போருக்குள் பிறந்தேன் ! : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)

21 03 2017

போருக்குள் பிறந்தேன் ! : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)

போருக்குள் பிறந்தேன்.
அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் எழில் கொஞ்சும் அழகின் கோலம். பிரதான நெடுஞ்சாலையாகிய ஏ9 வீதியில் வந்திணையும் பூநகரி-மன்னார் வீதி, முல்லைத்தீவு வீதி ஆகிய முக்கிய இரு வீதிகளும் சந்திக்கும் அழகிய சிறு கிராமம்தான் பரந்தன். 1936ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மக்களே காலப்போக்கில் நிரந்தரக் குடிகள் ஆகியிருந்தார்கள். எந்தவிதமான படாடோபங்களுமற்ற எளிமையால் நிறைந்திருந்தது அவர்களுடைய வாழ்வு.பரந்தனிலிருந்து தெற்கே ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் கிளிநொச்சி நகரமும் வடக்கே ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஆனையிறவு உப்புக்கடல் நீரேரியும் அமைந்திருக்கிறது.

முன்னைய காலங்களில் வன்னியிலிருந்து யானைத் தந்தங்கள், காட்டு மரங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் 1760ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் ஆனையிறவில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டதாகவும் பின்னர் 1776இல் ஒல்லாந்தரும், தொடர்ந்து பிரித்தானியர்களும், 1952இலிருந்து இலங்கை பொலிசாரும் அங்குச் சோதனைச் சாவடி ஒன்றை அமைத்திருந்தனர்.ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அமைவிடங்களாலும் இலங்கையில் பேர்பெற்ற ஊராக இருந்தது பரந்தன்.ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே பரந்தன் முக்கியமானதோர் போர் மையமாகவும் மாறத் தொடங்கியிருந்தது. இதனால் அடிக்கடி கூடு கலையும் குருவிகளைப் போலப் பரந்தன் மக்களின் வாழ்வும் சிதையத் தொடங்கியிருந்தது.அப்படியானவொரு காலகட்டத்தில் தான் நானும் பிறந்திருந்தேன். எனது தந்தையார் கந்தையா சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மா பரந்தனிலேயே பிறந்து வளர்ந்தவர். தாயாரின் பதினேழாவது வயதில் மூத்த பெண் குழந்தையாக நான் பிறந்தேன்.

எனது தாய்வழிப் பாட்டனார் சுவாமிநாதன் ஓர் அனுபவம் வாய்ந்த விவசாயி. எனது பாட்டி லட்சுமி தீவிரமான அம்மன் பக்தையாகையால் எனக்கு சிவகாமி எனப் பெயரிட்டதாகப் பெற்றோர்கள் கூறியிருந்தார்கள்.தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முகிழத் தொடங்கிய காலகட்டத்தில் பிறந்த காரணத்தால் எனது குழந்தைப் பருவமும் அதன் தாக்கங்களுடனேயே கடந்து சென்றது. எனது தந்தை அமைதியும் அன்பும் நிறைந்த எளிமையான மனிதர். அதிகமான வாசிப்புப் பழக்கம் கொண்டவர். சரித்திரங்கள், புராணக் கதைகள், தொடக்கம் அரசியல் சித்தாந்தங்கள்வரை வாசிப்பார். தான் வாசித்த விடயங்களைக் குழந்தைக் கதைகளாக மாற்றி இரவு நேரங்களில் எனக்குச் சொல்லித் தருவார். எனது தாயாருடைய மிக இளம் வயதிலேயே நான் பிறந்துவிட்ட காரணத்தாலும் எனக்கடுத்தடுத்துச் சகோதரர்கள் இருந்த காரணத்தாலும் நான் அதிகமாக எனது பாட்டி வீட்டிலேயே செல்லப் பிள்ளையாக உலா வந்தேன்.

குடும்பத்தில் மூத்த பேரப் பிள்ளையான என்மீது அனைவரும் அன்பைச் சொரிந்தனர். எனது தாயாரின் ஒரே சகோதரனாகிய எனது மாமா உயர்தரம் வரை படித்திருந்தும் எந்த அரசு வேலைகளையும் தேடிப் போகாமல் வீடும் விவசாயமுமாகவே வாழ்ந்து வந்தார்.எனது தாத்தாவின் தம்பி சேதுபதி திருமணம் செய்துகொள்ளாமல் தனது அண்ணன் குடும்பத்துடனே வாழ்ந்து வந்தார். கடின உழைப்பாளியும் கண்டிப்பும் நிறைந்தவரான அவரே எமது பெருத்த குடும்பத்தின் நிர்வாகியாகவும் இருந்தார்.அதிகம் கற்றறிந்திருக்கவில்லையானாலும் அவர்களது பண்பும் ஒழுக்கமும் நிறைந்த வாழ்க்கை முறை இப்போதும் எனக்கு வியப்பானதாகவே இருக்கிறது.

