மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

25 05 2017

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் ‘உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி’ என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதன் மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்குச் சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றம் சாட்டினார்.அவர்கள் விரித்த வலைக்குள் அன்ரன் பாலசிங்கமும் சிக்கிவிட்டதாக அவர் கருதினார்.

தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக் கையை விட்டு இழப்பதற்குத் தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை.அதனால் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, ஒருவரோடொருவர் முகம்கொடுத்துப் பேசிக்கொள்ளவும் விரும்பாத ஒரு நிலையில், மிகவும் மனமுடைந்தவராகவே அன்ரன் பாலசிங்கம் இறுதியாகக் கிளிநொச்சியை விட்டு வெளியேறியிருந்தார்.
வழமையாக அவர் உலங்கு வானூர்தியில் ஏறிச் செல்லும்போது இருக்கக்கூடிய சிரிப்பும் மகிழ்ச்சியும் மறைந்துபோய் அவரதும் அவருடைய துணைவியாரின் கண்களிலும் கண்ணீர்க் கசிவுகள் தென்பட்டதைப் பலரும் அவதானித்தோம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் பல துறைகளாகப் பிரிந்து மக்கள் மத்தியில் தமது நிர்வாக வேலைகளை முன்னெடுத்த போதும், அந்தப் பிரிவுகளுக்கிடையே ஒரு கூட்டுப்பொறுப்பு உருவாக முடியாத நிலையே இறுதிவரை இருந்தது.தமது பிரிவினது வேலைகளைச் சிறப்பாகச் செய்துவிட்டால் மட்டும் போதும் என்ற எண்ணத்துடனேயே ஒவ்வொரு பிரிவுப் பொறுப்பாளர்களும் செயற்பட்ட காரணத்தால், மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்சனைகளை ஒருங்கிணைந்த முறையில் தீர்ப்பதற்காக மாதந்தோறும் அனைத்துப் பிரதான தளபதிகளும் பொறுப்பாளர்களும் சந்திக்கும் கூட்டமொன்றை நடாத்துவதன் மூலம் நிர்வாகப் பிரச்சனைகளைக் கூடிக் கதைத்துத் தீர்த்துக்கொள்ளும்படி தலைவர் கூறிய ஆலோசனைக்கமைவாக அத்தகைய சந்திப்புகள் இடம்பெறத் தொடங்கின.

அதனால் ஓரளவுக்குப் பிரச்சனைகள் சுமூகமாகக் கையாளப்பட்டபோதிலும் முற்றிலுமாக மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. விடுதலைப் புலிகளின் நிதித்துறையினர் தமது வரி வசூலிப்பு நடைமுறையைச் செயற்படுத்திய விதம் மக்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியது.நீண்டகாலப் போரினால் பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்களைப் புலிகள் சுரண்டுவதாகப் பலமான குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் எழுந்தன.இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளரான தமிழேந்தி இதற்கான எந்த விளக்கத்தைக் கூறினாலும், மக்கள் மனப்பூர்வமாக அவற்றை ஏற்றுக்கொள்ளவே இல்லை.மேலும் அங்குப் பணியாற்றியவர்களின் மக்களுடனான அணுகுமுறையில் இருந்த குறைபாடுகளும் இப்பிரச்சனையை இன்னும் பெரிதாக்கின.

