ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -(பாகம் -35)

20 09 2017

ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -(பாகம் -35) வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற தோழி பிரியாவின் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழினி!!

ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும் வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது. புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்துசென்ற காரணத் தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர்.ஒரு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமானவர்கள் புனர்வாழ்வு காலத்தை நிறைவுசெய்யும்போது அவர்களைப் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு பெரிய வைபவமாக முன்னெடுக்கப்படுவது வழக்கம்.நானிருந்த காலப்பகுதியில் இப்படியான இரண்டு ‘விடுவிப்பு வைபவங்கள்’ இடம்பெற்றன. ஒவ்வொரு நிகழ்விலும் நூற்றுக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.2013 தமிழ்ச் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரசபை மண்டபத்தில் விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுக்குச் சிறைச் சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சரும் அவருடைய ஏற்பாட்டில் காலி, மாத்தறை பகுதிகளைச் சேர்ந்த பலகலைக்கழக மாணவர்களும் சில அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.அவர்கள் ‘இங்குப் பயிற்சிபெறும் தமிழினியுடன் கதைக்க வேண்டும், அவரை எங்களுக்கு இனங்காட்ட முடியுமா’ என என்னிடமே வந்து கேட்டனர்.என்னருகில் நின்ற ஒரு பிள்ளை ‘இவாதான் தமிழினியக்கா‘ என எந்தவிதமான யோசனையும் இல்லாமல் இயல்பாகக் கூறிவிட்டார்.என்னைச் சுற்றிவளைத்துக்கொண்ட மாணவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட கேள்விகளால் என்னைத் துளைத்தெடுக்கத் தொடங்கினார்கள். என்ன செய்வது எனப் புரியாத நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தேன்.இதனை அவதானித்தவர்களாக எமக்குப் பொறுப்பாக இருந்த ஆண் பெண் இராணுவ அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.தலைவரைப் பற்றியும் இயக்கத்தின் கடந்த காலச் செயற் பாடுகள் பற்றியும் பல கேள்விகளை அவர்கள் அடுக்கிக்கொண் டிருந்தார்கள். கூட்டத்தின் நடுவிலே நான் மௌனமாக நின்று கொண்டிருந்தேன்.எனது இக்கட்டான நிலைமையைப் புரிந்துகொண்ட இராணுவ அதிகாரிகள் “இவர் இப்போது புனர்வாழ்வு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அதனைப் பற்றிய கேள்விகளை இந்தப் பிள்ளையிடம் நீங்கள் தாராளமாகக் கேட்க முடியும். இவருடைய கடந்த காலத்தைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு அவருடைய மனதைக் குழப்புவதற்கு அனுமதிக்க முடியாது” எனக் கூறியவுடன் கேள்விகள் கேட்பது நின்றுபோனது. “எங்களுக்கு இவருடைய கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதுதான் இன்ரஸ்ட்டானது” எனக் கூறினார்கள்.“அதற்காக புனர்வாழ்வு பெறுபவர்களுக்குக் கடந்த கால நினைவுகளை மீட்கும்படியான கேள்விகளைக் கேட்டுத் தொந்தரவுபடுத்த முடியாது” எனக் கூறினார்கள் அந்த இராணுவ அதிகாரிகள்.“நேற்றுவரையிலும் போர்க்களத்தில் யுத்தம் செய்தவர்கள் இன்று நிறைய மாற்றங்களுடன் சிந்திக் கிறார்கள். நாம்தான் இன்னும் பழைய விடயங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்” என அவர்கள் கூறியதை நான் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.இந்த திருமண வைபவத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்துக்கொண்டனர்.2012.10.23 வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு திருமண வைபவம் நடாத்தப்பட்டது.

புனர்வாழ்வு நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த பிரியா என்கிற பிள்ளைக்கும் புனர்வாழ்வு பயிற்சி முடித்து வெளியேறிய மதி என்கிற இளைஞனுக்கும் இந்தத் திருமணம் நடாத்தப்பட்டது.தாயில்லாத நிலைமையில் குழந்தைப் பருவத்திலேயே தகப்பனால் புறக்கணிக்கப்பட்ட பெண்பிள்ளையான பிரியா உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தவர்.பின்பு இவர் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டார். இதயத்தில் அவருக்கிருந்த நோய் காரணமாக இயக்கத்திலிருந்து விலகி ஒரு பணியாளராக இயக்கத்தின் உணவு தயாரிப்புத் தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார்.2009க்குப்பின் இராணுவெத்திடம் சரணடைந்து புசா தடுப்பு முகாமில் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்து, நிதிமன்ற உத்தரவின்படி புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.இவரது விடுதலைக் காலம் நெருங்கி வந்துகொண்டிருந்த நிலையில் இவரை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.ஒருவர் புனர்வாழ்வுப் பயிற்சியை நிறைவு செய்தபின் அவரைப் பெற்றோர் அல்லது நெருங்கிய உரித்துடையவர்களிடமே ஒப்படைப்பது வழக்கமானது.

