நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

22 06 2017

நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

வன்னியின் காடுகளைப் பற்றிய அனுபவம் கொண்ட ஒரு தளபதி இந்த உள்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.எப்படியிருந்தபோதும் இயக்கம் எதிர்பார்க்கும் இடங்களைத் தவிர்த்து வேறு முக்கியமான இடங்களில் ஆழ ஊடுருவும் அணியினர் தமது கைவரிசையைக் காண்பித்துப் பல அதிர்ச்சி வைத்தியங்களைச் செய்தார்கள். இறுதிப்போரின் கடைசிக் கட்டம்வரை ஆழ ஊடுருவும் அணியினரின் நடவடிக்கைகளைப் புலிகளால் தடுத்துநிறுத்த முடியவில்லை.இதுபோலவே இலங்கை வான் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளால் புலிகளது பல செயற்பாடுகள் பாதிப்படைந்தன. அதிகாலையிலிருந்தே வேவு விமானங்கள் வானத்தில் பறக்கத் தொடங்கிவிடும்.

‘றிமோட் கொன்ட்ரோல்’ மூலம் இயக்கப்படும் கண்ணுக்குப் புலப்படாத அந்த விமானத்தை ‘வண்டு’ எனப் போராளிகள் அழைப்பது வழக்கம்.இயக்கத் தளபதிகளின் பிரதான முகாம்கள், தாக்குதலணிகளின் பயிற்சித் தளங்கள், அடிப்படைப் பயிற்சி முகாம்கள், பின்னணி நிர்வாக மையங்கள் என்பவற்றின் மீது குறிவைத்து இலங்கை வான் படையினர் பல துல்லியமான தாக்குதல்களை நடத்தினர்.அடர்ந்த காடுகளுக்குள்ளே உச்சக்கட்ட உருமறைப்புகளுடன் இருக்கும் இரகசிய முகாம்களின் மீதுகூட மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இயக்கத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஒருதடவை வல்லிபுனம் வீதியில் நானும் இன்னொரு போராளியும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வானத்தில் பேரிரைச்சலுடன் தோன்றிய விமானங்கள் வீசிய குண்டின் அதிர்வுகளால் தூக்கியெறியப்பட்டோம்.

வல்லிபுனம் வீதிக்கரையின் சிறு காட்டுப் பகுதியில் மிகுந்த உருமறைப்புடன் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விமானத்திலிருந்து வீசப்பட்டிருந்த குண்டுகளினால் பிய்த்தெறியப்பட்டிருந்தது.தலைவரால் மேற்கொள்ளப்படும் நிர்வாக விடயங்கள் அனைத்தையும் தலைமைச் செயலர் மூலமாக ஒருங்கிணைக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதான நிர்வாக மையமாக அது அமைந்திருந்தது.எண்ணிக் கணக்கிட முடியாத பல விமானத் தாக்குதல்களிலும் கிளைமோர் தாக்குதல்களிலும் சிக்குண்ட அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு.ஆனாலும் இரத்தக் காயமோ மரணமோ எனக்கு வந்து சேராமலிருந்தது வெறும் அதிர்ஷ்டமேயன்றி வேறேதுமில்லை.சில சந்தர்ப்பங்களில் நான் அணிந்திருந்த ஆடைகளில் கிழிசல்கள் ஏற்பட்டதுடன், மோட்டார் சைக்கிள்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. முற்றாகக் காது கேளாத நிலையிலும் பல நாட்கள் இருந்திருக்கிறேன்.

முழங்காலில் அடிபட விழுந்த காரணத்தால் எனது இடது முழங்காலில் ஏற்பட்ட உள் தாக்கம் நிரந்தரமாகவே தங்கிப்போனது.இன்னொரு சந்தர்ப்பத்தில் பின் தலையில் அடிபட்ட காரணத்தால் ஒரு நாள் முழுவதும் சுய நினைவின்றிக் கிடந்தேன்.அப்போது நான் உளறலாகக் கதைத்துப் பிதற்றியதாக எனது நண்பிகள் கேலி பண்ணுவார்கள்.எனக்காக வந்த கனரகத் துப்பாக்கி ரவைகளும் எறிகணைச் சிதறல்களும் மயிரிழையில் தவறிப் போயிருக்கின்றன.அவற்றை நான் கைகளில் எடுத்து அவற்றின் உஷ்ணத்தை அனுபவித்திருக்கிறேன். மனப் பாதிப்புகள் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களில் எதற்காக இப்படியொரு கடின வாழ்வு ‘போனஸ்’ ஆக ஏன் நீண்டுகொண்டே போகிறது எனச் சலிப்புடன் மனம் வருந்தியிருக்கிறேன்.

