அறிந்தும் அறியாமலும் - 11: மூளைதான் அலாவுதீன் பூதம்!

14 08 2017

அறிந்தும் அறியாமலும் - 11: மூளைதான் அலாவுதீன் பூதம்!

சுப வீரபாண்டியன் ‘

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய்' ஆத்திசூடியும், திருக்குறளும் இங்கே தொட்டுக் காட்டப்பட்டன. அவை வெறும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே! தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை தமிழில் எழுத்துகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. யார் யாருக்கு எந்தெந்தத் துறையில் எவையெவை வேண்டுமோ அவற்றைத் தேடி எடுத்துப் படிப்பது அவரவர் விருப்பம்! சரி, படிக்கலாம் என்று முடிவெடுத்த பிறகும், படிப்பதற்குப் பல தடைகள் உள்ளனவே, என்ன செய்யலாம் என்பது சிலரின் வினா. நூல்களைப் படிக்க இயலாமைக்குப் பொதுவாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. (1) படிக்க நேரமில்லை (2) படிப்பது சலிப்பாய் (Boredom) உள்ளது (3) படிக்கத் தொடங்கியவுடன் தூக்கம் வந்து விடுகின்றது.

இவை மூன்றுக்குமே அடிப்படைக் காரணம் ஒன்றுதான். படிப்பில், படிக்க எடுக்கும் நூலில் நமக்கு ஈடுபாடு ஏற்படவில்லை என்பதே அந்தக் காரணம். ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், ஒரு நூலைத் தேடி, அது கிடைத்தவுடன் அமர்ந்து படிக்கத் தொடங்கும்போது எந்தச் சலிப்பும் ஏற்படாது, உறங்க நினைத்தாலும் உறக்கம் வராது. எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை இங்கு நாம் பகிர்ந்து கொள்ளலாம். நான் காரைக்குடி, அழகப்பர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். தமிழ் நூல்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது. அப்போது படித்தவைகளில் பெரும்பாலானவை நாவல்கள்தாம். ஆங்கில நாவல்களையும் படிக்க விருப்பம் ஏற்பட்டது. ஆனால் 10 பக்கங்களைக் கூட என்னால் தாண்ட முடியவில்லை. அந்தப் பத்துப் பக்கங்களும் புரியுவும் இல்லை. அகராதியைப் புரட்ட, என் சோம்பல் இடம் தரவில்லை. என் ஆங்கில ஆசிரியரிடம் சொன்னேன். சிரித்துக் கொண்டார். பிறகு ஒரு நாள், கல்லூரி நூலகத்தில் என்னைப் பார்த்த அந்த ஆங்கிலப் பேராசிரியர், ஒரு நூலை என்னிடம் கொடுத்து, ‘போய்ப் படித்துப் பார்' என்றார். அந்த நூல், சற்றுக் கடினமான நடையில்தான் இருந்தது. படித்தவுடன் புரியவில்லை. ஆனாலும், அகராதியை அருகில் வைத்துக் கொண்டு விடாமல் நான் படித்தேன். இரண்டு, மூன்று நாள்கள் அந்த நூலைப் படிப்பதே என் வேலையாக இருந்தது. படித்து முடித்தும் விட்டேன். அந்த நூலின் பெயரும், அதன் உள்ளடக்கமும், என் வயதுக்கு மிக இணக்கமாக இருந்தன என்பவைதான் அதற்கான காரணங்கள். அந்த ஆங்கில நூலின் பெயர், "From girlhood to womanhood" என்பது.

பெண்ணின் உடல் வளர்ச்சி, பூப்படைதல், தாய்மை அடைதல் போன்ற பல செய்திகளை அந்நூல் கூறிற்று. அந்த வயதில், பெண்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எந்த இளைஞனுக்குத்தான் இருக்காது? அந்த இயல்பை உணர்ந்துதான், என் ஆசிரியரே எனக்கு அதனைக் கொடுத்திருக்கக் கூடும் என்பதைப் பிறகு உணர்ந்தேன். அதுதான், நான் முழுமையாகப் படித்து முடித்த முதல் ஆங்கில நூல். பிறகு, சின்னச் சின்ன ஆங்கில நூல்களையும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இன்றைய இளைஞர்கள் எளிதாக, ஏராளமான ஆங்கில நூல்களை, குறிப்பாக நாவல்களைப் படித்து விடுகின்றனர். தமிழ் நூல்களைப் படிப்பதில் மனத்தடையே பெரிய இடையூறாக உள்ளது. போதுமான ஈடுபாடின்மை, காரணங்களைத் தேடுகின்றது. மனத்தடைகளை உடைத்துப் படிக்கத் தொடங்கியபின், அடுத்த கேள்வி, எப்படிப் படிக்கலாம் என்பது! படிப்பது எளிய செயலன்று, அது ஓர் அரிய கலை. எவற்றைப் படிப்பது என்பது எவ்வளவு முதன்மையானதோ, அவ்வாறே எப்படிப் படிப்பது என்பதும் மிகத் தேவையானது.

