திம்பு பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் அமைப்புகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கடைப்பிடிக்கவில்லை

thinakaran.lk 13 04 2014

திம்பு பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் அமைப்புகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கடைப்பிடிக்கவில்லை

தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு அதுவே பிரதான காரணம் ,

லங்கையின் இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கம் 1985ம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் பூட்டானின் தலைநகரமான திம்புவில் அரசாங்க தூதுக்குழுவினருக்கும் பல்வேறுதரப்பட்ட தமிழ்த் தரப்பினருக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முதல் தடவையாக நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைத்தாங்கியவர் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் இளைய சகோதரரான எச். டபிள்யு. ஜயவர்தன என்ற பிரபல சட்ட மேதையாவார்.இந்த பேச்சுவார்த்தைகளில் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழம் புரட்சிகர மாணவர் அமைப்பு என்ற ஈரோஸ், தமிbழ விடுதலைப்புலிகள் (எல்.ரி.ரி.ஈ.), தமிbழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்), தமிbழம் விடுதலை அமைப்பு (டெலோ) தமிbழ தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (ரி.யு.எல்.எப்) ஆகியன கலந்து கொண்டன. இந்த சந்திப்பின் போது இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழு அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான ஒரு நகல் சட்ட மூலத்தை சமர்ப்பித்தது. இதனை தமிழ் குழுக்கள் நிராகரித்தன. இதையடுத்து, அதே ஆண்டு ஜூலை 13ம் திகதியன்று “திம்பு பிரகடனம்” என்ற பெயரில் தமிழ் குழுக்கள் நான்கு பிரதான கோரிக்கைகளை முன் வைத்தன. இவை கடந்த காலத்தில் திம்பு பிரகடனம் என்று புகழ்பெற்று விளங்கின.

திம்பு சித்தாந்தம் அல்லது திம்பு பிரகடனம் நான்கு பிரதான கோரிக்கைகளை கொண்டிருந்தன. இதனை 1985ம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற முதலாவது பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் தமிழ் குழுக்கள் முன்வைத்தன. பூட்டானில் தலைநகரமான திம்புவில் நடைபெற்ற இந்த சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசாங்கம் அனுசரணை அளித்தது. இலங்கையில் தமிழ் போராளிக் குழுக்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற சிவில் யுத்தத்தை சமாதானமாக தீர்த்து வைப்பதற்காக திம்பு பேச்சு வார்த்தைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அரசாங்கம் திம்புவில் முன்வைத்த யோசனைகளுக்கு பதிலளிக்கும் முகமாக தமிழ் குழுக்கள் ஒன்றிணைந்து தயாரித்து சமர்ப்பித்த திம்பு பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு யதார்த்தபூர்வமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமாயின் பின்வரும் 4 முக்கிய சித்தாத்தங்களுக்கு அரசாங்கத் தரப்பினர் உடன்பட வேண்டுமென்று தமிழ் குழுக்கள் வேண்டுகோள் விடுத்தன. அவையாவன,

l இலங்கைத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். l இலங்கைத் தமிழர்களின் தாயாகக் கோட்பாட்டை இனங்கண்டு அங்கீகரிக்க வேண்டும். l தமிழ்த் தேசியத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை அங்கீகரிக்க வேண்டும். l சகல இலங்கைத் தமிழர்களுக்கும் பிரஜாவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்.

இந்த 4 சித்தாங்களில் 4வது சித்தாந்தமான சகல இலங்கைத் தமிழர்களுக்கும் பிரஜாவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டுமென்பதை அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொண்டார்கள்.

இலங்கை அரசாங்கம் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு தெரிவித்த யோசனைகளை தமிழ்க் குழுக்கள் முற்றாக நிராகரித்தன. அதேவேளையில், தமிழ்க் குழுக்கள் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திற்காக அரசாங்கம் வேறு ஏதாவது யோசனைகளை முன்வைத்தால் அதனை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்தது.

முதல் மூன்று கோரிக்கைகளும் இலங்கையின் இறைமைக்கு எதிரானவை என்பதனால் இலங்கை அரசாங்கம் அவற்றை நிராகரித்து நாலாவது கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்டது.முதலாவது திம்பு பேச்சுவார்த்தைகள் 1985ம் ஆண்டு ஜூலை 15ம் திகதியன்று தோல்வியில் முடிவடைந்தது.

