தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 59) 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் தமிழர்களும்

02 05 2017

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 59) 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் தமிழர்களும்

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

புதிய யாப்பிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழர் அபிலாஷைகள்
அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது, அது, அந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கத்தக்கதான தூரதரிசனம் மிக்கதொன்றாக அமைவதே பொருத்தமானது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கையைப் பொறுத்தவரையில் சிறிமாவின் ஆட்சியில் உருவான முதலாவது குடியரசு அரசியலமைப்பும் ஜே.ஆரின் ஆட்சியில் உருவான இரண்டாவது குடியரசு அரசியலமைப்பும் இலங்கையின் முக்கிய அரசியல் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை. மாறாக, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே அது அமைந்தது. 1920 களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கா, இலங்கைக்கு சமஷ்டி முறை அவசியம் என்று சொன்னபோது, தமிழ்த் தலைமைகள் அதனை முக்கியமாகக் கருதவில்லை என்பது உண்மை. ஆனால், சமஷ்டிக் கட்சியின் (தமிழரசுக் கட்சி) உருவாக்கத்திலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையின் அடிநாதமாக சமஷ்டி முறை இருந்திருக்கிறது. 20 வருடங்களுக்கும் மேலாக அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதன் விளைவுதான், தமிழர்களை தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கி நகர்த்தியது. ஆனாலும், புதிய அரசியல் யாப்பினூடாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வை வழங்கியிருக்குமாயின், தமிழ் மக்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவையை இல்லாமற்செய்திருக்கலாம். ஆனால், அதனைச் செய்வதற்குப் பதிலாக, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூடக் கருத்திற்கொள்ளாத வகையிலேயே, இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் உதயமானது.

அதிகாரப் பகிர்வை வேண்டிய தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தூக்கியெறியுமாறு, இரண்டாவது குடியரசு யாப்பின் இரண்டாம் சரத்து அமைந்தது. இலங்கையை “சனநாயக சோசலிஸக் குடியரசாக” அறிவித்த இரண்டாவது குடியரசு யாப்பின் இரண்டாவது சரத்து, “இலங்கைக் குடியரசு, ஓர் ஒற்றையாட்சி அரசாகும்” என்று பிரகடனம் செய்தது. இதன் மூலம், சமஷ்டிக்கான மற்றும் நியாயமான அதிகாரப் பகிர்வுக்கான கதவுகளை இலங்கை அரசாங்கம் தாழிட்டுப் பூட்டியது. ஏனெனில், இரண்டாவது குடியரசு யாப்பின் 83 ஆவது சரத்தின்படி, மேற்குறிப்பிட்ட இரண்டாவது சரத்தை திருத்தவோ மாற்றவோ, நீக்கவோ வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் இரண்டில் மூன்று பெரும்பான்மை அங்கிகாரம் மட்டுமல்லாது, ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் நாட்டு மக்களின் அங்கிகாரமும் பெறப்படவேண்டும். இன்றுவரை இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வை வழங்குவதற்கு, இந்தச் சரத்துக்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.

பௌத்தத்துக்கு முதலிடம்

இலங்கையை ஒற்றையாட்சி நாடாக அறிவித்தமை, தமிழர்களின் அபிலாஷைகளுக்கு விரோதமாக இருந்ததெனினும், வெளிப்படையாகப் பாரபட்சமானதல்ல என்று வாதிட முடியும். ஆனால், இரண்டாவது குடியரசு யாப்பின் ஒன்பதாம் சரத்தானது, “இலங்கைக் குடியரசானது பௌத்தத்துக்கு முதன்மையிடத்தை வழங்குவதோடு, புத்தசாசனத்தைக் காப்பதும் வளர்ப்பதும், அரசின் கடமையாகும்” என்றும் பிரகடனம் செய்தது. இது முதலாவது குடியரசு அரசியலமைப்பின் தொடர்ச்சியாக அமைந்தது. மேலும், குறித்த ஒன்பதாம் சரத்தானது, ஏனைய மதங்களுக்கான உரிமைகள், அரசியலமைப்பின் பத்தாம் சரத்து மற்றும் பதின்நான்காம் சரத்தின் ஒன்று (உ) உபசரத்து ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிட்டது. சிந்திப்பதற்கான சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் எனத் தலைப்பிடப்பட்டுள்ள பத்தாம் சரத்தானது, ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்தனை, மனச்சாட்சி, மதச் சுதந்திரத்தை வழங்குவதுடன், அவரது தெரிவான நம்பிக்கையை, மதத்தைச் சார்ந்திருக்கும், பின்பற்றும் சுதந்திரத்தை வழங்குகிறது. பதின்நான்காம் சரத்தும் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயத்திலேயே இடம்பெறுகிறது. பேச்சு, ஒன்றுகூடல், கூட்டம் நடத்தல் போன்ற சுதந்திரங்களை உறுதிப்படுத்தும் அச்சரத்தின் முதலாம் உபசரத்தின் (உ) பிரிவானது, ஒவ்வொரு குடிமகனும், தான் அல்லது தன்னுடன் இணைந்துகொண்ட மற்றவர்களுடன் கூடி, பொதுவாக அல்லது தனியாக தனது மதத்தைப் அல்லது தனது வழிபடும் நம்பிக்கையைப் பிரகடனம் செய்யவும், அதைப் பின்பற்றவும் அதை நடைமுறைப்படுத்தவும், அதைப் போதிக்கவும் உரித்துடையவராகிறான் என்று குறிப்பிடுகிறது.

