அறிந்தும் அறியாமலும்- 14: தனிச் சபை, தனிக் கொடி!

07 09 2017

அறிந்தும் அறியாமலும்- 14: தனிச் சபை, தனிக் கொடி!

சுப வீரபாண்டியன்

கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் குறித்து உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற போதும், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முன்னிறுத்தப்படும் தத்துவங்கள் இரண்டு. அவை வைதீகம் என்றும் அவைதீகம் என்றும் அழைக்கப்படுகின்றன. வேதங்களின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் தத்துவங்கள் வைதீகம் ஆகின்றன. அவை மீமாம்சம், வேதாந்தம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் என ஆறுவகைப்படும். எனினும் பிற்காலத்தில் தோன்றிய ஆதிசங்கரர், மீமாம்சம், வேதாந்தம் ஆகியனவற்றை மட்டுமே வைதீகம் என்பார். வேதங்களின் தலைமையை ஏற்க மறுத்த ஆசிவகம், சார்வாகம், சமணம், பௌத்தம் ஆகிய நான்கும் அவைதீகங்கள் ஆயின

உலகத் தத்துவங்கள் கடவுளை மையமாக வைத்துச் சுழல, இந்தியத் தத்துவங்களோ வேதத்தை மையமாகக் கொண்டன. இந்தியாவில் இந்து மதத்தைப் பொறுத்தமட்டில், நாத்திகம் என்பது கூடக் கடவுள் மறுப்பன்று, வேத மறுப்புத்தான். "நாத்திக வேத நிந்திக" என்பதுதான் இங்குள்ள கூற்று. எவன் வேதத்தை நிந்தனை செய்கிறானோ அவனே நாத்திகன் என்றுதான் இந்துமதம் சொல்கிறது. கடவுள் கூட இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டு, வேதங்கள் முன்னிறுத்தப்படுவதற்கு என்ன காரணம்? முதல் வேதமான ரிக் வேதத்தின், பத்தாவது இயலான ‘புருஷ சூக்தம்'தான், மனிதர்களைத் தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என நான்கு வருணங்களாகப் பிரிக்கிறது. மானுட சமூகத்தைப் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என அடுக்குகளாக ஆக்கிய தொடக்கம் அங்குதான் நிகழ்கிறது. தனைத்தான் பிற்காலத்தில் எழுதி, மகாபாரதத்தில் இணைக்கப்பட்ட பகவத்கீதை, 'சதுர்வருணம் மயா சிருஷ்டம்' (நான்கு வருணங்களும் என்னுடைய படைப்பே) என்று கூறி உறுதி செய்கிறது. வருண, சாதிப் பாகுபாடே இந்து மதத்தின் அடித்தளமாகவும், உயிர்நாடியாகவும் உள்ளது. ஆகவேதான் இந்துமதத் தத்துவம், கடவுள் மறுப்புக் குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளாமல், அதனையும் தன் உட்பிரிவுகளில் ஒன்று என ஏற்றுக் கொள்கிறது. புத்தரையும் கூட திருமாலின் அவதாரங்களில் ஒன்று எனச் சொல்லத் துணிகிறது. அதேவேளையில் இவ் வேத மரபுக்கு எதிரான மரபும் தமிழக வரலாற்றில் நீண்டு கிடக்கிறது. வருண, சாதிப் பகுப்பை ஏற்கும் வைதீகத் தத்துவத்திற்கு எதிரான குரலைத் திருக்குறள் பதிவு செய்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே உயர்வு, தாழ்வு அமையும் என்னும் கருத்தை அடியோடு மறுத்து, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிறது திருக்குறள். வேதங்கள் முன்வைக்கும் வேள்விகளை (யாகங்களை)யும், திருக்குறள் மறுத்துக் கருத்துகளைக் கூறுகிறது.

சாருவாகமோ, வருண அமைப்பையும், வேள்வி போன்றவற்றையும் கடுமையாகச் சாடுகிறது. 'நெருப்பில் நெய்யை வார்ப்பதால், மறுபிறப்புக்கு நல்லது என்பது சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை. வேள்வியில் பலியிடும் விலங்கின் உயிர், சொர்க்கத்திற்குச் செல்லுமெனில், வேள்வியை நடத்துபவன் தனது தந்தையையே வேள்வியில் பலியிட்டு நேராக சொர்க்கத்திற்கு ஏன் அனுப்புவதில்லை?'

