அறிந்தும் அறியாமலும்…(25) களங்கள் மாறுகின்றன!

02 12 2017

அறிந்தும் அறியாமலும்…(25) களங்கள் மாறுகின்றன!

சுப.வீரபாண்டியன்

ஒரே ஒரு நாடு, என்றைக்கும் உலகையே ஆளுகின்ற ஒற்றை வல்லரசாக நிலைப் பெற்றுவிட முடியாது. அடுத்தடுத்த வல்லரசுகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். இந்திய மண்ணிலும் அந்தக் கனவுகள் இருக்கவே செய்கின்றன. 2020இல் இந்தியா வல்லரசாகிவிடும் என்று இன்றைய இளைஞர்கள் பலர் எண்ணுகின்றனர், விரும்புகின்றனர்.ஆனால் வல்லரசுகளே இல்லாத ஓர் உலகம்தான் நம் கனவாக இருக்க வேண்டும். அடுத்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தாத, அடுத்த நாட்டைச் சுரண்டாத வல்லரசுகள் எவையும் இங்கு உண்டா? வல்லரசுகள் தேவையில்லை, உலகில் நல்லரசுகளே தேவை. இந்த எண்ணம் உலக மக்களிடையே வலுப்பெறாத வரை, ஆயுதங்களையும், அணுகுண்டுகளையும் பெருக்கிக் கொண்டே போகும் போக்குதான் வளரும். அதனால்தான் வளரும் நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும், தங்கள் நாட்டின் நிதிநிலை அறிக்கையில், கல்விக்கும், மக்கள் நலத்துக்கும் செலவிடும் தொகையை விட, இராணுவத்திற்கு ஒதுக்கும் தொகையே மிகக் கூடுதலாக உள்ளது. ‘அண்டை நாடுகளால் ஆபத்து' என்னும் ‘மந்திரத்தை' எல்லா நாடுகளும் ஒலிக்கின்றன. அடுத்த நாட்டைக் காட்டிக் காட்டித் தங்கள் நாட்டின் இராணுவ வலிமையைக் கூட்டிக்கொள்கின்றன.

இன்று இந்தியா இராணுவ வலிமையில் மிக முன்னேறிய நாடாகவே உள்ளது. வலிமை வாய்ந்த முதல் பத்து நாடுகளில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. 2014ஆம் ஆண்டில், அந்த வலிமை கீழ்க்காணும் வரிசையில் உள்ளது.
1. அமெரிக்கா 2. ரஷ்யா 3. சீனா 4. இந்தியா 5. இங்கிலாந்து 6. பிரான்ஸ்
7. ஜெர்மனி 8. துருக்கி 9. தென்கொரியா 10. ஜப்பான்

எனினும் இதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளப் பெரிதாக ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், பொருளாதார வளம், கல்வி, மக்கள் நலம், கிராமப்புற மேம்பாடு முதலியனவற்றில் இன்னும் நாம் பின்தங்கியே உள்ளோம்.எல்லாவற்றிலும் சீனா, இன்று நம்மைவிடப் பன்மடங்கு முன்னேறிய நாடாக உள்ளது.

                         இந்தியா       சீனா
டாங்கிகள்  3569 9150
போர் விமானங்கள் 535 1170
போர்க் கப்பல்கள் 284 520
விமானம் தாங்கிக் கப்பல்கள் 2 1
நீர்மூழ்கிக் கப்பல்கள் 17 69

நாம் சிறந்து விளங்கும் இராணுவத்திலும் கூட, நம்மைவிட முன்னேறிய இடத்திலேயே சீனா நிற்கிறது. குறிப்பிட்ட சில வலிமைகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம் :அமெரிக்காவின் இராணுவ வலிமையோ, சீனாவைவிடப் பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது.

1970களில் நாமும், சீனாவும் எல்லாத் துறைகளிலும், எல்லா நிலைகளிலும் சற்று முன் பின்னாகத்தான் இருந்தோம். இன்று பொருளாதாரத்தில், இராணுவத்தில், அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் எனப் பல துறைகளிலும் அவர்கள் மிக உயரத்திற்குச் சென்றுள்ளனர்."கிழக்கே ஒரு ராட்சதன் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் எழும்போது இன்றைய வல்லரசுகளுக்கெல்லாம் ஒரு பெரிய அறைகூவலாக இருக்கும்" என்று சீனாவைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் கூறுவர். இப்போது அந்த ராட்சதன் கண்விழிக்கத் தொடங்கிவிட்டான் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவிற்கான அடுத்த அறைகூவலும், அடுத்த போட்டியும், இனிமேல் சீனாவாகத்தான் இருக்கும்!

குறுகிய காலத்தில், சீனம் எப்படி இந்த இடத்தை அடைந்தது என்பது வியப்பிற்குரியது. மாவோவின் இறுதி நாள்களிலேயே சீனத்தில் மாற்றங்கள் தொடங்கிவிட்டன. ‘அமெரிக்கா வெறும் காகிதப் புலி' என்று சொல்லிக் கொண்டிருந்த சீனா, ஒரு கட்டத்தில் அது உண்மைப் புலிதான் என உணர்ந்து கொண்டது.சோவியத்துக்கும், சீனாவிற்குமிடையே விரிசலும், அமெரிக்காவுக்கும் சீனாவிற்குமிடையே நட்பும் 1970களில் தொடங்கின. வியத்நாம் மீது அமெரிக்கா கடுமையாகப் போர் நடத்திக் கொண்டிருந்த அந்த நாள்களில், 1972ஆம் ஆண்டு, மாவோவின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் சீனாவில் வந்திறங்கினார். உலக வரலாற்றில் அது பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

