புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03)
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03)
புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்காக அரசியலமைப்புச் சபையால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய அரசியலமைப்பின் விடயதானங்கள், விட்டுக்கொடுப்பற்ற மனநிலையில் உள்ள தென்னிலங்கை தலைவர்களிடமிருந்து தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய சாசனத்தினூடாக கிடைக்குமா என இயல்பாக எழுகின்ற வினாக்கள், பொதுமக்களின் சந்தேகங்கள் தொடர் பில் கருத்துக்களை பதிவு செய்தார்.
கேள்வி: -அரசியலமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றதா? தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றதா?
பதில்:- இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக செயற்படுவது தொடர்பான தீர்மானத்தின் பிரகாரம் இந்த நாட்டுக்கு முழுமையான அரசியலமைப்பு வரைபொன்றை வரையப்படவேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது. ஆகவே அது தொடர்பான சந்தேகங்கள் யாருக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
அத்தோடு முழுமையான அரசியலமைப்பு வரைபு வரையப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அந்த வரைபு அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அமைச்சரவை சாதாரணமாக சட்டமொன்றை இயற்றுவதற்கான படிமுறைகளை கையாண்டு அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கும். அதன்
பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெற்றதையடுத்து மக்களின் அனுமதிக்காக பொதுஜன வாக்கெடுப்பிற்கு விடப்படுமென அத்தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
கேள்வி:- தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் எந்த மட்டத்தில் உள்ளது?
பதில்:- அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டு வழிநடத்தல் குழுவொன்றை நியமித்தது. வழிநடத்தும் குழு தான் அரசியலமைப்பு வரைபை உருவாக்கி அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. வழிநடத்தல் குழுவானது 12விடயங்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொண்டது. அதில் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மத்திய அரசாங்கத்துக்கும் - மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவு ஆகிய ஆறு விடயங்களை அடையாளம் கண்டு அவற்றை ஆறு உபகுழுக்களிடத்தில் பாரப்படுத்தியிருந்தது. அந்த உபகுழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. எஞ்சியுள்ள ஆறு விடயங்கள் தொடர்பாகவும் வழிநடத்தும் குழு தானாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவை நிறைவடைந்த பின்னர் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாக இருந்தது. டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாக இருந்தாலும் கூட சில கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் விவாதங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த அறிக்கைகள் வெளியிடப்படுமென நாம் நம்புகின்றோம். அனைத்து விடயங்களும் பேசப்பட்டு தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக கூறமுடியாது. சில முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக தீர்மானங்கள் இதுவரையில் மேற்கொள் ளப்படாதிருக்கின்றபோதும் அவ்விடயங் கள் சம்பந்தமாக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருகின்றது.
அந்த பேச்சுக்களின் அடிப்படையில் வெவ்வேறு தெரிவுகள் மக்கள் முன்பாக சமர்ப்பிக்கப்படலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இடைக்கால அறிக்கையை வெளியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் எந்த மாதிரியான அரசியலமைப்பு சட்டத்தை அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றோம் என்பது தெரியவரும்.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் என எந்த அடிப்படையில் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கின்றீர்கள்?
பதில்:- இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட குடியரசு அரசியல் யாப்புக்கள் இரண்டும் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்களை புறந்தள்ளியே உருவாக்கப்பட்டுள்ளன. இனப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக எழுவ தற்கு அவைஅடிப்படையாக இருந்தன. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பானது தேசிய பிரச்சினைக்கு தீர்வை அளிப்பதையே பிரதான இலக்காக கொண்டு உருவாக்கப்படுகின்றது. உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டமானது தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்காது ஏனைய விடயங்களை கொண்டிருக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி:- உபகுழுக்களில் முரண்பாடான விடயங்கள் முன்மொழியப்பட்டனவா? அவை உள்வாங்கப்பட்டுள்ளனவா?
பதில்:- அனைத்துக் கட்சிகளும் உபகுழுக்களில் அங்கம் வகிக்கின்றன. சில உபகுழுக்களில் பொது எதிரணியினர் தங்களுடைய மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தனர். அவை அந்தந்த அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளன. சில உபகுழுக்களில் பொது எதிரணியினர் வழிநடத்தல் குழுவிற்கு நேரடியாக அறிக்கையை சமர்ப்பிப்பதாக கூறியிருந்தனர். உபகுழுக்களின் அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் வழிநடத்தும் குழுவானது மாறுபட்ட கருத்துக்களை நேரடியாக அழைத்து அவர்களிடத்தில் கருத்துக்களை கேட்டறிந்தது. அதன்போதும் அறிக்கையொன்றின் மூலமாக தமது கருத்துக்களை வழங்குவோம் எனக் கூறியிருக்கின்ற போதும்தற்போது வரையில் அவர்கள் அறிக்கையை கையளித்திருக்கவில்லை.
