திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 15

21 02 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா?
வாலாசா வல்லவன்15

இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் காலிகள் கலாட்டா

“திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் சுமார் 10,000 பேர்கள் கொடிகளுடன், வாத்தியங் களுடனும், ஊர்கோலம் போகும் போது காங்கிரசாரும், அவர்களுடைய அடியாட்களும் ஆத்திரத்தை மூட்டக்கூடிய வார்த்தைகள் கொண்ட நோட்டீசுகளைக் கூட்டத்தில் வீசியதல்லாமல், தலைவர்கள் கையில் கொண்டு போய்க் கொடுப்பதும், கோபமுண்டாகும் வண்ணம் ‘ஜே’ போடுவதுமான காரியங்களைச் செய்துகொண்டு வந்ததுமல்லாமல், கூட்டத்தில் கற்களையும் வீசினால் யார்தான் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள்? போலீசார் இந்தக் காலிகளை விரட்டிவிட்டார்களே ஒழிய, அவர்களைக் கைது செய்யவோ, பிடித்து வைக்கவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை. ஊர்கோலம் மாநாட்டு மண்டபத்துக்கு வந்தபிறகும், மாநாட்டுக் கொட்டகை மீதும் கற்கள் எறியப்பட்டன. பொது ஜனங்களுக்கு எவ்வளவு பொறுமை இருந்திருந்தால் இந்தக் காலிகள் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” (‘குடிஅரசு’ தலையங்கம், 2.1.1938).

‘தினமணி’யின் குறும்புத்தனம்

“சென்ற மாதம் சேலத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அ. பொன்னம்பலனார் பேசும்போதும் காங்கிர° காலிகள், கூட்டத்தில் கல் போட்டு கலவரம் செய்தனர். அவர்களைத் தூண்டிவிடும் நோக்கில் ‘தினமணி’ தலையங்கங்களைத் தீட்டி வந்துள்ளது. ‘தினமணி’ யின் ஒரு தலையங்கத்தில் “இந்தி எதிர்ப்புத் தீர் மானம் நிறைவேறாமல் பொது ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பச்சையாகத் தூண்டி விட்டிருக்கிறது. மற்றொரு சமயம் “பொது ஜனங் களுக்குக் கோபம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?” என்று எழுதி இருக்கிறது. மற்றும் சில சமயம் “பொது ஜனங்களும் சும்மா இருப்பார்களா?” என்றெல்லாம் எழுதி, பொது மக்களை இந்தி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக உசுப்பிவிடுவதை “குடிஅரசு” ஏடு 2.1.1938 தலையங்கத்தில் கண்டித்துள்ளது. வ.ஆ.மா. 2வது சுயமரியாதை மாநாடு ஆம்பூரில் நீதிக்கட்சியின் துணைத் தலைவர் கான்பகதூர் கலி புல்லா தலைமையில் 28.11.1937இல் நடைபெற்றது. கான்பகதூர் கலிபுல்லா தமது தலைமையுரையில் இராசாசி ஆட்சிக்கு வந்ததும் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் வந்தே மாதரம் பாடலைப் பாட வைத்ததைக் கண்டித்தார். மேலும் அவர் பேசுகையில் “வந்தே மாதர கீதப் பிரச்சனை ஒரு புறம் இருக்க, இந்தியைக் கட் டாயப் பாடமாக்கப் போகிறோம்” என்று வீண் சபதம் போட்டுக் கொண்டு அலைகின்றார்கள். அதற்கு அவசியம் என்னவென்று கேட்டால் “இந்தியைப் படித்துக் கொண்ட மாத்திரத்தில் வடஇந்தியாவுக்குச் சென்று சம்பாதிக்கலாம். துளசிதா° ராமாயணம் படிக்கலாம்” என்கிறார், கனம் ராஜகோபாலாச்சாரியர். “10,000க்கு ஒருவர் கூட வடஇந்தியா போகிறவர்கள் இல்லையே, அப்படியிருக்க ஒருவருக்காக வேண்டி 10,000 பேர் கல்வி கற்பதைக் கொலை செய்ய லாமா?” என்று கேட்டால், “இந்தியா முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். அதற்காகத்தான் நான் இந்தி மொழியை வலுக்கட்டாயப்படுத்துகிறேன்” என்கிறார்.