2007இன் இறுதிப் பகுதியில் ஒருநாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களுடைய கூட்டத்திற்கான அழைப்பு அறிவித்தல் எனக்குத் தரப்பட்டிருந்தது.கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் அமைந்திருந்த சமாதானச் செயலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.குறிப்பிட்ட நேரத்திற்கு ஓரிரு நிமிடங்கள் முன்னதாக நான் மாத்திரம் தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தேன்.அந்த வளாகத்தின் உள்ளே எந்த ஆள் நடமாட்டமும் தென்படவில்லை. என்ன செய்வது என நான் யோசித்துக்கொண்டிருந்த கணத்தில் சுனாமி அலை வானத்திலிருந்து வருவதுபோல இரைச்சல் எழுந்தது.அந்த இடம் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகப்போவது புரிந்தவுடன், அவசரமாக வெளியேறிவிட நினைத்தாலும். மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்கான நேர அவகாசமிருக்கவில்லை.அந்த வீதி முழுவதும் எமது இயக்க முகாம்களே நிறைந்து காணப்பட்டதால் வெளியே ஓடிச் செல்வதும் சரியெனப் படவில்லை. எப்படியும் இன்றுதான் எனது மரணம் நிகழப்போகிறது என நினைத்துக்கொண்டேன்.குண்டுகளை இறக்குவதற்காக விமானம் தாழப் பறந்தபோது ஒரு சிறிய மரத்திற்குக் கீழே நிலமட்டத்தோடு படுத்துக் கிடந்தேன். ‘கடவுளே, உடலுறுப்புக்களை இழந்து காயப்படாமல் உடனே செத்துப் போகவேணும்’ என மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.

சமாதானச் செயலகத்தின் ஒரு பகுதிக் கட்டடம் சிதிலமாய் நொறுங்கி விழுந்தது. கண்ணாடித் துண்டுகளும் கற்களும் சிதறிப் பறந்தன. கந்தக மணம் நிறைந்த புகைமண்டலம் அந்த இடத்தை மூடிக்கொண்டிருந்தது.மெதுவாகக் கண்ணைத் திறந்து என்னை நானே தடவிப் பார்த்தேன். கை கால்களை ஆட்டி எனக்கு ஏதாவது காயம்பட்டிருக்கிறதா எனப் பார்த்தேன்; எதுவு மில்லை.எனது மோட்டார் சைக்கிளில் ஒருசில சிதறல்கள் மட்டுமே பட்டிருந்தன. ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இறுதி நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதையும், தவறுதலாக எனக்கு அது தாமதமாக அறிவிக்கப்பட்டிருந்ததையும் பின்னர்தான் அறிந்துகொண்டேன்.இயக்கத்தின் பெரும்பாலான முக்கியத் தளங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் வான் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன.கடற்புலித் தளங்களை நெருங்கிச் செல்ல முடியாத அளவுக்கு வான் தாக்குதல் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.விசுவமடு பகுதியில் அமைந்திருந்த மாலதி படையணியின் நிர்வாகச் செயலகம் விமானத் தாக்குதலில் முற்றாக அழிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதே பிரதேசத்தில் தலைவருடைய சந்திப்புகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீடு மாலதி படையணிக்குரிய நிர்வாகச் செயலகமாக வழங்கப்பட்டிருந்தது.அங்கே தளபதி விதுஷா என்னையும் வேறு சில பொறுப்பாளர்களையும் அவசரமாக அழைத்துக் கதைத்துக்கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டார்.அடுத்த அதிகாலை நேரத்தில் அந்த வீடும் துல்லியமாகத் தாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த மக்கள் தற்பாதுகாப்புப் பயிற்சிகள், மக்கள் படை கட்டுமானப் பயிற்சிகள் போன்றவற்றின் ஒரு கட்டமாக மாணவர்களுக்கான பயிற்சிகளும் நடத்தப்பட்டன.புதுக்குடியிருப்பு வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தில் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்குத் தற்காப்பு மற்றும் போர்க்கால முதலுதவிப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது அந்த இடம் விமானத் தாக்குதலுக்குள்ளாகியது.