நூல்களைப் படிப்பதில் நான்கு முறைகள் உள்ளன.

(1) பிரித்துப் படிப்பது (2) விரைந்து படிப்பது

(3) குறித்துப் படிப்பது (4) ஆழ்ந்து படிப்பது

இவற்றின் அடுத்த கட்டம், ஆராய்ந்து படிப்பதும், ஒப்பிட்டுப் படிப்பதும் என்று கொள்ளலாம். படிக்கும் நூல்களின் அளவு, தன்மையைப் பொறுத்துப் படிக்கும் முறைகளும் மாறும். 1000 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலைப் பார்த்தவுடனேயே, இதனை நம்மால் படிக்க முடியாது என்று பலர் உடனடியாக முடிவெடுத்து விடுகின்றனர். பெரிய நூல்களைப் பார்த்தவுடன் ஏற்படுகின்ற மலைப்பு இயல்பானதுதான். அந்த மலைப்பை வெல்வதற்குப் ‘பிரித்துப் படிக்கும்' பழக்கம் உதவும். 1000 பக்கங்களையும் ஒரே நாளில் படித்து முடித்துவிட வேண்டும் என்று யார் கட்டளையிட்டார்கள்? ஒரு வாரத்தில் படிக்கலாம், ஒரு மாதம் எடுத்துக் கொண்டும் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஓர் இயல் என்று படிக்கலாம். அதுவும்கூட, மிகுதியான பக்கங்களைக் கொண்டிருந்தால், நம் தன்மைக்கும், பிற பணிகளுக்கும் ஏற்ற வகையில், ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் படிப்பது என்று முடிவு செய்து கொள்ளலாம். இப்படிப் பிரித்துப் படிப்பதன் மூலம், எண்ணிக்கையில் மிகப் பல பக்கங்களைக் கொண்டுள்ள பெரிய நூல்களையும் நம்மால் படித்துவிட முடியும். படிக்கும் வகைகளிலேயே மிக மிக முதன்மையானது, விரைந்து படிப்பதுதான். நிதானமாகப் படித்தால்தான் புரியும், படித்தவைகள் மூளையிலும் பதியும் என்று நம்மில் பலர், பல்லாண்டுகளாக எண்ணி வருகின்றோம். அது முற்றிலும் தவறானது என இன்றைய உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நம் மூளையைப் பற்றிய, மிகத் தாழ்வான மதிப்பீடுதான், நம் தவறான புரிதலுக்குக் காரணம். நம் மூளையின் ஆற்றல், எந்தத் தலைமுறைக் கணிணியையும் விடக் கூடுதலானது. கணிப்பொறிகளைக் கண்டறிந்ததே, மனித மூளைதானே. ஓய்வற்றும், சலிப்பற்றும் வாழ்நாள் முழுவதும் பணியாற்றக் கூடியது நம் மூளை. விரைந்து படிப்பதைப் புரிந்து கொள்வது என்பதெல்லாம், அதற்கு மிக எளிய செயலே ஆகும். நிதானமாகப் படிக்கும்போதுதான், செய்திகளை நாம் தவற விட்டுவிடுவோம். ஏனெனில், நாம் மெதுவாகப் படிக்கும் போது, அந்த இடைவெளியில் நம் கவனம் எங்கெங்கோ சென்று திரும்பும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில், நம் மூளை ஆயிரம் செய்திகளை எண்ணிப் பார்க்கும். அதற்கு இடம் கொடுக்காமல், விரைந்து படிப்பதன் மூலம் மட்டுமே, கவனக்குவிப்பு (concentration) நாம் படிக்கும் ஒரே நூலில் பதியும். மூளை மட்டுமன்று, நம் உடலின் உள்ளுறுப்புகளில் மிகப் பல ஓய்வே எடுப்பதில்லை. இதயம் எப்போதாவது ஓய்வெடுத்துக் கொள்கிறதா? சிறுநீரகம் என்றைக்காவது ஓய்வெடுக்கின்றதா? நரம்பு மண்டலத்திற்கு ஓய்வு உண்டா? எவையும் ஓய்வெடுப்பதில்லை. எனினும், பிற உறுப்புகளுக்கெல்லாம், ஒரே குறிப்பிட்ட பணிதான். ஆனால், மூளைக்கு மட்டும் பல கோடிப் பணிகள். ஆகவே, அதற்கு நாம் உரிய, தேவையான வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லயானால், தேவையற்ற பல வேலைகளில் அது இறங்கிவிடும்.

