திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -2

20 11 2017

திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -2

எழுத்தாளர்: வாலாசா வல்லவன்

தமிழ் உள்ளிட்ட திராவிடப் மொழிகளைப் பயிற்றுவிப்பதற்குச் சென்னைப் பல்கலை ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.1925 அக்டோபரில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கீழ்த்திசை மொழிகளுக்கான மய்யம் அமைப்பதில் நிதி ஒதுக்குவது குறித்த விவாதத்தில் திராவிட மொழிகளுக்கு எதிராகச் சமஸ்கிருதம் என்ற கருத்து வெளிப்படையாகப் பேசப்பட்டது.திராவிட மொழிகளைப் பட்டினி போட்டுவிட்டு, சமஸ்கிருதத்துக்கு விருந்து வைப்பது போல இருக்கிறது என்று புர்ரா சத்திய நாராயணா தம் கருத்தைத் தெரிவித்தார். ஏ.இராமசாமி முதலியார் இந்தக் குழுவில் திராவிட மொழிகளுக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று கண்டித்தார். திராவிட மொழிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதி ஆதார ஒதுக்கீடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்றார். டி.வி.சேசகிரி அய்யர் சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்று பேசினார். ஆகவே அதற்குத்தான் அதிக நிதி வேண்டும் என்று கூறினார். இதை வன்மையாக எஸ்.முத்தையா முதலியார் கண்டித்தார். “திராவிட மொழிகள் வட மொழியிலிருந்து கிளைத்தவை அல்ல. அவை வேறுபட்ட இன்னொரு தனிமொழிக் குழுவைச் சேர்ந்தவை” என்று சுட்டிக்காட்டினார். (நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும், திராவிடத் தேசியமும், பக்.161, 162).

சென்னை மாகாண அரசு, பல்கலைக்கழக ஆட்சிக் குழு பரிந்துரைத்த அதே வடிவத்தில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக, திராவிட மொழிகளுக்கான ஆய்வு மையமாக மட்டும் அமைக்கும்படி யோசனை கூறியது. அதற்கு மட்டும் மூன்றில் இரு பங்கு நிதி அளிக்க ஒப்புக்கொண்டது.ஒரு பல்கலைக்கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் கூட அரசு தலையிடுகிறது என்பது போன்ற அநீதி வேறெதுவும் இல்லை என்றும் எஸ்.சத்தியமூர்த்தி கூறினார். மேலும் அவர் “சமஸ்கிருதப் பேராசிரியர்களைப் பணி அமர்த்துவதற்கு அரசு நிதி ஆதாரம் வழங்கவில்லையானால், பல்கலைக்கழக நிதிப் பயன்பாட்டில் கூட அரசு தலையிடுகிறது என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டுவேன்" என்று ஆவேசமாகப் பேசினார்.நீதிக்கட்சியின் ஆதரவாளரான டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார், திராவிட மொழிகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதாலேயே சமஸ்கிருதத்தை அரசு முற்றிலுமாக ஒதுக்குகிறது என்று பொருள் கொள்ளக்கூடாது என்றார். இப்படிப் பார்ப்பனர்களுடன் நீண்ட போர் நடத்திய பிறகே சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1926-1927 கீழையியல் மொழிகள் ஆய்வு மையத்தை நிறுவ முடிந்தது.

இன்னொரு பெரிய கொடுமையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வந்தது. மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் சமஸ்கிருத்தைப் படித்திருக்க வேண்டும். ஏன் தமிழ் வித்துவான் (புலவர்) படிக்க வேண்டும் என்றாலும் கூட, கண்டிப்பாக சமஸ்கிருதப் பாடத்தில் தேர்ச்சி பெற்றால்தான் வித்துவான் பட்டமே பெறமுடியும். இதற்காக செனட்டில் நீண்ட தகராறுகள் நடைபெற்று வந்தன. கடைசியாக வேறு வழியின்றி அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர் இது திராவிட அரசு, திராவிட மொழிகளுக்கு மட்டும் தான் அரசின் பணத்தைச் செலவழிக்கும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததோடு அவ்வாறே அரசாணையும் பிறப்பித்தார் (அரசாணை எண்.2123 சட்டம் (கல்வி) நாள் 8.12.1925). அதன் பிறகுதான் பார்ப்பனர்கள் சற்று இறங்கி வந்து வித்துவான் படிப்பிற்கு இனி சமஸ்கிருதம் தேவையில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். தமிழ்மொழி மட்டுமே படித்து வித்துவான் ஆகும் முறை 1927-28இல் தான் நடைமுறைக்கு வந்தது.