முன்னாள் புலிகள் புனர்வாழ்வுப் பயிற்சி முடித்து வெளியேறியதன் பின்பு சட்டத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுவார்களேயானால் அவர்களைப் பொறுப்பெடுத்தவர் களே வகை சொல்ல வேண்டியவர்களாக இருந்தனர்.பிரியா காதலித்திருந்த மதி என்ற இளைஞனின் தாயார் மனமுவந்து இவரைத் தனது பொறுப்பில் எடுப்பதற்கு முன்வந்த போதும், அவர்களுக்குத் திருமணம் ஆகியிருக்காத காரணத்தால், சட்டப்படி அது முடியாமல் போனது.ஆகவே அவர்களுக்கான திருமணத்தைப் புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்துவதற்குத் தீர்மானித்தனர். பிரியா என்னைவிட வயது குறைவானவராக இருந்தாலும் எனக்கு மிகவும் நெருக்கமான தோழியாக இருந்தார்.அவரைத் திருமணம் செய்த மதி மிகவும் நற்பண்புகளைக் கொண்ட ஒரு இளைஞன். போராட்டத்தில் தனது காலொன்றை இழந்திருந்தார்.
அவர் பிரியாவை மிகவும் நேசித்தார். அவரது குடும்பத்தவர்களும் பிரியாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பத்தோடு இருந்தனர்.

இந்தத் திருமண நிகழ்வு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற காரணத்தால் புனர்வாழ்வு பெற்றுவந்த பெண்கள் அனைவரும் கலந்துகொண்ட நிகழ்வாக அமைந்திருந்தது.பிரியாவுக்கு நான் மணப்பெண் தோழியாக நின்றதாகப் படத்தோடு செய்திகள் வந்ததாக அறிந்தேன். உண்மையில் மணமகனின் தங்கையே மணப்பெண் தோழியாக இருந்தார்.அந்தச் செய்தி எனக்குச் சிரிப்பை வரவழைத்திருந்தது.2013.04.25,26,27 திகதிகளில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சினால் “சமாதானத்தின் நண்பர்கள்“ என்ற தொனிப்பொருளில் சுற்றலா நிகழ்ச்சியொன்று புனர்வாழ்வு பெற்று வருபவர்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.இருபதிற்கும் மேற்பட்ட பேருந்துகளில் தொடரணியாக அந்தப் பயணம் ஆரம்பமானது.

முதன்முதலாகக் கொழும்பு பாராளுமன்ற கட்டடம் பார்வையிடப்பட்டது.அங்கு வருகை தந்திருந்த அமைச்சர் சந்திரசிறி “தமிழினி! நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இந்த இடத்திற்கு வரவேண்டும்” எனக் கூறினார்.நான் சிரித்துக்கொண்டே எனது வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தேன். நான் புனர்வாழ்வு பெற்றுவந்த காலப் பகுதியில் என்னைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களிளெல்லாம் “நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும், தமிழினி” என்ற தனது கருத்தை அமைச்சர் சந்திரசிறி வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்.அவர் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர். புனர்வாழ்வு பெற்றுவந்த முன்னாள் போராளிகளுடன் மிகவும் அன்னியோன்யமாகப் பழகுவார்.வவுனியா நகரசபை மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போதும் ஜே.வி.பி. இயக்கத்தினர் பலர் ஆயுத வழிமுறைகளை விட்டு ஜனநாயக அரசியலுக்குத் திரும்பியதை என்னிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.

நான் சம்மதித்திருந்தால் அவர்களுடைய இடதுசாரிக் கட்சியில் என்னால் இணைந்து செயற்பட்டிருக்க முடியும். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில்எனக்கு அத்தகைய அரசியல் ஈடுபாடு இருக்கவில்லை.எமக்கான சுற்றுலா நிகழ்ச்சியில் முதல்நாள் காலை பாராளுமன்றம் பார்வையிடப்பட்டதுடன் மாலையில் கொழும்பு சத்தியபாபா மண்டபத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஜனை நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மிகவும் சுவையான சைவ உணவும் சில அன்பளிப்புப் பொருட்களும் வழங்கப்பட்டிருந்தன.அன்றிரவு பனாகொடை இராணுவ முகாமுக்கு அண்மையில் அமைந்திருக்கும் புத்த விகாரையின் பயணிகள் விடுதியில் ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் வேறொரு புறமுமாகத் தங்க வைக்கப்பட்டோம்.எங்களுடன் பெண் இராணுவத்தினரும் பெண் இராணுவ அதிகாரிகளும் தங்கியிருந்தார்கள்.மறுநாள் காலையில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை ஊடாகக் காலி மாநகரசபையைச் சென்றடைந்தோம்.பெண்கள் குறைவான தொகையினராக இருந்த காரணத்தால் ‘ஏ’ எழுத்துப் பொறிக்கப்பட்ட முதலாவது பேருந்து எமக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

காலி மாநகரசபையினரால் ‘முன்னாள் போராளிகளைச் சமூகத்திற்கு உள்வாங்குவது’ என்ற அடிப்படையில் ஒரு வரவேற்பு நிகழ்வை நடாத்தினார்கள்.அதன்பின்பு காலி கோட்டையைப் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 2009க்குப்பின் முதன்முறையாகக் கடலையும் அலைகளையும் பார்த்தேன்.முல்லைத்தீவுக் கடலும் நினைவழியாப் பல முகங்களும் நெஞ்சிலே ஊர்வலம் போகத் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து ‘தெணியாய’ பிரதேசத்திற்குக் கூட்டிச்செல்லப்பட்டோம். அது தேயிலை, இரப்பர் போன்ற தோட்டங்களைக்கொண்ட அழகான ஒரு மலைப்பிரதேசமாக இருந்தது.

