தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 55) 1977: மீண்டும் ஓர் இனக்கலவரம்

25 03 2017

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 55) 1977: மீண்டும் ஓர் இனக்கலவரம்

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தலைதூக்கிய வன்முறை

ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 5/6 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் முதலில், முன்பு ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறையைப் பிரயோகித்தனர். இயற்கையாகவே இந்த வன்முறைத் தீயின் அடுத்த இலக்காக தமிழ் மக்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது. இதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. வடக்கு - கிழக்கு தமிழர் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளெங்கும் ஜே.ஆரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத வெற்றியையீட்டியிருந்தது. ஆனால் வடக்கு-கிழக்கு தமிழர் மண்ணில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பாரிய வெற்றியையீட்டியிருந்தது.

ஜே.ஆரின் வெற்றி எப்படி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்ட புதிய அரசியலமைப்புக்கும், நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கும் மக்களாணையை ஜே.ஆருக்குப் பெற்றுத்தந்ததோ, அதுபோலவே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வெற்றியானது, 'தனிநாட்டுக்கான' அல்லது 'தமிழீழத்திற்கான' மக்களாணையை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள். இது ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் தென்னிலங்கைக்கும் பெரும் உறுத்தலாகவே இருந்தது. அமிர்தலிங்கம் இலங்கைப் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை ஏற்றிருப்பினும், எடுத்த எடுப்பில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்காது இணக்கப்பாட்டுக்கான தீர்வு ஒன்றை எதிர்பார்த்திருந்த போதிலும், வடக்கில் உதயமாகியிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும் தனிநாட்டுக்காக அவை கொடுத்த அழுத்தமும் ஜே.ஆரின் அரசாங்கத்திற்கு உறுத்தலாகவே இருந்தன.

பொலிஸார் நடத்திய தாக்குதல்

இந்தத் தணல் உள்ளூர கொதித்துக் கொண்டிருந்த போது, 1977 ஆகஸ்ட் 12 மற்றும் 13 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் யாழ் றோட்டரிக் கழகம் ஒரு களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் சிலர் நுழைவுச்சீட்டு வாங்காது உள்நுழைய முற்பட்டதில் ஏற்பட்ட முரண்பாட்டில், அவர்கள் சிவில் உடையில் இருந்தமையினால் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டார்கள் என இந்த சம்பவம் பற்றி பதிவு செய்த பலரும் குறிப்பிடுகிறார்கள். இது பற்றி வோல்டர் ஷ்வாஸ் தன்னுடைய 'இலங்கைத் தமிழர்கள்' என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: '1977 கலவரமானது, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில், தேர்தலில் தோல்வி கண்டிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு விசுவாசமான பொலிஸார் சிலர் அங்கு இடம்பெற்ற களியாட்டமொன்றில் புகுந்து தமிழ் மக்களுக்கு கோபமூட்டும் வண்ணம் நடந்து கொண்டனர்' எனக்குறிப்பிடுகிறார். எது எவ்வாறாயினும், பொதுமக்களால் சிவில் உடையில் வந்து முரண்பாட்டில் ஈடுபட்ட பொலிஸார் தாக்கப்பட்டதற்குப் பின்னர், இதற்குப் பதிடியாக மறுநாள் பொலிஸார் பாதசாரிகளைக் கடுமையாகத் தாக்கினர். இது பற்றி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு உடனடியாக அறிவித்தும் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மறுநாள் பொலிஸார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்களை மறித்தபோது, அவர்கள் அந்தப் பொலிஸாரின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதற்குப் பதிலடியாக மறுநாள் களத்திலிறங்கிய பொலிஸார் கடைகளுக்குத் தீ வைத்ததுடன் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். பொலிஸாரின் இந்தக் கோர வெறியாட்டத்திற்கு நான்கு உயிர்கள் பலியானதுடன், ஏறத்தாழ 30 பேர் வரை காயமடைந்ததுடன், பெறுமதி வாய்ந்த சொத்துக்களும் சேதமாகின. இதற்கு மறுநாள் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இறங்கிய பொலிஸ் உடையில் இல்லாத பொலிஸார், யாழ். சந்தைக் கட்டடத்தின் பெரும்பகுதியை தீக்கிரையாக்கினர். அத்தோடு அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் பலியாகினர்.

