அறிந்தும் அறியாமலும்…(23) போர்க்களம் ஓய்ந்தது - பகை ஓயவில்லை!

14 11 2017

அறிந்தும் அறியாமலும்…(23) போர்க்களம் ஓய்ந்தது - பகை ஓயவில்லை!

உலகம் ஒற்றைத் தலைமையின் கீழ் வந்துவிட்ட பிறகும், போர்கள் ஓய்ந்துவிடவில்லை. தொடர்ந்து நடைபெற்றன. இன்றும் நடந்துகொண்டுதான் உள்ளன. அவற்றுள் வளைகுடாப் போர்களையும், ஆப்கன் மீதான அமெரிக்கப் போரையும் தனித்துக் குறிப்பிட வேண்டும். பல்வேறு நாடுகளில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களும் நடைபெற்றன. சில தேசிய இனங்கள் வெற்றி பெற்றுத் தனி நாடுகளை அமைத்துக் கொண்டன. ஈழம் உள்ளிட்ட பல களங்களில், மக்கள் படுகொலைகளுக்கு உள்ளாகி மாண்டு மடிந்தனர்.ஆயுதங்களைக் கொண்டு, களங்களில் நடைபெற்ற போர்கள் ஒருபுறமிருக்க, ‘கத்தியின்றி ரத்தமின்றிப் பொருளாதாரப் போர்கள் மறுபுறம் நடந்துகொணடே உள்ளன-. அறிவியலின் ஈடு இணையற்ற வளர்ச்சி உலகிற்குப் பல நன்மைகளையும், சில தீமைகளையும் கொண்டு வந்து சேர்த்தது. தொலைத் தொடர்பு மற்றும் செய்திப் பரிமாற்ற வளர்ச்சி எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு உயர்ந்தது. அதன் விளைவாக ஊடகங்களின் மறைமுக ஆட்சி உலகில் தொடங்கிய என்றும் கூறலாம்.மேலே கூறப்பட்டுள்ளவைகளைச் சற்று விளக்கமாகப் பார்வையிட்டால், இத்தொடரின் வரலாற்றுப் பகுதி ஒரு நிறைவுக்கு வரும்.

சோவியத் சிதறுண்ட ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே முதல் வளைகுடாப் போர் தொடங்கிவிட்டது. 1980களில் ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் நடைபெற்ற ஈரான் & ஈராக் பெரும்போர் அப்போதுதான் ஓய்ந்திருந்தது. போரில் ஈராக் வெற்றி பெற்றது போல் தோன்றினாலும், இரு நாடுகளும் மிகக் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாயின.ஈராக்கின் அதிபராக அன்று ஆட்சி நடத்திய சதாம் உசேன், பிராந்திய வல்லரசாகத் தன் நாட்டினை ஆக்க முயல்கின்றார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தது. 1950களின் இறுதியில் எகிப்து அதிபர் நாசர் மீதும் அதே விமர்சனம் வைக்கப்பட்டதை நாம் அறிவோம். சதாம் உசேனைப் பொறுத்தளவில், “மத அடிப்படைவாதத்திற்கு எதிராகப் போராடி, அராபிய உலகைக் காப்பாற்றுவது என்பதுதான் எங்கள் நோக்கம்” என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டது. ஆதலால், சவூதி, குவைத் உட்பட்ட வளைகுடா நாடுகள், போர்ச் செலவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், ஈராக்கிற்குக் கொடுத்துள்ள கடன்களை அவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சதாம் கேட்டுக்கொண்டார். அமெரிக்க அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று திரள வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக இருந்தது.

