தமிழர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டியது காலத்தின் தேவை

thinakkurL.LK 15 04 2014

தமிழர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டியது காலத்தின் தேவை

த. மனோகரன்

கல்வியில் கவனம் செலுத்தாத ஒரு சமூகம் நாட்டின் பெறுமதியிழந்த சமூகமாக மாறுவதைத் தடுக்க முடியாது. ஒரு சமூகத்தின் சிறப்பை, வளத்தை பெறுமதியை இழக்கச் செய்ய வேண்டுமாயின் அச் சமூகத்தின் கல்விக்கு தடை ஏற்படுத்தினால் போதுமானது. அதுவே நம் நாட்டில் தமிழருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதற்கு நம்மவரும் உடந்தையாயிருப்பதும் கவலைக்குரியது. நமது நாட்டின் தேசிய கல்விக் கொள்கையாயிருப்பது இலவசக் கல்வி, சமத்துவக் கல்வி, பதினான்கு வயது வரை கட்டாயக் கல்வி போன்ற உயர்ந்த நோக்கை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையாகும். நடைமுறையில் இக் கல்விக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றதா ? இல்லை யென்பதே விடையாயமைகின்றது. இந் நாட்டில் பாடசாலைகள் தரப்படுத்தப்பட்டுள்ள வகைகளையும் அவற்றிற்கு வழங்கப்படும் ஆளணி. பௌதிக வளங்களையும் நோக்கும் போது சமத்துவக் கல்விக்கு ஆப்பு என்றோ வைக்கப்பட்டுள்ளமை தெட்டத் தெளிவாகவே தெரியவருகின்றது.

ஒரே பாடத் திட்டத்தின் கீழ் ஒரே வகையான தரத்திலான பட்டத்தையோ பயிற்சியையோ பெற்ற ஆசிரியர்களால் பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி போதிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அவ்வாறே தேசிய ரீதியில் நடத்தப்படும் பரீட்சைகளும் ஒரே மாதிரியான வினாத்தாள்களைக் கொண்டே நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவியரின் தரம் அளவீடு செய்யப்படுகின்றன. ஆனால், பாடசாலைகள் தர அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளன . மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளவை தேசிய பாடசாலைகளென்று வகைப்படுத்தப்பட்டு நாட்டின் உயர் தரத்திலான பாடசாலைகளாகக் கணிக்கப்படுகின்றன. இவ்வாறு தேசிய பாடசாலைகளென்று முன்னிலைப்படுத்தப்பட்ட பாடசாலைகளிலும் பாகுபாடு தாராளமாகவே காணப்படுகின்றது. எடுத்துக் காட்டாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவியருக்கு தரமான தேசிய பாடசாலையைப் பெறுவதற்காக விதிக்கப்படும் மாறுபட்ட புள்ளிகளினளவு இதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

தேசிய பாடசாலைகளென்று மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழியங்கும் பாடசாலைகளின் தரத்தை ஒரே மட்டத்தில் பேணுவதில் கல்வித் துறை தோல்வியடைந்து விட்டமையையே இது வெளிப்படுத்துகின்றது. மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தேசிய பாடசாலைகளை விட மாகாண சபைகளுக்குக் கீழ் செயற்படும் பாடசாலைகள் தரத்தில் குறைந்தவையாகவே பொதுவாகக் கருதப்படுகின்றது. பாடசாலைகளுக்குத் தமது பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்குப் பெற்றோர் படும் அவதி இதற்கான சான்றாகும். தேசிய பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள் என்ற பாகுபடுத்தலுக்கப்பாலும் வேறு பல தரப்படுத்தல்களும் உள்ளன. நவோதய பாடசாலைகள், மகிந்தோதய பாடசாலைகளென்று பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டு ஏனைய பாடசாலைகளுக்குப் பொதுவாக வழங்கப்படும் வசதிகளுக்கு மேலதிகமாக வசதிகளும், வளங்களும் வழங்கப்படுகின்றன. சமத்துவக் கல்வியை வழங்குவதான இலங்கையின் அடிப்படைக் கல்விக் கொள்கை செயலிழக்கச் செய்யப்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்பதை நம் நாட்டு கல்வியியலாளர்கள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

சர்வதேச பாடசாலைகளென்று உருவாக்கப்பட்டு பணம் செலுத்திக் கல்வி பெறும் பாடசாலைகளும் நாட்டிலே பெருகியுள்ளன. வசதி வாய்ப்புள்ளவர்கள் தமது பிள்ளைகளை இவ்வாறான சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து விடுகின்றனர். அரச பாடசாலைகளில் நிலவும் குளறுபடிகளைச் சாதகமாகக் கொண்ட சர்வதேசப் பாடசாலைகள் பெருகி வருகின்றன. தரமான கல்வியைத் தமது பிள்ளைகள் பெற்றுக் கொள்ள அரச பாடசாலைகளை விட தனியார் பாடசாலைகளான சர்வதேச பாடசாலைகள் ஏற்றவை என்ற எண்ணம் எங்கும் நிலவுகின்றது. இவற்றை நோக்கும் போது இலவசக் கல்வி என்ற நாட்டின் கல்விக் கோட்பாடும் பங்கப்படுத்தப்பட்டு விட்டது என்பது புரியவருகின்றது.

