மறுபக்கம் 23 03 2014

thinakkural.lk 203 03 2014

மறுபக்கம் 23 03 2014

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான விசாரணைக்குழு ஒன்றின் இடத்திலேயே கற்றபாடங்களுக்கும் நல்லிணக்கத்துகுமான விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இதில் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. “உண்மை’ என்ற சொல் தவறியமை, தற்செயலல்ல என்றே நினைக்கிறேன். மேற்கூறியவாறான விசாரணைகள் வேறுபட்ட சூழ்நிலைகளில் நடக்கலாம். எவ்வாறெனினும், விசாரணைகளில் சொல்லப்பட்ட நோக்கம் ஒரு நாட்டினுள் நடந்த கொடுமைகளாற் பாதிக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளை அறிவதும் பாதிப்புக்கட்கான காரணங்களை விசாரித்து முரண்பட்ட தரப்பினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒரு சுமுகமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதுமாகும். ஆயினும் உண்மையான நோக்கங்கள் வேறுபடலாம். நமக்கு அடிக்கடி முன்னுதாரணமாகக் காட்டப்படுவது தென்னாபிரிக்காவின் விசாரணைக் குழுவே. தென்னாபிரிக்காவின் நல்லிணக்கத்தில் முக்கியமான விடயம் என்னவெனின் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் எனப்பட்டோர் அரச அதிகாரத்தில் அமர்ந்த சூழ்நிலையில் அது முன்னெடுக்கப்பட்டமையாகும்.

உண்மை மட்டுமன்றி, நல்லிணக்கமும் வலியுறுத்தப்படுவதால், ஆணைக்குழுக்களின் பொறுப்பு உண்மைகளைக் கண்டறிவதற்கும் நல்லிணக்கத்தைத் தேடுவதற்கும் அப்பாற் போகாது. எனவே, தண்டனைகள் என்பதை மேற்கூறியவாறான விசாரணைகட்கும் புறம்பானவை என்பதுடன், பல சூழ்நிலைகளிற் குற்றவாளிகள் முன்வந்து உண்மைகளைக் கூறுவதற்கு ஏதுவாக அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. மேற்கூறியவாறான விசாரணைகள் முழு உண்மைகளையும் வெளிக்கொணருமா என்பது ஒரு கேள்வி. எனினும் முக்கியமான பல ஏலவே தெரிந்த ஆனால், ஏற்கப்படாத உண்மைகளைக் குற்றவாளிகள் ஏற்கவும் பாதிக்கப்பட்டோர் துணிந்து கூறவுமான ஒரு நிலையை ஏற்படுத்துவதற்குத் தண்டனை என்பதைத் தவிர்க்கும் முறையில் சில உறுதிகளும் வழங்கப்பட்டன.

உண்மையாகவே இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் ஏற்கப்பட்டன. எனினும், தென்னாபிரிக்காவில் இனமோதல் ஏற்படாமல் தடுத்தது உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான விசாரணைகளல்ல. ஒரு நூற்றாண்டுக்காலமாக இருந்து வந்த ஒரு நிறவெறி ஆட்சியில் ஒரு வெள்ளையினச் சிறுபான்மை கறுப்பினப் பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி ஏதிலிகளாக அடிமைப்படுத்தியிருந்தது. கறுப்பினத்தவர் ஆட்சிக்கு வந்தால் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மண்ணும் உழைப்பின் பலனும் அவர்களுடைய கைக்குப் போய்விழும் என்று தென்னாபிரிக்க வெள்ளையின மேட்டுக் குடிகளும் அவர்களுடைய மேற்குலக ஆதரவு சக்திகளும் அஞ்சின. தென்னாபிரிக்கச் சொத்துடைமை முறையில் மாற்றம் நேராது என்ற உத்தரவாதத்தை ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் நெல்சன் மண்டேலாவும் வழங்கியதாலேயே தென்னாபிரிக்காவிற் கலகம் மூளவில்லை. சிம்பாப்பேயில் றொபேட் முகாமே செய்ததைப் போல பெரிய பண்ணை நிலங்களை மக்களுக்கு பகிர்ந்திருந்தால், சிம்பாப்பே அனுபவித்தை விட பாரிய மேற்குலகு நெருக்குவாரங்களைத் தென்னாபிரிக்கா அனுபவித்திருக்கும். இப்போது அந்நிய முதலீட்டாளர்களைப் பாதுகாக்கக் கறுப்பினத் தொழிலாளர்களைக் கறுப்பின பொலிஸ் சுட்டுத் தள்ளுகிறது. முன்பு போலன்றி வெள்ளை இனப் பொலிஸ் அந்தப் பணியை நிறைவேற்றத் தேவையில்லை.

