அறிந்தும் அறியாமலும்: 7 - உயிர் வாழ்தலா? உயிர்ப்புடன் வாழ்தலா?

02 07 2017

அறிந்தும் அறியாமலும்: 7 - உயிர் வாழ்தலா? உயிர்ப்புடன் வாழ்தலா?

சுப வீரபாண்டியன்

வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறீர்களா, படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறீர்களா என என்னைக் கேட்கிறது ஒரு மின்னஞ்சல். ஆம்! கற்றல் (Learning) வேறு, படித்தல் (Reading) வேறுதான். படித்தல் என்பது, பிறந்து சில ஆண்டுகளுக்குப் பின் தொடங்குவது. கற்றல் என்பதோ, பிறப்பிலிருந்தே தொடங்குவது! பிறந்த குழந்தை, தன் தாயிடம் பால் குடிக்கக் கற்கிறது. பிறகு, தவழக் கற்கிறது, நடக்கக் கற்கிறது, பேசக் கற்கிறது... ஒரு கட்டத்தில் படிக்கக் கற்கிறது. ஆதலால், படித்தல் என்பது கற்றலின் ஒரு பகுதிதான். கற்காதவர்கள் உலகில் எவரும் இல்லை. இருக்கவும் முடியாது. கற்றலின் அளவும், விரைவும் மாறுபடலாமேயன்றி, எதனையும் கற்காமலே ஒருவர் உலகில் வாழ இயலாது. ஆகையினால், வாழ்க்கை முழுவதும் ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் கூற வேண்டியதில்லை. அஃது உயிரியற்கை. பிறப்பு முதல் இறப்பு வரை, அவரவர் தேவைக்கும், திறமைக்கும் ஏற்ப, கற்றல் தொடரும். அதற்கு அவ்வப்போது தூண்டுகோல் போதும், வலியுறுத்தல் தேவையில்லை.

நான் படிப்பதைப் பற்றித்தான் எழுதுகிறேன். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து படித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றேன். ஏனெனில், படிப்பு என்பது நம் வாழ்வின் அன்றாடத் தேவைகளில் ஒன்று எனக் கூற முடியாது. படிப்பறியாத மக்களும், அறிந்தும் படிக்க நேரம் இல்லாத மக்களும் உலகில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். படிப்பறிந்தும், படிக்க நேரம் இருந்தும், படிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் இங்கு எண்ணிக்கையில் மிகுதியாகவே உள்ளனர். எதற்குப் படிக்க வேண்டும், இனிமேல் படித்து என்ன ஆகப்போகிறது என்ற வினாக்கள் நம்முள் பலருக்கு எழுகின்றன. இவ்வினாக்களே மிகப்பெரிய மனத்தடையாக உள்ளன. இவற்றைத் தகர்க்காமல் நம்மால் படிக்கவே முடியாது. படிப்பது என்பது ஒரு பழக்கம்! நம்மிடம் நல்லனவும், தீயனவுமாக & வேண்டியனவும், வேண்டாதனவுமாக & எத்தனையோ பழக்கங்கள் உள்ளன. பழக்கங்களின் தொகுப்பே நம் வாழ்க்கை. அத்தொகுப்பில் ஒன்றுதான் படிக்கும் பழக்கம். அதனை நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்று கருதுவதில்லை. அதற்கு ஒரு காரணம் உள்ளது. உண்ணாமலோ, உறங்காமலோ, பணமே இல்லாமலோ நம்மால் உயிர்வாழ முடியாது. ஆனால் படிக்காமல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் உயிர்வாழ முடியும். எனவே, வேறு வேலை எதுவுமே இல்லை என்று முடிவாகிவிட்டால், அப்போது கொஞ்சம் படிக்கலாம் என்று தோன்றுகிறது. அவ்வாறே, புத்தகம் வாங்குவது, கடைசியிலும் கடைசிச் செலவாக மட்டுமே இங்கு உள்ளது. படிக்காமல் இருக்கும் பழக்கத்திற்கு (ஆம், அதுவும் ஒரு பழக்கம்தான்) இன்னொரு காரணமும் உண்டு. படித்து முடித்ததும், உடனடிப் பயன் ஏதும் ஏற்பட்டுவிடாது.

