ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா தமிழர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளது

thinakural.lk 06 04 2014

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா தமிழர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளது

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் 2002ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்புடைய குற்றங்களை விசாரிக்கும்படி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்துக்கு கூறப்பட்டிருக்கிறதே தவிர, அதற்கு முன்னர் இடம்பெற்ற, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்கக் கூடியதல்ல என்று தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்கா இவ்வாறானதொரு தீர்மானத்தை கொண்டு வருவதன் நோக்கம் தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவல்ல.

மாறாக இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே என்றும் இந்தக் கருத்தையே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்களின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும், தமிழர்களுக்கு எதிராக இந்த நாட்டில் இடம்பெற்ற குற்றங்களை விசாரணை செய்து குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமாகவிருந்தால் நாம் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கே செல்ல வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு; 

கேள்வி: நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணமாக அமையக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா?

பதில்: நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நாம் இரண்டு கோணங்களில் பார்க்கிறோம். முதலாவது பொறுப்புக்கூறல் என்ற கோணத்தில், இரண்டாவது; இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் இத்தீர்மானம் அமைந்திருக்க வேண்டும். தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் என்ற கோணத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரித்த காலப்பகுதியான 2002 முதல் 2009 வரையுமான காலத்தில் மட்டும் நடந்த அநீதிகளை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் அலுவலகம், மனித உரிமை மீறல்களும் அது தொடர்புடைய குற்றங்களையும் விசாரிக்கும்படி கூறப்பட்டிருக்கிறது. இதில், 2002இற்கு முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் 2009இற்குப் பிற்பாடு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்தவித விசாரணைக்கும் இடமில்லை. எனவே, இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு இந்தத் தீர்மானம் எந்தவொரு விதத்திலும் அவற்றை நிறுத்துவதற்கு வழிவகுக்கப் போவதில்லை என்பதே எம்முடைய நிலைப்பாடு. - 

கேள்வி: நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழர்கள் எதிர்பார்த்திருந்த தீர்மானம் என்றும், இது தமிழ் மக்களுக்கான தீர்மானம் இல்லையெனவும் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இது தொடர்பில் உங்களுடைய கருத்து?

பதில்: நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றத்தையும் கொடுக்கப் போவதில்லை என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இந்தத் தீர்மானம் தமிழர் சம்பந்தப்பட்டது என்று கூறப்படுகிறதே ஒழிய, அதில் தமிழ் என்ற வார்த்தை எந்தவொரு இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. இனப்பிரச்சினையின் வடிவம் முற்றுமுழுதாக மாற்றப்பட்டு, சிறுபான்மை மதங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துகிற வகையிலேதான் இந்தப் பிரச்சினை திரிபுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, தமிழ் என்ற சொல்லே இல்லாத, நல்லிணக்கம் என்ற பெயரில் கூறப்பட்டிருக்கும் விடயம் எந்தத் தரப்பினருக்கிடையில் நல்லிணக்கம் வரவேண்டும் என தெளிவுபடுத்தாத ஒரு தீர்மானமாகவே இது இருக்கிறது. அதுமட்டுமல்ல, நவநீதம்பிள்ளையிடம் வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு மனித உரிமை மீறல்களை விசாரிப்பதும் அது சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரிப்பதும் மட்டுமே.

போர்க் காலகட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றன மிக மோசமான குற்றங்கள் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், மனித உரிமைகளை மட்டும் விசாரிக்கும்படி கேட்பது எம்மைப் பொறுத்தவரை மிகப்பெரியதொரு ஏமாற்றம். ஏனெனில், போர்க்குற்றம், மனிதநேயத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை போன்ற மூன்று குற்றங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களே ஒழிய, இவை மனிதஉரிமைச் சட்டங்கள் அல்ல. ஆகவே, மனிதாபிமானச் சட்டங்களான மேலே கூறிய மூன்று குற்றங்களையும் விசாரிக்கும்படி இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, நவநீதம்பிள்ளையின் அலுவலகத்துக்கு கொடுக்கப்படவில்லை. ஆகவே, எம்மைப் பொறுத்தவரை இந்தத் தீர்மானம் கடும் ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.

எதிர்காலத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை மீறி நவநீதம்பிள்ளை செயற்பட்டு, மனிதாபிமான சட்ட மீறல்களையும் சேர்த்து விசாரித்தால் அது ஒரு வரவேற்கத்தக்க விடயமாக இருக்கும். ஆனால், நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை பொறுத்தவரையில் நவநீதம்பிள்ளைக்கு அந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. -

கேள்வி: இந்தியாவின் பின்வாங்கலுக்கு என்ன காரணம்?

