அறிந்தும் அறியாமலும்…(18) ‘மதம்’ கொண்ட மனிதர்கள்!

09 10 2017

அறிந்தும் அறியாமலும்…(18) ‘மதம்’ கொண்ட மனிதர்கள்! 

சுப. வீரபாண்டியன்

‘புற்று நோயை விட, லஞ்சத்தை விட, சாதி கொடியது என்று எழுதுகின்றீர்களே, மதம் பற்றிய உங்கள் பார்வை என்ன?’ என்று ஒரு நண்பர் வினா எழுப்பினார்.நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்னும் பொழுதே, மத நம்பிக்கையும் அற்றவன் என்பது தெளிவாகி விடுகின்றது. கடவுளும், மதமும் பிரிக்க இயலாவண்ணம் பிணைக்கப்பட்டுள்ளதென்பதை நாம் அறிவோம்.எனினும், சாதியையும், மதத்தையும் ஒரே தட்டில் வைத்து நாம் பார்க்க முடியாது. இரண்டிற்குமிடையில் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் உள்ளன. மதம் என்பது, அவரவர் நம்பிக்கையையும், சொந்த அனுபவத்தையும் சார்ந்தது. சில குறிப்பிட்ட வழிமுறைகளே தம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் மதங்களைத் தழுவுகின்றனர். சில வேளைகளில், அந்த நம்பிக்கை பொய்த்துப் போகுமாயின், வேறு மதத்திற்கு மாறிவிடுகின்றனர். ஆதலால்தான் மதம் தங்களின் நம்பிக்கை என்றும், வாழ்க்கை முறை என்றும் சிலர் கூறுகின்றனர்.

‘மதம் ஓர் அபின்’ என்று கூறும் கார்ல் மார்க்ஸ் கூட, அதே கட்டுரையில் (1843இல் ஹெகலின் கோட்பாடுகள் பற்றிய திறனாய்வு), “மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம்” என்றும் கூறியுள்ளார். இறுதியாக, அது “வெகுமக்களுக்கான போதை மருந்து” (‘Opium of the masses’) என்று குறிப்பிடுகின்றார்.போராடி, நியாயங்களைப் பெறக்கூடிய வலிமை இல்லாத ஏழை, எளிய மக்கள், கடவுளையும், மதத்தையும் நோக்கித் தள்ளப்படுகின்றனர். கடவுள்தான் நம்மைக் காப்பாற்றுவார் என எண்ணி ஆறுதல் அடைகின்றனர். அதுவே அவர்களின் போதைப் பொருளாகிறது. மதங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்துக் கொள்கின்றன என்பதே கார்ல் மார்க்சின் கருத்தாக உள்ளது.என்னதான் போதைப் பொருளாக இருந்தாலும், தெளிவு பெற்று அதனிடமிருந்து நம்மால் விடுபட முடியும். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறிக்கொள்ளவும் இயலும். ஆனால் சாதி அப்படிப்பட்டதன்று. சாதியை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. அது நம் மீது, நம் பிறப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்டது. நாம் விரும்பினாலும், முயன்றாலும் வேறு சாதிக்கு மாற முடியாது. நமக்கு மட்டுமின்றி, நம் தலைமுறைகளுக்கும் சாதி முத்திரை தொடர்கிறது. அந்த முத்திரை சிலருக்குச் சமூக அதிகாரத்தையும், மிகப் பலருக்குச் சமூக இழிவையும் பெற்றுத் தருகிறது. எனவே சாதி என்பது உலகின் கொடிய வடிவங்களில் ஒன்று.