வெறுமனே உயிர்வாழ்தலும், அதற்குத் தேவையான உடனடிப் பயன்களும் மட்டும் போதும் என்று கருதுகின்ற சமூகத்தில், படிக்கும் பழக்கம் குறைந்துதான் போகும்! நம்மில் பெரும்பான்மையானவர்களிடம், அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் உள்ளது. அதனையும் முழுமையாகப் படிப்பவர்கள் குறைவு. மேலோட்டமாகத் தலைப்புச் செய்திகளைப் ‘பார்த்துவிட்டு', விளையாட்டுச் செய்திகள், திரைப்படச் செய்திகள் போன்ற ஒரு சில பகுதிகளை மட்டும் படிப்பவர்கள் உண்டு. கட்சி அரசியல் செய்திகளில் மட்டும் கவனம் செலுத்துவோர் உண்டு. தலையங்கம், நடுப்பக்கக் கட்டுரைகள் போன்றவைகள், மிகக் குறைவான எண்ணிக்கையினரால் மட்டுமே படிக்கப் படுகின்றன.

இளைஞர்கள் சிலர், செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தையும் கைவிட்டு வருகின்றனர். ஏன் அப்படி என்று கேட்டால், "தொலைக்காட்சிகளிலும், இணையத் தளங்களிலும் முக்கியமான செய்திகளைப் படித்துத் தெரிந்து கொள்கின்றோம். அது போதாதா?" என்று கேட்கின்றனர். வாழ்க்கை என்பது உயிர்வாழ்தல் மட்டுமில்லை, உயிர்ப்புடன் வாழ்தலும் ஆகும். படிப்பு என்பது செய்திகளை அறிந்து கொள்வது மட்டுமில்லை, வாழ்க்கையை அறிந்து கொள்ளுதலும் ஆகும். வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, அண்டை அயலாருடன் எப்படிப் பழக வேண்டும் என்று அறிந்து கொள்ள, சிக்கலான தருணங்களில் சரியான முடிவுகளைத் தேர்ந்து கொள்ள, அறிவே நமக்குப் பயன்படுகிறது. அறிவைப் பெறுவதற்கு, அனுபவம், சிந்தனை போன்ற பல வழிகள் இருப்பினும், படிப்பே எளிமையான வழியாக உள்ளது. எல்லாவற்றையும் நாமே தனியாகச் சிந்தித்தோ, அனைத்திலும் அனுபவப்பட்டோ அறிந்துகொண்டுவிட முடியாது. ஏடறிந்த காலம் தொட்டு, மற்றவர்களின் சிந்தனைகளையும், அனுபவங்களையும் உள்ளடக்கிய பதிவுகளே நூல்கள்! அவற்றைப் படிப்பதன் மூலமாகவே அறிவுச் செல்வததை நாம் விரைவில் அடைய முடியும்.