இன்னுமொரு உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான விசாரணை சிலியில் நடந்தது. தென்னமெரிக்கா முழுமையிலும், ஆர்ஜென்ரீனாவில் இராணுவ அடக்குமுறை ஆட்சியின் போதும் சிலியில் பினோஷேயின் ஆட்சியின் கீழும் போலக் கொடுமையான மனிதஉரிமை மீறல்கள் சென்ற நூற்றாண்டில் வேறெங்கும் நடக்கவில்லை. சிலியில் நடந்த விசாரணைகளின் போது உறவுகளை இழந்தோர், வதைகட்குட்பட்டோர் எனப் பலரும் சாட்சியளித்தனர். எனினும், எதுவும் எவரையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லவில்லை. பினோஷேயை ஐரோப்பாவில் மனிதஉரிமைக் குற்றங்களின் பேரில் ஸ்பெலின் நீதிமன்றம் அவரைக் கைதாக்க ஆணையிட்டது. அவர் பிரித்தானியாவிற் கைதானவர். அவர் ஸ்பெயிலுக்கு அனுப்பப்படவில்லை. சிலிக்கு அவரை அனுப்ப பிரித்தானியா முடிவெடுத்தது. அவர் மீது ஊழல் முதலான வேறுபல குற்றங்கள் சுமத்தி வழக்குகள் நடந்தன. போப்பரசர் இரண்டாம் ஜோன் போல் அவருக்கு இரங்குமாறு மன்றாடினார். பினோடி முறையாகத் தண்டிக்கப்படவில்லை. வயது முதிர்ந்த பினோஷே வழக்கு முடியும் முன்னமே நோயாளியாகி இருந்தார். மாறாக ஆர்ஜென்றினாவில் மக்களின் எதிர்ப்பின் விளைவாக (முக்கியமாகக் காணாமற் செய்யப்பட்டோரின் அன்னையரின் இடைவிடாத போராட்டத்தின் பயனாக) முக்கிய இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் தண்டிக்கப்பட்டனர்.

மிக மோசமான இனப்படுகொலை நடந்த மத்திய ஆபிரிக்க நாடான டுவாண்டாவில் அக்கொலைகளைத் தூண்டி விட்ட முக்கியமான குற்றவாளி இன்னமும் அதிகாரத்திலிருக்கிறார். எனவே தான், நாம் உண்மையும் நல்லிணக்கமும் பற்றிய சடங்குகளைப் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். சர்வதேச விசாரணைகளும் நீதிக்கான உத்தரவாதங்களல்ல. பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் என்போர் ஆட்சிக்கு வந்த பின்பும் அவர்களின் ஆட்சிகள் பாதிக்கப்பட்டோருக்கு என்ன நன்மைகளை வழங்கின? கொடிய முன்னாள் ஆட்சியின் வன்முறையையும் அந்தக் கொடுமைகட்கு எதிரான தற்காப்பு வன்முறையையும் எப்படி ஒரே தராசில் வைத்து ஒப்பிட முடியுமானது? பிரச்சினைகளைப் பழிக்குப்பழி, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர் என்ற அடிப்படையில் தீர்க்க இயலாது. அதேவேளை, பாரிய கொடுமைகள் முறையாக விசாரிக்கப்பட்டுத் தண்டனைக்குட்படாமற் போகவிடுவதும் இயலாது. எனினும் குற்றங்கள் அவை நிகழ்ந்த சூழலின் அடிப்படையில் விசாரிக்கப்படுவதும் தண்டனைகள் குற்றங்களுக்கு ஒருவர் எவ்வளவு தூரம் பொறுப்பாளியாயிருந்தார் என்ற அடிப்படையிலும் அமைவது முக்கியமானது. அதை நேர்மையாகச் செய்ய வல்லோர் யார்?

