அடுத்தது என்ன?

thinakkural editorial 07 04 2014

அடுத்தது என்ன?

இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துவது தொடர்பாக அழைப்பு விடுத்து கடந்த மாதம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உறுதியாக நிராகரித்திருக்கும் அரசாங்கம், இந்த விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதற்கு கொழும்பு பொறுப்பாளியாக இருக்க மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. எந்தவொரு சர்வதேச விசாரணைப் பொறிமுறையையும் கடுமையாக எதிர்ப்பதென்பது அரசாங்கத்தின் தீர்க்கமான நிலைப்பாடாக காணப்படுகின்றது. ஆனால் அடுத்த மாத நடுப்பகுதியில் சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதாகவும் நிபுணர்கள் குழுவைக் கொண்டதாக இந்தப் பொறிமுறையின் கட்டமைப்பு அமையுமெனவும் ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

சர்வதேச ரீதியான பொறிமுறையானது அநீதியானதெனவும் பாசாங்குத்தனமான தெனவும் தேசத்தின் சுயமரியாதையை கேள்விக்குறியாக்குவதெனவும் அரசாங்கம் மட்டுமன்றி தென்னிலங்கையிலுள்ள பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அதேசமயம் ஜெனீவாத் தீர்மானம் அதிகளவுக்கு தலையிடும் தன்மை கொண்டதாக இருப்பதாகத் தெரிவித்து தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருக்கின்றமை இலங்கைக்கு இந்த விடயத்தில் இந்தியாவின் உறுதியான ஆதரவு கிடைத்திருப்பதற்கான சமிக்ஞையாக மட்டுமன்றி வலுவூட்டுவதாகவும் காணப்படுகின்றது. ஜெனீவத் தீர்மானத்தை பேரவையிலுள்ள 47 நாடுகளில் 23 நாடுகளே ஆதரித்திருப்பதையும் 24 நாடுகள் எதிர்த்தும் புறக்கணித்தும் இருப்பதை சுட்டிக்காட்டும் அரச தரப்பு அரசியல்வாதிகள் , இதனால் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தார்மீக ரீதியான கடப்பாடுகூட இல்லையென்று கூறுகின்றனர்.

ஆனால் வட, கிழக்கு தமிழ் மக்களை அதிகளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதும் வட மாகாண சபை நிர்வாகத்தை தன்வசம் கொண்டிருப்பதுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச பொறிமுறையொன்றுக்கு ஆதரவு தெரிவித்து வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில் ஜெனீவாத் தீர்மானத்தையும் வரவேற்கின்றது. ஐ.நா. வில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் அங்கீகாரத்துடனும் ஒப்புதலுடனும் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டு விதிமுறைகளுக்கு அமையவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்ற நிலையில் அத்தீர்மானம் இறைமையை மீறும் வேண்டப்படாத தலையீடு என்று அரசாங்கம் மட்டுமன்றி இந்தியாவும் அபிப்பிராயம் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தது என்ன என்பதே முக்கியமான கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆனால் சர்வதேச மட்டத்திலான இந்த அழுத்தங்களிலிருந்தும் விடுபடுவதற்கு தெற்காசியாவின் பலம் பொருந்தியதும் இலங்கையுடன் ஆயிரமாயிரமாண்டுகால இன, மத, கலாசார, பண்பாட்டு பிணைப்புகளைக் கொண்டதுமான இந்தியாவும் இலங்கைக்கு அதிகளவில் பொருளாதார உதவியை வழங்கிவரும் நாடான ஜப்பானினதும் ஆலோசனைகளை அதிகளவுக்கு உள்வாங்கிக் கொள்வது ஆரோக்கியமான விடயமாக அமையக்கூடும். நம்பகரமான தேசியப்பொறிமுறையொன்றை ஏற்படுத்தி அதிகாரப் பகிர்வுடன் தொடர்புபட்ட விவகாரங்களுக்கு துரிதமாக தீர்வு காணுமாறு இந்தியா வலியுறுத்தி வருகின்றது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்திலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் அதனை அடிப்படையாகக் கொண்டு அதற்கும் அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வு பொறிமுறையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துமாறும் இந்தியா திரும்பத்திரும்ப கூறிவருவதுடன் இந்த விடயம் கொழும்பின் உறுதிமொழி என்றும் அடிக்கடி நினைவூட்டியும் வருகின்றது.

ஜப்பானும் நல்லிணக்கம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. ஆயினும் இதற்கான திசையில் அரசாங்கம் பயணிப்பதாக தென்படவில்லை. மாறாக மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை பறிப்பதாகவே அரசின் சகல நடவடிக்கைகளும் இடம் பெறுதாக வட மாகாண சபை முதலமைச்சர் உட்பட தமிழ்க் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் விசனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயல்பு வாழ்வுக்காகவும் அரசியல் தீர்வுக்காகவும் ஏங்கியவாறு தொடர்ந்தும் துன்பத்துடனும் அவநம்பிக்கையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் வட , கிழக்கு தமிழ் மக்களுக்கு அடுத்தது என்ன? என்பதற்கு காலம் தான் பதிலைத்தர வேண்டும். -