குழப்பங்களுக்கு காரணம் யார்?
குழப்பங்களுக்கு காரணம் யார்?
-ஹரிகரன்
கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.முதலமைச்சர் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்படக் கூடிய பிளவுகள், இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் கூட ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.அத்தகையதொரு நிலையில் மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்கட்சித் தலைவராக மாறும் நிலையும் ஏற்படலாம். அது, கொழும்பின் தற்போதைய அரசாங்கத்துக்கும், அதனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நாடுகளுக்கும் பேரிடியாக அமையும்
வடக்கு மாகாணசபையில் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்ட போது, அதனைத் தீர்த்து வைப்பதில் இந்தியா, அமெரிக்கா, மற்றும் மேற்குலக தூதுவர்களும் ஆர்வம் காட்டியதாக தகவல்கள் வெளியாகின.இந்த விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.அதற்குக் காரணம், இந்தக் குழப்பங்கள் இலங்கையின் தேசிய அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது.மேற்குலக மற்றும் இந்திய ஆசீர்வாதத்துடன் கொழும்பில் நிகழ்த்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் அனுகூலங்களை இந்தக் குழப்பம், கெடுத்து விடக் கூடும் என்றும் அவர்கள் கருதினர்.அதனால் தான், இரா.சம்பந்தன் தலையிட்டு இந்தக் குழப்பங்களை தீர்க்க வேண்டும் என்று அவர்களால் வலியுறுத்தப்பட்டதாகவும், நம்பப்படுகிறது.இந்த நிலையில், வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு இந்தியாவே பின்னணிக் காரணம் என்று சிலர் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அரசறிவியல் துறை விரிவுரையாளர் ஒருவர், இந்தியாவின் தேவைக்கேற்பவே, முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்றுவதற்கு தமிழரசுக் கட்சியினர் முயற்சிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.இதுபோன்ற குற்றச்சாட்டு பலராலும் கூறப்படுகிறது. இந்தியா மீது மாத்திரமன்றி, வெளிநாடுகள் என்று பொதுவாகவும் சிலரால் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
நீண்டகாலமாகவே இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடுகள் இருந்து வந்திருக்கின்றன. பிராந்திய வல்லரசான இந்தியா எப்போதுமே இலங்கையை தமது கைப்பொம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளவே முயற்சித்து வந்துள்ளது.எனவே வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றும் விவகாரத்தில் இந்தியா தொடர்புபட்டிருக்காது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்கவும் முடியாது.அதேவேளை, இந்தியா அல்லது வெளிநாடுகள் என்று கூறப்படும் மேற்குலகம் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர், அதற்குப் போதிய சான்றுகளையும் முன்வைப்பது அவசியம். எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அபத்தமானது. அதைவிட ஆபத்தானதும் கூட.ஏனென்றால் வடக்கு மாகாணசபையின் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகளில் இந்தியாவும் ஏனைய மேற்குலக நாடுகளும் கணிசமான பங்களிப்பை செய்து வந்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
1987ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்திய- இலங்கை அமைதி உடன்பாட்டின் மூலம் தான் இலங்கைக்கு மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டதும் கூட இந்தியாவின் நெருக்குதலின் பேரில் தான் என்பதை மறந்து விட முடியாது.அதற்குப் பின்னர், மாகாணசபைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, வடக்கு மாகாணசபையைச் செயற்படவைப்பதில் இந்தியா கணிசமான பங்கை ஆற்றியிருந்தது.அவ்வாறான இந்தியாவுக்கு வடக்கு மாகாணசபை விவகாரத்தில் ஒருபோதும் ஈடுபாடு இருந்திருக்காது என்று யாரும் இலகுவாக நம்பிவிடப் போவதில்லை.இருந்தாலும் வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளில் இந்தியா தலையீடு செய்வதற்கு சாத்தியங்கள் உள்ளதா- அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பது ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும்.இந்தியாவின் கடந்த கால சில செயற்பாடுகளால், எப்போதுமே வடக்கில் உள்ள தமிழ் மக்களில் அநேகமானோருக்கு இந்தியா பற்றிய ஒரு வேறுபட்ட மனோநிலை இருப்பது உண்மை. அதனை வெளிப்படையாகச் சொல்வதானால், இந்தியா பற்றிய அச்சம் என்று கூடக் கூறலாம்.