கோயில்களில் வரையறையின்றி பார்ப்பனர்கள் கொள்ளையடித்து வந்ததைத் தடுப்பதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை நீதிக்கட்சி அரசு கொண்டு வந்தது. 1922 டிசம்பரில் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவுக்குக் கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். மீண்டும் இரண்டாவது முறை 1923 கடைசியில் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசு மீண்டும் அம்மசோதாவைச் சட்டமன்றத்தில் வைத்தது. அப்போது எஸ்.சத்தியமூர்த்தி கடுமையாக அதை எதிர்த்தார். அய்ந்நூறு திருத்தங்களுக்குமேல் அவர் மட்டுமே கொடுத்தார். மொத்தம் எண்ணூறு திருத்தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டன.

22.2.1922 அன்று சட்டப்பேரவையில் இதன் மீது உரையாற்றிய டாக்டர் சி.நடேசமுதலியார் “செத்துப் போய்விட்ட மொழியான சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்குத் தர்ம ஸ்தாபனங்களின் சொத்துக்கள் தண்ணீரெனச் செலவழிக்கப்பட்டது. அன்றும், இன்றும், என்றும் இயங்கிய, இயங்குகிற, இயங்கும் கலைச் செல்வமாம் தமிழ் இலக்கியங்களைப் படுபாதாளத்தில் புதைத்தனர்” என்று கூறினார்.இச்சட்டம் 1925இல் நிறைவேறியது. கோவில்களில் மீதமாகும் பணத்தைக் கொண்டு கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்த முடிவு செய்தனர். கோவில் சொத்து வரவு-செலவு கணக்குகள் அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. மக்களிடையே நிலவி வந்த சாதி வேற்றுமைகளைக் களைவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டது.

ஆதிதிராவிட மாணவர்களைப் பொதுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண்.87, கல்வி, நாள் 6.1.1923.)ஆதிதிராவிட மாணவர்களைப் பள்ளிகளில் சேர்க்காவிட்டால் அரசு மானியம் தராது. அந்தக் காலத்தில் வட்டாரக் கழகம், மாவட்டக் கழகம், நகராட்சி இவைகள் தாம் கல்வி நிறுவனங்களை அரசிடம் மானியம் பெற்று நடத்தி வந்தன. சில தனி நபர்களும் அரசு மானியம் பெற்றுப் பள்ளிகளை நடத்திவந்தனர். இவர்கள் எல்லோருக்குமாகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண்.88, கல்வி, நாள் 16.1.1923)

திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆதிதிராவிடப் பிள்ளைகளை ஒரு பள்ளியில் தனிக் கட்டடத்தில் வைத்துப் பாடம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். அரசு இதை மறுத்துவிட்டது. எல்லா மாணவர்களையும் ஒன்றாகத் தான் ஒரே வகுப்பில் தான் அமர வைத்துப் பாடம் நடத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது. (அரசாணை எண்.கல்வி 205, நாள் 11.2.1924)20.1.1922 அன்று சட்டமன்றத்தில் எம்.சி. இராசா அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு இனி தாழ்த்தப்பட்டவர்களைப் பறையன், பள்ளன் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சில பள்ளிக் கட்டிடங்கள் கோயில்களின் அருகில் இருந்ததால் அவை ஆதித்திராவிட மாணவர்கள் அணுக முடியாமலிருந்தது. ஆகவே புதிய பள்ளிக் கட்டடங்களைக் கட்டும் பொழுது அவை எல்லா மக்களும் அணுகக் கூடிய இடத்தில் இருக்கின்றனவா என்பதைக் கருத்தில் கொண்டு தொடங்க வேண்டும் என அரசாணை பிறப்பித்தது.

அரசு ஆணை எண்.2333, நாள் 27.11.1922 இன்படி, இந்தியாவிலேயே முதன்முதலாக ஆதி திராவிட மாணவர்களுக்குத் தங்கும் விடுதி 1923இல் தொடங்கப்பட்டது.ஆதிதிராவிட மக்கள் பொது இடங்களில் புழங்குவதற்கு இருந்த தொல்லைகளை நீக்க 22.8.1924இல் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அரசு கெசட் வெளியிட்டது. அரசாணை எண்.2563, நாள் 24.10.1923, பொதுச்சாலைகளில், பொதுக் கிணறுகளில், பொது இடங்களில், சந்தை, அரசு அலுவலகங்கள் இருந்த தடை நீக்கப்பட்டது. (எல்.&எம். 2666, நாள் 25.8.1924.)