முதலாவது திம்பு பேச்சுவார்த்தைகளில் எல்.ரி.ரி.ஈயின் சார்பில் என்டன் பாலசிங்கம் மற்றும் லோரன்ஸ் திலகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் இப்பேச்சுவார்த்தைகளில் ஏ. வரதராஜப் பெருமாள் மற்றும் எல். கேதீஸ்வரன் கலந்து கொண்டனர். டெலோ அமைப்பின் சார்பில் சாள்ஸ் அந்தனி தாஸ் மற்றும் மோகன் கலந்து கொண்டனர். ஈரோஸ் அமைப்பின் சார்பில் ராஜி சங்கர் மற்றும் ஈ.ரட்ணசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். புளொட் அமைப்பின் சார்பில் வாசுதேவா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் எம். சிவசிதம்பரம், ஏ. அமிர்தலிங்கம் மற்றும் ஆர். சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் டெலோ அமைப்பின் சார்பில் நடேசன் சத்தியேந்திரா மற்றும் சாள்ஸ் எந்தனி தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் அரசாங்கம் எல்.ரி.ரி.ஈயுடன் தொடர்புடைய பிரிவினைவாதத்திற்கு இலங்கையில் தூபமிடும் புலம்பெயர்ந்த 425 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கும் உத்தரவை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டிருக்கிறது. இதில் 330ம் எண்ணில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடேசன் சத்தியேந்திரா பிரிட்டனில் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு பிரபல சட்டத்தரணி. சத்தியேந்திராவின் தந்தை திரு. எஸ். நடேசன் கியூ.சி. இலங்கையில் இருந்த முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவர். அவர் இலங்கையின் செனட் சபையின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

திம்பு பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கத் தரப்பினர் இலங்கைத் தமிழர்களுக்கு பிரஜாவுரிமையும் அடிப்படை உரிமையையும் பெறுவதற்கான உரிமை இருக்கிறது என்பதை அங்கீகரித்திருந்தது. தமிழ் அமைப்புகளின் மற்ற மூன்று கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தது. அதில் இலங்கைத் தமிழர்களுக்கான தனியான தாயகம் இருக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டுமென்பதும் இலங்கைத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டுமென்பதும் இரண்டு பிரதான கோரிக்கைகளாகவும். அவையும் அரசாங்கத் தரப்பில் நிராகரிக்கப்பட்டது. மூன்றாவது கோரிக்கை தமிழ்த் தேசியத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்பதாகும்.

முதலாவது சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதே தமிழ் குழுக்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள தவறியது அவர்கள் இழைத்த பெரும் தவறாகும். இதனால் தான் அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. அந்த சந்தர்ப்பத்திலேயே தமிழ் குழுக்கள் தங்கள் கோரிக்கைகளை சற்று தளர்த்தி பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தால் கடந்தகாலத்தில் இடம்பெற்றது போன்று பேரழிவு நாட்டுக்கும் தமிழ் சமூகத்திற்கும் ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் குழுக்கள் நேரடியாக பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் நிச்சயம் இலங்கை விவகாரத்தில் இந்தியா அநாவசியமாக தலையிடுவதை தவிர்த்திருக்கலாம். தமிழ் குழுக்கள் குறிப்பாக தமிழ் போராளிக் குழுக்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமையின்மை இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்திருந்தது.

இப்படியான தவறுகளை இழைத்த காரணத்தினால் தான் அன்றைய இந்தியப் பிரதம மந்திரி ராஜீவ்காந்திக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது தன்னுடைய இராணுவப் பலத்தை பிரயோகித்து தான்தோன்றித் தனமான முறையில் நடந்து கொள்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு 1987ம் ஆண்டில் அவருக்கு கிடைத்தது. அவ்வாண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ராஜீவ்காந்தி கைச்சாத்திடுமாறு அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன மீது அழுத்தங்களை கொண்டு வந்து பின்னர் சர்வதேச சம்பிரதாயங்களை உதாசீனம் செய்து இரவோடு இரவாக 75ஆயிரம் இந்திய இராணுவத் துருப்பினர்களை இலங்கை மண்ணில் விமானங்கள் மூலம் கொண்டு வந்து இறக்குவதற்கு முடிந்தது. அதன் எதிரொலியாக இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களும் யுத்தமும் உரிமைகளுக்காக போராட வேண்டுமென்று நினைத்த அப்பாவி தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது. அந்த துன்ப நிலை இப்போது எல்.ரி.ரி.ஈ. இலங்கை இராணுவத்தினால் தோற்கடிப்பட்டதற்கு பின்னர் ஓரளவு நீங்கி இப்போது படிப்படியாக தமிழ் மக்களின் வாழ்க்கையில் அமைதியும் சமாதானமும் நிலை கொண்டிருக்கிறது.

எஸ். தில்லைநாதன்... -