இவ்வாறு எழுதுவதன் மூலம், மதத்திற்கு நாம் ஏற்பிசைவு எதனையும் வழங்கவில்லை. மதங்களின் பெயரால் நடைபெற்ற கொடிய போர்களையும், அப்போர்களில் மாண்டுபோன மக்களின் பெரும் எண்ணிக்கையையும் நாம் மறந்து விடவுமில்லை.உலகில், இரண்டு நாடுகளுக்கிடையிலே நடந்த போர்களில் இறந்தவர்களைக் -காட்டிலும், இரண்டு மதங்களுக்கு இடையிலான போர்களில்தாம் கூடுதல் மக்கள் இறந்து போயுள்ளனர். மதங்களுக்கு இடையிலான போர்களும், சண்டை, சச்சரவுகளும் ஓயவே இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இன்று வரை அந்தக் கலவரக் கூச்சல் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது & அண்மையில் சங்கர மட பக்தர்களுக்கும், ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கும் நடைபெற்ற மோதல் வரையில்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சிலுவைப் போர், வரலாற்றின் பக்கங்களைக் குருதியில் நனைக்கிறது. 1095இல் ஜெருசலேத்தில் தொடங்கிய முதல் சிலுவைப்போர், இடைவிட்டு, இடைவிட்டு 200 ஆண்டுகள் நடைபெற்றது. அந்த இரு நூற்றாண்டுகள், ஆறு மாபெரும் யுத்தங்களையும், ஏழெட்டுச் சிறிய போர்களையும் கண்டன.1099ஆம் ஆண்டு, 40 நாள்கள் முற்றுகை நடத்தி, சிலுவை வீரர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றினர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்னும் எந்த வேறுபாடும் இன்றி, இரண்டு நாள்கள் தொடர்ந்து படுகொலைகள் நடந்தன. பெரும்பான்மையான முஸ்லீம் சமயத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். முஸ்லீம்களுக்குத் துணை நின்ற யூதர்களும் படுகொலைக்கு ஆளாயினர்.வேறு வழியின்றி, கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்ற மயக்கத்தில், யூதக் கோயில் ஒன்றில் வழிபாடு செய்வதற்காகப் பெருந்திரளாக யூதர்கள் அங்கு கூடினர். சிலுவைப் போர் வீரர்கள், அந்த யூதக் கோயிலைச் சுற்றி வளைத்துத் தீ வைத்தனர். அங்கு கூடியிருந்த யூத மக்கள் அனைவரும், கொத்துக் கொத்தாகத் தீயில் வெந்து மடிந்தனர்.

இந்தக் கொடுமைகள் நடந்து ஏறத்தாழ ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், போப் தங்களின் மன்னிப்பைக் கோரினார்.ஒரே இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சன்னி, ஷியா பிரிவினரிடையே முப்பதாண்டுகள் தொடர்ந்து போர் நடந்தது. இன்றைக்கும் அந்தப் பகை முடிந்து போய்விடவில்லை.இந்துக்கள் என்று கூறிக்கொண்டவர்கள், சைவர்கள், வைணவர்கள் என்று பிரிந்து நின்று, ஒருவரையொருவர் கொன்றொழித்ததைத் தமிழகத்தின் இடைக்கால வரலாறு கூறுகின்றது. சைவர்களுக்குள்ளேயே, பார்ப்பனர் அல்லாதவர்கள்(வேளாளர்) கட்டிய சைவ மடங்கள், சைவத்தைத் தழுவிய சோழ மன்னர்களால் இடித்துத் தள்ளப்பட்டன. அந்நிகழ்வைக் ‘குகையிடிக் கலகம்’ எனப் பெயரிட்டு, வரலாற்றாசிரியர், கே.ஏ.நீலகண்ட (சாஸ்திரி) தன் சோழர் வரலாற்று நூலில் விரிவாக எழுதியுள்ளார். பார்ப்பனர் அல்லாதவர்களால் கட்டப்பட்ட மடம் ‘சூத்திர மடம்’ என்று கருதப்பட்டதே அதன் காரணம். வைணவர்களுக்குள் வடகலை, தென்கலைப் போராட்டம் பல ஆண்டுகள் நடைபெற்றது. யானைக்கு எந்த நாமம் போடுவது (வடகலையா, தென்கலையா) என்பதில் கூட மோதல் ஏற்பட்டு, நீதிமன்றம் வரையில் அந்த வழக்கு சென்றது.

