் பொலிஸ் அலுவலர்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒருப்பாட்டுடன் தேசிய பொலிஸினால் விடுவிக்கப்பட்ட பொலிஸ் அலுவலர்களை உரிய மாகாண பொலிஸின் சேவை புரிவதற்க õக தேசிய பொலிஸில் இருந்து உள்வாங்கல்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒருப்பாட்டுடன் மாகாண பொலிஸ் படையிலிருந்து பொலிஸ் அலுவலர்களை தேசிய பொலிஸுக்கு உள்வாங்கப்படுவதற்காக விடுவித்தல்.
மாகாண பொலிஸில் பொலிஸ் அலுவலர்களாக சேவை புரிவதற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது உரிய மாகாண பொலிஸ் ஆணைக்குழு அந்த மாகாணத்தின் இன மற்றும் மொழியியல் விகிதாசாரங்களை முறையாக கருத்தில் கொள்ள வேண்டும்.
குறித்தவொரு மாகாண பொலிஸில் பொலிஸ் அலுவலர்களாக சேவை புரிவதற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது உரிய மாகாணத்தில் சாதாரணமாக வதியும் விண்ணப்பதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

குறித்தவொரு மாகாண பொலிஸில் பொலிஸ் அலுவலர்களாக சேவை புரிவதற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது உரிய மாகாண மக்களால் பேசப்படும் ஆதிக்கம் மிக்க மொழியை பேசும் திறனுள்ள அத்தகைய அலுவலர்கள் முறையாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழு அதன் பணிகளில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகளையோ உரிய மாகாண பொலிஸ் ஆணையாளருக்கு அல்லது உரிய மாகாண பொலிஸில் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பதவித் தரத்தை விடக் குறையாத பதவித் தரமொன்றை வகிக்கும் ஏனைய எந்த அலுவலருக்கும் கையளிக்கலாம்.

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவொன்றின் முடிவொன்றினால் இன்னலுற்ற எந்த பொலிஸ் அலுவலரும் நிர்வாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு மேன்முறையீடு செய்யலாம்.
06. பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி ( பொலிஸ் மா அதிபர்)
பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி இலங்கை பொலிஸின் தலைவராக இருத்தல் வேண்டும்.
ஒட்டுமொத்த முகாமைத்துவம், நிர்வாகம் மற்றும் மாகாண பொலிஸின் கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றல் என்பவற்றுடன் தொடர்பான கருமங்கள் மீது மாகாண பொலிஸ் ஆணையாளர்களுக்கு பணிப்புரைகளை விடுக்க பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி தத்துவமளிக்கப்பட வேண்டும்.
ஆயின், எவ்வாறாயினும் மாகாண பொலிஸுக்கு பிரத்தியேகமான நியாயாதிக்கம் அளிக்கப்பட்டுள்ள கருமங்கள் தொடர்பாக மாகாண பொலிஸ் ஆணையாளர்களுக்கு பணிப்புரைகளை வழங்குவதற்கு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதிக்கு தத்துவமளிக்கப்படலாகாது.

தேசிய பொலிஸின் முகாமைத்துவத்துக்கும் நிர்வாகத்துக்கும் பொறுப்பாக பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி இருத்தல் வேண்டும்.
அரசியல் அமைப்புப் பேரவையின் விதிப்புரையின் மீது பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும்.
எவரேனும் (ஒரேயொரு) சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியே பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியாக நியமிக்கப்பட்ட உரியத்துடையவராக இருத்தல் வேண்டும். மாகாண பொலிஸ் ஆணையாளர்கள் அந்த வகுதிக்கு உரியவர்களாக இருத்தல் வேண்டும்.
பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியின் நியமனத்தைத் தொடர்ந்து, அவர் அத்தகைய பதவியில் 63 வருட வயதைப் பூர்த்தி செய்யும் வரையில் சேவை புரிய உரித்துடையவராக இருத்தல் வேண்டுமென்பதுடன் அவரது சேவை அத்தகைய வயதுக்கு மேல் நீடிக்கப்படவும் கூடாது.
பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி ஒருவரின் உச்சபட்ச சேவைக் காலம் 4 வருடங்களாக இருத்தல் வேண்டும்.

பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி தொடர்பாக ஒழுக்காற்று கட்டுப்பாட்டைப் பிரயோகிக்க அரசியலமைப்புப் பேரவைக்கு தத்துவமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
(அ) சட்டத்தை பாராதூரமாக மீறல் (ஆ) இலஞ்சம், ஊழல் அல்லது மோசடி (இ) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் (ஈ) பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதிப் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தல் அல்லது (உ) சுகவீனம் ஆகிய ஏதுக்கள் மீதல்லாது பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியின் சேவை முடிவுறுத்தப்படக் கூடாது.
மேலே சொல்லப்பட்ட ஏதுக்களில் ஒன்றுக்கு அல்லது அதற்கு அதிகமானவற்றுக்கு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி குற்றமுடையவராவார் என ஒரு விசாரணையைத் தொடர்ந்து தீர்மானமொன்று அரசியலமைப்புப் பேரவையால் எடுக்கப்படும் போது அரசியலமைப்புப் பேரவை பாராளுமன்றத்துக்கு நிருபம் ஒன்றை அனுப்ப வேண்டுமென்பதுடன் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியின் சேவையை முடிவுறுத்தும் தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களிப்பதன் மீது மாத்திரம் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியின் சேவை முடிவுறுத்தப்பட வேண்டும்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி கடமைப்பட்டிருத்தல் வேண்டும்.
விசாரணைகளை மேற்கொள்ளல் உள்ளடங்கலாக கடமைகளையும் பணிகளையும் புரியும் போது மாகாண பொலிஸினால் பின்பற்றப்பட வேண்டிய நியமங்களையும் வழிகாட்டு நெறிகளையும் குறிப்பிடுவதற்கு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி உரித்துடையவராதல் வேண்டும்.
குற்றவியல் கருமங்கள் சட்டத்தில் பரஸ்பர உதவியளித்தலின் பொருட்டு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி மத்திய அதிகாரியாக இருத்தல் வேண்டும்.
இலங்கைப் பொலிஸை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வெளிநாட்டு சட்ட அமுலாக்க முகவராண்மைகளுடன் ஒப்பந்தங்களுக்குட்படுவதற்கும் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி உரித்துடையவராதல் வேண்டும்.
பொலிஸ் சேவையின் கொள்கைகள் , பொலிஸ் சேவைக்கான தேவைகள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய விடயங்கள் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி “பொலிஸ்’ விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வகைப்பொறுப்பு உடையவராக இருத்தல் வேண்டும்.
ஆயின் , எவ்வாறாயினும் குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக குறித்த விசாரணைகளை மையப்படுத்தி அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு அமைச்சருக்கு தத்துவமளித்தலாகாது.