குழந்தைகளான எம்மைத் தமது உயிராகக் கருதி வளர்த்தெடுத்தார்கள். எனது பெற்றோர்களாலும் பெரியவர்களாலும் நான் தண்டிக்கப்பட்டதோ அல்லது அவர்களுடைய வாயிலிருந்து ஒரு கடின வார்த்தையைக் கேட்டதோ என்றுமே கிடையாது.‘ஜல் ஜல்’ எனச் சலங்கை ஒலியெழுப்பும் இரட்டை எருதுகள் பிணைக்கப்பட்ட மாட்டு வண்டியில், வைக்கோல் பரவி அதற்குமேல் பாய் விரித்து அமர்ந்துகொண்டு குடும்பமாகக் கரடிப்போக்குச் சந்தியில் இருந்த சினிமா தியேட்டர்களான ஈஸ்வரன் அல்லது பராசக்திக்குப் போய், அம்மம்மாவுக்குப் பிடித்த சிவாஜி அல்லது எம்.ஜி.ஆர் படங்களைப் பாதிவரை பார்த்து மீதியில் பெரியவர்களின் மடிகளில் படுத்துறங்கியபடி வீடு வந்துசேர்ந்த ஞாபகங்கள் வாழ்வின் இனிமையான தருணங்கள்.

தமிழினீயின் தாய்

அன்பான அவர்களுடைய வழிநடத்தல் சிறிய வயதிலிருந்தே எனக்குள் ஒருவிதச் சுதந்திரமான மனப்பாங்கை வளர்த்திருந்தது.சாதாரண விவசாயக் குடும்பத்துப் பெண்ணாக இருந்தபோதும் என்னை எதற்காகவும் அவர்கள் கட்டுப்படுத்தித் தமது கருத்துக்களையோ அல்லது பழக்கவழக்கங்களையோ திணித்தது கிடையாது.மாறாக நான் மிக நன்றாகப் படித்து உயர் நிலையை அடைய வேண்டுமென ஊக்கப்படுத்தினார்கள். அதுவே அவர்களின் கனவாகவும் இருந்தது.பரந்தன் இந்து மகா வித்தியாலயம்தான் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம்வரை நான் படித்த பாடசாலை. நான் சாதாரண தரம் படிக்கும் காலமளவும் புகையிரதப் போக்குவரத்து நடைபெற்று வந்த காரணத்தால் பெருமளவு யாழ்ப்பாண ஆசிரியர்களும் எமது பிரதேச ஆசிரியர்களும் எமது பாடசாலையில் கற்பித்து வந்தனர்.

தமது மாணவர்களைத் தமது சொந்தப் பிள்ளைகளைப் போலக் கவனமெடுத்து வழிநடத்திய சிறந்த பல ஆசிரியர்கள் எனது பாடசாலையில் இருந்தார்கள்.வாழ்க்கையைப் பற்றிய உயர்ந்த கனவுகளைத் தமது மாணவர்களுக்குள்ளே அவர்கள் வளர்த்தார்கள். நான் படித்துப் பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.ஆனால் நாட்டில் கருக்கொண்டிருந்த போர்ச் சூறாவளி எமது நியாயமான கனவுகளை அடித்துச் சென்றுவிடும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.எனக்கு விபரம் தெரியத் தொடங்கிய பருவத்திலிருந்தே எனது ஊரின் இயல்பு வாழ்க்கை அடிக்கடி குழம்பத் தொடங்கியது. வீதியில் அடிக்கடி துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பது வழமையான நிகழ்வாக மாறியது.யாரோ சுட்டதாகவும் யார் யாரோ செத்துவிட்டதாகவும் பெரியவர்கள் இரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். சில நாட்களில் பாடசாலை நேரங்களிலும் இப்படியான அசம்பாவிதங்கள் நடைபெறுவதுண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் வந்து தமது பிள்ளைகளை இடைநடுவில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

