நமது நாட்டில் தோல்வியடைந்த அரசியலமைப்புகள்

12 07 2017

நமது நாட்டில் தோல்வியடைந்த அரசியலமைப்புகள்

இலங்கையில் மீண்டும் இனவாதம் தலைதூக்க விடமாட்டோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதவாதமும் அவ்வாறே என்றெல்லாம் பொறுப்புள்ள பலதரப்பால் கூறப்பட்டு வருகின்றது. கடந்த முப்பதாண்டுகால உள்நாட்டுப் பிரச்சினை, அதாவது இனப் பிரச்சினைக்கு சகல தரப்பினரும் தமிழர்களை, தமிழ் அரசியல் தலைவர்களை நோக்கி குற்றம் சாட்டுவதிலும் பின்னிற்பதில்லை.

அதுவொரு புறமிருக்க, நாட்டின் அரசியலமைப்பு மிக உயர்ந்த போற்றுதலுக்குரிய ஆவணம். அதைப் போற்றிப் பாதுகாத்து அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பிசகாது நாடு ஆளப்பட வேண்டும். அதன்படியே அரசியல், நிர்வாக அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரதிநிதிகளும் அதேபோல் அரச நிர்வாகத்தை இயக்கிச் செல்லும் சகல அரசாங்க அதிகாரிகளும் செயற்பட வேண்டுமென்றும் கூறப்படுகின்றது, எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது தீர்க்கமாக ஆராய்ந்து நாட்டின் நலனுக்காகவும் நாட்டு மக்களின் கௌரவத்தைக் காக்கக் கூடியதாகவும் நாட்டின் அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது. அதைப் போற்றிப் பாதுகாக்கவும் அதன்வழி செயற்படவும் உறுதியளிக்கின்றோம், சத்தியம் செய்கின்றோம் என்று சகல நாட்டை நிர்வகிக்கும் அரசியல் மற்றும் அரச பணிகளில் ஈடுபட்டோர் வெளிப்படுத்தி உறுதியுரைத்தே தம் பணியில் இணைகின்றனர். இது நமது நாட்டில் உள்ள நடைமுறை.

இன்று அரசியலமைப்பொன்றை புதிதாக உருவாக்குவது அல்லது திருத்தம் செய்வது அதுவுமில்லாவிட்டால் உள்ளதைத் தொடர்வது என்று பல கூற்றுகள் வெளிப்படுகின்றன. இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புகளைக் கண்டுள்ளது. புதிதாக நான்காவது அரசியலமைப்பு பற்றி பேசப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை ஏன் ஏற்பட்டுள்ளது ? இதுவரை நடைமுறையில் இருந்த மற்றும் இருக்கும் அரசியலமைப்புகள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகளாற்றும் நோக்கில் தோல்வியடைந்து விட்டனவா ? அவை நாட்டுக்குப் பொருத்தமற்றவையா ? நாட்டு மக்களை ஒன்றிணைத்து வழிநடத்தும் செயற்பாட்டில் தோல்வி கண்டுவிட்டனவா என்று ஆராய வேண்டும் தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி அல்லது கைவிட்டு புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் நாட்டில் இனப் பிரச்சினை தீரும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் கிட்டும் என்று தமிழர் தரப்பு நம்பிக்கை தெரிவிக்கின்றது. தமிழருக்கு கூடிய உரிமைகள், அதிகாரம் கொடுக்க வழி செய்யக் கூடாதென்று ஒரு தரப்பு கூறுகின்றது. இவையெல்லாம் காலத்தை வீணடித்து மக்களைத் திசை திருப்பும் வெட்டிப் பேச்சுகள் என்றால் அதுவே சரியாயமையும்.