சிலுவைப் போரிலும், பிறகு ஜெர்மனியில் இட்லர் ஆட்சியிலும் தாக்குண்ட யூதர்கள், இன்று பாலஸ்தீனத்தில் அரபு மக்களைத் தாக்கி அழித்துக் கொண்டிருப்பதை அன்றாடம் நாம் செய்தித் தாள்களில் பார்க்கின்றோம்.பொதுவுடைமைக் கோட்பாடுகளில் ஈர்ப்புக் கொண்டவர்கள், 1917ஆம் ஆண்டைக் கொண்டாடுவார்கள். ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்டு, புரட்சியாளர் இலெனின் தலைமையில் சோவியத் யூனியன் அமைந்த ஆண்டு அது என்பதால்!யூதர்களுக்கும் 1917 என்பது மகிழ்ச்சிகரமான ஆண்டுதான். அந்த ஆண்டில்தான் பல்ஃபோர் பிரகடனம் (Balfour declaration) வெளியானது. அந்த ஆண்டு நவம்பர் 2ஆம் நாள், இங்கிலாந்தின் வெளியுறவுச் செயலர் பல்ஃபோர் (Arthur James Balfour), பிரித்தானிய யூதர் குழுமத்தின் தலைவர் பேரானுக்கு (Baron Rothschid) எழுதிய கடிதத்தில்தான், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் இஸ்ரேல் நாட்டை உருவாக்க இங்கிலாந்தின் ஒப்புதலை வெளியிட்டிருந்தார். அந்தப் பிரகடனம்தான் இன்றுவரை பாலஸ்தீனத்தில் வாழும் அரபு மக்களின் வாழ்வை அலைக்கழித்துக் கொண்டுள்ளது.

மதத்தின் பெயரால் 1897ஆம் ஆண்டு, யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்து, ஜியோனிச இயக்கத்தைத் (Zionist Movement) தொடங்கினர். அன்றிலிருந்து அந்த முயற்சிகளில் இடைவிடாமல் ஈடுபட்டனர். தங்கள் முடிவில் எந்த நிலையிலும் மாறாது இருந்தனர்.1906ஆம் ஆண்டு, அதே பல்ஃபோர், ஜியோனிஸ்ட் இயக்கத் தலைவர் செய்ம் வெய்ஸ்மன்னைச் (Chaim Weizmann) சந்தித்து உரையாடினார்.“ஏன் நீங்கள் பாலஸ்தீனத்திலேயே குறியாக இருக்கின்றீர்கள். கிழக்கு ஆப்பிரிகாவில் எங்கள் காலனியாக உள்ள உகாண்டாவின் ஒரு பகுதியைத் தர முன்வருகிறோம்...ஏற்பீர்களா?” என்று பல்ஃபோர் கேட்டார்.

“லண்டனுக்குப் பதிலாக பாரீஸ் நகரத்தை நீங்கள் என்றேனும் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று திருப்பிக் கேட்டார் வெய்ஸ்மன். எங்களுக்கு ஏதேனும் ஓர் இடம் வேண்டும் என்பதில்லை, எங்களுக்கு எங்கள் தாய்நாடுதான் வேண்டும் என்ற பொருளில் அவ்வாறு கூறினார்.அது தங்களின் தாய்மண் என்பதற்கு அவர்கள் பக்கத்துச் சான்றுகளை அவர் கொடுத்தார். “உங்களின் லண்டன் மாநகரம், ‘வெள்ளக் காடாக’ (marsh) இருந்தபோதே, ஜெருசலேம் மாநகரம் எங்களுடையதாக இருந்தது” என்று வாதாடினார்.1948இல் இஸ்ரேல் என்னும் நாடு செயற்கையாக உருவாக்கப்பட்டபோது, வெய்ஸ்மன்தான், முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அவர்களின் உறுதி பாராட்டிற்குரியதுதான், ஆனால் மதத்தின் பெயராலும், ‘புனித மண்’ (Holy land) என்னும் பெயராலும் பாலஸ்தீனிய மக்களின் மீது அவர்கள் தொடுத்தபோரும், ஏற்படுத்திய பேரழிவுகளும் என்றைக்கும் ஏற்கத்தக்கன அல்ல.இஸ்ரேல் உருவாவதற்கு ஓராண்டிற்கு முன்புதான், பாகிஸ்தான் தனி நாடாகியது. இந்திய & பாகிஸ்தான் பிரிவின்போதும், இந்துக்கள் என்ற பெயரிலும், முஸ்லீம்கள் என்ற பெயரிலும் எத்தனை லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டனர்!இவ்வளவுக்கும் நேரு, ஜின்னா, டேவிட் பென் குரியன் (David Ben Gurion) மூவருமே மதவெறியர்கள் இல்லை. மதச்சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாகவே இருந்தனர். ஆனாலும் என்ன பயன்? மதவெறி என்னும் ஆற்றுவெள்ளம் அடித்துக் கொண்டுபோய்விட்டது & மனிதர்களையும், மனிதத்தையும்!
( சந்திப்போம் ) subavee-blog.2014/08/30