அத்தாக்குதலில் ஐம்பதிற்கும் அதிகமான உயர்தர வகுப்பில் படித்த பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள்.மாணவர்களுடைய பாதுகாப்பைப் பற்றிய போதிய திட்டமிடல்களோ முன்னேற்பாடுகளோ இல்லாமல், அவசர கதியில் இயக்கம் முன்னெடுத்த மக்கள் படை பயிற்சிகளால் ஏற்பட்ட அந்த அவலம் மிகவும் கொடூரமானது.எத்தனையோ கனவுகளுடன் தமது மடிகளுக்குள் பொத்தி வளர்த்த பிள்ளைகளை இழந்த பெற்றோர் துடித்த துடிப்பு இதயத்தையே கிழித்துப்போட்ட துயரத்தின் உச்சமாகும்.களமுனைகளில் நிலவிய ஆளணி பற்றாக்குறை காரணமாகப் புலிகள் இயக்கத்தின் முன்னணி காவலரண்களுக்கிடையே நீண்ட இடைவெளிகள் காணப்பட்டன.ஆபத்து குறைந்ததாகக் கருதப்பட்ட சில பகுதிகளில் முன்னணி காவலரண்களில் போராளிகள் நிறுத்தப்படாமல் ரோந்து நடவடிக்கைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் இராணுவத்தினர் சில இடங்களில் இரகசிய நகர்வுகளைச் செய்து பிரதேசங்களைக் கைப்பற்றினார்கள்.மன்னார் பிரதேசத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சந்தர்ப்பத்தில், வேறு சில சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளும் சிறப்புக் கரும்புலி அணிகளால் முன்னெடுக்கப்பட்டன.
அனுராதபுரம் விமான நிலையத் தாக்குதல் மற்றும் வவுனியா இராணுவ தளம் மீதான ஆட்லெறித் தாக்குதல் என்பது போன்ற பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் கருதப்பட்டது.ஆனால் இராணுவம் மிக வேகமாகத் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு அடுத்தகட்ட தயார்படுத்தல் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கியது.அனுராதபுரம் விமான நிலையத் தாக்குதலுக்காக இயக்கம் உச்சக்கட்ட தயார்படுத்தல்களைச் செய்து திறமையான கரும்புலிகளையும் பயன்படுத்தியது.

இயக்கம் எதிர்பார்த்த வகையில் வான்படையினருக்கு இழப்புக்களும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் அடுத்த வாரத்துக்குள்ளாகவே பல புதிய ரக விமானங்களை இலங்கை அரசு கொள்முதல் செய்து தனது வான்படையின் பலத்தை அதிகரித்திருந்தது.இறுதிக் கட்டப் போரில் இயக்கத்தின் திட்டங்கள் எல்லாமே தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.அதேவேளை தொடர்ந்துகொண்டிருந்த இராணுவத்தினரின் வான் மற்றும் தரைத் தாக்குதல்கள் காரணமாகப் புலிகளின் தாக்குதலணிகளை ஒன்றுசேர்த்துப் பாரிய அளவில் ஒரு சிறப்புத் தாக்குதல் திட்டத்தை நடத்த முடியாத நிலைமை இயக்கத்திற்கு ஏற்பட்டது.கடலிலும் தரையிலும் அப்படியான சிறப்பு நடவடிக்கைகளுக்காகச் சில பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டிருந்தபோதும், தொடர்ந்துகொண்டிருந்த முன்னணிக் காவலரண் சண்டைகளுக்கே அந்த அணிகளையும் அவசரமாகப் பயன்படுத்த வேண்டியேற்பட்டது.

2008 காலப் பகுதியில் கொழும்புத் துறைமுகத்தில் பாரிய கரும்புலித் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை இயக்கம் மேற்கொள்வதற்கான திட்டமிடல்களைச் செய்திருந்தது. இதற்கான வேவுகள் பார்க்கப்பட்டுக் கரும்புலிப் போராளிகளும் அனுப்பப்பட்டிருந்தனர்.ஆனால் அந்தத் தாக்குதல்கள் இயக்கம் எதிர்பார்த்தபடி வெற்றியளிக்கவில்லை. கரும்புலிகளுக்குரிய தாக்குதல் இலக்குகள் கிடைக்காத காரணத்தால் அவர்கள் வன்னிக்குத் திரும்ப வேண்டியேற்பட்டது.அக்கரும்புலிப் போராளிகள் கடற்புலித் தளபதி சூசையால் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