அறிவுச் செல்வமும், பொருட் செல்வமும் இல்லாதவனுக்கு இந்த உலகம் இல்லை. இரண்டு செல்வங்களையும் நிறைவாகப் பெற்றவர்களே இவ்வுலகில் தலைநிமிர்ந்து வாழ முடியும். அந்நிலையைத்தான் ‘பேரறிவாளன் திரு' என்கிறார் வள்ளுவர். அறிவும், திருவும் (செல்வமும்) வாய்க்கப் பெற்றவர்கள், அன்பு, அருள், மனிதநேயம் ஆகியனவும் உடையோராக இருந்தால், அவர்கள் மட்டுமின்றி, அவர்கள் வாழும் சமூகமும் அவர்களால் தலைநிமிர்ந்து வாழும்! அத்தகைய மனிதர்களை, "நீர் நிறைந்த ஊருணி" என்றும், "உள்ளூர்ப் பழுத்த பயன்மரம்" என்றும், "மருந்தாகித் தப்பா மரம்" என்றும் மூன்று உவமைகளால் வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார். அறிவுச் செல்வமும், பொருட்செல்வமும், தனக்கு மட்டுமின்றி, -ஊர், உலகத்திற்கும் பயன்பட வேண்டும் என்பதே ஒவ்வொருவருக்கும் நோக்கமாக வேண்டும். தன்னலமில்லாமல், பொதுநலம் இல்லை. நாம் சரியாகக் காலை ஊன்றிக் கொண்டால்தான், பிறருக்குக் கை கொடுக்க முடியும். வேர்விட்ட மரம்தான் கனிதரும்! எப்படி வேரூன்றுவது? நிலங்களில் மரங்கள் வேரூன்றலாம். நூல்களில்தான் நாம் காலூன்ற முடியும். படிப்பென்பது, நாம் அறியாமலே, நம்மைச் செதுக்கும் உளி. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம், குறைந்தது ஒரு மணி நேரமாவது படிக்கப் பழகிக் கொண்டால், ஓராண்டிற்குப் பிறகு நாம் மேலும் முதிர்ந்த சிந்தனை உடைய மனிதராக இருப்போம். "காலை எழுந்தவுடன் படிப்பு" என்றார் பாரதியார். "காலையில் படி, கடும்பகல் படி, மாலை, இரவு பொருள்படும்படி படி" என்றார் பாரதிதாசன். இரண்டு கவிஞர்களுக்கும் இடையில் உள்ள ஒரு நுட்பமான வேறுபாட்டை இங்கு காண முடிகிறது. காலகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவு-ம் படித்துக் கொண்டே இருப்பவர்கள் காலையில் மட்டும் படித்தால் கூட போதுமானது. பிறகு, கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாகப் படிப்பு மறுக்கப்பட்ட உழைக்கும் சமூகமும், அவர்களிள் பிள்ளைகளும், காலையில் மட்டும் படித்தால் போதாது, கடும்பகல், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் படிக்க வேண்டும் என்று கருதியுள்ளார் பாரதிதாசன்!

அதனால்தான், நடுத்தர வீடுகளுக்கு வந்து போகின்ற விருந்தினர்கள் கூட, விடைபெறும் வேளையில், வீட்டிலுள்ள பிள்ளைகளைப் பார்த்து, "நல்லாப் படிக்கனும்" என்று அறிவுரை கூறுகின்றனர். பெற்றோரும், ஆசிரியர்களும் சொன்னதைத் தாண்டி, விருந்தினர்களும் இப்படித் தொல்லை செய்கின்றனரே என்று பிள்ளைகள் கருதக்கூடும். படிக்காத காரணத்தால் வயல்வெளிகளில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் அவர்கள். ஆலைகளிலும், தொழிற்சாலைகளிலும் அன்றாடம் உழன்றவர்கள் அவர்கள். மூட்டைகள் தூக்கித் தூக்கி முதுகு வளைந்து போனவர்கள் அவர்கள். தங்களுக்குக் கிடைக்காத வாழ்க்கை வசதி, தங்களுக்குக் கிடைக்காத சமூக மதிப்பு, தம் பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில்தான், ‘படி, படி' என்று எந்த நேரமும் கெஞ்சுகிறார்கள், மிரட்டுகிறார்கள்! அவர்கள் சொல்வதெல்லாம் பாடப்புத்தகங்களைப் படி என்றுதான்! அவற்றை இன்று நம் பிள்ளைகள் ஓரளவு படித்து விட்டனர். படித்தும் வருகின்றனர். ஆனால் அந்தப் பாடப்புத்தகங்களில், நம் மண்ணின் மணம் இல்லை. எங்கும் நம் அடையாளம் இல்லை. சரியான சமூக வரலாறு இல்லை. மனித நேயத்தின் மாண்புகள் இல்லை.
( மீண்டும் சந்திப்போம்)
tamil.oneindia.com 12 06 2014