பாடசாலை முடிந்துவிட்டதாக அறிவித்துவிட்டு ஆசிரியர்களும் புறப்பட்டுவிடுவார்கள். கடைகள் மூடப்பட்டு, வீதிகள் மனித நடமாட்டமற்று, எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற உயிரச்சத்தில் எத்தனையோ நாட்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்திருக்கிறோம்.ஏன் எதற்காக இப்படியெல்லாம் நடக்கிறது எனப் புரியாத அந்தப் பருவத்திலேயே போர் எமது பிஞ்சு முதுகுகளில் பெருஞ்சுமையாகக் கனக்கத் தொடங்கிவிட்டது.நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது மாலை நேர வகுப்பொன்றிற்காக எனது அயல் கிராமமான குமரபுரம் போயிருந்தேன். அங்கேதான் நான் படித்துவந்த பாடசாலையும் இருந்தது.வகுப்பு தொடங்கிய சற்று நேரத்தில் பரந்தன் சந்திப் பக்கமாகப் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. உடனே ஆசிரியர் வகுப்பை நிறுத்திவிட்டார். அனைவருக்கும் மிகப் பதற்றமாயிருந்தது. சில மாணவர்கள் அழத் தொடங்கினார்கள்.

வெடிச் சத்தம் சற்று அடங்கியதும் ஆசிரியர் எம்மை வேகமாக வீடுகளுக்கு ஓடிச் செல்லும்படி அனுப்பி வைத்தார். அச்சமும் அழுகையுமாக நான் வீடு வந்து சேர்ந்தபோதுதான் அந்த வெடிச் சத்தம் எனது வீட்டு முற்றத்தில் தீர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.அயலவர்கள் எமது முற்றத்தில் கூடியிருந்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தனர். ஏ9 வீதிக்கு அருகில்தான் எனது வீடு இருந்தது.எமது வீட்டு முன் மதில் பகுதியில் ஏதோ ஒரு இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் துண்டுப் பிரசுரம் ஒட்டிக்கொண்டிருந்தபோது, சிவில் உடையணிந்து வாகனத்தில் ரோந்து சென்றுகொண்டிருந்த இராணுவத்தினர் அவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுடத் தொடங்கவும், அந்த இளைஞர்கள் மதில் பாய்ந்து எமது வீட்டைநோக்கி ஓடிச் சென்றுள்ளார்கள்.

ஒரு இளைஞனுக்கு எமது வீட்டு முற்றத்தில் வைத்து அவனது தலையில் துப்பாக்கிச்சூடு பட்டிருக்கிறது. அவன் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில் மற்றைய இளைஞன் எமது வீட்டிற்குப் பின்புறமாக அமைந்திருந்த புகையிரதப் பாதையால் ஓடித் தப்பிவிட்டார்.இந்தச் சம்பவங்கள் நடைபெறும்போது வீட்டு விறாந்தையில் எனது அம்மம்மா அரிசி புடைத்துக் கொண்டிருந்திருக்கிறார். எதிர்பாராத இந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் பிரமை பிடித்தவராகச் சில நாட்கள் எதுவுமே பேசாமல் நிலைகுத்திப் போயிருந்த அவரது பார்வை எமக்கு அச்சமூட்டியது.தனது கண்களுக்கு முன்பாக அந்த உயிர் துடிதுடித்து இறந்து போனதாகவும், அந்தச் சடலம் இராணுவத்தினரால்இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனது பாடசாலையில் பெரிய வகுப்பு மாணவர்களுக்கு அடிக்கடி இயக்கப் பிரதிநிதிகள் கூட்டங்களை நடாத்துவது வழக்கம். ஆனால் அந்தக் கூட்டங்களில் எனது வகுப்புப் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.நாங்கள் சத்தம் போட்டுக்கொண்டிருப்போம் எனக் காரணம் காட்டி எம்மை ஒரு பொருட்டாகவே கணக்கெடுக்காமல் வெளியே துரத்தி விடுவார்கள்.ஆனால் அங்கே என்ன நடைபெறுகிறது எனப் பார்ப்பதற்கு எங்களுக்கிருந்த ஆவல் காரணமாக வீட்டுக்கும் போகாமல் பாதிச் சுவரில் தொங்கியபடி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்போம்.ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புதிய பெயர்களைக் கொண்ட இயக்கத்தின் அண்ணன்மார் வந்து கூட்டம் வைப்பார்கள். கோபத்தோடு ஆக்ரோசமாக உரையாற்றுவார்கள். எமது பாடசாலையின் பெரிய வகுப்பு அண்ணன்மார், அக்காமாரும் அவர்களிடம் கேள்விகள் கேட்பார்கள்.சில நாட்கள் பெரிய சத்தமாக வாதாட்டமும் நடக்கும். இவையெல்லாம் எமக்குப் புரியாவிட்டாலும் அவர்கள் கொண்டுவரும் ஆயுதங்களும் அவர்களுடைய சிந்தனை வயப்பட்ட முகங்களும் மனதின் ஆழத்தில் பதிந்துபோயின.அதற்குப் பின்னரான காலப் பகுதிகளில் எமது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த பல பெரிய வகுப்பு மாணவர்கள் காணாமல் போகத் தொடங்கினார்கள்.