இஸ்ரேல் என்னும் நாட்டை உருவாக்கி, மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியைக் குலைத்ததும், அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளை கொள்வதும் அமெரிக்காதானே எனக் கேட்டு ஆர்ப்பரித்தார். ஈராக் & ஈரான் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும், வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் வலம் வருவது ஏன் என்று உரத்துக் குரல் எழுப்பினார். இவை எல்லாவற்றையும் தாண்டி, மேலைநாட்டு வங்கிகளில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் அரபு மக்களின் நிதியை, அரசியல் நோக்கில் பயன்படுத்த வேண்டும் என்றார். நம்முடைய பணம் அவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் போது, அவர்களுடைய அரசியலை நமக்குப் பயன்படுத்திக் கொள்வது நியாயம்தானே என்று கேட்டார். அமெரிக்கா நம் அரசியலுக்கு இணங்கவில்லை என்றால், அமெரிக்கா மற்றும் மேலைநாட்டு வங்கிகளில் உள்ள நம் பணத்தை எடுத்து, சோவியத் அல்லது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யுங்கள் என்றார்.

சதாம் உசேன் பற்றிய மதிப்பீடுகளை இங்கு நாம் நோக்க வேண்டியுள்ளது. அவர் ஒன்றும் அரபு நாடுகளுக்கான விடுதலைப் போராளி இல்லை. இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரிலும் பெரும்பங்கைச் செலுத்தியவர் இல்லை. தன் சொந்த நாட்டு மக்களான குர்து தேசிய இன மக்களையே கொடுமையாக ஒடுக்கியவர்தான் அவர். பல்வேறு பொருளாதார இழப்புகளில் ஈராக் சிக்கித் தவித்த வேளையிலும், அவரும், அவரைச் சேர்ந்தவர்களும் ஆடம்பரமான வாழ்க்கை முறையில்தான் மூழ்கிக் கிடந்தனர். இவையெல்லாம் அவர் மீதான மறுக்க முடியாத விமர்சனங்களே! இருப்பினும், சோவியத் சிதறுண்ட பிறகு, அமெரிக்காவை எதிர்த்து இப்படி ஒரு கருத்தை வெளியிடுவதற்கு மிகப் பெரிய நெஞ்சுரம் தேவை. அது சதாம் உசேனிடம் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. அதற்காக அவர் கொடுத்த விலையும் மிகப் பெரியது.அமெரிக்கா தன் பொறுமையை இழந்தது. சதாம் உசேனை வீழ்த்துவதற்குக் காலம் பார்த்துக் காத்திருந்தது. அப்போது குவைத் நாட்டிற்குள் ஈராக் படை ஊடுருவியது, அமெரிக்காவிற்கு மிக நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

1990 ஜுலை மாத இறுதியில் ஈராக்கின் 30 ஆயிரம் துருப்புகள் குவைத்தை நோக்கி நகர்ந்தன. ஈராக்கின் அச்சுறுத்தலுக்குக் குவைத் பணியாது என்றார் அந்நாட்டின் அதிபர். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், இஸ்ரேலுடனும் கைகோத்துக் கொண்டு, அரபு நாடுகளுக்குக் குவைத் துரோகம் இழைக்கிறது என்னும் சதாமின் குற்றச்சாட்டைக் குவைத் மறுத்தது. ஆனால், குவைத் அமெரிக்காவுடன் இணக்கமாக இருந்ததை உலகம் அறியும். எகிப்து நாட்டு அதிபரும், ஜோர்டான் மன்னரும் கடைசி நேரத்தில் எடுத்த சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன.1990 ஆகஸ்ட் 2 குவைத்தின் மீது ஈராக் தன் முற்றுகையைத் தொடங்கியது. தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் குவைத் திணறியது. இனிமேல் குவைத், தன் நாட்டின் 19ஆவது மாநிலம் என்று அறிவித்தார் சதாம்.

