அறிந்தும் அறியாமலும்…(26) வெளுக்க மறுக்கும் கறுப்பு!

07 12 2017

அறிந்தும் அறியாமலும்…(26)  வெளுக்க மறுக்கும் கறுப்பு!

 

சுப.வீரபாண்டியன்

அமெரிக்காவிற்கு அறைகூவல் விடும் அளவுக்கு, இன்று சீனாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இவ்வாறு குறிப்பிடுவது சீனாவின் முதலாளித்துவப் பாதையை ஏற்பதாகவோ, பொதுவுடைமைக் கொள்கைகளை விட்டு அந்நாடு விலகிச் சென்றதை ஆதரிப்பதாகவோ ஆகாது. அது ஒரு தனி விவாதம். அவ்வாறே, சீனாவின் உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தும் நமக்கு ஏற்புடையனவும் அல்ல. உலகிலேயே மிகக் கூடுதலாக மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக அது உள்ளது. ஆடம்பரங்கள், கேளிக்கைகள் இன்று அளவு மீறிப் போய்க் கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் நாம் உறுதியாக ஏற்க மறுக்கிறோம்.

 

ஆனாலும், பொருளாதார நிலையில் அந்நாடு கண்டுள்ள முன்னேற்றத்தை நாம் மறுக்க முடியாது. சீனக் கடை வீதிகள் (China Towns) இல்லாத பெரிய நாடுகள் இன்று உலகில் இல்லை. சீன உணவு, சீனத் தேநீர், சீனப் பொருள்கள் அனைத்தும் உலகில் மிகப் பெரிய சந்தையைக் கைப்பற்றி உள்ளன.எதிர்கால உலக அரசியலும், பிற நாடுகளின் மீதான பிடி இறுகுதலும், இனிமேல் போர்க்களங்களில் மட்டுமே முடிவாகப் போவதில்லை. பொருளாதார வளர்ச்சி, அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி, ஊடகங்களின் வளர்ச்சி ஆகிய மூன்றினையும்தாம் பெரிதும் சார்ந்து நிற்கப் போகின்றன.அந்த அடிப்படையில் பார்க்கும் போது, நம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

 

2011 செப்டம்பரில், இந்தியத் திட்டக் குழு (Planning Commission of India), இந்திய உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலம் (affidavit), பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்தது. 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டுல்கர் குழு (Tendulkar Committee)வின் அறிக்கையையொட்டி அந்தச் செய்திகள் அமைந்திருந்தன.

மராட்டியத்தைச் சேர்ந்த, பொருளியல் பேராசிரியர் சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தன் அறிக்கையை அரசுக்குக் கொடுத்தது. தில்லிப் பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியரான டெண்டுல்கர் தலைமையில் அமைந்த குழு, ஓர் அதிர்ச்சியான செய்தியைத் தந்திருந்தது. "2004 - 05ஆம் ஆண்டுகளில், இந்தியாவில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 27.5% ஆக இருந்தது. இப்போது (2009 - 10) அது 32.5% ஆக உயர்ந்துள்ளது" என்பதே அவ்வறிக்கை தந்த அதிர்ச்சி. "Reintegrating India with world economy" போன்ற, அரிய பொருளாதார நூல்களை எழுதியுள்ள சுரேஷ் டெண்டுல்கர், வறுமைக் கோட்டைக் கணக்கிடுவது குறித்துச் சில புதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தன் அறிக்கையில் கூறியிருந்தார்.

தனிநபர் வருமானத்தை மட்டுமே வைத்து, வறுமைக் கோட்டின் எல்லையை வரையறுப்பது வழக்கம். அதனைத் தாண்டி, உணவு, கல்வி, உடல்நலம் ஆகியனவற்றின் அடிப்படையிலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றார் அவர். தனிமனித வருமானம் மட்டும் கூடிவிட்டால் போதுமானதில்லை.