இலங்கையில் ஆயுதப்போராட்டம் முளைவிட்ட போது இந்தியா அதனைத் தமக்குச் சார்பான நிலையாக மாற்றிக் கொள்வதற்காகத் தலையிட்டது.ஆயுதங்களையும் பயற்சிகளையும் கொடுத்து தமிழ்ப் போராளி அமைப்புகளை அரவணைத்தது. அது, கொழும்பைத் தனது பிடிக்குள் வைத்திருப்பதற்காக இந்தியா மேற்கொண்ட நகர்வே தவிர, தமிழ் மக்களின் மீது இந்தியாவுக்கு இருந்த அக்கறை என்று எடுத்துக் கொள்ள முடியாது.எனினும், இந்தியாவின் பிடியில் விடுதலைப் புலிகள் இயக்கம் சிக்கிக் கொள்ளவில்லை.
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படைகள் தோல்வியுடன் திரும்பிச் செல்வதற்கும் புலிகள் காரணியாக இருந்தனர். ராஜீவ்காந்தி கொலையும் இந்தியாவுக்கு கசப்பான அனுபவத்தைக் கொடுத்திருந்தது.அதனால், இந்தியா ஒவ்வொரு கட்டத்திலும் தலையீடுகளைச் செய்ய முனைந்தது. விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் வரைக்கும் இந்தியாவின் ஊடுருவல் இருந்தது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்படும் வரையில் இந்தியா மறைமுகமாகத் தலையிட்டுக் கொண்டிருந்தது.இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியா தலையீடுகளைச் செய்து, பல சமயங்களில் தமிழ் மக்களுக்கு வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தியதானது இந்தியா மீதான இந்த அச்சத்துக்கு காரணம்.எதையெடுத்தாலும் றோ என்று கூறுவது, யார் மீது சந்தேகம் வந்தாலும் றோவின் ஆள் என்று விழிப்பது வடக்கில் உள்ள பலருக்கும் ஒரு நோயாகவே மாறி விட்டது. இது சிஐஏக்கும் பொருத்தக் கூடியது தான், இவ்வாறான பட்டப்பெயர்களுடன் வடக்கு கிழக்கில் பலர் உலாவுகின்றனர்.அவர்கள் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களா- என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் றோ அல்லது சிஐஏ தமக்கான புலனாய்வாளர்களாக இப்படி அறியப்பட்டவர்களை வைத்திருக்க விரும்பாது என்று மட்டும் துணிந்து கூறலாம்.எப்போதும் புலனாய்வு அமைப்புகள் தமது முகவர்களை அடையாளம் காட்டுவதோ அவர்கள் அடையாளம் காட்டப்படுவதையோ விரும்பாது.
உள்நாட்டுப் புலனாய்வாளர்களை எல்லாம் சிஐடி என்று பொதுவாகச் சொல்லும் பழக்கம் நம்மிடையே இருப்பது போலத் தான், வெளிநாட்டுத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்களையும், றோ அல்லது சிஐஏ என்று விழிக்கும் பழக்கம் வடக்கில் இருக்கிறது.இத்தகைய மனோபாவத்தில் இருந்து தான் வடக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் இந்தியா மற்றும் மேற்குலகம் பற்றிய சந்தேகங்கள் எழுந்திருக்கக் கூடும்.வடக்கில் தமிழ்த் தேசியவாதத்துக்கு முதலமைச்சர் தலைமை தாங்க முற்படுவதை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனால் தான் அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க இந்தியா முற்படுவதாகவும், ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.இலங்கையில் தமிழ்த் தேசியவாதம் பலம் பெறுவதையோ, தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெறுவதையோ இந்தியா ஒருபோதும் விரும்பாது என்பது உண்மையே.அதனை தனது நாட்டுக்கான அச்சுறுத்தலாகவும் இந்தியா பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை. அதைவிட. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் இந்தியாவின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்கத்தக்க ஒன்றாக இருக்கிறது என்பதும் உண்மையே.