அமிர்தலிங்கம் பொலிஸாரால் தாக்கப்படுகிறார்

இந்த வன்முறைச் செய்தி கேட்ட எதிர்க்கட்சித் தலைவரும், யாழ். மாவட்ட காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சம்பவம் நடந்த ஸ்லத்திற்குச் சென்றார். அங்கு அவர் பொலிஸாரின் வசைச்சொல்லுக்கும் மிரட்டலுக்கும் ஆளானது மட்டுமல்லாது, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் தாக்குதலுக்கும் ஆளானார். இது பற்றி 1977 ஓகஸ்ட் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் (தேசிய அரசுப் பேரவையின்) ஒத்திவைப்புப் பிரேரணையின் கீழ் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், 'நான் பிரச்சினைக்குரிய சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றபோது, பொலிஸார் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். நான் இங்கு உங்கள் முன் உயிருடன் நிற்பது எனது அதிர்ஷ்டமேயன்றி வேறில்லை. அவர்கள் பொலிஸ் உடையில் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குரிய தனிப்பட்ட அடையாள எண்களை அணிந்திருக்கவில்லை.

நீங்கள் ஏன் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொலைசெய்கிறீர்கள் என்று வினவியபோது, அந்தப் பொலிஸார் என்னைத் தூஷண வார்த்தைகளால் திட்டியதுடன், என் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான் எனது அடையாளத்தை அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியபோது, அவரின் பின்னால் நின்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியின் பின்முனையினால் என்னைத் தாக்கினார்' என்று குறிப்பிட்டதுடன், பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை நோக்கி, 'இந்த விதத்திலா நீங்கள் நாட்டை ஆள்கிறீர்கள்? நாங்கள் பொலிஸாரின் வன்முறையை எதிர்கொண்ட நிலையில் இருக்கிறோம்' என்று கேள்வியெழுப்பினார்.

ஜே.ஆரின் ஆணவப்பதில்

ஜே.ஆரின் பதில் ஆரோக்கியமானதாக இருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பதில் உரையாற்றியிருந்த ஜே.ஆர் 'நீங்கள் தனிநாடு கோருகிறீர்கள். திருகோணமலை உங்கள் தனிநாட்டின் தலைநகர் என்கிறீர்கள். நீங்கள், வன்முறை வழியை நாம் வேண்டவில்லை. ஆனால் தேவையேற்படின், நேரம் வரும்போது வன்முறையைப் பயன்படுத்துவோம் என்கிறீர்கள். இதைக் கேட்டு மற்ற இலங்கையர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள்? நீங்கள் சண்டையிட விரும்பினால், இங்கு சண்டை நடக்கட்டும். நீங்கள் சமாதானத்தை விரும்பினால், இங்கு சமாதானம் இருக்கட்டும். இப்படித்தான் அவர்கள் பதில் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை, இலங்கை மக்கள் இதனைச் சொல்கிறார்கள்' என்று குறிப்பிட்டார். வன்முறையைத் தணித்து சமாதானம் விரும்பும் ஒரு தலைவரின் கருத்தாக நிச்சயம் இது அமைய முடியாது. மாறாக வன்முறையைத் தூண்டும் பாணியிலான நடத்தையையே ஜே.ஆரில் காணக்கூடியாக இருந்தது.

வன்முறையைத் தடுக்காதது ஏன்?

வன்முறையைத் தூண்டுவதற்கு ஜே.ஆருக்கு இருந்த நியாயங்கள் தான் என்ன? தேவைகள்தான் என்ன? 5ஃ6 தனிப்பெரும் பெரும்பான்மையைப் பெற்றிருந்த ஒரு பலம்மிக்க அரசாங்கத்தின் தலைவர் ஏன் சிறுபான்மை இனம் ஒன்றின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட, அல்லது அதற்குத் துணைபோக, அல்லது ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்காதிருக்க வேண்டும்? இதற்குப் பல ஆய்வாளர்களும் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள். சிலர், வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினதும், அதன் 'தனிநாட்டுக்' கோரிக்கையினதும் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஜே.ஆருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இருந்ததாகவும் அது இவ்வன்முறைகளுக்கு முக்கிய காரணம் என்றும் கருதுகிறார்கள்.

ஆனால் தமிழ் மக்களின் 'தனிநாட்டுக்' கோரிக்கையின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், அவர்களை மேலும் தாக்குவதன் மூலமும் அவர்களை மேலும் விரக்தியடையச் செய்வதன் மூலமும் சாதிக்க முடியுமா? அது தமிழ் மக்களை 'பிரிவினையை' நோக்கியல்லவா தள்ளிச்செல்லும். வடக்கு-கிழக்கில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர் இயக்கங்களை வேரறுக்கும் நோக்கம் ஜே.ஆர் அரசாங்கத்திற்கு இருந்ததாகவும், அதன் ஒருபடியாக இவ்வன்முறைச் சம்பவம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், ஆனால், இந்த வன்முறைகள் தமிழ் இளைஞர்களை மேலும் வன்முறைப் பாதைக்கு அழைத்துச் சென்றதே தவிர, அந்த இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதாக அமையவில்லை.