அரசியல் அமைப்பில் எது இடம்பெற வேண்டும், எப்படியானவை இடம்பெற வேண்டுமென்று தமிழர் தரப்பு மூளையைக் கசக்கிப் பிழிந்து மனநிலை பாதிக்கப்படுமளவிற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவே இன்றைய உண்மை நிலை, மறுக்க முடியாத யதார்த்த நிலை. நாட்டின் அரசியலமைப்புகள் முறையாக தவறின்றி இந் நாட்டில் நடைபெற்றிருந்தால், நடைமுறையில் பேணப்பட்டிருந்தால் இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரமென்ற பெயரில் சுதேசிகளின் ஆட்சிக்குட்பட்ட கடந்த எழுபது ஆண்டுகளில் நாட்டில் பூதாகரமாக வெளிப்பட்ட இனப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பதை எவரும் புரிந்து கொண்டதாயில்லை. புரிய முயற்சிப்பதாயுமில்லை. விட்ட தவறுகளைக் கண்டும் காணாததுபோல் பிரச்சினையின் மூலத்தை மறைத்து வேறுபக்கம் கைநீட்டுகின்றனர். ஆம். இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு பிரித்தானியரான சோல்பரி பிரபுவால் வரையப்பட்டது. அதைச் சோல்பரி அரசியலமைப்பு என்கின்றோம். அந்த சோல்பரி அரசியலமைப்பில் நாட்டில் வாழும் சிறுபான்மையோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவென்று 29ஆம் சரத்து இணைக்கப்பட்டிருந்தது. அதன்படி பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரைப் பாதிக்கும் ஏதாவது

சட்ட மூலம் கொண்டுவரப்படுமானால் அதற்கு சிறுபான்மையினர் திருப்திப்படக் கூடியதாக அவர்களது ஆதரவும் பெற வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. அதாவது சிறுபான்மையினரின் ஒப்புதலின்றி அவர்களைப் பாதிக்கும் எந்தவொரு சட்டமும் கொண்டுவரப்படக் கூடாது என்பது அரசியலமைப்பின் விதி. நாட்டின் அதியுயர் ஆவணமான அரசியலமைப்பு முதலாவது சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத்தால் கௌரவிக்கப்படவில்லை. பிரித்தானியர் இந்நாட்டிலிருந்து வெளியேறிய போது இங்கிருந்த, வாழ்ந்த அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக, சமத்துவமாக உரிமைகளுடன் வாழ்வார்கள். வாழவேண்டும் என்ற நோக்கில் நமது நாட்டிற்கு வழங்கிய அரசியலமைப்பு அது உருவாகிஓரிரு வருடங்களிலேயே மீறப்பட்டது. புறக்கணிக்கப்பட்டது.

இந்த நாட்டில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கும் உரித்தாக பிரித்தானியரால் வழங்கப்பட்ட குடியுரிமை மற்றும் வாக்குரிமைகள் அன்றைய அரசியலமைப்பின் 29 ஆவது சரத்துக்குப் புறம்பாக மீறப்பட்டன. அம் மக்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக, நாட்டில் ஏனைய சமூகங்களுக்குள்ள உரிமை மறுக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டனர். அரசியலமைப்பு மீறப்பட்டது. அடுத்து 1956 இல் மூன்றாவது பாராளுமன்றத்தில் நாட்டின் ஒரு பாரம்பரிய, பழைமை வாய்ந்த இனமான தமிழினத்தின் மொழியுரிமையும் பறிக்கப்பட்டது. தமிழர் தரப்பினது மட்டுமல்ல நாட்டின் அன்றைய தேசியத் தலைவர்களான கலாநிதி என்.எம். பெரேரா , கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா, எட்மண்ட் சமரக் கொடி போன்ற சிங்களத் தலைவர்களின் எதிர்ப்பையும் கவனத்தில் கொள்ளாது நாட்டின் ஒரே நிர்வாக மொழி என்ற தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவும் அன்று நடைமுறையிலிருந்த அரசியலமைப்பின் 29 ஆம் சரத்தை மீறுவதாகவே அமைந்தது.