என்று கேட்கும் சார்வாகம், 'யாகங்கள் என்பவை பிராமணர்கள் தமது பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொண்டவை. பிராமணர்கள் முணுமுணுக்கும் மந்திரங்களில் எந்த உண்மைத் தன்மையும் கிடையாது' என்றும் கடுமையாகப் பேசுகிறது. (From : 'Sarva Darsana Sangraha' by Cowell Gough) வைதீக மரபான ‘பிரம்ம ஏகாந்தவாதத்தை'ச் சமணம் எதிர்த்தது. ஆன்மா அழியாதது என்று கூறும் உபநிடதக் கருத்தைப் பௌத்தம் தன் ‘அனான்ம வாதத்தால்' மறுத்தது. பிற்காலத்தில் தோன்றிய சித்தர்கள், குறிப்பாக, சிவவாக்கியார், வருண, சாதி முறையை மிகக் கடுமையாக எதிர்த்தார். சுத்தம், அசுத்தம் என்னும் அடிப்படையில் உருவான தீட்டு, புனிதம் ஆகிய கோட்பாடுகளையும் சித்தர்கள் மறுத்தனர்.

"வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்கிறீர் வாயிலே குதப்பு வேதம் எனப் படக் கடவதோ?" என்றும், "இட்ட குண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?" என்றும் நேரிடையாகவே பார்ப்பனர்களைச் சிவவாக்கியார் சாடினார்.

"ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?" என்று கேட்டார், இன்னொரு சித்தரான பத்ரகிரியார். சாங்கியத் தத்துவத்தைத்தான், ‘ஆதிகபிலர் சொன்ன ஆகமம்' என்கிறார் பத்ரகிரியார். அதனால்தான், சாதிகளை ஏற்காத சாங்கியத்தையும், வைதீக மதமாக ஏற்க மறுத்தார் சங்கரர். கடவுள், வேதம் ஆகியனவற்றை ஏற்பதைக் காட்டிலும், வருணப் பாகுபாடு, சாதியப் பாகுபாடு ஆகியவற்றை ஏற்பதே வைதீகத் தத்துவம் என்பது ஆதிசங்கரரின் நிலைப்பாடு.

சங்கரர் சமண, பௌத்த மதங்களைக் கடுமையாக எதிர்த்தார். சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு மதங்களையும் இணைத்து இந்து மதம் என்ற பெயரில், சமண, பௌத்த மதங்களை எதிர்க்க வேண்டும் என்றார். முறையே சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, குமரன், சூரியன் ஆகியோரை வழிபடுவோரே மேற்காணும் ஆறு மதங்களாக இருந்தனர். அவர்களை இணைக்க முயன்ற காரணத்தால்தான், சங்கரருக்கு, ‘ஷண்மத ஸ்தாபகர்' (ஷண் என்றால் ஆறு.. ஷண்முகம் என்றால் ஆறுமுகம்) என்னும் பட்டம் வந்தது. அவர் காலத்தில் சமண, பௌத்த மதங்கள் தமிழ்நாட்டில் தளர்ந்தன என்பது உண்மைதான். ஆனால் இந்தியா முழுவதும் இஸ்லாம் பரவத் தொடங்கியது. வைதீகத் தத்துவத்திற்கு இஸ்லாம் மதம் பெரும் அறைகூவலாக அமைந்தது. சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் நோக்கி நகர்ந்தனர். மதங்களின அடிப்படையில், சமற்கிருதம், அரபு, உருது, தெலுங்கு எனப் பன்மொழிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்தில், சந்தத் தமிழில் 15ஆம் நூற்றாண்டில் கவிதை பாடினார் அருணகிரிநாதர். தமிழ், சமற்கிருத எதிர்வுகள், வெறும் மொழிப் போராட்டமன்று. இருவேறு பண்பாடுகளின், இருவேறு தத்துவங்களின் மோதல். இவ்வாறுதான், சமற்கிருதக் கடவுள்களிடமிருந்து விலகி, ‘தமிழ்க்கடவுள்' முருகனை அருணகிரிநாதர் பாடினார். "வடபுலத்துத் தெய்வானையைப் பெரிதும் பேசாது, வள்ளியை உரத்துப் பாடுகிறார். அருணகிரியின் பாடல்கள், வெற்று முருகப் பாடல்கள் அல்ல. தமிழியம் நோக்கி அவர் எடுத்த போராட்ட முனைப்பாகவே கொள்ளப்படும்" என்கிறார் முனைவர் க.ப. அறவாணன். அவருக்குப் பின்னால் வந்த தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்கள் நிலையாமைத் தத்துவத்தை முன்னெடுத்துச் சென்றனர். மற்றபடி, தத்துவ விவாதங்களில் கூடுதலாக அவர்கள் ஈடுபடவில்லை.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாரே, தமிழ்த் தத்துவ உலகின் இன்னொரு திருப்பு முனையாக அமைந்தார். அவருடைய வாழ்வின் முன்பகுதி, சமயத் தத்துவங்களுக்கு இணக்கமாக இருந்தது. இறுதி நாள்களில், அவர் மிகச் சிறந்த சீர்திருத்தவாதியாக மலர்ந்தார்.