1966 - 76க்கும் இடைப்பட்ட பத்து ஆண்டுகளைச் சீனத்தில், ‘கலாச்சாரப் புரட்சி' நடைபெற்ற ஆண்டுகள் என்று குறிப்பர். கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில், உட்கட்சி ஜனநாயகத்தை முற்றிலுமாகத் துடைத்தழித்து, எதிர்க்கின்றவர்களையெல்லாம் அழித்தொழித்தனர் என்ற விமர்சனமும் உண்டு.அந்தக் காலகட்டத்தில், மாவோவின் கண்டனப் பார்வைக்கு உள்ளாகித் தண்டிக்கப்பட்டு, பிறகு மீண்டு வந்து, மாவோவிற்குப் பின் சீனாவைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தார் டெங் சியோ பிங் (Deng Xio Ping, 1904 - 1997). உண்மையில், ஹுவா (Hua Gueo Feng) என்பவரைத்தான், மாவோ தனக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். ஆனால், டெங் அவரைத் தள்ளிவிட்டு அந்த இடத்திற்கு வந்துவிட்டார்.

தன் இளம் வயதில் பிரான்சில் படித்துக் கொண்டிருந்த டெங், பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். தாயகம் திரும்பிய பின்பு, 1923இல், சீனப்பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினரானார். கட்சி, கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்த போதெல்லாம், மனம் தளராமல் கட்சிப் பணி ஆற்றினார். 1949ஆம் ஆண்டு, திபெத் பகுதியில் கட்சியின் முழுநேரப் பணியாளராக நியமிக்கப்பட்டார்.எனினும், 1960களின் இறுதியில் அவர் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. முதலாளித்துவ அமைப்பை முற்றிலுமாகப் புறம் தள்ள வேண்டாம் என்று கருதினார். அதனாலேயே மாவோவின் கோபத்திற்கு ஆளானார்.

என்ன செய்வது... காலம் எப்போதும் சில மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே உள்ளது. மாவோவே அமெரிக்க அதிபரை வரவேற்றபின், சிந்தாந்தக் கோட்பாடுகளின் கடுமை சற்றுக் குறைந்தது.மாவோவிற்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிய டெங், இரண்டு செய்திகளை முன் வைத்தார். அதில் மிக முதன்மையானது, சோசலிச சித்தாந்தமும், சந்தைப் பொருளாதாரமும் (Socialist Ideology and Market Economy) இணைந்து செல்வதே நல்லது என்பது! இரண்டாவது, அவருடைய புகழ்பெற்ற தொடரான, "பூனை கறுப்பாக இருந்தால் என்ன, வெள்ளையாக இருந்தால் என்ன. எலியைப் பிடித்தால் சரிதான்" என்பது.

மேற்காணும் இரண்டு சிந்தனைகளும், சீனத்தின் வரலாற்றையே மாற்றிவிட்டன என்று கூறலாம்.சீனம் மெல்ல மெல்லத் தன் ‘சிவப்பை' இழக்கத் தொடங்கியது. மேலும் எண்பதுகளின் இறுதியில், சோவியத் உடைந்ததும், உலக மயமாதல் கொள்கை வளர்ந்ததும், சீனாவின் சந்தைப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.மாவோவின் மனைவி ஜியாங் குவிங் (Jiang Qing) மற்றும் மூவர், டெங்கின் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த நால்வர் அணியை (Gang of Four) எப்படி முறியடிப்பது என்று தனக்குத் தெரியும் என்றார் டெங். அவ்வாறே நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. உயர்நீதி மன்றத்தில், அது வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டாலும், 1991இல், ஜியாங் குவிங் தற்கொலை செய்து கொண்டார்.

முழு அதிகாரத்தையும் கைப்பற்றிய டெங், "நால் வகை நவீனமயமாக்கல்" என்னும் கொள்கையை முன்வைத்தார். அதன்படி தொழில் நுட்பம், வேளாண்மை, இராணுவம், கைத்தொழில் ஆகிய நான்கும் முழுக்க முழுக்க நவீன மயமாக்கப்பட்டன.கோர்ப்பசேவ் ‘பெரிஸ்ட்ரொய்க்கா" என்னும் திறந்த நிலை விவாதத்தைத் தொடங்குவதற்குப் பத்து ஆண்டுகள் முன்பாகவே, டெங், அதே போன்ற, ‘பீக்கிங்ஸ்ட்ரொய்க்கா' (Peekingstroika)வைத் தொடங்கிவிட்டார்.சோவியத்தும், சீனாவும் புரட்சிகரப் பாதையிலிருந்து, முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரப் பாதைக்கு வந்துவிட்டன என்பது உண்மைதான்.சிவப்புச் சிந்தனையிலிருந்து சீனாவை முதலாளித்துவப் பாதைக்கு அழைத்து வந்து விட்டதை அமெரிக்கா அன்று தன் வெற்றியாகக் கருதியிருக்கக் கூடும். ஆனால் அதுவே இன்று அமெரிக்காவிற்குப் புதிய தலைவலி ஆகிவிட்டது. சீனாவை இனி அமெரிக்கா எதிர்கொண்டே ஆக வேண்டும் - போர்க்களத்தில் அன்று, பொருளாதாரக் களத்தில் இன்று!
(சந்திப்போம் )  subavee-blog.blogspot.nl 25 10 2014