திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? – 17

07 03 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? – 17
வாலாசா வல்லவன்

இராசாசி 1938 ஏப்பிரலில் கட்டாய இந்தி ஆணை பிறப்பித்தவுடன் தந்தை பெரியாரின் குடிஅரசு இதழும் விடுதலை நாளேடும் தான் போர்வாளாகச் செயல் பட்டன. தமிழக இளைஞர்களைப் போர்க்களத்திற்கு முரசறைந்து அழைத்தன என்பது தான் கடந்த கால வரலாறு. சென்ற சிந்தனையாளன் இதழ் கட்டுரைத் தொடர் எண்.16இல் எப்படிப்பட்ட இளைஞர்கள் போராட்டத்திற்குத் தேவை என்பதை 8.5.1938 குடி அரசில் தலையங்கம் தீட்டப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக இங்கே மறுவெளியீடு செய்யப்படுகிறது. மாண வர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும், சைவ மடாதிபதிகளையும் அறைகூவல் விட்டு அழைத்தது.

“கோடை விடுமுறை முடிந்தவுடன் இந்தி கட்டாயப் பாடமுறை அமுலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதைiயும் அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும். தோழர்கள் எஸ்.எஸ்.பாரதியார், உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர் களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்.

சிறைபுகுவது அற்ப விஷயம் :

தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்குச் சிறை செல்லுவது என்பது மிகச் சாதாரண காரியமாகும். அதுவே கடைசிக் காரியமாகவும் கருதிவிடக் கூடாது. ஆச்சாரியார் அதைச் சுலபத்தில் கையாள சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராய் இருந் தால் மட்டும் போதாதா? என்று எண்ணிவிடக் கூடாது. சிறை செல்லுவது ஒரு அற்பக்காரியமேயாகும். அதில் யாதொரு கஷ்டமோ, நஷ்டமோ கிடையாது. அதை மூன்றாந்தரக்காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும் பொறுப்பாளிகளும் அடிபடவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் போராடக் கருதுவது நெஞ்சிரக்கமற்ற மறத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொரு வினை ஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராட எவ்வித இழிவான காரியத்தையும் செய்யத் துணிபவர்களும் சூழ்ச்சியில் திறமை உடையவர்களு மான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ் வொரு எதிர்ப்பாளனும் மனத்தில் இருத்த வேண்டும். இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து அதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் அய்யம் இல்லை.

இளைஞர்களுக்கு வேண்டுகோள் :

இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரை இந்தி எதிர்ப்புப் போருக்கு “நான் தயார்” “நான் தயார்” நானும் என் மனைவியும் தயார், “உண்ணாவிரதத்திற்குத் தயார்”, “உயிர் விடத் தயார்” என்பதாகத் தெரிவித் துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்டஜீவனம் நடத்தவும், அடிபடவும், இராப் பட்டினி கிடக்கவும், தொலை வழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர் முனைச் சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடிபணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.

பெரியோர்களுக்கு விண்ணப்பம் :

பெரியோர்களே! முன்மாதிரி காட்ட வாருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்குப் புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை வாழ்க்கைக்குக் கருதப்படும், மானம் அபிமானம் வேறு; பொது நலத் தொண்டுக்குக் கருதப்படும் மானம், அபிமானம் வேறு என்பதை மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங் களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய்க் கருதுங்கள். உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள், அடிச்சுவட்டைப் பாருங்கள். வீர இளை ஞர்களுக்கு நீங்கள் வழிகாட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடி வைக்கும் போதும் ஞாபகத்தில் வையுங்கள்.

செல்வர்களுக்கு ஒரு வார்த்தை :

தமிழ்ச் செல்வர்களே உங்களுக்கு ஒரு விண் ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா? இறப்பதா? என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும் பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு (கோபம்) கொள்ளாதீர்கள். நடந்தது நடந்துவிட்டது. அதைப் பரிகரிக்க உங்களால் செய்யக் கூடியது, நீங்கள் மானத்திலும் உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தைத் தாராளமாக இக்கருமத் திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.

பொது மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம் :

பொதுத் தமிழ் மக்களுக்கு ஒரு மாபெரும் விண்ணப்பம். தமிழ்த் தோழர்களே! இந்த 50 வருட காலத் தில் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி யல்ல; வருணாச்சிரம புரோகித ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும், தமிழ் மக்களை விலங்குகளாக்கு வதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதைவிட மடிவது மேலான காரியமாகும். ஏதோ விளக்க முடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களும் நாமும் நம் பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சிப் போராக, முயற்சியாகக் கருதுங்கள். உங்கள் சௌகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவுகளையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களைப் போருக்குக் கச்சைகட்டி விரட்டி அடியுங்கள்.

மடாதிபதிகளுக்கு மன்னிப்பு :

தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே! நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்துவிடுகிறோம். இந்தச் சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களா லான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ் நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதை விட வேறு தக்கசமயம் இனி சுலபத்தில் கிடைக்காது. ஆகவே பொது மக்களே, இளைஞர்களே, தயாரா குங்கள்; முன்வாருங்கள் ஒரு கை பாருங்கள். இப்படி, அனைத்துத் தரப்பு மக்களையும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைத்தவரே பெரியார்தான். சுய மரியாதை இயக்கம்தான் தமிழ் மக்களுக்கு உணர்ச் சியை ஊட்டி இந்தி எதிர்ப்புப் போரில் குதிக்க வைத்த பெரியாரைப் பார்த்துத்தான், இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் “இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் அறிஞர் களால் நடத்தப்பட்டது. பெரியார் இடையில் வந்து சேர்ந்துகொண்டார்” என்று அப்பட்டமான பொய் யையே திரும்பத் திரும்ப எழுதுவது என்ன நியாயம் என்றே தெரியவில்லை. - தொடரும் keetru.com feb 2014