பதில்: இந்தியாவின் செயற்பாட்டில் மாற்றம் இருப்பதாகக் கூறமுடியாது. கடந்த இரு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்ததற்கு அவர்களுடைய நியாயத்தின் படி ஒரு உள்ளக விசாரணையூடாக இலங்கை அரசாங்கமே தாங்கள் செய்த ஒரு சில தவறுகளை விசாரித்து அவர்களாகவே தண்டனை வழங்க வேண்டும் என்ற விதத்திலேயே 2012, 2013 தீர்மானங்கள் வலியுறுத்தியிருந்தன. அதன் காரணத்தினால் இந்நிலை ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால், இம்முறைத் தீர்மானம் வெளித்தரப்பொன்றை விசாரிக்கும்படி அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி இந்தியா நடுநிலை வகித்திருக்கிறது.

மேலும், நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்பது தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பிரயோசனம் இல்லாத நிலையிலும், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அநியாயங்களை நிறுத்துவதற்கான ஒரு சமிக்ஞையாக இல்லாத நிலையிலுமே இருக்கிறது. ஆகவே, இவ்வாறானதொரு தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பதற்காக அவர்களை நாம் குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், இந்தியாவிற்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அதாவது, 1980களில் இருந்து தமிழர் விவகாரத்தில் தாங்களாக வந்து தலையிட்டு தங்களுடைய தேவைக்காக போராட்டத்தை ஆதரித்து அதனை வளர்த்து பல உயிர்களை இழக்க வைத்த இந்தியாவுக்கு தமிழ் மக்களினுடைய நலன்களைக் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

ஆகவே, அந்தப் பொறுப்பிலிருந்து இந்தத் தீர்மானத்தை பார்த்து அதிலுள்ள குறைபாடுகளை திருத்தி அதனைப் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையிலான மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பணியை இந்தியா செய்யாதிருந்து விட்டது. இதுதான் எங்களைப் பொறுத்தவரை ஏமாற்றமே தவிர, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது அல்ல. - 

கேள்வி: நீங்கள் ஜெனீவா சென்று பல நாட்டுத் தலைவர்களை சந்தித்திருந் தீர்கள். இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் அவர்களுடைய நிலைப்பாடு என்ன?

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க அவர்கள் உண்மையில் ஆவலாக உள்ளார்களா? பதில்: நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஜெனீவாவிலுள்ள நாடுகளை இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். தீர்மானத்தை ஆதரித்த கூடுதலான நாடுகள் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்குச் சார்ந்த வெளிவிவகாரக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடுகள். ஏனைய நாடுகள் அமெரிக்கா சார்ந்த மேற்கு நாடுகளுக்கு எதிரானவை. இவர்களில் தீர்மானத்திற்கு எதிராக இருந்தவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு என்னவெனில், அமெரிக்கா இவ்வாறானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவது இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே ஒழிய, உண்மையில் தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கல்ல.

அமெரிக்கா தன்னுடைய நலனைப் பேணுவதற்காகவே இத்தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாகவும் ஒரு நாட்டின் உள்ளக அரசியலில் தலையிடுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார்கள். எங்களைப் பொறுத்தவரையிலும், தமிழர்களுடைய விவகாரங்களைப் பயன்படுத்தி தமிழர்களுக்கு உண்மையில் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய வகையிலானதொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வராமல் இருப்பதற்கு வெறுமனே ராஜபக்ஷ அரசாங்கத்தை பிரச்சினையான அரசாக அமெரிக்கா கருதுவதனாலும், இலங்கை சீனாவின் போக்கில் இருப்பதனாலும் இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து இங்கு ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்குடன் தான் இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை நாம் பகிரங்கமாக முன்வைக்கிறோம்.

இந்த அரசியல்தான் சர்வதேச மட்டத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாம் சிக்க வைக்கப்பட்டு பாவிக்கப்படுகிறோம் என்பதே உண்மை. மேலும், தமிழர் தரப்பு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து பூகோள அரசியல் போட்டியில் நாங்களும் எங்களுடைய தேவைகளை அடையக்கூடிய வகையில் செயற்படவில்லை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கேள்வி: ஜெனீவாவில் நிறைவேறியுள்ள தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக அறிவித்திருக்கும் சூழ்நிலையில், அதன் நகர்வுகள் சாத்தியமாகுமா?

பதில்: நிச்சயமாக இல்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒரு நாடு தொடர்பாக நிறைவேறும் எந்தவொரு தீர்மானமும் குறித்த நாட்டின் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது. அந்த வகையில் இலங்கை அரசு ஒத்துழைக்காவிட்டால் தீர்மானத்தை பெரியளவில் நிறைவேற்றுவதில் மனித உரிமைகள் பேரவைக்கு பெரியளவிலான கஷ்டம் ஏற்படும்.