1964 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீமாவோ சாஸ்திரி உடன்படிக்கையின் படி 1965 இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நாட்டற்றவர்களாக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் சட்டமும் பிரித்தானியரால் இலங்கைக் குடிமக்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட அவர்களுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமை பறிப்பு மட்டுமல்ல உலகிலேயே இதுவரை பாராளுமன்றத்தால் வரையப்பட்ட மனித ஏற்றுமதிச் சட்டமாகவுள்ளது. அதன்பின்னர் உருவாக்கப்பட்ட 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள் பெயரளவிலாவது சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற சோல்பரி அரசியலமைப்பின் 29 ஆம் சரத்து நீக்கப்பட்டு எதுவும் செய்யலாம் எப்படியும் செய்யலாம் என்ற நிலையில் ஆக்கப்பட்டன.

நாட்டு மக்கள் அனைவரதும் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று சகல அரசியலமைப்புகளிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த போதும் 1956, 1958, 1977, 1979, 1981, 1983 என்று தொடர்ச்சியாக நாட்டில் நிகழ்த்தப்பட்ட இனவெறிப் பயங்கரவாத செயற்பாடுகளால் தமது உயிர்களை, உறவுகளை, வாழ்விடங்களை, சொத்துச் சுகங்கள், தொழில்கள் என்று பலவற்றை இழந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். தமிழர்கள் மீது காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நாட்டு மக்களிடம் பகைமை விதைக்கப்பட்டது. இது ஏன் நிகழ்ந்தது ? அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறிக்காது பேணி நடந்திருந்தால் இனவாதம் இந் நாட்டில் ஏற்பட்டிருக்காது. பொறுப்பற்ற அரசியல் வாதிகளின் சுயதேவைகளுக்காக குடியுரிமைச் சட்டம், மொழிச் சட்டம் என்பன நிறைவேற்றப்பட்டதன் பலாபலனாகச் சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியிலே இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கைத் தமிழ் மக்களும் இந் நாட்டின் அந்நியர்களாக வேண்டத் தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்பதே உண்மை. இந்நாட்டிற்குத் தேவையற்றவர்கள் அவர்கள் இந்நாட்டின் நலனுக்கு வளத்திற்கு பாதிப்பானவர்கள், சரியாகக் கூறுவதானால் அவர்கள் சிங்கள மக்களுக்கு அந்நியர், எதிரி, ஆக்கிரமிப்பாளர்கள் என்று நம்ப வைக்கப்பட்டது. தற்போதும் அதில் மாற்றம் காணமுடியவில்லை.

தமிழர் உரிமையை அதாவது வாழும் உரிமையை கேட்கும் போது அதை வழங்குவதா, வேண்டாமா, எந்தளவு வழங்குவது என்று கருத்துரைக்கப்படுகின்றது. முதலில் இந் நாட்டின் அரசியல்வாதிகளும் பெரும்பான்மை மக்களும் இந் நாட்டின் உரிமையுள்ள குடிமக்கள் தமிழர்கள். அவர்களுக்கும் தம்மைப் போல் சமத்துவமாக வாழும் உரிமை உண்டென்று ஏற்றுக்கொள்ள வேண்டும். தம்மைப் போல் தமிழ் மக்களும் சம உரிமைகளை அனுபவித்து வாழ வழி இருக்க வேண்டும் என்று இனவுறக்குக் கைகொடுக்க வேண்டும். இந்நிலை உருவாவது நாட்டின் தேசிய சக வாழ்வுக்கு, இன நல்லுறவுக்கு இன்றியமையாதது.
இன்று நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு கௌரவிக்கப்படுகின்றதா என்றால் இல்லையென்பதே விடையாகும். அரசியலமைப்பில் தமிழ் மொழியும் தேசிய மற்றும் அரச கரும மொழியாக ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. அரச கரும மொழிகளை நடைமுறையில் செயற்படுத்த அரசியலமைப்புக்கு மேலதிகமாக பல சுற்றுநிருபங்கள், வர்த்தமானிகள், அதிவிசேட வர்த்தமானிகள் என்று பலவும் வெளியிடப்பட்டுள்ளன.