உண்மையை விளக்க வேண்டுமானால் கனம் ராஜகோபாலாச்சாரியாரை நம்பி, பிழைப்பில்லாத ஏழை பிராமணர்கள் இந்தியைப் படித்துவிட்டுத் தெருத் தெருவாய் அலைந்து கொண்டிருப்பதாயும், அப்படி ஆயிரக்கணக்கான பிராமணர்கள் திண்டாடிக் கொண்டி ருப்பதைப் பார்த்துக் கொண்டு, சென்னை மாகாணப் பிரதம மந்திரி °தானத்தை வகிக்கும், கனம் ராஜ கோபாலாச்சாரியார் வாளாயிருக்க முடியாமல் அவர் களுக்கு எப்படியாவது பிழைப்புக்கு வழிகாட்ட வேண்டி யது அவரது கடமையாகையால், அவர் இந்தியைக் கட்டாயமாக்குவது என்று கங்கணங்கட்டிக் கொண்டு அலைகிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்” என்று பேசினார். இந்தக் கருத்திலும் உண்மை இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இராசாசி இந்தியைக் கட்டாய மாக்கி, 21.4.1938இல் ஆணையிட்டவுடன், 125 உயர்நிலைப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுமுதல், முதல் மூன்று வாரங்களில் இந்தி கட்டாயப்பாடம் என்று ஆணைப் பிறப்பித்தார். அரசாணை எண். M.R.C. Miscellaneous, Public Education, G.O.No.911, Date 21 April, 1938 இந்தத் திட்டம் நிறைவேற, இராசாசி அரசு கூடுத லாக ரூ.20,000 நிதி ஒதுக்கி, அப்பணத்தை இந்தி ஆசிரியர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என ஆணையிட்டது (Mail 30 April, 1938).

இராசாசி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவேன் என்று அறிவித்த நாள் முதல், தந்தை பெரியாரின் “குடிஅரசு” ஏடும் “விடுதலை”யும் தமிழர்களுக்குத் தன்மான உணர் வூட்ட வாளும் கேடயமும் போல் பயன்பட்டு வந்துள்ள தை வரலாறு நமக்குக் காட்டுகிறது. குடிஅரசு 1937, திசம்பர் 19 இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் கடந்தும் அயல்நாடு களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேயா, சிங்கப்பூரிலும் பல கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. 9.1.1938இல் சிங்கையில் சுயமரியா தை இயக்கத் தலைவர் கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமையில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. “இந்தி தமிழ்நாட்டில் அழிந்தேதீரும்” என்ற தலைப் பில் அவர் நெடிய சொற்பொழிவாற்றினார். (‘குடிஅரசு’, 28 சனவரி 1938). திருச்சியில் கூடிய தமிழர் மாநாட்டின் தீர்மானத் தின்படி, ஒரு குழுவை அமைத்து கவர்னரிடம் சென்று முறையிடுவது என்று முயற்சி செய்தனர். அந்தக் குழுவினரைப் பார்க்கவும், அவர்களின் கோரிக்கை யை ஏற்கவும் கவர்னர் மறுத்துவிட்டார். இந்த நிகழ் வைக் கண்டித்துத் தந்தை பெரியாரின் “குடிஅரசு” இதழ் சீறிப் பாய்ந்தது.

“தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார் கள்?” என்று துணைத் தலையங்கத்தைத் தீட்டியது குடிஅரசு இதழ். “சரணாகதி மந்திரிசபை, தமிழ்நாட்டிலே, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கத் துணிந்து திட்டம் போட்டனர். சூழ்ச்சி, சுயநலம், விஷமம் வர்ணாச்சிரமமாகிய, விஷங்கலந்த இத்திட்டத்தை, தமிழர் உண்டு மாள்வ ரோ என நாம் பயந்தோம். அக்கிரகார மந்திரி சபை யின் அக்கிரமப் போக்கால், தமிழர் சமூகம் நசிக்கா திருக்க வேண்டுமே எனக் கவலை கொண்டோம். இத்திட்டம் அர்த்தமற்ற, அவசியமற்ற, மோசமான மனு ஆட்சித் திட்டம் என்றோம். நம்மை போன்றே தமிழ் உலகும் கருதிற்று. தமிழர்கள் சீறி எழுந்தனர். எங்கும் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு கொந் தளித்தது. பலமான கிளர்ச்சி ஆரம்பித்தது. ஆயிரக் கணக்கான மக்கள் அடங்கிய கூட்டங்கள் கூடி, பிரதிதினம் இந்தி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. “தமிழ்மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் நாங்கள் உயிரோடு இரோம்” என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளிலும் எழும்பின. தமிழர் கழகங்களென்ன, பாதுகாப்புச் சங்கங்களென்ன, இந்தி எதிர்ப்புச் சபைகள் எத்துணை, இவ்வளவும் தமிழ்நாட்டிலே தோன்றின. பண்டிதர்கள் பதறினார்கள். மாஜி கவர்னர்களும், மாஜி மந்திரிகளும், காங்கிரஸ் மீது காதல் கொண் டோரும், பிரபலஸ்தர்களும் வாலிபர்களும் பொது மக்களிடையே நிரந்தரமான தொடர்பைக் கொண்டுள்ள சு.ம. இயக்கத்தலைவரும், தோழர்களும் இத்திட்டத் தைக் கண்டித்துப் பலத்த பிரச்சாரத்தை இடைவிடாது தென்னாடு முழுவதும் நடத்தினார்கள். இக்கிளர்ச்சி யின் பயனாகவே பல பிரத்தியேக மாநாடுகள் நடை பெற்றன. கிளர்ச்சி, கண்டனம் ஆகியவற்றைக் கண்ட மந்திரி கனம் சுப்பராயனே கோவையில் செய்தியாளர் களிடம், “இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக மும்முரமாக இருப்பதாக ஒப்புக்கொண்டார். அதிகார அகம்பாவத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஆச்சாரியார் இந்த பலத்த கிளர்ச்சிக்கு விடுத்த பதில் “தமிழர்கள் அறிவிலிகள் - குரங்குகள்” என்பதேயாகும்.