ஆகவே உபகுழுக்களின் அறிக்கைகள் அனைத்து கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் அதேநேரம் வழிநடத்தல் குழுவில் அந்த அறிக்கைகளுக்கு எதிர்ப்புக்கள் இல்லாத நிலையிலே தான் அந்த அறிக்கைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- தேர்தல் முறைமை தொடர்பாக எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன?
பதில்:- தேர்தல் முறைமையை வழிநடத்தும் குழுவே கையாளுகின்றது. அந்த விடயம் சம்பந்தமாகத் தான் முதலாவதாக பேசப்பட்டது. தேர்தல் முறைமை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றாலும்கூட தேர்தல்முறைமை சம்பந்தமாக உள்ள அடிப்படைக் கொள்கைகள் சார்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோட்பாட்டளவில் ஒரு கலப்பு தேர்தல் முறைமைக்கு சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளன.
எந்தெந்த விகிதாசாரத்தில் தொகுதி முறையும், பிரதிநிதித்துவ முறையும் அமையவேண்டும் என்பதில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு இரண்டாவது சபையை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இரண்டாவது சபையை ஸ்தாபித்தல் என்ற விடயத்தில் குறிப்பாக மாகாண சபை பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: -இரண்டாவது சபையானது எவ்வாறு ஸ்தாபிக்கப்படும்?
பதில்:-இரண்டாவது சபை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இதுவரையில் முடிவான தீர்மானம் எடுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு மாகாண சபையிலிருந்தும் தலா ஐவர் தெரிவு செய் யப்படுவார்கள். அந்த ஐவரில் முதலமைச் சர் நிச்சயமாக இருக்க வேண்டும். அவர் உள்ளடங்கலாக மாகாண அமைச்சரவை அந்தஸ்து இல்லாதவர்களும் இக்குழுவில் இருக்க முடியும் என சிபாரிசு செய்யப்பட் டுள்ளது. அந்த அடிப்படையில் முதலமைச் சர் உட்பட தலா ஐவர் கொண்ட குழுவினர் இரண்டாவது சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
அதனைவிட பாராளுமன்ற தீர்மானத்திற்கு அமைவாக பத்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள், பல்வேறு துறைகளில் தமது திறமைகளை காட்டியவர்கள், கட்சி அல்லது தேர்தல் அரசியலுக்குள் வர விரும்பாதவர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளும் விதமாக தெரிவுகள் இடம்பெறுவதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி:- புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என கூறப்பட்டாலும் அவ்வாறான அதிகாரங்கள் அனைத்தையும் பாராளுமன்றத்திற்கு வழங்குவதன் ஊடாக பிரதமர் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டவராகின்றாரே?
பதில்:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளன. அதன்பிரகாரம் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றீடாக உள்ளீர்க்கப்படவுள்ள முறைமைக்காக மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
முதலாவதாக பிரித்தானியாவில் பின்பற்றப்படும் வெஸ்மினிஸ்டர் முறைமை காணப்படுகின்றது. இரண்டாவதாக பிரதமரை நேரடியாக மக்கள் தெரிவு செய்கின்ற முறை காணப்படுகின்றது. இந்த முறைமையை தொடர்பில் தான் அச்சமடைகின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டாலும் அதற்கு ஈடாக பிரதமர் நிறைவேற்று அதிகாரத்தை கொள்கின்றார் என அச்சம் வெளியிடுகின்றார்கள். அது நியாயமானதொரு அச்சமடையக் கூடிய விடயம். மூன்றாவதாக முழுமையாக வெஸ்மினிஸ்டர் முறைமையும் இல்லாத இடைப்பட்ட முறையொன்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது. ஆதாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். இம்முறைமைகள் தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் விரிவாக ஆராயப்படும்.
கேள்வி:- அரசியலமைப்பு நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கான சிபார்சு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வாறிருக்கின்றன?
பதில்:- இலங்கையில் அரசியலமைப்பு நீதிமன்றம் காணப்பட்டிருக்கின்றது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை சாத்தியமற்ற விடயமாக சொல்ல முடியாது. என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட் டின் பிரகாரம், உச்ச நீதிமன்றம் வழக்குகளினுடைய இறுதி நீதிமன்றமாக இறுதி மேன்முறையீடுகளை கையாளுகின்ற நீதிமன்றமாக இருக்கும். அரசியலமைப்பு சம்பந்தமான விடயங்களை, சட்ட மூலங்கள் சம்பந்தமான விடயங்களை வியாக்கியானப்படுத்துவதற்கு, பொருள்கோடல்களை கொடுப்பதற்கு மத்திக்கும் மாகாணத்திற்கும் அல்லது மாகாணங்களுக்கிடையில் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் தீர்ப்பதற்காக உயர் நீதிமன்றம் செயற்படுவதை விடவும் அதற்கென விசேட நீதிமன்றம் இருப்பது சிறந்தது.
(ஆர்.ராம்) virakesari.lk 01 01 2017