1956 இல் பறிக்கப்பட்ட தமிழ் மொழியின் உரிமை அண்டை நாடான இந்தியாவின் அழுத்தத்தால் மீண்டும் கிடைத்தது. சர்வதேச நாடுகளிலும் நாட்டில் தமிழ் மொழிக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று பறைசாற்றப்படுகின்றது. நடைமுறையை நோக்கும் போது அது வெறும் காகிதக் கட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டதாகவேயுள்ளது. ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருப்பதோ ஈரும் பேனும் என்பது போன்றதே மொழி தொடர்பிலான உண்மை நிலை. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்காது, அவர்களது வாழ்வுரிமையை மறுக்காது நிம்மதியாக வாழவிட்டிருந்தால் தமிழர்கள் தமிழ் மக்கள் உரிமைகேட்டு குரல் கொடுக்க, போராடவேண்டிய தேவை என்ன ? தமிழர்கள் இவ்வாறு உரிமைக் குரல் எழுப்ப வழி செய்தவை என்ன என்பதை வரலாற்றைத் திருப்பிப்பார்த்தால் தெளிவாகப் புலனாகும்.

புதிதாக அரசியலமைப்பில் பௌத்த சமயத்திற்கு முதலிடம், முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. அது ஏற்புடையது. ஆனால், பௌத்த சமயம் என்று பெயர்ப்பலகை மாட்டிப் பயனில்லை. பௌத்த தத்துவங்கள், கோட்பாடுகளுக்கு நாட்டில் முன்னுரிமை கொடுக்கப்படுமா என்பதற்குப் பதில் தேவை. இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனித குல மாண்பிற்கான பௌத்தத்துவக் கோட்பாடுகள் நாட்டிலே கைக் கொள்ளப்படுவது உறுதிப்படுத்தப்படுமானால் அதுவே பொருத்தமாகும். அதை விடுத்துப் பெயரளவில் ஒரு சமயம் முக்கியத்துவம் பெறுவது பொருத்தமில்லை.புதிதாக உருவாக்கப்படும் அல்லது திருத்தப்படும் அரசியலமைப்பில் நாட்டின் பெரும்பான்மை மக்களைக் கவர்வதற்காக சமயத்தை முன்னிலைப்படுத்துவதும் மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவதுமே முக்கியத்துவம் பெறப்போகின்றது. அதுவே காணப்படும் கள நிலையாகும். நாட்டின் உண்மை நிலையை, தேவைகளை, கௌரவத்தைப் பேணும் வழிமுறையை அறிந்து சிந்திக்க வேண்டும்.

கடந்த எழுபது ஆண்டுகளாக இந்நாட்டை ஆளும் மூன்று அரசியலமைப்புகளும் நாட்டு மக்கள் மத்தியிலே இன, மத, மொழி உரிமைகளைப் பேணி தேசிய சக வாழ்வையும், நல்லுறவையும் பேணுவதில் தோல்வி கண்டுவிட்டன என்று நோக்கும் நிலையில் நாட்டிற்குப் பொருத்தமான பிளவுபட்டு பல நாடுகளாக சுதந்திரமாகச் செயற்பட்ட இத்தீவில் ஐரோப்பியரால் குறிப்பாக பிரித்தானியர்களால் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக சுதேசிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இந்நாட்டை இலங்கையைத் தொடர்ந்து பிளவற்ற, பிரிவினையற்ற, பிரச்சினையற்ற நாடாகத் திகழச் செய்ய வேண்டுமானால், சர்வதேச விசாரணைகளுக்காளாகாது இருக்க வேண்டுமானால் அதற்கான வழிகாண்பது பெரும்பான்மையினரின் பொறுப்பு. கடமையும் கூட.காலத்துக்குக் காலம் அரசியலமைப்பை தமது நோக்கத்திற்காக மாற்றுவதை விட கடந்த காலங்களில் இன விரிசல்களுக்கு வித்திட்ட செயல்களை மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே நாகரிகமாகும்.
thinakkural.lk 11 07 17