 

அடிப்படைக் கல்வி போன்றவை இல்லாதவர்களும் வறியவர்களே என்றார் அவர்.தனிமனித வருமான எல்லை, அவ்வப்போது உள்ள விலைவாசிகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது.கிராமப்புறங்களில் ரூ.61.80ம், நகர்ப்புறங்களில் ரூ.71.30ம் ஒரு மாதத்திற்குப் பெறுவோர், வறுமைக் கோட்டின் எல்லையைத் தாண்டிவிட்டதாக, இந்தியாவில், 1978இல் கணக்கெடுக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு அத்தொகை, ரூ.328 மற்றும் ரூ.454 ஆக உயர்த்திக் கணக்குப் பார்க்கப்பட்டது. இப்போது கிராமங்களில் மாதம் ரூ.780க்கு மேலும், நகரங்களில் மாதம் ரூ-.960க்கு மேலும் வருமானம் பெறுவோர், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களாகக் கருதப் படுகின்றனர்.

 

அதாவது, இந்தியாவில் மாதம் 1000 ரூபாய் வருமானம் உடையவர்கள் எல்லோரும் வறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டனர் என்பதே, எவ்வளவு பெரிய வேடிக்கை. உலக அளவில், மிக வறிய நாடுகளை எல்லாம் கணக்கில் கொண்டால், வறுமைக்கோட்டைத் தாண்டுவதற்கு, நாளொன்றுக்கு 1.25 டாலர் பணம் ஈட்ட வேண்டும். அந்தக் கணக்கின்படி, சுமார் மாதம் ரூ. 2250 க்கு மேல் இந்தியாவில் வருமானம் இருந்தால்தான், வறுமைக்கோட்டிற்கு மேலே என்று பொருள். ஆனால், நம் கணக்கோ அதில் பாதி கூட இல்லை. அப்படிக் கணக்குப் பார்த்தும், 2014ஆம் ஆண்டில், இந்தியாவில், 30 முதல் 35 கோடிக்குள்ளான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர் என்பது எத்தனை அவலம்.இக்கொடிய வறுமையிலிருந்து இந்தியாவை மீட்பதற்கு என்ன வழி? இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் தொகையைக் குறைப்பதும் அதற்கான ஒரு வழிதான் என்பதைப் பலர் ஏற்க மறுக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பை ஒருநாளும் விட்டுக் கொடுக்க முடியாது என்பது அவர்களின் வாதம்!

 

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும், கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவந்தால், நாட்டின் வறுமையை ஒழித்துவிட முடியும் என்று எல்லாக் கட்சிகளும் கூறுகின்றன. ஆனால், கறுப்புப் பணமாக வெளிநாடுகளில் உள்ள பல லட்சம் கோடிப் பணத்தைக் கொண்டு வர எடுக்கப்படும் எல்லா முயற்சிகளும் கண்துடைப்பாகவே உள்ளன. கறுப்புப் பணம் வைத்திருக்கும் மூன்று பேர் பெயர்களை முதல்நாள் வெளியிட்ட இந்திய அரசு, உச்சநீதி மன்ற ஆணையின்படி, மறுநாள் 627 பேர் கொண்ட பட்டியலை அண்மையில் நீதிமன்றத்தில் கொடுத்தது.இதிலும் மூன்று செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, இது பிரான்சு உள்ளிட்ட சில நாடுகளிடமிருந்து மட்டும்- அதுவும் மறைமுகமாகப் பெறப்பட்ட தகவல். முறைப்படி ஓர் அரசு, இன்னொரு அரசிடமிருந்து பெற்ற தகவல் இல்லை. மிகப்பெரும்பான்மையான பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று கருதப்படும் சுவிஸ் வங்கிகளிலிருந்து எந்தப் பட்டியலும் இன்றுவரை பெறப்படவில்லை.