இதில் பெண் கரும்புலிப் போராளிகளும் உள்ளடங்கியிருந்தனர். சமாதானத்துக்குப் பின்னரான இறுதிப் போர்க் காலங்களில் இயக்கம் இத்தகைய பல நிலைகுலைவுகளைச் சந்திக்கத் தொடங்கியிருந்தது.முழங்காவில் பகுதியில் பாரிய மண் அரண் அமைத்து இராணுவத்தினரின் முன் வருகையைத் தடுத்து நிறுத்தும் தாக்குதல் உத்திகள் கையாளப்பட்டன.அதனைத் தொடர்ந்து அக்கராயன் வன்னேரிப் பகுதியிலும் இப்படியான மண் அரண்கள் அமைக்கப்பட்டன. பிரதேச ரீதியாக அணிதிரட்டப்பட்ட மக்கள் கட்டாயச் சேவையாக இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.அந்த இடங்களை நோக்கி நடத்தப்பட்ட இராணுவத்தினரின் தாக்குதல்களில் பல உயிரிழப்புகளும், படுகாயங்களும், அங்கவீனங்களும் ஏற்பட்டன.

தமது குடும்பங்கள் இடம்பெயர்ந்து போகவேண்டியிருந்த சூழ்நிலைகளில் குடும்பஸ்தர்களான ஆண்கள் இயக்கத்தின் எல்லைப் படைகளிலும் வேறு களமுனை நடவடிக்கைகளிலும் செயற்படுவதற்கு முன்வராத தன்மை காணப்பட்டது.இயக்கம் எல்லைப் படையினருக்கு முற்கூட்டிய சம்பளத்தை வழங்கியபோதிலும் அவர்கள் களமுனைகளுக்குச் செல்லத் தயங்கினார்கள்.இதனால் இயக்கம் பலவந்தமான முறையில் அவர்களைக் கட்டாயச் சேவையில் ஈடுபடுத்தியது.2008 ஒக்டோபர் மாதமளவில் அக்கராயன் பகுதி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.இடப்பெயர்வும் பொருளாதர நெருக்கடியும் திணிக்கப்பட்ட போரும் உயிரச்சமும் மக்களைப் பெரிதும் வாட்டி வதைத்தன. இறுதிக்கட்டப் போர் நடந்துகொண்டிருந்த நாட்களில் மக்களின் நன்மைகளைப் பற்றி இயக்கம் கிஞ்சித்தும் சிந்தித்து நடக்கவில்லை.

கண்ணில் காண்பவர்களையெல்லாம் களமுனைக்குச் சாய்த்துச் செல்பவர்களாக அரசியல்துறைப் போராளிகள் பயன்படுத்தப்பட்டார்கள்.2008 நவம்பர் 23ஆம் திகதி கிளிநொச்சி மீதான தாக்குதல்களை இராணுவப் படையினர் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். 2009 ஜனவரி 02இல் கிளிநொச்சி நகரமும் அதை அண்மித்த பகுதிகளும் முழுவதுமாக இராணுவத்தினரிடம் வீழ்ந்தது.இராணுவத்தைப் புலிகளின் பிரதேசத்திற்குள் நன்றாக உள்நுழையவிட்ட பின்னர் அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கான திட்டம் தலைவரிடம் உள்ளது என்ற நம்பிக்கை தளபதிகள், போராளிகள் மட்டத்தில் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் இருந்தது.

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்ற எதிர்பார்ப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமும் பரவியிருந்த நிலையில், அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடைய மெய்ப்பாதுகாவலனாக இருந்து, அவருடைய மரணத்தின் பின்னர், ஒரு திறமை மிக்க தாக்குதல் போராளியாக உருவாகியிருந்த ஈழப்பிரியன் கிளிநொச்சியில் என்னை இறுதியாகச் சந்தித்தபோது தலைவர் தன்னிடம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை எனக்குச் சொன்னார்:“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை. என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார்.

“அண்ணையே இப்பிடிச் சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச் சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரதத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்.கிளிநொச்சியைத் தக்கவைக்கும் பெரியதொரு இராணுவ நடவடிக்கை எதனையும் புலிகளால் மேற்கொள்ள முடியவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.சமாதான காலத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த அந்த நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த பாரிய தண்ணீர்த் தாங்கி, இயக்கத்தால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது.