ஆனால், முதலமைச்சர் விகனேஸ்வரனையும் அத்தகைய ஒருவராக மாற்றுவதற்கு இந்தியா முனைந்திருக்குமே தவிர, அவரை இந்தக் களத்தில் இருந்து அகற்றுவதை புத்திசாலித்தனமான நகர்வாக கருதாது.விடுதலைப் புலிகள் இயக்கம் பலம்பெற்ற போது, அதன் தலைமையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இந்தியா விரும்பியது, அது முடியாமல் போன கட்டத்தில் தான், அதனை அழிப்பதற்கு இந்தியா கங்கணம் கட்டியது.அதுபோலவே, விக்னேஸ்வரன் போன்ற பலமான ஒரு தலைவர் எழுச்சி பெறும் போது அவரைத் தனது பக்கம் இழுப்பதற்கே இந்தியா முயன்றிருக்கும்.அவ்வாறு இந்தியா முயன்றதாகவோ, அதற்கு விக்னேஸ்வரன் இணங்காமல் போனதாகவோ எந்த தகவலும் இல்லாத நிலையில், அவரை அகற்றுவதில் இந்தியா அக்கறை செலுத்துவதாக முன்வைக்கப்படும் வாதங்களின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.தற்போதைய சூழலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதால் மாத்திரம் அவரை தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் இருந்து அகற்றி விட முடியும் என்று இந்தியா கணக்குப் போட்டிருக்கும் என்று, எவரேனும் இந்தியாவை குறைத்து மதிப்பிடக் கூடாது.அத்தகைய நகர்வு விக்னேஸ்வரனை இன்னும் பலப்படுத்தும் என்பதை மாத்திரமன்றி, அது தொடரான பல விளைவுகளுக்கும் காரணமாக அமையும் என்பதை இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ சுலபமாகவே கணிப்பிட்டிருக்கும்.
தற்போதைய அரசாங்கம் இந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் சாதகமானது. அதனைப் பாதுகாப்பது அவர்களுக்கு முக்கியமானது.வடக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்படக் கூடிய பிளவுகள், இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும், கூட ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.அத்தகையதொரு நிலையில் மஹிந்த ராஜபக் ஷள எதிர்க்கட்சித் தலைவராக மாறும் நிலையும் ஏற்படலாம். அது,. கொழும்பின் தற்போதைய அரசாங்கத்துக்கும், அதனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நாடுகளுக்கும் பேரிடியாக அமையும்.இதனை இந்தியாவோ மேற்குலக நாடுகளோ கணித்திருக்காது என்று எவரேனும் கருதினால் அது அப்பாவித்தனமானது.முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரனை வெளியேற்றுவதென்பது உள்ளக அல்லது வெளியக நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். ஆனாலும் அது, இந்தியா போன்ற நாடுகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கான நகர்வாக இருக்குமா என்பது சந்தேகம்.ஏனென்றால், இதனை விட வேறு வழிகளில் முதலமைச்சரை தனது கைக்குள் வைத்திருப்பதையே இந்தியா போன்ற நாடுகள் பாதுகாப்பானதாக கருதும்.
கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமை மிகவும் அவசியம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேறும், தமிழர் தரப்பில் பிளவு காணப்படுகிறது. எனவே ஒற்றுமை முக்கியமானது” என்று திரும்பத் திரும்பக் கூறியிருந்தார்.இந்தநிலையில், இந்தியா அல்லது மேற்குலகம் தொடர்பாக, நம்பகம் இல்லாத சான்றுகள் இல்லாத வெறும் அனுமானங்களின் அடிப்படையில் செயலாற்ற முனைந்தால், அதன் பாதகமான விளைவுகளையும் தமிழ் மக்களே எதிர்கொள்ள நேரிடும்.இந்தியாவும், மேற்குலகமும், தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதில் முக்கியமான சக்திகள். இந்த இரண்டையும் புறமொதுக்கி விட்டு தீர்வு ஒன்றை நோக்கி நகர முடியாது.இந்தநிலையில் அற்ப அரசியல் நலன்களுக்காக உலக வல்லரசுகளை பகைத்துக் கொள்ளுகின்ற நிலைக்குத் தமிழர்களை தள்ளிச் செல்வது புத்திசாலித்தனமான நகர்வாக இருக்காது.
-ஹரிகரன் ilakkiyainfo.com 28 06 2017