இந்த அடிப்படையில் வைத்து நோக்கும் போது, இலங்கையில் அரச மதமாக பௌத்தம் ஆகிறது. ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசியல் அமைப்பின் படி அவை தொடர்பில் அரசாங்கத்துக்கு ஏதும் கடப்பாடோ கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும், அரசின் கடமையாக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 70 சதவீதமளவுக்கு, பௌத்தர்களைக் கொண்டிருந்த அன்றைய இலங்கையில், அந்த பெரும்பான்மையினரின் மதமான பௌத்தத்துக்கு முதலுரிமை கொடுக்கப்பட்டது பொருத்தமானதே என வாதிடுவோரும் உண்டு. அவர்கள், தமது நியாயத்தினை உரைக்கும் போது, குறித்த 9ஆம் சரத்தானது, பௌத்தத்துக்கு முதலுரிமை அளிப்பது மட்டுமின்றி, ஏனைய மதங்களின் உரிமைகள், அடிப்படை உரிமைகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறது. ஆகவே, ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டன, பாரபட்சம் காட்டப்பட்டது எனச் சொல்ல முடியாது என வாதிடுவர். மேலோட்டமாக இது சரியான கருத்தாகப்படினும், இரண்டாவது குடியரசு யாப்பின் ஏனைய சில சரத்துக்களோடு, சேர்த்துப் பார்க்கும் போது, எமக்கு வேறுபட்டதொரு சித்திரமே தென்படுகிறது.

ஒன்பதாம் சரத்தின் மூலம், பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பானது, அதே சரத்தில், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் பத்தாம் மற்றும் பதின்நான்காம் சரத்தின் ஒன்று (உ) உபபிரிவு ஆகியவற்றின் மூலமே மற்ற மதச் சுதந்திரத்தை அங்கிகரிக்கிறது. ஆனால், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில், பதினைந்தாவது சரத்தின் ஏழாவது உபபிரிவானது தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் தொடர்பில் பதின்நான்காம் சரத்திலுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதை சட்டரீதியாக அரசாங்கமானது கட்டுப்படுத்தலாம் என்கிறது. ஆகவே, வெளிப்படையாக மேற்கூறிய தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் ஆகிய காரணங்களைக் காட்டி, பதின்நான்காம் சரத்தின் ஒன்று (உ) உபபிரிவினால் தரப்பட்ட மதத்தைப் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாம். ஆகவே, பௌத்தத்தை பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமை என்று அறிவித்த அரசியலமைப்பு, சிறுபான்மையினரின் மதங்கள் தொடர்பில் அவ்வாறானதொரு கடப்பாட்டை உருவாக்கவில்லை என்பதுடன், தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் ஆகிய காரணங்களுக்காக மதத்தைப் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம் என்றளவில்தான் சிறுபான்மையினரின் மதங்கள் வைக்கப்பட்டன. இது சிறுபான்மையினருக்கான வெளிப்படையான ஓரவஞ்சனையின்றி வேறென்னவாக இருக்கமுடியும்?

உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் மட்டும்

1956 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் (தனிச் சிங்களச் சட்டம்) இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்தை மட்டும் பிரகடனப்படுத்தியது. சுதந்திர இலங்கையின் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையானது, தமிழர்களை தனிநாட்டு கோரிக்கையை நோக்கி நடாத்திச் சென்றது. அதன் ஆரம்பப்புள்ளியாக, தனிச்சிங்களச் சட்டத்தைக் குறிப்பிடலாம். இந்த சிறுபான்மையினருக்கெதிரான பாரபட்சமுடைய இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும், தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும் என்ற கோரிக்கையை 1956 முதல் தமிழ்த் தலைமைகளும் அவர்களுக்கு மக்களாணை வழங்கிய தமிழ் மக்களும் முன்வைத்து வந்திருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து வந்த எந்தவொரு அரசாங்கமும் இதற்கொரு ஏற்புடைய தீர்வை வழங்கவில்லை.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பிலே சில மிகக்குறைந்தளவிலான சமரசங்கள் முன்வைக்கப்பட்டாலும், இந்நாட்டின் பேசப்படும் இரண்டு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை. 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பானது சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்ததனூடாக தனிச்சிங்களச் சட்டத்துக்கு அரசியல்யாப்பு அந்தஸ்த்தினை வழங்கியது. 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பும் அதன் தொடர்ச்சியாகவே அமைந்தது. இரண்டாவது குடியரசு யாப்பின் பதினெட்டாவது சரத்து இலங்கையின் உத்தியோகபூர்வமொழி சிங்களமாக இருக்கும் என்று பிரகடனம் செய்தது. அதேவேளை 19 ஆம் சரத்தானது இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கும் என்று கூறியது. நாடாளுமன்றத்திலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் அதன் உறுப்பினர்கள் தமது கடமைகளை இரண்டு தேசிய மொழிகளிலொன்றில் ஆற்றமுடியும் என்று 20 ஆம் சரத்து குறிப்பிட்டதுடன், 21 ஆம் சரத்தானது இரண்டு தேசிய மொழிகளிலொன்றில் கல்வியைப் பெற முடியும் என்று கூறியது.

இவை வெறும் அடிப்படையான விடயங்கள். ஏற்கெனவே நடைமுறையிலிருந்தவைதான். ஆனால் 22 ஆம் சரத்தின் முதலாவது உபபிரிவானது இலங்கையின் நிர்வாக மொழியாக உத்தியோகபூர்வ மொழியே இருக்கும் (அதாவது சிங்களம் மட்டும்) என்று குறிப்பிட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுப் பதிவுகளைச் செய்வதிலும், பொது நிறுவனங்களின் அன்றாட கொடுக்கல்வாங்கல்களிலும் நிர்வாக மொழியாக தமிழ் பயன்படுத்தப்படலாம் என்று கூறியது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிப் பயன்பாடு தொடர்பிலான இந்த விசேட ஏற்பாடுகள் கூட எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் 1958ஆம் ஆண்டு தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தினதும் அதன் பின்னரான டட்லி சேனநாயக்க ஆட்சியில் குறித்த சட்டத்தின் கீழ் உருவான தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டவொழுங்குகளினதும் தொடர்ச்சியே அன்றி தமிழ் மக்களுக்கு புதிதான தீர்வெதனையும் வழங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் 22 ஆம் சரத்தின் ஐந்தாவது உபபிரிவானது பொதுச் சேவை, நீதிச் சேவை, உள்ளூராட்சிச் சேவை, பொது நிறுவனம் அல்லது அரசாங்க அமைப்பொன்றிற்கு ஆட்களைச் சேர்ப்பது தொடர்பிலான பரீட்சைகள் இரண்டு தேசிய மொழிகளிலும் நடத்தப்படும் என்று குறிப்பிட்டது. ஆனால் சேவைக்குள் இணைக்கப்பட்டு நியாயமான காலத்தினுள் உத்தியோகபூர்வமொழியில் (சிங்களமொழி) தேர்ச்சி பெறுதல் அவசியல் என்று கூறியது. இதுவும் 1958ஆம் ஆண்டின் தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் தொடர்ச்சியே. உண்மையில் இலங்கையிலுள்ள பொது அல்லது அரசாங்க உத்தியோகத்தர்கள் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழித் தேர்ச்சியுடையவர்களாக இருப்பது சிறந்ததொரு விடயம்.

ஆனால் தமிழர்களைச் சிங்கள மொழியைக் கற்கக் கட்டாயப்படுத்தவதும் சிங்களவர்களுக்குத் தமிழ் மொழி கற்பது அவசியமில்லை என்ற பாரபட்ச நிலைப்பாடானது பிரச்சினைக்குரியது. அதாவது சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என்பதால், பொதுச் சேவைக்குள் தமிழ்மொழி மூலம் உட்சேர்க்கப்படுவோர், நியாயமான காலத்துள் சிங்கள மொழியைக் கற்றுத் தேறுதல் அவசியம் என்று அரசியல் யாப்பு கூறுகிறது. ஆனால், பொதுச் சேவைக்குள் சிங்களமொழி மூலம் உட்சேர்க்கப்படுவோர் தமிழ் மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் எதுவுமே கிடையாது. ஏனெனில், தமிழ் மொழி இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படவில்லை!