கேள்வி: இன்று பொதுவாக தமிழ்த்தலைவர்கள் அனைவரும் மீறப்பட்ட மனித உரிமைகள் விடயத்திலேயே கூடுதலாக அக்கறை செலுத்துவதாகவும், பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மக்களின் வாழ்வில் கூடுதலான அக்கறையை காட்டவில்லை என்றதொரு கருத்து நிலவுகிறது. இது தொடர்பில்...

பதில்: இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இந்தத் தீர்மானம் எந்த விதத்திலும் தீர்வாக அமையாது என்பதற்காகவே நாம் இது தொடர்பில் விமர்சிக்கிறோம். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு இடைநிலை நிர்வாகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த இடைநிலை நிர்வாகம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளடக்கப்பட வேண்டுமென்று நாம் கோரியிருந்ததுடன், இது விடயமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவிலுள்ள பிரதிநிதிகளுடன் பேசியிருந்தோம். இவ்வாறானதொரு இடைநிலை நிர்வாகம் உருவாகவேண்டும் என்று நாம் கோருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

முதலாவது பொறுப்புக்கூறல் தொடர்பானது. முழுமையாக ஒரு விசாரணை நடத்துவதற்கு கூடுதலான சாட்சியங்கள் இருப்பது தமிழர் தாயகத்தில் தான். அங்குதான் எங்களுடைய மக்கள் சாட்சியத்தோடு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பாதுகாப்பு தேவை. அந்தப் பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்படாவிட்டால் அந்தச் சாட்சியங்களை ஒரு போதும் பயன்படுத்த முடியாது.

இரண்டாவது, இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் அநீதிகளான காணிப்பறிப்பு, பொருளாதாரத்தை அழிக்கும் செயற்பாடுகள், சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகள், கலாசார அழிப்பு போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியாக இடைநிலை நிர்வாகம் அமைய வேண்டும். இவ்வாறானதொரு கட்டமைப்பை உருவாக்காமல் சாதகமானதொரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் நாம் தெளிவாக இருக்கிறோம். இதனை நான் பல இடத்தில் வலியுறுத்தியிருக்கிறேன். துரதிர்ஷ்ட வசமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இல்லாதவரைக்கும் நாம் கருத்தை மட்டும் கூறுபவர்களாக இருக்க முடியுமே தவிர, அதற்கு மேலதிகமாக எங்களால் எதையும் செய்ய முடியாத நிலைமையே தொடரும்.

கேள்வி: யுத்தத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நா.வினால் பெற்றுக் கொடுக்கக்கூடிய தீர்வு அல்லது நிவாரணம் இவ்வளவு தானா? ஐ.நா.வால் இவற்றைத் தாண்டிச் செயற்பட முடியுமா?

பதில்: தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, உண்மையானதொரு சர்வதேச விசாரணையை நடத்தி அதனூடாக குற்றவாளிகளை இனம்கண்டு அவர்களுக்கு தண்டனை விதித்து, நடந்த மிக மோசமான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டுமாகவிருந்தால் எம்மைப் பொறுத்தவரையில் நாம் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கு சென்றே ஆகவேண்டும். அவ்வாறானதொரு கட்டமைப்பை உருவாக்கி இலங்கை தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு பாதுகாப்புச் சபையின் அனுமதியில்லாமல் அதனை செய்ய முடியாது. எனவே, மேற்சொன்ன கோணத்தில் தான் நாம் இந்தத் தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளை பார்க்கின்றோம்.

ஏனெனில், அப்படியானதொரு நிகழ்ச்சித் திட்டத்திற்கு இந்தத் தீர்மானம் எவ்விதத்திலும் எங்களுக்கு திசைகாட்டவில்லை. ஆகவே, நிறைவேறியுள்ள தீர்மானத்தின்படி இன்னும் ஒரு வருட காலத்திற்குள் இன்னுமொரு அறிக்கையைச் சமர்ப்பிப்பதாக இருக்குமே தவிர, எங்களுடைய மக்கள் எதிர்பார்க்கின்ற விசாரணை அதாவது குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவது நடைபெறப் போவதில்லை. அது எதிர்வரும் ஒருவருட காலத்தை தாண்டி நடக்கலாம். அதற்கு நாம் இன்றே அவ்வாறானதொரு நிகழ்ச்சி நிரலை கொண்டு வருவதற்கான ஆயத்தங்களை இப்பொழுதே ஆரம்பிக்கத் தொடங்க வேண்டும். ஆகவே, எதிர்வரும் ஒரு வருடத்திற்குள் நாம் ஒரு அறிக்கையை மாத்திரமே எதிர்பார்க்கலாம். அதன் பின்புதான் அதனைத் தாண்டி செல்வதற்கான நிகழ்ச்சி நிரலை நாம் தொடங்க வேண்டும். -