"சமயம்குலம் முதலாச் சார்பெலாம் விடுத்த அமயம் தோன்றும் அருட்பெரும் ஜோதி" என்றார். சாதி, மதங்களை விட்டொழித்த பின்பே, அருட்பெரும் ஜோதியை அணுக முடியும் என்றார்.

வள்ளலார், தன் இறுதி நாள்களில், ‘வேத' மறுப்பாளராகவே விளங்கியுள்ளார். தான் உருவாக்கிய அனைத்து அமைப்புகளின் பெயர்களிலும் இடம் பெற்றிருந்த ‘வேத' என்னும சொல்லை நீக்கி, ‘சுத்த' என்னும் சொல்லை இணைத்துள்ளார். சமரச வேத சன்மார்க்க சங்கம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ஆனது. அவ்வாறே, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையும் பெயர் மாறியது. சித்தி வளாகத்தில், சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, 1873 அக்டோபர் 22 அன்று அவர் ஆற்றிய உரையைப் பேராசிரியர் அருணன், தன் நூலில் எடுத்துக் கட்டியுள்ளார். அவ்வுரையிலிருந்து சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன : ".....வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்.....சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்... நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுதம் முதலியாருக்கும், இன்னும் சிலருக்கும் தெரியும். அதே லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா?......ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது".

சைவ சமயப் பற்றில் ஆழ்ந்திருந்த வள்ளலார், அதை அற்ப அறிவு இருந்த காலம் என்கிறார். அனைத்து வைதீகத் தத்துவப் பிடியிலிருந்தும் விடுபட்டு, தனிச் சபை, தனிக்கோயில், தனிக் கொடி அமைத்துக் கொண்டு, தனி இயக்கமாகச் செயல்படத் தொடங்கினார். ஆனால் அப்போக்கு அவருக்குப் பல்வேறு எதிரிகளை உருவாக்கியது. அவருடைய புதிய தத்துவத்திற்கு எதிராகப் பழைய தத்துவவாதிகள் பலர் வெகுண்டெழுந்தனர். மேற்காணும் உரையை ஆற்றிச் சரியாக மூன்று மாதங்கள் முடிவதற்குள், வள்ளலார் மறைந்து விட்டார். ‘ஜோதியில் கலந்துவிட்டார்' என்றே இன்றும் கூறப்படுகிறது. வைதீகக் கோட்பாட்டிற்கு மாறாகத் தில்லைக் கோயிலுக்குள் சென்று வழிபட விரும்பிய நந்தனும் ஜோதியில் கலந்தார். வைதீகக் கோட்பாட்டை நேர் நின்று எதிர்க்கத் தொடங்கிய, வள்ளலாரும் ஜோதியில் கலந்தார்.ஆனாலும், வைதீகத்தை எதிர்த்த நெருப்பு அணைந்து விடவில்லை. மீண்டும் மீண்டும் பொறிகள் தெறித்து விழுந்துகொண்டே இருந்தன.
( சந்திப்போம்) ilakkiyainfo.com 31 08 2014