புனர்வாழ்வு முகாமில் இருந்தபோது (2013) காலி நகருக்குத் தமிழினி அழைத்துச் ச பச்சைப் பசேலென்ற அதன் குளிர்மையைத் தாங்கியபடி இதமாக வருடிச்செல்லும் மலைக்காற்றும், சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும் களுகங்கையும் எந்த மனக் காயங்களையும் ஆற்றவல்ல இயற்கையின் ஔடதங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.அங்கேயிருந்த ஒரு சிங்கள கிராமத்தில் மக்களின் வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட்டது. வயது முதிர்ந்த அன்னையர்கள் சிங்களப் பண்பாட்டின்படி வெற்றிலையையும் குழந்தைகள் மலர்ச் செண்டுகளையும் தந்து வரவேற்றனர்.உண்மையாகவே அந்த நிகழ்வு அரசியல் நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், எம்மைச் சுற்றிலும் நின்றபடி புன்னகையுடன் அரவணைத்து வரவேற்ற அந்த மக்களினதும் எங்களினதும் மனங்களில் ஏற்பட்டிருந்த நெகிழ்ச்சியும், இமையோரங்களில் கசிந்த நீர்த் துளிகளும் திரையிட்டு மறைக்க முடியாத மனித மனங்களின் உண்மையான உணர்வு வெளிப்பாடுகள் என்றே சொல்ல வேண்டும்.

நூற்றாண்டு கால அரசியல் பகைமைகளை இப்படியான ஓரிரண்டு உறவாடல்களால் சீர்ப்படுத்திவிட முடியாதுதான். ஆனாலும் இனம், மொழி, மதம் கடந்து மனித உணர்வுகளின் நேசங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.அப்படிப்பட்ட ஒரு விரிந்த மனப் பக்குவம் மனிதர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் உலகம் அமைதியும் சமாதானமும் நிறைந்த சொர்க்கமாகிவிடும்.ஆனாலும் என்ன செய்வது? உலகத்தின் ஆயுத முதலாளிகள் வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிடும்போது சமாதானமும் சேர்ந்தே பறந்து காணாமல் போய்விடுகிறது.அந்தச் சுற்றுலாவின் முழுமையான நிகழ்ச்சி நிரலிலும் எனது மனதில் நிறைந்துபோனது அந்தக் கிராமத்து மக்களின் அன்பு மட்டுமே.அன்று தொடர்ந்த இந்து, பௌத்த, கிறிஸ்தவ மத வழிபாட்டு நிகழ்வுகள், இரவு கலை நிகழ்வுகள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அன்றிரவு தெணியாய தமிழ்ப் பாடசாலையில் தங்கினோம்.அங்கு அதிகமான தமிழ் மக்களும் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் எங்களோடு மிகவும் அன்போடு பழகினார்கள்.

மறுநாள் அந்தப் பாடசாலை மைதானத்தில் புனர்வாழ்வு பெற்றுவருபவர்களின் கிறிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட விளையாட்டு அணிகளுக்கும் அந்தப் பாடசாலை மாணவர்களினதும், அந்தப் பிரதேச இளைஞர்களி னதும் விளையாட்டு அணிகளுக்கும் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.அதன் பின்னர் கதிர்காமம் 94 நோக்கிய பயணம் ஆரம்பமானது.இரவு பெரிய கதிர்காமத்தையும் அங்கிருக்கும் பௌத்த ஆலயத்தையும் தரிசித்தோம். அன்றிரவு கதிர்காமம் பயணிகள் விடுதியில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் காலை செல்லக்கதிர்காமம் 95 கூட்டிச் செல்லப்பட்டோம்.எனது சிறிய வயதில் அம்மம்மாவுடன் கதிர்காமத்தில் சுற்றித் திரிந்த நினைவுகளும், மாணிக்க கங்கை 96 யின் நீராடலும் மங்கலான நினைவுகளாகச் சுழன்றன.அதன் பின்பு மத்தலயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த, மகிந்த ராஜபக்ஷ விமான நிலையத்திற்குக் கூட்டிச்செல்லப்பட்டோம்.இந்தச் சுற்றுலாவில் புனர்வாழ்வு ஆணையாளர் தர்ஷன ஹெட்டியாராய்ச்சியும் அமைச்சர் சந்திரசிறியும் முழுமையாகக் கலந்து கொண்டிருந்தார்.

தொடரும்… -தமிழினி- 28 09 2016