 

இரண்டாவது, இது ஒன்றும் புதிய பட்டியலோ, மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றவுடன் கண்டுபிடிக்கப்பட்ட பட்டியலோ இல்லை. 2011ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான அரசு பெற்ற தகவல்கள்தாம் இவை. வெளியிடாமல் அவர்கள் வைத்திருந்த பட்டியலை, இவர்களும் வெளியிடாமலேயே இருந்தார்கள். ‘கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் குடையாக' அரசு இருக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் எச்சரித்த பின்தான் இவர்களும் நீதிமன்றத்தில் பட்டியலைக் கொடுத்தார்கள்.மூன்றாவது, நீதிமன்றமும், இப்போது அப்பட்டியலை வெளியிடவில்லை. விசாரணைக் குழுவிடம் கொடுத்து ஆறு மாதங்களுக்குள் சரி பார்க்கக் கூறியுள்ளது. எனவே இன்னும் பல மாதங்களுக்கு எந்தப் பட்டியலும் வெளியாகப் போவதில்லை. பட்டியல் வெளிவரவே இவ்வளவு காலமென்றால், பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வெளிநாடுகளிலிருந்து பணத்தை மீட்டு எடுத்து வரவும் எவ்வளவு காலம் ஆகும்? நீதிமன்றத்திற்கு வழக்கு வரும்போது, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பக்கத்து நியாயங்களைத் தங்கள் வாதத் திறமையால் எடுத்து வைப்பதற்கு, எவ்வளவோ ராம் ஜெத்மலானிகளும், பாலி நாரிமன்களும் புறப்பட்டு வருவார்கள். இவ்வளவையும் மீறி, எல்லா கறுப்புப் பணத்தையும் மீட்டு வந்து, இந்தியாவில் உள்ள ஏழை மக்களை எல்லாம் காப்பாற்றும்வரை, பாவம் அவர்கள் எப்படியாவது உயிருடன் இருக்க வேண்டும்!போகட்டும், பேராசிரியர் சுரேஷ் டெண்டுல்கர், பேராசிரியர் அமர்த்யா சென் ஆகியோர் குறிப்பிடும் சில இன்றியமையாத செய்திகளை நாம் கவனிக்கலாம். பொருளாதார முன்னேற்றம் மட்டுமே முன்னேற்றம் ஆகாது. கல்வி, உடல் நலம் முதலானவைகளைக் கொண்டு கணக்கிடப்படும் வாழ்க்கைத் தரமும், நாட்டின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.

 

ஓர் அரசு, முதலில் தன் மக்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியைக் கொடுக்க வேண்டிய கடப்பாடுடையது. அதேபோல, நாட்டு மக்களின் உடல், மன நலத்தைப் பாதுகாக்க வேண்டிய நியதியும் உடையது. ஆதலால், மற்ற பிற துறைகளை எல்லாம் தனியார்மயமாக்க அனுமதித்தாலும், மிகப் பெரும்பான்மையான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளைத் தன் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்.ஆனால் நம் நாட்டின் நிலை என்னவாக உள்ளது? சிறந்த கல்வி நிறுவனங்கள் என்று பெயர் பெற்றவையும், நவீன மருத்துவமனைகள் என்று பெயர் பெற்றவையும் தனியாரிடம் உள்ளன. ஏழை மக்கள் மட்டுமே வேறு வழியின்றி அணுகக் கூடியனவாக அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவ மனைகளும் உள்ளன.கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் தனியார் நடத்துகின்றனர். மதுக் கடைகள் (டாஸ்மாக்) எல்லாவற்றையும் அரசு நடத்துகிறது. தீபாவளியையொட்டிய இரண்டு நாள்களில் மட்டும், டாஸ்மாக் மூலம் தமிழக அரசு பெற்ற வருமானம் 138 கோடி ரூபாயாம். எனினும், இலக்கை (150 கோடி) எட்ட முடியவில்லையே என்று அரசு வருத்தப்படுகிறதாம்.

(சந்திப்போம் ) subveblog   01 11 2014