சமாதான காலத்தில் தாயகத்திற்கு விடுமுறையைக் கழிக்க வந்து சென்ற புலம்பெயர் உறவுகளும் பெரும் விசனத்துடன் அக்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினார்கள்.ஓமந்தையில் விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசம் ஆரம்பமாகும் இடத்தில் “வன்னி நிலம் வரவேற்கிறது” என்ற பெரிய பதாகை நிறுவப்பட்டிருந்தது.அதனை “வன்னி நிலம் வர வேர்க்கிறது” எனக் கேலியாக மக்கள் அழைக்குமளவுக்கு, இயக்கத்தின் வரி வசூலிப்பு நடவடிக்கைகளை மக்கள் வெறுத்தார்கள்.இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்திய இன்னொரு விஷயம், இயக்கத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையாகும்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீண்டகாலமாக இயக்கத்தின் நேரடித் தொடர்பு இல்லாமலிருந்த காரணத்தால், ஆரம்பத்தில் புலிகளைக் கண்டதுமே ஒரு அலைபோல, இளைஞர்கள் யுவதிகள் புதிய போராளிகளாகத் திரண்டுவந்து இணைந்தனர்.ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அந்த அலை வெகுவாகக் குறையத் தொடங்கியது. இதனால் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தீவிர பரப்புரை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சமாதான காலத்தில் ஆண்-பெண் போராளிகளுக்கான புதிய பல பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை ஆயுதப் பயிற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.அத்துடன் எல்லைப்படை, மக்கள்படை பயிற்சி என்பனவும் மீண்டும் தொடங்கப்பட்டன. இயக்கத்திலிருந்து விலகிச் சென்ற போராளிகளை மீண்டும் இயக்கத்தில் இணைக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் மக்கள் மீண்டும் பல அழுத்தங்களுக்கு உள்ளானார்கள். இயக்கத்தின் பரப்புரை மூலமான ஆளணி இணைப்பு நடவடிக்கைள் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளாக மெல்லமெல்ல மாற்றமடையத் தொடங்கியிருந்தன.எப்படியாவது, எவரையாவது இயக்கத்தில் ஒரு உறுப்பினராக இணைத்துக்கொண்டால் போதும் என்ற மோசமான நிலைப்பாடு இயக்கத்திற்குள்ளே உருவாகத் தொடங்கியிருந்தது.இயக்கத்திற்குத் தேவையாக இருந்ததெல்லாம் ஆயுதங்களை இயக்குவதற்குப் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு மனித உருவம் மட்டுமே என்றளவிற்கு இயக்கத்தின் கொள்கை நிலைப்பாடுகள் சுருங்கத் தொடங்கியிருந்தன.அரசியல்துறையின் கைங்கரியம் என்ற வெளிப்படையான பெயருடன் இயக்கத்தின் சகல பிரிவுகளும் இந்த வேலைத்திட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபடுத்தப்பட்டன.முப்பது வருடங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஆயிரக்கணக்கான போராளிகள், தமது உயிரை அர்ப்பணித்தும், இலட்சக்கணக்கான மக்கள் தமது உயிரையும் உடைமைகளையும் இழந்தும் தாங்கொணாத் துயரத்தை அனுபவித்திருந்தனர்.இருந்தும் போர்க்களங்களில் புலிகள் பெற்றிருந்த வெற்றிகளின் காரணமாகவும், உயிரை அர்ப்பணிப்பு செய்திருந்த தமது பிள்ளைகளின் காரணமாகவும், புலிகளின் சகல விதமான குற்றங்குறைகளையும் அத்துமீறல்களையும் பொறுத்துக்கொண்டு மிகுந்த சகிப்புத் தன்மையுடன் ஆயுதப் போராட்டம் ஏற்படுத்திய அனைத்து வலிகளையும் சுமைகளையும் மக்கள் தாங்கி நின்றார்கள்.

தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் சக்தியாக எழுச்சி பெற்றிருந்த விடுதலைப் புலிகளை எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழ் மக்கள் தமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் மீட்பர்களாக நம்பியிருந்தார்கள்.2004 டிசம்பரில் சுனாமி பேரழிவு ஏற்பட்டதன் பின்னர் சுனாமிக்குப் பின்னரான வேலைத் திட்டம் (Post-Tsunami management structure P-TOMS.) சர்வதேச உதவி வழங்கும் நாடுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த மீள் கட்டமைப்பு வேலைத் திட்டத்தில் இலங்கையரசுடன் சேர்ந்து புலிகளும் ஈடுபடுவது என்ற இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பேச்சுக்கள் நடாத்தப்பட்டன.
ஆனாலும் புலிகளால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபட முடியவில்லை.
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டரீதியான அதிகாரம் எதுவும் வழங்கப்படாத நிலையில், தமிழர் பகுதிகளில் மீள் கட்டமைப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்திற்கு அனுமதியளிப்பது புலிகளுக்குச் சிக்கலானதாக இருந்தது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனை மேற்குலக மத்தியஸ்தத்துடன் கையாளப்படும் நிலையை எட்டியிருந்ததனால் அந்த அரசியல் சூழலைக் கையாளக்கூடிய ராஜதந்திர துணிச்சல் புலிகளின் தலைமைக்கு அதிகம் தேவைப்பட்டது.யுத்த களத்தில் இலங்கையின் பாதுகாப்புப் படைத் தலைமைகளும் சர்வதேச இராணுவ ஆய்வாளர்களும் வியந்து நிற்குமளவுக்குப் போர்த் தந்திரங்களைக் கையாண்டு பல வெற்றிகளைப் பெற்றிருந்த தலைவர் பிரபாகரன், சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திரத்தின் நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தி, தமிழர்களுக்கு உறுதியான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நிலையை நோக்கி முன்னேறிச் செல்ல முடியாமல் திணறத் தொடங்கினார்.வாழ்வாதாரங்கள் எல்லாவற்றையும் இழந்துபோன நிலையிலும், போராட்டத்தை நம்பியிருந்த மக்களுக்காகத் தனது பிடிவாத குணத்திலிருந்து வெளியே வரவேண்டியவராகத் தலைவர் பிரபாகரன் இருந்தார்.ஆனால் அந்த நேரத்தில் அவர் அதைச் செய்வதற்கான துணிச்சலற்றவராகவே இருந்தார்.