1937-1938 இராசாசி ஆட்சிக் காலத்தில் டாக்டர் சுப்பராயன் தான் கல்வி அமைச்சராக இருந்தார். “தமிழர்கள் தமது கிளர்ச்சியைக் கூடுமான வரை யில் நல்ல முறையிலே நடத்திக் காட்டினார்கள். தமிழர் கள் தமது அதிருப்தியையும் தெரிவித்துவிட்டனர். இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்களுக்குக் கவர்னர் தந்த பதில் “தூது “கோஷ்டியைப் பார்க்க முடியாது” என்பதுதான். தமிழர்களே! இதுதான் உங்கள் நிலைமை; தமிழர்களைப் பற்றி கவர்னர் கொண்டுள்ள எண் ணமும் தமிழர்களிடம் நடந்துகொள்ளும் போக்கும் இதுதான்; இனி தமிழர்களே என்ன செய்யப் போகி றீர்கள் என்று கேட்கிறோம்” (‘குடிஅரசு’ துணைத் தலையங்கம், 23.1.1938) (குறிப்பு : சென்னை மாகாண கவர்னர் இந்தி மொழிக்கு ஆதரவுதான். அவரைச் சந்தித்துப் பயன் இல்லை என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிலே பெரியார் கூறியிருந்தது உண்மையாகிவிட்டது.) பெரியார் 16.01.1938இல் நீடாமங்கலத்தில் ஆற்றிய சொற்பொழிவில் “இப்போது உள்ள மந்திரிகள் காலேஜ் களை ஒழிக்க வேண்டும்; உயர்தரப் பாடசாலைகளை மூடவேண்டும்; 60 பிள்ளைகளுக்குக் குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களை எடுத்துவிட வேண்டும்; கட்டாய இலவசப் படிப்பு வேண்டியதில்லை; கல்வி மானியம் குறைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்...

இந்த லட்சணத்தில் இந்தித் திட்டம் எதற்காக? சுத்தத் தமிழ் - நல்ல அழகிய தமிழ் - பிறவித் தமிழ் - தினமும் பேசும் பாஷை நமக்கு சௌகரியமாக இருக்கும் போது, அதிலும் படித்த மக்கள் 100க்கு 8 பேரே தான் இருக்கிற நிலையில், இந்தி வந்தால் என்னவாகும்? ல, ழ, ள எழுத்து களுக்கு வித்தியாசமே நம்ம ஆட்களுக்கு இன்னமும் சரியாகத் தெரியவில்லை. பள்ளிக்குப் படிக்கவரும் நம் பிள்ளைகளைப் பார்த்து “உனக்குப் படிப்பு வராது வீட்டுக்குப்போய் வண்டியோட்டுகிறவன் மகனாயிருந் தால் வண்டியோட்டு; உழுகிறவன் மகனாயிருந்தால் உழு” என்றெல்லாம் சொல்லி விரட்டிவிட்டு, இப்போது மாத்திரம் இந்த இந்திக் கல்வியைக் கொண்டுவந்து அதையும் சேர்த்துக் கட்டாயமாகப் படிக்கும்படி சொன்னால் எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடியும்?

‘ஏழையைக் கெடுக்க ஒரு யானையைக் கொடு’ என்று சொல்லுவார்கள். அதுபோல் படிப்பில் மிக ஏழையாய் இருக்கும் நம் மக்களுக்கு யானை போன்ற இந்தி உயர்வாயிருந்தாலும், அது இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருமா? அவர்கள் வாயில் நுழையுமா? ஒரு எழுத்துக்கு 4 சப்தமிருக்கிற உச்சரிப்பு கடினம்; எழுத்துகள் அதிகம். 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் நம் பிள்ளைகள் இரண்டு அந்நிய பாஷைகளைப் படிக்க முடியுமா? அதில் போதுமான மதிப்பெண் வாங்க முடியுமா? இந்த இந்தி படித்து நன்றாய்த் தேர்ச்சி பெறுகிற அந்தக் காலத்திற்குள்ளே ஒருவன் பி.ஏ. பட்டதாரியாக வந்துவிடலாம்” (குடிஅரசு, 6.2.1938) என்று பேசினார். தந்தை பெரியாரின் தமிழர் நல நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். - தொடரும் keetru.com december 2013