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்' நாம் அறிந்த கதைதானே! அலாவுதீன் அந்த அற்புத விளக்கைத் தேய்த்தவுடன், உள்ளேயிருந்து ஒரு பூதம் வெளிவரும். எத்தனை கடுமையான வேலைகளைக் கொடுத்தாலும், அது ஒரு நொடியில் முடித்துவிடும். மீண்டும், மீண்டும் அதற்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அலாவுதீனுக்கே ஆபத்து வந்துவிடும் என்பதுதானே கதை. இந்தக் கற்பனைக் கதை ஒரு குறியீடு போலத் தோன்றுகிறது. நம் மூளைதான், அந்த அலாவுதீன் பூதம் என்று கருத இடமுள்ளது. மூளைக்கு நல்ல வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்றேல், அதுவே நமக்கு ஆபத்தாகி விடக்கூடும். ஆகவே, படிக்கும்போதும், வேறு சிந்தனைகளை நோக்கிச் சென்று விடாமல், கவனம் முழுவதும் படிப்பிலேயே இருப்பதற்கு ஒரே வழி, விரைந்து படிப்பதுதான் என்பது தெளிவாகின்றது. ‘குறித்துப் படிப்பது' என்பது எல்லா நூல்களுக்கும் ஏற்ற முறையென்று கூற முடியாது. பொழுதுபோக்கிற்காகப் படிக்கும் நூல்களை அப்படிப் படிக்க வேண்டிய தேவை இல்லை. மிக நல்ல, தேவையான நூல் என்றும், வாழ்க்கை முழுவதும் பயன்படக்கூடியது என்றும் நாம் கருதும் நூல்களைக் ‘குறித்துப் படிப்பதே' சரியானது. நூலின் முக்கியமான வரிகளை, எழுதுகோலால் சிலர் அடிக்கோடிட்டுக் கொள்வர். இன்று வந்துள்ள ஒளிரும் குறிப்பான்களால் (Highlighters)குறித்துக் கொள்வர் சிலர். அருகிலேயே சில குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வோரும் உண்டு. இவற்றைத் தாண்டி, அருகில் ஓர் ஏட்டினை வைத்துக் கொண்டு, நூலின் முக்கிய வரிகளை அதில் எழுதிக் கொண்டே படிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்வதன் மூலம், ஒரு நூலைப் படிப்பதற்குக் கூடுதல் நேரம் ஆகும் என்பது உண்மைதான். ஆனால் அதன் பயன்களும் மிகக் கூடுதல் என்பதை, அனுபவத்தில் நாம் உணரலாம். ஒரு முறை எழுதினால், மூன்று முறை படிப்பதற்குச் சமம் என்பது பொய்யில்லை. குறித்துப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால், முக்கியமான நூல்களை, திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வது மிக எளிது. இறுதியில் உள்ள படிக்கும் முறை ‘ஆழ்ந்து படிப்பது' என்பது. முதல் மூன்று வகைகளில் எந்த முறையில் படித்தாலும், ஆழ்ந்து படிக்கும் பழக்கம் இல்லையென்றால், படிப்பே பயனற்றுப் போய்விடும்.

சிலர், நிறைய நூல்களைப் படிப்பார்கள். ஆனால் படித்தவை எவையும் அவர்களுக்கு நினைவில் நிற்பதில்லை. சிலருக்கு நினைவிலும் தங்கும். ஆனால் உரிய இடத்தில் அவற்றைப் பயன்படுத்த அவர்களுக்குத் தெரியாது. படிப்பு, நினைவாற்றல், வெளிப்படுத்தல் ஆகிய மூன்றும் ஒரு சங்கிலித் தொடர் போன்றது. அச் சங்கிலியின் கண்ணிகள் அறுபடாமல் இருப்பதற்கு, ஆழ்ந்த படிப்பே அடிப்படையாகும். ‘ஆழ்தல்' என்பதற்கு மூழ்குதல் என்று பொருள். ஒருவர் தண்ணீரில் மூழ்கியபிறகு, மீண்டும் வெளியில் வரும்வரை, தண்ணீர் மட்டும்தான் தெரியும். நாம் எந்தப் பணியில் ஈடுபடுகிறோமோ, அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அதுவாகவே ஆகிவிடுவதை ஆழ்தல் என்று கூறலாம். ஆழ்ந்து படிக்கும் போது, நம் கவனம் சிதறாது. பொருள் தெளிவாகப் புரியும். படிக்கும்போதே, நம் கண்களில் காட்சி விரியும். நூலும், நாமும் வேறு வேறாக இருந்த நிலை மாறி, அதுவும் நாமும் ஒன்று கலத்தல் (Assimilation) அங்கு நடைபெறும். அந்நிலையில் நாம் படிக்கும் அனைத்தும் நம் மூளையில் ஆழமாய்ப் பதியும். நீண்ட நெடு நாள்கள் நெஞ்சில் நிலைக்கும். உரிய இடத்திலும், உரிய நேரத்திலும் தாமே வந்து வெளிப்படும். படிப்பின் பயன் அதுதான்!
( சந்திப்போம்)