சுயமரியாதை - 2 கடவுளும் பெரியாரும்

12 02 2018

சுயமரியாதை - 2 கடவுளும் பெரியாரும்

தஞ்சை, தருமபுரி ஆகிய ஊர்களில் அன்று எழுப்பப்பட்டிருந்த பெரியார் சிலைகளின் அடிபீடத்தில் கடவுள் மறுப்புத் தொடர்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை எதிர்த்தும், அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று கோரியும் முன்னாள் துணை மேயர் டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பக்திமான்கள் நம்பிக்கையையும், உணர்வுகளையும் அவ்வரிகள் காயப்படுத்துவதாகத் தன் மனுவில் கூறியிருந்தார். அந்த வழக்கு, நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் நீதிமன்றத்திற்கு வந்தது. தில்லி உயர்நீதி மன்றத்திலிருந்து 1967 நவம்பரில்தான் நீதிபதி இஸ்மாயில் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார். 1979 வரை நீதிபதியாகவும், 1979-81இல் தலைமை நீதிபதியாகவும் அவர் பொறுப்பு வகித்தார். வழக்கு மூன்றாண்டுகள் நடைபெற்றது.

இறுதியாக, 11.10.1973 அன்று தீர்ப்பு சொல்லப்பட்டது. "மனுதாரர் குறிப்பிட்டிருப்பது போல அந்த வாசகங்கள் பொது ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படுத்தும் என்று கருத இடமில்லை" என்றும், சட்டப்பிரிவு இ.பி.கோ. 295-25(1) கீழ் இது வராது என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். "அவரவர் சிலையின் கீழ் அவரவர் சொன்னதைத்தானே எழுத முடியும் என்றும் நீதிமன்றத்திலேயே கூறினார். அதன்பிறகு, எந்த ஊரில் சிலை வைத்தாலும், அந்தச் சிலையின் அடிபீடத்தில் இந்தத் தொடர்களை எழுதுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இன்று தமிழகத்தின் நூற்றுக்கணக்கான ஊர்களில் அய்யாவின் சிலையும், அதன்கீழ் இந்தத் தொடர்களும் இடம் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகிறது.

நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், அவ்வப்போது அது குறித்துச் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருந்தனர். "கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்பன போன்ற வரிகள் எல்லாம் எங்கள் நெஞ்சைப் புண்படுத்தாதா?" என்று சிலர் கேட்டனர். யாரோ கேட்கும் கேள்விக்கெல்லாம் நாம் ஏன் விடை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று பெரியார் நினைக்கவில்லை. அதற்கான விடையை அவர் விடுதலையில் எழுதினார்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொன்னால் பக்திமான்கள் மனம் புண்பட்டு விடுகிறதாம். அப்படியானால் கடவுளைக் கற்பித்தவன் புத்திசாலி என்று அவர்கள் கருதுகின்றார்களா? அப்படிக் கருதினாலும், கடவுள் கற்பிக்கப்பட்டவர் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர் என்றுதானே பொருள்! இல்லையில்லை , கடவுள் கற்பிக்கப்பட்டவர் என்பதையே நாங்கள் ஏற்கவில்லை என்று அவர்கள் கூறுவார்களேயானால், இந்தத் தொடர் பற்றி அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்டார். கடவுள் கற்பிக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக் கொள்வோர் மட்டும் அப்படிச் செய்தவர் புத்திசாலியா, முட்டாளா என்பது குறித்து விவாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்குப் பிறகு அந்த விவாதம் உப்புச் சப்பற்றுப் போய்விட்டது. இருப்பினும் கடவுள் மறுப்பு என்பதையும் தாண்டி, பெரியாரின் உள்ளம் சாதி எதிர்ப்பில்தான் ஆழப் பதிந்திருந்தது என்பதே உண்மை! (தொடரும்)

subaveeblog 24 07 2016