இலங்கையின் மொழிப்பிரச்சினையை இலகுவாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருந்தும். ஸ்ரீீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமோ, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமோ அதுபற்றி எவ்வித அக்கறையுமில்லாது இருந்தன என்பதே வருந்தத்தக்க உண்மை. ஒரு மொழிதான் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கமுடியும், அது பெரும்பான்மையோரின் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற வாதம் அறியாமையின் வௌிப்பாடே அன்றி வேறில்லை. இந்த வாதத்தினை இன்று முன்வைக்கும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள், இந்தியாவை தமக்கு வசதியான உதாரணமாக முன்வைக்கிறார்கள். இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியானது 41 சதவீதம் இந்தியர்களின் மொழியான ஹிந்தியாகும், ஆகவே அதைப்போலவே பெரும்பான்மை இலங்கையர்களின் மொழியான சிங்களம் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக இருப்பதில் எந்தத் தவறுமில்லை என்பது அவர்களுடைய வாதம்.

ஆனால், இந்தியா பற்றிய இந்தக் கருத்து சரியானது அல்ல! இந்தியா என்பது ஓர் “அரைச்சமஷ்டி” அரசு. இந்தியாவினுடைய அரசியலமைப்பின் 343 ஆவது சரத்தானது இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியாக தேவநகரி எழுத்துருவினாலான ஹிந்தி மொழியை பிரகடனப்படுத்தும் அதேவேளை, உத்தியோகபூர்வ மொழியாக ஆங்கிலத்தின் பயன்பாட்டின் தொடர்ச்சியையும் அங்கிகரிக்கிறது. அதேவேளை, இந்திய அரசியல் யாப்பின் 345 ஆவது சரத்தானது மாநிலங்கள் தமக்கான உத்தியோகபூர்வமொழியாக குறித்த மாநிலத்தில் பயன்பாட்டிலுள்ள மொழியொன்றையோ அல்லது ஹிந்தியையோ தீர்மானிக்க முடியும் என்றும் அவ்வாறு தீர்மானிக்கும் வரை ஆங்கிலமொழி அவற்றின் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் என்றும் கூறுகிறது. ஆகவே, இந்தியாவை உதாரணமாகக் கொள்ளும்போது வெறுமனவே மத்திய அரசின் உத்தியோகபூர்வமொழி ஹிந்தி என்று சொல்வது ஏற்புடையதல்ல. மாறாக, மேற்கூறிய சரத்துக்களையும், இந்தியாவின் “அரைச்சமஷ்டி” முறையையும், பின்னர் உருவான மொழிவாரி மாநிலக் கட்டமைப்பையும் முழுமையாக வைத்து முழுச்சித்திரத்தையும் நாம் காண வேண்டும். உதாரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் உத்தியோகபூர்வ மொழி தமிழ். ஹிந்தியினுடைய அவசியப்பாடு தமிழ்நாட்டில் வசிப்போருக்கு பெரிதளவில் கிடையாது. மாநிலங்களின் உத்தியோகபூர்வ மொழிகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் இந்தியாவில் 23 உத்தியோகபூர்வமொழிகள் காணப்படுகின்றன என்பதுதான் உண்மை.

இந்தியாவைத் தாண்டிப் பல வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உத்தியோகபூர்வமொழிகளாக காணப்படுகின்றன. கனடா - 2, தென்னாபிரிக்கா - 11, சிம்பாபே - 16,
கமரூன் - 2, கென்யா - 2, சிங்கப்பூர் - 4 என்பவை இவற்றுள் குறிப்பிடத்தக்க சில.

சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என்ற ஜே.ஆரின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் சரத்துடன், தமிழும் உத்தியோகபூர்வ மொழி என்ற வாக்கியமும் சேர்க்கப்பட இன்னும் ஒன்பது வருடங்களானது, அதற்குள் தமிழர்கள் சந்தித்த இழப்புக்களும், வலிகளும் வார்த்தைகளால் வர்ணிக்கப்படமுடியாதவை.

( தொடரும்...) yarl.com  03 10 2016