1996இல் சத்ஜெய படையினரின் முன்னேற்ற நடவடிக்கையின்போதும், ஏற்கனவே அதே இடத்தில் அமைந்திருந்த தண்ணீர்த்தாங்கி புலிகளால் தகர்க்கப்பட்டிருந்தது.2008இல் மீண்டும் கிளிநொச்சி நிர்மூலமாகியது. மக்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சியிலிருந்து பதின்மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் தருமபுரத்திற்குச் சென்றிருந்தனர்.அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசனுடைய வற்புறுத்தலுக்கும் தலைவரின் உத்தரவுக்கும் அமைவாக ஆறு மாதங்களின் பின்னர்

2008 ஜனவரியிலிருந்து மீண்டும் மகளிர் பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கியிருந்தேன்அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் புற்றுநோய் காரணமாக 2007 காலப் பகுதியில் உயிரிழந்ததன் பின்பு ஏற்பட்ட, அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் திடீர் மறைவானது, மேற்குலகத்தின் சமாதான ஏற்பாட்டாளர்களுடன் புலிகள் இயக்கத்திற்கு இருந்த ஓரளவு நெருக்கமான நேரடியான தொடர்புகளையும் துண்டிக்கச் செய்திருந்தது.தமிழ்ச்செல்வனின் மறைவுக்குப் பின்னர் அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நடேசன் தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் ஆதரவு சக்திகளுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்தார்.அவர்களது அரசியல் செயற்பாடுகள் இயக்கத்தை நெருக்கடி நிலையிலிருந்து காப்பாற்றும் என்ற பெரும் நம்பிக்கை அவரிடம் இருந்தது.

ஜெயலலிதாவை நம்பியிருந்த புலித்தலைமைகள்
2009இல் நடக்கவிருந்த தேர்தலில் ஜெயலலிதா முதலமைச்சரானதும் அவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் உடனடியான ஒரு போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் உருவாகும் என்ற கருத்து புலிகளின் தலைமைக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அந்த அளவிற்கு நடேசன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆனால் அப்படியானதொரு உடனடி மாற்றத்தைத் தமிழ்நாட்டிலிருக்கும் ஆதரவு சக்திகளால் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை.அவர்களுடைய உணர்ச்சிகரமான பேச்சுக்களும் முத்துக்குமார், செங்கொடி போன்ற உறவுகளின் தீக்குளிப்புத் தியாகங்களும் இந்திய அரசின் கவனத்தைத் திருப்புமென எதிர்பார்க்க முடியவில்லை.

“தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் காலத்து ஈழத் தமிழர் ஆதரவுக் கோஷம், தமது வாக்குப் பெட்டிகளை நிரப்புவதற்காக மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்பதைக்கூட மறந்து, அலைகடலில் ஒரு துரும்பேனும் அகப்படாதா என்ற அங்கலாய்ப்புடன் இறுதிப் போரின் தோல்விகளுக்குள் தனித்து விடப்பட்டிருந்தார் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்.”2008 நவம்பர் மாதம் இலங்கைப் படையினரால் பூநகரி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து பரந்தன் நோக்கிய படைநகர்வு டிசம்பர் 31இல் ஆனையிறவு உட்பட யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் பாதையையும் இணைத்து இராணுவத்தினர் முழுப் பிரதேசத்தையும் கைப்பற்றியதுடன் கிளிநொச்சியை நோக்கி நகரத் தொடங்கினர்.

2009 ஜனவரி 02ஆம் திகதி புலிகளின் சமாதான காலத் தலைநகரமாக இருந்த கிளிநொச்சி முழுவதுமாக இராணுவத்தினரிடம் வீழ்ச்சியடைந்தது.ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடையும்படி இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பகிரங்க அறிவித்தலை விடுத்திருந்தார்.இதனைத் தொடர்ந்து எந்தவிதமான உக்கிரச் சண்டைகளும் இல்லாமலே தருமபுரத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.சுதந்திரபுரம் உடையார் , வல்லிபுனம் பகுதிகளில் மக்கள் நெரிசலாகத் நகரத் தொடங்கினார்கள்.இந்தச் சந்தர்ப்பத்தில் விசுவமடுக்குளத்தின் அணைக்கட்டுகளைக் கரும்புலித் தாக்குதல் மூலம் தகர்த்து இராணுவத்தினரைத் தண்ணீருக்குள் மூழ்கடிக்கும் இயக்கத்தின் தாக்குதல் திட்டமும் படுதோல்வியைத் தழுவியது.நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் உயிரிழந்ததாகப் புலிகளின் குரல் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதால் மக்களின் மனநிலையில் கொஞ்சமாவது நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என முயற்சி செய்தது.இனியும் எந்தத் திசையை நோக்கி என்ன எதிர்பார்ப்புடன் நகர்ந்து செல்வது எனப் புரிபடாத நிலைமையில் மக்கள் பேரவலப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மக்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையை வழங்க முடியாத கடைசிக் கையறு நிலைக்குப் புலிகள் இயக்கம் வந்திருந்தது.
-தமிழினி- ilakkiyainfo.com 25 06 2016