அறிந்தும் அறியாமலும் - 17: கொடிதினும் கொடிதாய்...!

01 10 2017

அறிந்தும் அறியாமலும் - 17: கொடிதினும் கொடிதாய்...!

-சுப. வீரபாண்டியன்
எத்தனை அபிமன்யுக்கள் தொடர்ந்து வந்தாலும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் இருப்பையும், செல்வாக்கையும் இல்லாமல் செய்துவிட முடியவில்லையே, என்ன காரணம்? எந்தத் தேவைக்காக, எந்த நோக்கத்திற்காகத் திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்தத் தேவையும், நோக்கமும் இன்றுவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதே காரணம். இனமானம், மொழிஉணர்ச்சி, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்ற பல கூறுகள் அவ்வியக்கத்துள் பொதிந்து கிடந்தாலும், சாதி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு என்னும் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, மற்ற அனைத்துச் சிந்தனைகளும் அங்கு சுழல்கின்றன என்பது மெய். மேலும் சுருங்கக் கூறின், ‘சமத்துவம்' அல்லது ‘சமூகநீதி' என்னும் இலக்கை நோக்கியே, அதற்காக மட்டுமே, தொடங்கப்பட்ட இயக்கம் அது! அந்தச் சமத்துவமும், சமூகநீதியும் இன்னும் இங்கே எட்டாக் கனிகளாகவே உள்ளன.

பகுத்தறிவின் அடிப்படையில் கடவுள் மறுப்பையும், அறிவியலின் அடிப்படையில் மத நம்பிக்கைகளையும் பெரியார் எதிர்த்தார் என்றாலும், சாதி இழிவைத் துடைப்பதையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தவர் அவர். அதனால்தான், மற்ற எல்லா மதங்களையும் விட, இந்து மதத்தைக் கூடுதலாகவும், குறி வைத்தும் அவர் தாக்கினார். சாதிப் பாகுபாடுகளையும், சாதியின் பெயரால் தீண்டாமைக் கொடுமையையும், இன்றைக்கும் அடித்தளமாகக் கொணடிருக்கும் இந்து மதத்தின் கடும் எதிரியாக அவர் விளங்கினார். ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் ஒரு மதம், சொர்க்கத்திற்கே (அப்படி வழியில்லை என்றாலும்) தன்னை அழைத்துச் செல்லக்கூடும் என்றாலும் அதனை அழிக்கவே முற்படுவேன் என்றார் அவர்.

1929ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில், "பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு நீதியும், ஆணுக்கு ஒரு நீதியும், பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும் சரி, அது கடவுளை நேரே கொண்டுவந்து காட்டி, மோட்சத்திற்கு அழைத்துச் செல்லச் செய்யும் மதமாயிருந்தாலும் சரி, அதை அழிக்க வேண்டிதும், அழிக்க முடியாவிட்டாலும், அந்த அழிக்கும் வேலையில் உயிரை விட வேண்டியதும் உண்மையான மனிதனது கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன்" -என்று மிகத் தெளிவாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் சிறிதும் ராசிக்கு (compromise) இடமில்லை என்பதைக் கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறுகின்றார். பெரியார் பேச்சில் இடம் பெற்றுள்ள சில செய்திகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. பிறவியின் காரணமாகக் கூறப்படும் வெவ்வேறு நீதிகள் என்றும், ஆணுக்கும், பெண்ணுக்கம் சொல்லப்படும் மாறுபட்ட நீதிகள் என்றும் அவர் குறிப்பிடுவது, கற்பிக்கப்பட்டுள்ள சாதி மற்றும் பெண் அடிமைத்தனங்கள் குறித்தனவாக உள்ளன. அவற்றை ஒழிப்பதற்காக உயிரை விடவும் அணியமாக உள்ளேன் என்கிறார். இந்த அழித்தொழிப்புப் போராட்டம், ஓர் இயக்கத்தவனின் அல்லது ஒரு கட்சிக்காரனின் கடமை என்று சுருக்காமல், உண்மையான மனிதனது கடமை என்கிறார். மேலே காணப்படும் கூற்று, அடிமைத்தனம் எவ்வளவு கொடியது என்பதையும், அதனை அழிக்கும் போராட்டம் எவ்வளவு கடியது என்பதையும் ஒருசேர உணர்த்துகிறது. எதிரியின், எதிர்க்கருத்தின் வலிமையை அவர் சற்றும் குறைத்து மதிப்பிடவில்லை. அது எந்த அளவிற்கு இங்கு வேரூன்றியுள்ளது என்பதை உணர்ந்தே, அதனை வாழ்வா, சாவா எனத் தீர்மானிக்கும் போராட்டம் என்கிறார்.