நாட்டின் கல்வி நிலை குளறு படியாவதற்கு முக்கிய ஏதுவாயமைந்திருப்பது கல்வியின் பெறுமதியை , முக்கியத்துவத்தைப் பொறுப்புடன் புரிந்து கொள்ளாமையே. அரசியலுக்கு, அரச அதிகாரத்தைப் பெறுவதற்கு அரசியல் செல்வாக்கை நிலை நாட்டிக் கொள்ளும் களமாகவும் இன்று கல்விப்புலம் தள்ளப்பட்டு விட்டது. தரம் தாழ்த்தப்பட்டு விட்டது. இதுவே காணப்படும் உண்மை நிலை. யதார்த்த நிலை. அரச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல ஏனைய கல்வித் துறை சார்ந்தோரும் அரசியல் வாதிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குவதும் காணப்படுகிறது. பல பாடசாலைகளில் பல்வேறு கல்வித் தேவைகளை நிறைவேற்ற முடியாத குறைபாடுகள் நிலவுகின்ற போதும் அதை வெளிப்படுத்தாது மூடி மறைக்கும் நிலையும் காணப்படுகின்றது. சகல வசதிகளும் கொண்டவையாகவும் பாடத்திட்டத்தில் காணப்படும் சகல பாடங்களையும் கற்பிக்கும் வசதி கொண்டதாகவும் நோக்கப்படும் தேசிய பாடசாலைகளில் குறிப்பாக தமிழ்ப் பாடசாலைகளில் உரிய பாடங்களைக் கற்பிக்கத் தகைமை பெற்ற ஆசிரியர்களின் மையால் அப் பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை.

மேல் மாகாணத்திலுள்ள சில தமிழ்த் தேசியப் பாடசாலைகளில் நிலவும் யதார்த்த நிலை இதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. புவியியல், இந்து சமயம், இந்து நாகரிகம், தமிழ் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் மட்டுமல்ல வர்த்தக, கணித, விஞ்ஞான, பாட ஆசிரியர்கள் கூட இல்லாத உயர் தர வகுப்புகள் கொண்ட தமிழ்ப் பாடசாலைகள் மேல் மாகாணத்தின் தமிழ்ப் பாடசாலைகளில் மட்டுமல்ல நாட்டின் அநேக தமிழ்ப் பாடசாலைகளிலும் காணப்படுகின்றன. தமிழைப் படித்து என்ன செய்யப் போகின்றீர்கள் ? இந்து நாகரிகத்தைப் படிப்பதால் என்ன பயன் ? அவற்றை விட்டுவிட்டு தொழில் நுட்பப் பாடங்களைப் படியுங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். இந்து தமிழ்ப் பாடசாலைகளில் பயிலும் பிள்ளைகள் இந்து சமயமும் , தமிழும் படிப்பதால் பயன் என்ன என்று கேட்கும் ஆசிரிய சமூகம், சமூக வழிகாட்டியாக இருப்பது எங்ஙனம் ?

கல்வித் துறையில் சமூக எதிர் கால நலனின் அக்கறை கொண்டோர் சிந்தித்துப் பார்க்க வேண்டியவை பலவுள்ளன. இவ்வாறான நிலையிலேயே நாட்டின் ஒட்டு மொத்தமான கல்வி நிலை பல்வேறு சிக்கல்களில் மாட்டித் தத்தளிப்பது புலப்படுகின்றது. அரசியல் வாதிகளின் தாளத்திற்கு ஆடும் துறையாகக் கல்வித் துறை இன்று காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. தமிழர் கல்வித் துறையிலும் இந் நிலைமை காணப்படுவதுடன் புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு பிள்ளையு ம் நாட்டின் சொத்து, எதிர்காலமும் அவர்களே என்று கூறப்பட்டாலும் தமிழ்ப் பிள்ளைகளும் நாட்டின் சொத்து என்பது மறக்கப்பட்டுள்ளது. அல்லது மறுக்கப்பட்டுள்ளது என்ற நிலையே காணப்படுகின்றது. தமிழர் அரசியல் துறையில் செலுத்தும் கவனம் கல்வித் துறையில் செலுத்தப்படுவதில்லை என்றே கூற வேண்டும். அரசியலுக்காகக் கல்வி பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக மத்திய மாகாண சபை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்க் கல்வி அமைச்சு என்று தமிழர் ஒருவரின் பொறுப்பில் இயங்கி வந்தது. இந்நிலையிலே நடந்து முடிந்த மத்திய மாகாண சபைத் தேர்தலின் பின் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தமிழரொருவருக்கு தமிழ்க் கல்வி அமைச்சு வழங்கப்படவில்லை.