பரவத் தொடங்கிய வன்முறைத் தீ

ஆனால், இந்த வன்முறைச் சம்பவங்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வன்முறைத் தீ வேகமாக மற்றப் பிரதேசங்களுக்கும் பரவத் தொடங்கியது. 1977 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கணிசமானளவு சிங்களவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அவர்கள் மீது தாக்குதலோ, தமிழ் இயக்கங்களால் பதில் தாக்குதல்களோ நடத்தப்படவில்லை.
ஆனால், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக் கொண்டிருந்த சிங்கள மாணவர்கள் எந்த விதத் தாக்குதலுக்கும் ஆளாகாத போதும், தாக்குதல் அச்சம் காரணமாக பேரூந்துகளில் யாழ்ப்பாணத்தை விட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வெளியேற்றமானது, தமிழ் மக்கள் சிங்களவர்களைத் தாக்கியது போன்ற மாயத்தோற்றத்தை நாடெங்கிலும் பரவச் செய்தது. இதன் விளைவாக தமிழர் பெரும்பான்மையினரல்லாத பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படத் தொடங்கின. தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையின்படிதான் இந்த வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின போன்றதான ஒரு மாயை சிங்கள மக்களிடையே உருவாகியிருந்தது, அல்லது உருவாக்கப்பட்டிருந்தது. ஆகவே தனிநாடு வேண்டும் என்று தமிழ் மக்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெளிப்படுத்தியிருந்த அவர்களது அரசியல் அபிலாஷையை அடக்குவதற்கான ஒரு வழியாக தமிழ் மக்கள் மீதான வன்முறையை சிங்களப் பேரினவாதிகள் கையாளத் தொடங்கினார்கள்.

பாராமுகம் காட்டிய ஜே.ஆர் அரசாங்கம்

இதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆதரவளித்தது என்பதுதான் கசப்பான உண்மை. தமிழர்கள் சண்டையை விரும்பினால், நாம் சண்டைக்குத் தயாரென நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதன் ஊடாகச் சிங்கள மக்களை வன்முறைப் பாதையில் செல்ல ஜே.ஆர் தூண்டியிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம். மேலும், வன்முறைகளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் ஆரம்பித்திருந்தனர். அதை ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தடுக்கவில்லை. மேலும், நாடு முழுவதும் வன்முறைகள் பரவிய போதும், பொலிஸார் பராமுகமாகவே இருந்தனர்.

1977 காலப்பகுதியில் அநுராதபுரத்திலும் கணிசமானளவு தமிழர்கள் வசித்து வந்தார்கள். குறிப்பாக அநுராதபுரத்தில் அரச சேவையில் கணிசமானளவு தமிழர்கள் ஈடுபட்டிருந்தார்கள். 1977 வன்முறைத் தாக்குதல்கள் அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்களைக் கடுமையாகப் பாதித்தது. இந்தக் கலவரத்தில் அநுராதபுர வைத்தியசாலை தாக்கப்பட்ட அநுபவத்தை பதிவு செய்யும் அன்றைய அநுராதபுர வைத்தியசாலையில் வைத்தியராகக் கடைமையாற்றிய வைத்தியர் கே.என்.கே.விஜயவர்த்தன அநுராதபுர வைத்தியசாலைக்கு காடையர்கள் தீ வைத்ததையும் இந்த வன்முறைகள் ஏற்படும் என எதிர்பார்த்து தாம் வைத்தியசாலைக்கு மேலதிக பாதுகாப்புக் கோரியபோது அதனைச் செய்வதற்கு பொலிஸாரோ,

அமைச்சர்களோ தயாராக இருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அவரது கட்டுரையின் இறுதியில் 'காரணகாரியங்கள் எதுவாக இருப்பினும், உதவியற்ற, தம்மைத்தாமே பாதுகாக்க முடியாது, அப்பாவி மனிதர்களைத் தாக்குவதையும் கொலை செய்வதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது' என்கிறார்.ஆனால் இந்த இனவாத வெறிக்கு வடக்கு-கிழக்கு தமிழகளுடன் மலையகத் தமிழர்களும் ஆளானார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் கணிசமானளவு வாழும் பிரதேசங்களில் வாழ்ந்த மலையகத் தமிழ் மக்கள், அவர்களும் தமிழர்கள் என்ற காரணத்தினால் பெரும் தாக்குதல்களை எதிர்கொண்டார்கள்.

( தொடரும்)  yarl.com 06 09 2016