சாதியை ‘மனிதர்கள்' ஏன் எதிர்க்க வேண்டுமெனில், அது மனிதத் தன்மையையே மறுப்பதாக உள்ளது. விலங்குகளைத் தொடுவதற்கும் கூசாதவர்கள், மனிதர்களைத் தீண்ட மறுக்கின்றனர் என்றால், விலங்குகளிலும் கீழாக மனிதர்களை மதிக்கிறார்கள் என்றுதானே பொருள். இந்த இழிநிலையை எதிர்த்துப் போராடாமல், தமிழர் பண்பாட்டின் சிறப்புகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பது, நகைப்புக்குத்தானே இடமாகும்? இன்றைய இளைஞர்களின் எண்ணங்களில் சாதி எதிர்ப்புப் போக்கு உறுதிப்படவில்லை. உலகம் நவீனமாகி விட்டது, எல்லாம் மாறிவிட்டன என்று கருதுகின்றனர். ‘இப்ப எல்லாம் யாரு சார், சாதி பாக்குறாங்க?' என்று மேம்போக்காகக் கேள்வி கேட்கின்றனர். உண்மையில், இப்போதுதான், படித்தவர்கள், பணக்காரர்கள் எல்லோரும் கவனமாகச் சாதி பார்க்கிறார்கள். மாநகரங்களில் மறைமுகமாகவும், சிற்றூர்களில் வெளிப்படையாகவும் சாதி இறுகிக் கிடக்கிறது. தன் கிராமத்துக்குப் போய் வந்த எழுத்தாளர் இரா. உமா,

"நான் சிறு வயதில் பார்த்ததுபோல் என் கிராமம்

இல்லை சில்லாங்குச்சி விளையாடிய தெரு இல்லை நிலா பார்த்தபடி படுத்துறங்கிய திருப்பதி தாத்தா வீட்டுச் சாணி தெளித்த முற்றம் இல்லை

சுற்றிச் சுற்றி விளையாடிய- தொரப்பூச்சி பெரியம்மாவின் வீடு இல்லை ஊருக்குள் குடிசைகளே இல்லை புத்தகப் பையோடு குதித்து விளையாடிய வைக்கோல்போரும் களத்துமேடும் இல்லை

கோழிக்குஞ்சு பெரியப்பா வீட்டுக் கொல்லையில் எலந்தை மரம் இல்லை ஜக்கம்மா அத்தை தோட்டத்தில் வாதாங்கொட்டை மரம் இல்லை வடக்குக் கிணற்றில் நீரிறைக்கும் உருளைச் சத்தம் இல்லை

தெருவே கூடி ரசிக்கும் ராஜகோபால் அப்பாவின் பாட்டுக் கச்சேரி இல்லை கைப்பேசி முதல் கணினிவரை அறிவியல் நுழையாத வீடுகளே இல்லை சாதி மட்டும் அப்படியே இருக்கிறது!" -என்று எழுதுகின்றார்.

இதுதான் உண்மை நிலை. கிராமங்களில் அறிவியல் வளர்ச்சியைக் காணமுடிகிறது. ஓரளவிற்குப் பொருளாதார வளர்ச்சி கூட ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதிகளற்ற, சமத்தும் நோக்கிய வளர்ச்சி சிறிதும் ஏற்படவில்லை. மேலும் மேலும் பின்னடைவே உண்டாகியுள்ளது. நகரங்களிலும், சாதிச் சங்கங்கள், அவற்றின் அடிப்படையில் சாதிக் கட்சிகள் பெருகிக் கொண்டுள்ளன. மரக்காணம் அருகில், "சாதிகள் உள்ளதடி பாப்பா" என்று ஒரு விளம்பரப் பலகையே ஓராண்டிற்கு முன்பு காணப்பட்டது. ஒரு கட்சி, அப்பலகையின் பின்புலத்தில் இருந்தது.

மேலை நாட்டு உணவுப் பழக்கங்கள், உடைகள், படிப்பு முறை எல்லாம் இங்கே வந்துவிட்டன. ஆனால் சாதிமுறை மட்டும் அசையாமல் அப்படியே இருக்கிறது. அறிவியல், மருத்துவம், கணிப்பொறியியல், சட்டம் என்று பல்வகைப் படிப்புகளிலும் தேர்ச்சி பெறும் நம் பிள்ளைகள், பழைய சடங்குகள், போக்குகளிலிருந்தெல்லாம் விடுபட்டு விட்டதாகக் கருதும் இளைஞர்கள் அனைவரும் (அல்லது மிக மிகப் பெரும்பான்மையினர்), திருமணம் என்று வரும்போது, வீட்டிற்கு அடங்கிய நல்ல பிள்ளைகளாகி, பெற்றோரின் விருப்பப்படியும், சமூக நியதிகளின்படியும், தங்களின் சொந்த சாதியில் மணமுடித்துக் கொள்கின்றனர்.

உடுத்தும் உடை, உச்சரிக்கும் ஆங்கிலம், பயன்படுத்தும் அறிவியல் பொருள்கள் இவைகளால் எல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் இளைய தலைமுறையினரில் பலர், இன்றைக்கும் சாதி வட்டத்திற்குள்ளேயே கிடந்து உழல்வது குறித்து ஒரு சிறிதும் வெட்கமடைவதில்லை. அவர்கள் நம்பும் மதம், மதத் தலைவர்கள் வருண, சாதி அமைப்பை நியாயப்படுத்தியும், அந்த இழிநிலையை உயர்த்திக் காட்டப் புதுப்புது ‘வியாக்கியானங்கள்' கொடுத்தும் வருவதுமே அதற்கான காரணங்கள்.