எந்த விசாரணையும் ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்படுவதாக அதன் உறுப்பினர்கள் எண்ணும் போது, அது எதிர்மறையான விளைவுகளையே தரும். எனவே, தான் ஒரு பிரச்சினையை இனங்கட்கிடையிலான பிரச்சினையாகவும் ஒரு இனத்தை இன்னொரு இனம் இலக்கு வைப்பதன் விளைவாகவும் அனைத்துத் தரப்பினரும் காணும் வரை, எந்த விதமான நற்பயனும் விளையாது. இவ்வாறான சூழலை அயல்நாடுகள் குறிப்பாக பெரு வல்லரசுகள் தமக்கு வாய்ப்பாக்கிக் கொள்ளும்போது புதிதாகப் பகைமை மூட்டப்படும். சேவல் கூவித்தான் பொழுது விடிவதில்லை. நம் தமிழ்த்தேசியச் சேவல்களுக்குக் கூவுகிற வேளை கூடச் சரியாகத் தெரியாது. அவர்கள் சொல்வதற்காகவும் எதுவும் நடக்கவில்லை. அவர்களுடைய புலம்பெயர்ந்த நடத்துநர்கள் சொல்வதற்காகவும் எதுவும் நடக்கவில்லை. ஆனால், இவர்கள் உரத்துக் கூறுவதால், இவர்கள் சொல்லித்தான் மேற்குலகு இலங்கைக்கு எதிராகத் தீர்மானங் கொண்டுவரப் போகிறது என்று சிங்கள மக்களை நம்பவைக்க ஒரு கும்பல் செயற்படுகிறது. தமிழ் மக்களை நம்ப வைக்க இன்னொரு கும்பல் செயற்படுகிறது. ஆனால், இரு பகுதியினரும் ஒரே பொய்யின் மூலம் மக்களை ஏய்த்துத் தங்களை வளப்படுத்துகின்றனர்.

சர்வதேச விசாரணை என்பது இப்போதைக்கு ஒரு வலிய மிரட்டல் ஆயுதம். அது யார் கையில் உள்ளது என்று நமக்கு விளங்கவேண்டும். அது எதற்குப் பயன்படும் என்று நமக்கு விளங்க வேண்டும். இந்த நாட்டின் உள்ளேயே ஒரு நம்பகமான விசாரணை இன்றைய சூழலில் இயலுமா இல்லையா என்பது ஒரு பிரச்சினை. ஆனால், ஒரு நம்பகமான விசாரணைக்கான சில முன் நிபந்தனைகளை நாம் முடிவு செய்யலாம். அவற்றை முன்வைத்து ஒரு விசாரணையைக் கோருவதானால் தென்னிலங்கையில் அதற்கான ஆதரவை வெல்வது இயலுமானது. அதை ஒரு பெரும்பான்மையாக மாற்றுவதற்குக் குறுகிய அரசியல் இலாபங் கடந்த ஒரு நோக்கு அவசியம். அதை நாம் தவறவிடலாகாது. இலங்கையில் நடக்க வேண்டியது போர்க்குற்ற விசாரணையல்ல, இன ஒழிப்பு விசாரணை என்று பேசுகிறவர்களுக்கு முன் ஒரு சவால் உள்ளது. விடுதலைப் புலிகளும் இந்திய அரசாங்கமும் கூட இன ஒழிப்பில் ஈடுபட்டனவா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என அவர்கள் வற்புறுத்தத் துணிவார்களா? நீதியை கோர நமக்குள்ள உரிமையைவிட முக்கியமானது, அதைக் கோருவதற்கான நமது யோக்கியம்.