எந்த மக்களுக்காகப் போராடுவதாக அவர் கூறினாரோ அந்த மக்களைப் பாதுகாப்பதா அல்லது கோடானுகோடிப் பணத்தைச் செலவு செய்து மிகவும் பிரயத்தனங்களின் மத்தியில் கொண்டு வந்து சேர்த்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா என்ற கேள்வி அவருக்கு முன்பாக இரத்தமும் தசையுமாக எழுந்து நின்றது.சமாதானப் பேச்சுவார்த்தையானது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் தொடர முடியாதவாறு இறுக்கமடையத் தொடங்கியது.போரினால் பாதிப்புற்ற மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான “சிராண்” கட்டமைப்பு புலிகளின் ஒத்திசைவொடு உருவாக்கப்பட்டிருந்தாலும் அதனுடைய சில நடைமுறை விடயங்களில் புலிகள் தமது அதிருப்தியை வெளிக்காட்டத் தொடங்கினார்கள்.

நியுயோர்க்கில் நடைபெற்ற நிதி வழங்கும் நாடுகளின் மாநாடு ஒன்றிற்குப் புலிகளை எப்படியும் அழைத்துச் செல்ல வேண்டுமென்பதில், நோர்வே அனுசரணையாளர்கள் உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்திருந்தனர்.புலிகளின் பிரதிநிதிகளுக்கான விமான இருக்கைகள் இறுதி நிமிடம் வரையிலும் ஒதுக்கப்பட்டிருந்தது. புலிகள் மட்டத்திலும் போவதா, விடுவதா என்கிற இழுபறி நிலை இறுதிவரை இருந்தது.இறுதியில் போவதில்லை என்ற அறுதியான முடிவுக்குத் தலைவர் வந்துவிட்டார் என்பதை அறியமுடிந்தது.

சமாதானச் செயலகத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் எம்மோடு உரையாடிக்கொண்டிருந்த அரசியல்துறைப் பொறுப்பாளர், “நாங்கள் இந்த மாநாட்டுக்குப் போனால் சர்வதேச வலைக்குள்ளே சிக்குப்பட்டு விடுவோம் என அண்ணை யோசிக்கிறார்.அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எங்களுடைய ஆயுதங்களை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான், இந்த அளவுக்கு இறங்கி வந்து எம்மைச் சுற்றி வளைக்கின்றன.ஆனால் “ஆயுத ஒப்படைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அண்ணை சொல்லிப் போட்டார். இனியென்ன சண்டைதான், எல்லா வேலைகளையும் நிறுத்திப்போட்டு இயக்கத்திற்கு ஆளணியைத் திரட்டச் சொல்லி அண்ணை சொல்லுறார்.இனி ஏற்படப் போகும் யுத்தம் இலங்கை இராணுவத்தோடு மட்டும் நடக்கப் போகிற சண்டையில்லை. சர்வதேசத்தோடு நடைபெறப் போகும் போர்.

அதைப் பற்றி நானோ நீங்களோ கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. அண்ணை பாத்துக்கொள்ளுவார். அவர் சொல்லுற வேலைகளை நாங்கள் ஒவ்வொருவரும் சரிவரச் செய்தமெண்டால், எப்ப என்ன முடிவு எடுக்க வேணும் என்பதை அண்ணை பாத்துக்கொள்ளுவார்” எனத் தமிழ்ச்செல்வன் எம்மிடம் குறிப்பிட்டார்.