சங்கராச்சாரியார், தன்னுடைய ‘தெய்வத்தின் குரல்' நூலில் (இரண்டாம் தொகுதி), வருணங்களின் இருப்பை நியாயப்படுத்திப் பேசுகின்றார். "சூத்திரன் என்று சொன்னால், ‘ஸ்வய மரியாதை' கெடும் என்று சிலர் கூறுகின்றனர். அப்படியில்லை" என்று கூறும் அவர், அவர்கள்தாம் கடவுளுக்கு நெருக்கமாக உள்ளனர் என்று புது விளக்கம் சொல்கின்றார். மற்ற வருணத்தார் எல்லோருக்கும் ஏவல் வேலைகளைப் பார்ப்பதால், ‘அவாளுக்கு அஹங்காரம் என்பதே' இருக்காதாம். அதனால் பகவானுக்கு நெருக்கமாகி விடுவார்களாம்.

பார்ப்பனர்களாகப் பிறந்தவர்களும் கூட, பிறருக்கு ஏவல் பணி செய்தல், சாக்கடை அள்ளுதல், தெருவைச் சுத்தம் செய்தல் போன்ற ‘சமூகப் பணி'களில் ஈடுபட்டு, ‘அஹங்காரமே' இல்லாதவர்களாகி, பகவானின் பக்கத்தில்போய் அமர்ந்து கொள்ளக் கூடிய உத்தியை ஏனோ அவர் சொல்லிக் கொடுக்க மறந்துவிடுகின்றார். ஒவ்வொரு வருணத்தாருக்கும் குறிப்பிட்ட உரிமைகளும், குறிப்பிட்ட கடமைகளும் உள்ளன என்கிறார். அதனால் சமூக இயங்கு நிலைக்கு இந்தப் பாகுபாடு மிகவும் தேவை என்கிறார்.

இந்த வருண, சாதி அமைப்பில், திட்டமிட்ட குளறுபடி ஒன்று உள்ளது. எந்த வருணத்தாருக்கு உரிமைகள் மிகக் கூடுதலாக இருக்கின்றனவோ, அவர்களுக்கான கடமைகள் மிகக் குறைவாக உள்ளன. எந்த வருணத்தாருக்கு உரிமைகள் மிகக் குறைவாக உள்ளனவோ, அவர்களுக்குக் கடமைகள் மிகக் கூடுதலாக உள்ளன. எனவே, வருண அடுக்கின் மேல் தளத்தில் உள்ளவர்களுக்கு, இந்தக் கோபுர முறை மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளது. அது சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். அதற்காகப் புதுப்புது விளக்கங்களை சில வேளைகளில் நவீன அறிவியலோடு இணைத்தும் கூறி வருகின்றனர்.

எப்படி உடைக்கலாம், உடைத்து அழிக்கலாம் இந்தச் சாதி அமைப்பை என்று அறநெறியாளர்கள் பலர் ஆண்டாண்டு காலமாய்ப் போராடி வருகின்றனர். அகமணமுறை ஒழிப்பின் மூலம் சாதியின் அடித்தளத்தில் சில அசைவுகளை ஏற்படுத்த முடியும் என்று அண்ணல் அம்பேத்கர் நம்பினார். ஆனால், நடைமுறையில் ‘கலப்புத் திருமணம்' என்று பொதுவாகக் கூறப்படுகின்ற சாதி மறுப்புத் திருமணங்களையும் கூடக் கடந்து, சாதி நிலைத்திருக்கிறது. அதற்கான காரணம் ஒன்றைக் கவிஞர் மாலதி மைத்ரி, தன் நூலொன்றில் (‘விடுதலையை எழுதுதல்') தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஆணாதிக்கச் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதால், சாதி மறுப்புத் திருமணம் என்பதுகூட, ஒரு பெண், ஓர் ஆணின் (தந்தை) சாதியிலிருந்து விடுபட்டு, இன்னோர் ஆணின்(கணவன்) சாதிக்குள் நுழைவதாகத்தான உள்ளது என்று எழுதுகிறார். அதைப் படித்தபோது, அந்த உண்மை என்னைச் சட்டென்று பொட்டில் அறைந்தது.

சாதி மறுப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆண்களையும், ‘பெண்ணாக வாழ்ந்து பார்' என்கிறது அவ்வரி. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் எப்படி ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கிறது என்பதை இவ்வரி உணர்த்துகிறது. இரண்டு ஆதிக்கங்களும் கைகோத்துக் கொண்டு இந்திய சமூகத்தை ஆள்கின்றன. புற்றுநோயை விட ஊழல் கொடியது என்று அண்மையில் கூறியுள்ளார், இந்தியப் பிரதமர் மோடி. ஊழலை விடச் சாதி கொடியது. புற்றுநோய் தனி மனிதனைக் கொல்லும். ஊழல் ஒரு தேசத்தைக் கொல்லும். சாதி முறையோ, மானுட சமூகத்தின் மாண்பையே கொல்லும்!        (சந்திப்போம்) tamil.oneindia.com 22 08 2014