அரசியல் வாதிகளைப் பாடசாலை விழாக்களுக்கு அழைத்து மேளதாளத்துடன் வரவேற்று பொன்னாடை போர்த்தி, மாலை மரியாதை செய்து விட்டால் மட்டும் பாடசாலையின் கல்வித் தரம் உயர்ந்து விடும் என்று கருதப்படும் கலாசாரம் கைவிடப்பட வேண்டும். அதேபோல் அரசியல் வாதிகளும் தம்மை நம்பி வாக்களித்த பொது மக்களின் பிள்ளைகளின் கல்வி நலனின் தாமும் அக்கறையிலும் அவதானமும் செலுத்த வேண்டும் என்பதையும் மறந்து விடக்கூடாது. தமிழ் ஆசிரியர்கள் மத்தியிலே ஆசிரிய சங்கங்கள் பல்கிப் பெருகியுள்ளன. அவற்றில் அநேகமானவை அரசியல் கட்சிகளின் துணை அமைப்புகளாக செயற்படுகின்றன. இதுவும் கல்விப்புலத்தினுள்ள பெருங்குறைபாடாகும். தமிழ்க் கல்வி , தமிழர் கல்வி பின்னடைந்து விட்டன ,புறந்தள்ளப்பட்டு விட்டது என்று கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. கல்வியே சமூகத்தின் மூலதனம். இதைப் புரிந்து கொண்டு முன்னோக்கிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். கல்வியை உரிய காலத்தில் உரியபடி , உரிய தரத்தில் பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இது சமூகத்தின் தேவை. இதைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளில் விழிப்புடனிருந்து ஈடுபடுவது சமுதாய நலன் கருதும் ஒவ்வொருவரது கடமையாகும். கல்வி வழங்குவதில் காலம் கடத்த முடியாது.

எனவே, பாடசாலை மட்டத்தில் மட்டுமல்லாது பாடத் திட்டம் தயாரிப்பது , பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் தமிழர் கல்வி தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். கல்வித் துறையின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தவும் அக்கறையுடன் செயற்படவும் கல்வித் துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு என்று சிலர் கூறுகின்றனர். அது ஏற்க முடியாதது. சமுதாய நலனின் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கல்வித் துறையில் அக்கறை செலுத்தவும் குறைகளை எடுத்துக்காட்டி சீர் செய்ய முயலவும் பரிபூரண உரிமையுண்டு. இதை எவரும் மறுக்கவோ குறைகாணவோ முடியாது. தமிழ்க் கல்வி , தமிழர் கல்வி வளர்ச்சிப் பாதையில் செல்லாது தடைப்பட்டும் பின் தள்ளப்பட்டுமுள்ளது என்று கூறிக் கொண்டிராது இந் நாட்டில் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு நலனைக் கருத்திற் கொண்டு எவ்வித பேதமும் அற்ற தமிழர் கல்வி முகாமைத்துவம் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

அரசியல் மற்றும் தனிப்பட்ட கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாலிருந்து தமிழ்ப் பிள்ளைகளின் நலனை மட்டுமே நோக்காகக் கொண்டு குறித்த தமிழர் கல்வி முகாமைத்துவ அமைப்பு செயற்பட்டால் நிறையவே நன்மைகள் கிட்டும். கற்றோர் என்று கணிப்பிடப்படுவோர் மட்டுமன்றி மற்றோரும் இணைந்து தமிழர் கல்வி என்ற தேரின் வடத்தைப் பிடித்து இழுக்க வேண்டும். இறைவன் எழுந்தருளி வீதியுலாவரும் தேரின் வடத்தைப் பிடிப்பதால் பெரும் புண்ணியம் கிட்டும் என்பர் . அதேபோல் அதற்கும் மேலான பலனை சமுதாயத்தின் நலனுக்கான தமிழர் கல்விக்கான தேரை ஒன்றிணைந்து இழுப்பதன் மூலம் செயற்படுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் . தமிழ்க் கல்வியை பின்னடைவிலிருந்து காத்து முன்னேற்ற வேண்டியதன் தேவையை ஒவ்வொருவரும் உணர்ந்து புரிந்து செயற்பட்டால் தமிழ்க் கல்வியை வீழ்ச்சிப் பாதையிலிருந்து மீட்டெடுக்கலாம்.