ஆதிதிராவிடத் தலைவர் வீரய்யன் அவர்கள் 24.9.1925 அன்று உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவேண்டுமென்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். “பொதுச்சாலைகள், பொதுக்குளங்கள், கிணறுகள், மார்க்கெட், சத்திரம் சாவடி போன்ற பொது இடங்களில் செல்லும் ஆதிதிராவிடர்களைத் தடுப்பவர்களுக்கு ரூ.100 தண்டம் விதிக்க வேண்டும்" என்பதே அத்தீர்மானம். அதை அரசு ஏற்றுக்கொண்டு அரசாணையும் பிறப்பித்தது. 28.9.1926 இத்தீர்மானத்தைப் பெரியார் அவர்களும் வரவேற்று குடிஅரசு இதழில் எழுதியுள்ளார் (குடிஅரசு 5.9.1926).ஆதிதிராவிட மக்களுக்கு, பஞ்சமி நிலங்கள் 1920-21 வரை வழங்கப்பட்டவை 19,251 ஏக்கர்கள் ஆகும். 1931 மார்ச் முடிய நீதிக்கட்சி ஆட்சி அமைந்தபிறகு வழங்கப்பட்டவை 3,42,611 ஏக்கர்கள் ஆகும். இது டி.ஜி. போக் ஐ.சி.எஸ். என்ற புள்ளியல் துறை அரசு செயலர் கொடுத்த கணக்காகும். (T.G.Boag ICS, Madras Presidency 1881-1931, pp 132).

1935 ஜூலை வரையில் 4,40,000 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது (Justice, 19th July 1935). நீதிக்கட்சி அரசு, பொதுக் கல்விக்கும் பெண் கல்விக்கும் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளது. மக்கள் தொகை 500 பேர் உள்ள பகுதிக்கு ஒரு தொடக்கப் பள்ளி என்ற கொள்கை வகுக்கப்பட்டது. 1923இல் இலவசக் கட்டாயத் தொடக்கக் கல்வி முறை அமுலுக்கு வந்தது (அரசாணை எண்.376, கல்வி நாள் 9.3.1923). 28.7.1929 அன்று சட்டசபையில் கே.வி.சாமி என்ற உறுப்பினர் 1921 முதல் 1928 வரை இந்த அரசு புதியதாகத் தொடங்கிய பள்ளிகள் எத்தனை என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அரசின் பதிலில் 19,095 என்று கூறப்பட்டது. காமராசரின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 10,000 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. நீதிக்கட்சியின் முதல் 9 ஆண்டுகளில் புதியதாக 19,095 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபோது சென்னை மாகாணத்தில் 35,895 தொடக்கப் பள்ளிகள் இருந்தன. 1931 மார்ச் முடிய அவை 56,993 பள்ளிகளாக உயர்ந்தன. இது டி.ஜி.போக் என்ற ஆங்கில அரசுச் செயலர் அளித்துள்ள கணக்காகும்.
ஆதிதிராவிடர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை எல்லா உள்ளாட்சி நிறுவனங்களிலும் நியமனம் செய்தது நீதிக்கட்சி ஆட்சி மட்டுமே.தாய்மொழிகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் ஆக்கமளிக்கவில்லை என்ற நிலை உருவானபோது தான் இந்து அறநிலையச் சட்டத்தின்படி 50 விழுக்காட்டுப் பணத்தைத் திருப்பதி கோவிலும், மீதம் 50 விழுக்காட்டுப் பணத்தைச் சென்னை மாகாண அரசும் செலவு செய்து ஆந்திராப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

தமிழ்மொழிக்குத் தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற குரலும் தமிழகத்தில் ஓங்கி ஒலித்தது. தமிழ் மொழிக்கு ஓரு தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று நீதிக்கட்சியின் அமைச்சர் டி.என்.சிவஞானம் பிள்ளை திருச்சியில் நடைபெற்ற தமிழ்ப் புலவர்கள் மாநாட்டில் பேசினார். (குடிஅரசு 10.5.1925)நீதிக்கட்சி அரசு சேதுபதி மன்னர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. 1926இல் நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியுற்று சுப்பராயன் தலைமையில் சுயேட்சை அமைச்சரவை அமைந்தது. தமிழ்ப் பல்கலைக்கு சைவ மடங்கள் 50 விழுக்காடு நிதி அளிக்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புப் பலனற்றதாகிவிட்டது.