அமெரிக்காவின் குரல் ஐ.நா.வில் ஒலித்தது. மேலை நாடுகள் அதனை ஆதரித்தன.
ஐ.நா. அவையின் தீர்மானம் கண்டும் அஞ்சாமல் விடையளித்தார் சதாம். தன் தீர்மானங்களின் மூலம், இஸ்ரேலியர்களின் அட்டூழியங்களை நிறுத்தி விட்டதா ஐ.நா. என்று கேட்டார். பாலஸ்தீனத்தை விட்டு இஸ்ரேல் வெளியேறும் நாளில், குவைத்தை விட்டுத் தங்கள் படையும் வெளியேறும் என்று அறிவித்தார்.போர் மேகங்கள் சூழ்ந்தன. ‘பாலைவனப் புயல்’ என்று பெயரிட்டுத் தன் போர்ப் பிரகடனத்தை அறிவித்தார் அன்றைய அமெரிக்க அதிபர் (சீனியர்) ஜார்ஜ் புஷ்.1991 ஜனவரி 16 அன்று, ஈராக் படைகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா. சோவியத் அதிபர் கோர்ப்பசேவ் நடத்திய சமாதான முயற்சிகள் எடுபடவில்லை. மிகக் கடுமையான போர். குவைத்தை விட்டு, ஈராக் படைகள் பின்வாங்கின. முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது குவைத்.போர்க்களம் ஓய்ந்தது. ஆனால் பகை ஓயவில்லை. தந்தை புஷ் தொடங்கிய போரை, அவரது மகன் புஷ் 2003இல் முடித்து வைத்தார்.

இரண்டாவது வளைகுடாப் போர், 2003இல் தொடங்கியது. ஈராக்கின் பெரும்பகுதியை அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது. 85,000 பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதும், அமெரிக்காவும், மேலை நாடுகளும் போரை நிறுத்தவில்லை. ‘பேரழிவு ஆயுதங்களை’த் தலைமறைவாகிவிட்ட சதாம் உசேன் எங்கோ மறைத்து வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டின. சதாமையும், அந்தப் ‘பேரழிவு ஆயுதங்களையும்’ தேடத் தொடங்கின.தேடலில் பலர் கொல்லப்பட்டனர் - அவருடைய இரண்டு மகன்கள் உள்பட. அவருடைய 14 வயதுப் பேரன் முஸ்தபாவும் சுட்டுக் கொல்லப்பட்டான். எவ்வளவு பெரிய நாடு அமெரிக்கா... எவ்வளவு சிறிய பையனைக் கொன்றுள்ளது என்று எண்ணிப் பார்த்தால் வேதனையாக உள்ளது. 2003இல் ஈராக்கில் முஸ்தபா, 2009இல் ஈழத்தில் பாலச்சந்திரன்!

2003 டிசம்பர் 13 அன்று அத் தவார் ((ad - Dawr)) என்னுமிடத்தில், ஒரு பண்ணையில், பூமிக்குக் கீழே பதுங்கியிருந்த சதாம், அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டார். சதாம் உசேன் கிடைத்து விட்டார். ஆனால் அவருடைய பல்லிடுக்குகளில் விளக்கடித்துப் பார்த்தும், அவர் ஒளித்து வைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட, ‘பேரழிவு ஆயுதங்கள்’ ஏதும் கிடைக்கவில்லை.யாரைக் கொல்வதாக இருந்தாலும், ஒரு விசாரணை நடத்திக் கொல்வதுதானே மேலை நாட்டுப் பண்பு. சதாம் மீது விசாரணை தொடங்கி, அவர் குற்றவாளி என்று 2006 நவம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டது. 2006 டிசம்பர் 30 அன்று, சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.பொதுவாகத் தூக்கிலிடப்படுபவர்களின், முகத்தைத்தான் கறுப்புத் துணியால் மூடுவார்கள். ஆனால் சதாம் உசேன் தூக்கிலிடப்படும்போது, அவர் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் எந்தக் கறுப்புத் துணியும் இல்லை. ஆனால் தூக்கில் அவரை மாட்டியவர்கள் அனைவரும், தங்கள் முகங்களைக் கறுப்புத் துணியால் மூடிக் கொண்டிருந்தார்கள்.
விமர்சனங்களைத் தாண்டியும், சதாம் உசேன் அன்று ஒரு கதாநாயகனாகத் தூக்கில் தொங்கினார்.
( சந்திப்போம் )   subavee-blog. 11 oct 2014