‘அவர் அந்த இயக்கத்தின் பயிற்சிக்குப் போய்விட்டார், இவர் இந்த இயக்கத்தின் பயிற்சிக்குப் போய்விட்டார்’ என இரகசியமாக வகுப்பறைகளில் மாணவர்கள் பேசிக்கொண்டார்கள்.ஊருக்குள் அப்படிப் போனவர்களின் வீடுகளில் உறவுக்காரர்கள் கூடியிருந்து செத்தவீடு போல ஒப்பாரி வைத்து அழுத சம்பவங்களும் நடக்கத் தொடங்கியிருந்தன.எமது பாடசாலையின் உயரமான தண்ணீர் தாங்கியில் இயக்கச் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கம். பல இயக்கங்களாகப் பிரிந்திருந்த மாணவர்களுக்கிடையே போட்டிகள் உருவாகியதன் காரணமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட முரண்பட்டுப் பிரிந்து நின்றார்கள்.அவர்களிடையே கலகங்களும் சண்டைகளும் உருவாயின. இயக்கங்களில் இணைந்து கொண்டவர்களில் ஒரு சிலர் பயிற்சிகள் முடித்து ஊருக்கு வந்தபோது அவர்களின் தோற்றங்கள் முற்றிலும் மாறியிருந்தன.ஊர்ப் பெரியவர்கள்கூட மதித்து நடக்குமளவுக்கு அவர்களுடைய சமூக மதிப்பு கூடியிருந்தது. “நீங்கள் நல்லா படிச்சு முன்னுக்கு வரவேணுமெண்டதுக்காகத்தான் நாங்கள் போராடப் போயிருக்கிறம்.நல்லாப் படியுங்கோ” எனச் சிறிய வகுப்பு மாணவர்களான எமக்குப் புத்திமதிகள் கூறினார்கள்.

சினிமாவில் வரும் கதாநாயகர்களைவிட ஆயுதங்களோடு வீதியில் நடமாடித் திரிந்த அந்த இளைஞர்களின் மீதான ஈர்ப்பு இளைஞர் யுவதிகளுக்கு அதிகமாயிருந்தது.அவர்களைப் பார்ப்பதும், அவர்களோடு பழகுவதும் மற்றவர்கள் மத்தியில் ஒரு மதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. அவர்களும் வீட்டுப் பிள்ளைகளைப் போலவே மக்களுடன் ‘அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி எனக் கலந்து உறவாடினார்கள். கிளிநொச்சி பொலீஸ் நிலையம் இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது.1986ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். ஒரு நாள் நள்ளிரவில் அந்த முகாம் ஒரு இயக்கத்தால் தாக்கப்பட்டது. நெருப்பு வெளிச்சம் பகல்போல அந்த நள்ளிரவிலும் பரந்தன் வரைக்கும் விசாலித்து எழும்பியது. கிளிநொச்சி நகரத்தை அண்டியிருந்த ஊர்கள் முழுவதும் உறக்கம் கலைந்து துடித்தெழுந்தன.

உலங்கு வானூர்தி வட்டமடித்தபடி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தது.அறுவடை செய்யப்பட்டிருந்த வயல்களின் அடிக்கட்டைகள் எமது கால்களைக் குத்திக் கிழிப்பதையும் பொருட்படுத்தாது, நடுச் சாமத்தில் உயிரைக் காப்பதற்காகக் குடும்பங்களாக நாம் ஓடினோம்.கிளிநொச்சிப் பகுதியில் தொடர்ந்தும் இராணுவத்தினர் பலமாக நிலைகொள்ளத் தொடங்கினர். அங்கிருந்து வெளியேறிவரும் படையினர் மீது இயக்கப் போராளிகளால் எதிர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்தக் காலத்தில் ஏ9 வீதிக்கு அருகாக இருந்த எமது குடும்பம் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்தது. இராணுவத்தினர் வருகிறார்கள் என்ற செய்தி வந்ததுமே போட்டது போட்டபடி கிடக்க வயல் வெளிகளுக்கூடாக ஓடத் தொடங்கிவிடுவோம்.மாலை நேரமாகி வெடிச் சத்தங்கள் ஓய்ந்த பின்னர்தான் வீடுகளுக்குத் திரும்பி வரமுடியும். அதுவரைக்கும் பிள்ளைகளின் பசியைப் போக்கப் பெரியவர்கள் படாதபாடு படுவார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் நாங்கள் புத்தகப் பைகளோடு ஓடிக்கொண்டிருப்போம்.எமது சின்னத் தாத்தா, வீட்டிலே இருக்கிற உணவுப் பொருட்களைத் தூக்கிச் சுமந்துகொண்டு வந்துகொண்டிருப்பார். எனக்குக் கொஞ்சம் விபரம் தெரியக்கூடிய வயதாகியிருந்தபடியால் தொடர்ந்தும் இப்படி நிம்மதியின்றி ஓடித் திரிவது வெறுப்பாக இருந்தது.