1920 முதல் சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரி நடத்தி வந்த ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் பல்கலைக்கழகம் தொடங்க ரூ.20 இலட்சம் கொடுக்க 1928இல் முன்வந்தார். அன்றைய அரசு தமிழ்மொழி மேம்பாடு, தமிழ் கலை இலக்கியம் வளர்ச்சிக்கு இந்தப் பல்கலைக்கழகம் பாடுபட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 27 இலட்சம் நிதி அளித்தது. மேலும் 1 ஆண்டுக்கு 1.5 இலட்சம் வீதம் தொடர் மானியமும் அளித்து வந்தது. இதனால்தான் 1929இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரி நிறுவப்பட்டது.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவும், அதன் செனட் கட்டடத்தையும் திறந்து வைத்துப் பேசிய அன்றைய ஆளுநர் “இம்மாகாணத்தில் வசிக்கும் 180 இலட்சம் மக்கள் தமிழ் கலைகளையும், தமிழ் இலக்கியங்களையும் ஆய்ந்து கற்று உலகுக்கு அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் ஒரு மத்திய பல்கலைக்கழகம் வேண்டும் என்று விரும்பினார்கள். அதன் விளைவே இந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகும்" என்று கூறினார். (திராவிடன் 30.10.1931).

அதற்குமுன் சமஸ்கிருத கல்லூரி நிறுவி தீட்சிதர்களையே முதல்வராகக் கொண்டிருந்த கல்லூரியைத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சித்தவர்கள் அன்றைய ஆட்சியாளர் ஆவர்.தென் தமிழகப் பகுதி மக்களுக்கு அந்தப் பல்கலைக்கழகம் மிகப் பெரிய அளவில் பயன்பட்டது.நீதிக்கட்சியின் திராவிடன் ஏடு ஒரு கேடயம் போல் இருந்து தமிழ் மக்களைக் காத்து வந்தது. 1931 சூன் 9ஆம் திராவிடன் தலையங்கத்தில் இந்தி மொழியால் வரும் கேடுகளைப் பற்றி எழுதியது.1931 ஆகசுட்டு 31 திராவிடனில் இந்தி, இந்தியாவின் பொது மொழியா என்ற தலையங்கம் எழுதப்பட்டது.

1931 சூன் 20இல் தமிழே உன் நிலை என்ன? என்ற அருமையான தலையங்கம் எழுதப்பட்டது.
1931 சூலை 27இல் இந்தியாவின் பொது மொழி பாஷை எது? என்ற தலையங்கம் எழுதப்பட்டது.
1931 மே 12 தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற தலையங்கம் எழுதப்பட்டது.
1924இல் கல்வி மாநாட்டில் பேசிய சத்தியமூர்த்தி, இந்தியாவினுடைய பொது மொழி பற்றிய கொள்கையில் உணர்ச்சிபூர்வமாக நான் என்னை இணைத்துக் கொள்கிறேன். வயதானவர் இந்தியை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் எல்லா ஆரம்பப் பள்ளிகளிலும் இந்தி இரண்டாவது மொழியாகக் கட்டாயப் பாடமாகச் சொல்லிக் கொடுக்கப்படுமானால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவினுடைய பொது மொழியாக இந்தியை ஆக்கிக் கொள்ள முடியும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்று கூறினார். (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.314).

1924 முதல் அகில இந்திய காங்கிரசு மாநாடுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது போல அகில இந்திய இந்தி மாநாடும் நடைபெற்று வந்தது (கு. நம்பி ஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசி யமும், பக்.316).இந்தித் தேர்வில் ஒருவர் வெற்றியடைய முடியவில்லை என்றால் அவரைப் படித்தவராகவே கருத முடியாது என்று சேலம் விஜயராகவாச்சாரியார் பேசினார். இந்து ஏடும் இதை ஆதரித்து எழுதியது (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.317).

9.8.1932 நாளிட்ட திராவிடன் ஏடு துறையூரில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் க. நமச்சிவாய முதலியார் ஆற்றிய தலைமை உரையை முழுமையாக வெளியிட்டிருந்தது.தமிழ்வழிக் கல்வியே சிறந்தது என்ற தீர்மானம் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. சிறந்த அறிவியல் நூல்களை எழுதுபவர்களுக்குப் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- தொடரும்   keetru.com 13 09  2012