07. மாகாணப் பொலிஸ் ஆணையாளர்கள் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு மாகாணப் பொலிஸ் ஆணையாளர் நியமிக்கப்படுதல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் படையின் பிரதானியாக மாகாணப் பொலிஸ் ஆணையாளர் இருத்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸின் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரைகளை வழங்குவதற்கு மாகாணப் பொலிஸ் ஆணையாளர் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸின் ஒட்டுமொத்த முகாமைத்துவத்திற்கும் நிர்வாகத்திற்கும் மாகாணப் பொலிஸ் ஆணையாளர் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவின் விதப்புரையின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் மாகாணப் பொலிஸ் ஆணையாளர்கள் நியமிக்கப்படுதல் வேண்டும்.
மாகாணப் பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்பட்டு பரிசீலிக்கப்படுவதற்கு எந்தவொரு சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதியும் தகைமையுடையவராதல் வேண்டும்.
மாகாணப் பொலிஸ் ஆணையாளர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நியமனத்தில் அவர் 61 வயதைப் பூர்த்தி செய்யும் வரையில் சேவையாற்றுவதற்கான உரித்தினைக் கொண்டிருத்தல் வேண்டும். அந்த வயதிற்கு அப்பால் அவரது சேவை நீடிக்கப்படலாகாது.

ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் மாகாணப் பொலிஸ் ஆணையாளர் ஒருவர் சேவையாற்றுவதற்கான ஆகக் கூடுதலான வருடங்களின் எண்ணிக்கை 3 வருடங்களாக இருத்தல் வேண்டும். அதன் பின்னர் அதே மாகாணத்தில் மாகாணப் பொலிஸ் ஆணையாளராக அவர் மீள நியமிக்கப்படுவதற்கான உரித்தினைக் கொண்டிருத்தலாகாது.

மாகாணப் பொலிஸ் ஆணையாளர் தொடர்பில் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு மாகாணத்தின் பொலிஸ் ஆணையாளர் தொடர்ந்து வேறு ஒரு மாகாணத்தின் மாகாணப் பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்படுவதற்கான உரித்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணையாளர் ஒருவர் தேசிய பொலிஸ் படையில் இணைவதற்கான உரித்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதியாக நியமிக்கப்படுவதற்காகப் பரிசீலிக்கப்படுவதற்கு மாகாணப் பொலிஸ் ஆணையாளர் உரித்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
பின்வரும் காரணங்களின் அடிப்படையிலன்றி மாகாணப் பொலிஸ் ஆணையாளர் ஒருவரின் சேவைகள் முடிவுறுத்தப்படலாகாது.
சட்டத்தைப்பாரதூரமாக மீறுதல்
இலஞ்சம், ஊழல் அல்லது மோசடி
அதிகாரத் துஷ்பிரயோகம் அல்லது தவறான பயண்பாடு
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்துதல்.
சுகவீனம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணையாளர் குற்றமுடையவராக இருக்கின்றார் என விசாரணை நடத்தப்பட்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானத்திற்கு வந்த பின்னர் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்குப் பத்திரம் ஒன்றினைச் சமர்ப்பித்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணையாளரின் சேவைகளை முடிவுறுத்தும் தீர்மானத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் சார்பாக வாக்களிக்கும் பட்சத்தில் மாத்திரமே சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணையாளரின் சேவைகள் முடிவுறுத்தப்படுதல் வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவின் ஆலோசனைகளைச் செயற்படுத்துவதற்கு மாகாணப் பொலிஸ் ஆணையாளர் கடப்பாடுடையவராக இருத்தல் வேண்டும்.
பொலிஸ் சேவைக் கொள்கை, சட்டமும் ஒழுங்கும் பற்றிய விடயங்கள் மற்றும் பொலிஸ் சேவைத் தேவைப்பாடுகள் ஆகியவற்றின் மீது உரிய மாகாண சபையின் அமைச்சர்கள் சபையின் “சட்டமும் ஒழுங்கும் ‘ என்னும் விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள உரிய அமைச்சருக்கு மாகாணப் பொலிஸ் ஆணையாளர்கள் பொறுப்பாதல் வேண்டும். ஆயின் அத்தகைய மாகாண அமைச்சர், குற்றப் புலனாய்வுகளை நடத்துதல் தொடர்பில் வழக்கிற்குக் குறித்த அறிவுறுத்தல்களை வழங்குவதற்குத் தத்துவமளிக்கப்படலாகாது.

thinakkural/lk 06 12 2016