கிளிநொச்சியிலிருந்து பரந்தனை நோக்கி முதன்முதலாக இராணுவத்தினர் எறிகணைகளை வீசத் தொடங்கியிருந்தார்கள். ஒரு நாள் மதிய நேரம் எமது சின்னத் தாத்தா காலையில் மேய்ச்சலுக்குக் கட்டிய மாடுகளுக்குத் தண்ணீர் வைப்பதற்காக வயல்பக்கம் போயிருந்தார்.திடீரென ஓரிரண்டு எறிகணைகள் அவர் நின்ற பக்கமாக வெடிக்கும் சத்தம் கேட்டது. ஒரே புகை மண்டலம். வீட்டின் ஏனையவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிச்சென்றபோது சால்வையினால் வயிற்றை பொத்திப்பிடித்தவாறு தள்ளாடியபடி தாத்தா நடந்து வந்துகொண்டிருந்தார்.எறிகணையின் ஒரு சிதறல் துண்டு அவருடைய வயிற்றைக் கிழித்துச் சென்றிருந்தது. இதனால் குடல்பகுதி சற்று வெளியே வந்துவிட்டிருந்தது.

எனது மாமாவிடம் சொந்தமாகக் கார் இருந்தும்கூட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல முடியாதபடி இலங்கை வான்படையினரின் உலங்கு வானூர்தி ஒன்று பரந்தன் பகுதியை வட்டமடித்துத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது.உண்மையாக அன்றைய நாள் நான் மிகவும் ஆத்திரமும் கோபமுமடைந்து அழுதேன். எமது தாத்தாவைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ எனப் பயந்து துடித்தேன்.அப்படி ஏதாவது நடந்துவிட்டால் உடனடியாகவே இயக்கத்திற்குப் போய்விடுவது எனத் தீர்மானித்தேன். சற்று நேரத்தில் உலங்கு வானூர்திகள் விலகிச் சென்ற பின்னர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிரைக் காப்பாற்ற முடிந்திருந்தது.எமது தந்தையை விபத்தொன்றில் பறிகொடுத்த பின்னர் எமக்கு மாமாவும், அம்மாவின் பெற்றோருமே எம்மை வளர்த்து வந்தார்கள். அவர்களின் மீது நாங்கள் மிகுந்த அன்பு வைத்திருந்தோம்.

பரந்தன் சந்தியில் இராணுவத்தினருக்கும் இயக்கங்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நடக்கத் தொடங்கின. அத்துடன் இயக்கங்களும் தமக்குள்ளே ஒருவரோடொருவர் மோதிக்கொண்டனர்.
நாட்டுக்கு விடுதலை பெற இராணுவத்தினருடன் போராட வேண்டும் எனக் கூட்டங்களில் விளக்கமளித்த இயக்க அண்ணன்மார் எதற்காகத் தமக்குள்ளே இப்படிப் போர் செய்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.தினசரி பரந்தன் சந்தியைக் கடந்துதான் பாடசாலைக்குச் சென்றுவர வேண்டிய சூழ்நிலையில் நான் கண்ட காட்சிகள் ஒவ்வொன்றும் எமக்கொரு அமைதியான எதிர்காலம் அமையும் என்கிற நம்பிக்கையை ஒருபோதும் ஏற்படுத்தியதில்லை.மாறாக வாழ்க்கையின் மீதான பயமும் நம்பிக்கையீனமும் அதிகரித்துச் செல்லவே வழிவகுத்தது. இப்படியான சந்தர்ப்பத்தில்தான் இந்தியப் படையினரின் வருகை நிகழ்ந்தது.அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.இனி எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வந்துவிடுமெனப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். எல்லோரையும் போலவே நாங்களும் வீதிக்கரையில் நின்று இந்தியப் படையினரைக் கையசைத்து வரவேற்றோம்.
மூலம் -தமிழினி- தொடரும்…. ilakkiyainfo.com 08 04 2016