2004இன் இறுதிப் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக இராணுவத் தரப்புக்கும் புலிகளின் தரப்புக்கும் இடையே போர்நிறுத்த மீறல் சம்பவங்கள் அதிகரித்துச் சென்றன.யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு இந்தக் குற்றச் செயல்களைப் பதிவு செய்ததுடன் இருதரப்பின் சமாதானச் செயலகங்களுக்கும் அனுப்பிக்கொண்டிருந்தது.லக்ஷ்மன் கதிர்காமர்2005 ஆகஸ்ட் 12 அன்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் புலிகளின் சினைப்பர் தாக்குதலில் உயிரிழந்தார்.அதற்கு மறுநாள் பொறுப்பாளர்களுக்கான ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர் பிரபாகரன், “எப்பிடி, சொறிஞ்சுசொறிஞ்சு கொண்டிருந் தாங்கள். சொத்தையில குடுத்திருக்கிறம்” எனக் குறிப்பிட்டார்.

புலிகளின் தாக்குதல் பலத்தை நிரூபிக்கும் வகையில் இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்படும்போது அந்த யுத்தம் வடக்குக் கிழக்குக்கு வெளியேதான் நடைபெறும் என்ற நம்பிக்கை புலிகளின் தளபதிகளிடையே பெரிதாக நிலவியது.அதற்கேற்ற வகையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளனர் என்கிற நம்பிக்கை இயக்கத்திற்கு இருந்தது.

அத்துடன் புலிகளால் கட்டியெழுப்பப்பட்டிருந்த வான்படையின் பலமும் ஆட்லறி பீரங்கிகளின் உயர் சூட்டு வலுவும் எந்தக் கட்டத்திலும் தமது உயிர்களை அர்ப்பணிக்கத் தயாராக இருந்த கரும்புலியணிப் போராளிகளின் உயிராயுதமும் இயக்கத்தின் உச்ச நம்பிக்கைகளாக அமைந்திருந்தன.லங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடைய படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தபோது, அந்த விடயத்தைப் புலிகளின் தலைமை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை.இயக்கம் தடைசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டபோது என்னைப்போலப் பல போராளிகளுக்கும் கவலையும் குழப்பமும் ஏற்பட்டது. அரசியல்துறைப் பொறுப்பாளரால் எமக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர் சிரித்தபடி கூறிய விடயம் எமக்கு மலைப்பை ஏற்படுத்தியது.“உங்களைப் போலத்தான் நாங்களும் கொஞ்சப் பேர் சரியான மனக் குழப்பத்தோட அண்ணையைச் சந்திக்கப் போனனாங்கள், அண்ணை சிம்பிளா சிரிச்சுக்கொண்டு சொன்னார் ‘இந்தப் பெரிய நாடுகள் எல்லாம் தடைசெய்கிற அளவுக்குச் சர்வதேச அளவில இராணுவ பலம் பொருந்திய இயக்கமாக நாங்கள் வளந்திருக்கிறம் எண்டு நினைச்சு சந்தோசப்படுங்கோ’ எண்டு, அப்பிடிப்பட்ட தலைவர் எங்களுக்கு இருக்கேக்க நாங்கள் ஏன் குழம்ப வேணும்” எனக் கூறினார் தமிழ்ச்செல்வன்.

கதிர்காமர் மீதான பழிதீர்ப்புத் தாக்குல் எமது போராட்டத்தில் ஏற்படுத்தியிருந்த அரசியல் பின்னடைவை அலட்சியமாகக் கடந்துபோய்விடலாம் என விடுதலைப் புலிகளின் தலைமை கருதியது.உலகத்தையே பகைத்துக்கொண்டு ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றியடைதல் என்பது எப்படிச் சாத்தியமாகும் என்ற அளவிற்கேனும் சிந்திக்கத் தோன்றாதவாறு புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீதான நம்பிக்கை அனைவரது கண்களையும் கட்டிப்போட்டிருந்தது.2005 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரான மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு மக்களை வாக்களிக்கத் தூண்டும்படி தலைவர் கூறியிருப்பதாக அரசியல் பொறுப்பாளர்களுடைய கூட்டத்தில் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.

“மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும், இப்பிடி இவங்களோட பேச்சு வார்த்தையெண்டு இழுபட்டுக் கொண்டிருக்கிறதுக்கு சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்; அதுக்கு சரியான ஆள் இவர்தான்” எனக் குறிப்பிட்ட வார்த்தைகள் அதன் பின்னரான நாட்களில் அடிக்கடி எனது நினைவுக்கு வருவதுண்டு.
தொடரும்… -தமிழனி- ilakkiyainfo.com01 06 2016