திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? – 18

14 03 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 18
வாலாசா வல்லவன்

தந்தை பெரியாரின் குடிஅரசு 1938 மே மாதம் முதல், வாரந்தோறும் - கடுமையான அதே நேரத்தில் தமிழர்களுக்கு வீரமும், உணர்ச்சியும் ஏற்படுத்துகின்ற அளவுக்கு மிகக் கோபக்கனலைக் கொட்டுகின்ற தலையங்கங்களைத் தீட்டி வந்தது. 1938 மே மாதம் 15ஆம் நாள் குடிஅரசு இதழில், ‘நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி’ என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில், தமிழ் இனத்திற்குக் கேடு செய்யும்; துரோகம் இழைக்கும் தமிழர்களைக் கண் டனம் செய்தது. அத்தலையங்கத்தின் ஒரு பகுதி இங்கே மறுவெளியீடு செய்யப்படுகிறது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்

“தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்றுப் பெரிய மனிதனாக உள்ள மக்களில் பெரும்பா லோர் இன்று நம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழிநிலைக்கு வந்துவிட்டார்கள். நாம் தமிழர், தமிழ் மக்கள் சந்ததி என்கின்ற சாக்கைச் சொல்லி உத்தியோகம் பெற்று, பணம் தேடி, அதனால் தங்களது பிள்ளைகளுக்கும் குட்டிகளுக்கும் உத்தியோகமும், மேன்மையும் தேடிக் கொண்ட தமிழ்மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம்மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டும் அறியாதவர்போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலைச் சூப்பிக் கொண்டு தனது வாழ்வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட் டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி

அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்ளின் வாக்குகளைப் பெற்றுப் பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள், இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண்புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்கக் கத்தி தீட்டிக் கொடுப்பதற்கான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால் தமிழ் மக்கள் இதுசமயம் சக்தியற்று, நாதியற்றுக்கிடக்கிறார்கள் என்பதற்கு இதை விட என்ன எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்கிறோம்.”

தந்தை பெரியாரின் குடி அரசு ஏடு அன்றைக்கு எழுப்பிய கேள்வி இன்றுவரை நிதர்சனமாக நூற்றுக்கு நூறு அப்படியே உள்ளது. அன்று இந்தி எதிர்ப்பின் போது இருந்த அதே நிலை, இன்று ஈழத் தமிழர் பிரச்சனையின் போதும் இருக்கிறது. அன்றைக்குப் பெரியார் ஓட்டு வாங்கிகளைப் பற்றிச் சொன்னவை அனைத்தும், இன்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழன் பேரைச் சொல்லி ஏமாற்றும் அத்தனைக் கட்சிகளுக்கும் அப்படியே பொருந்தும். என்ன ஒரு வித்தியாசம் என்றால், அன்றைக்கு வெற்றி பெற்றுச் சென்றவர்கள் தமிழர்க்குத் துரோகம் செய்து தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டார்கள். இன்று தங்கள் தொழிலைப் பெருக்கிக் கொண்டார்கள், அவ்வளவு தான் வேறுபாடு. இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. மேலும் அத்தலையங்கத்தில் பெரியார் எழுதுகிறார்:

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?

மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளையும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக்காட்டுவோம். இனி அடுத்தாற்போல் தமிழன் என்ற காரணத்தால் உத்தியோகம் பெற்று மேம் பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும், இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும், இன்று இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் நினைத்துப் பாருங்கள். அதைப் பற்றியும் பின்னால் எழுதுவோம். இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்குப் பிரதி நிதியாய், பார்ப்பானுக்கு, காங்கிரசுக்கு எதிர்க்கட்சி யில் இருப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதை தான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம். இப்படியே தமிழுக்குத் துரோகம் செய்தவர்களையெல்லாம் பட்டியலிடுகிறார் பெரியார்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?

“வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ்மக்களுக்கு இந்தியாலும், வார்தாக் கல்வித் திட்டத்தாலும் ஆபத்து இல்லை; கேடில்லை. தமிழன் மனிதத்தன்மையோடு வாழுவதற்குத் தடையில்லை என்று எந்தத் தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே, எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும், வார்தாக் கல்வித் திட்டமும் தமிழனுக்குக் கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாய் ஒப்புக்கொண்டாய்விட்டது. இந் நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக்கொடுமையி லிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன்வருகிறார் கள்? என்று கேட்கின்றோம்.” நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சர்களாய் இருந்தவர் களையும் பெரியார் விட்டுவைக்கவில்லை. இந்தி எதிர்ப்புக்கு அவர்களின் பங்களிப்பு இல்லை என்பதைக் கூறி அவர்களையும் கண்டித்திருக்கிறார். மேலும், காங்கிரசில் உள்ள தமிழர்களின் செயல்களையும் பெரியார் வன்மையாகக் கண்டிக்கிறார்.

காங்கிரஸ் தமிழர்களின் நிலை என்ன?

“தேசத்திற்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங்கிரஸ் தான்” என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனர்களுடன் சேர்ந்துக்கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர்குலையச் செய்யச் சம்மதித்துப் பார்ப்பனர்களைத் தஞ்சமடைந்து வயிறு வளர்க்கும் தமிழ் மக்கள் தானா கட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடி யான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்.”

தமிழன் செய்ய வேண்டியதென்ன?

தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றித் தீவிர யோசனை செய்ய வேண்டும். இந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதையும், தாங்கள் யோசனை செய்வதற்குமுன் மனத்திலிருத்திக்கொள்ள வேண்டும். பார்ப்பனியக் கொடுமையில் இருந்து நாமும், நமக்கு பின் சந்ததிகளும் தப்புவதற்காகச் செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதிச் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படிச் சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ்மகனும் தனது தன்மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

தமிழர் விடுதலை பெற வேண்டுமானால்?

இந்த இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டுப் புதிய சுதந்தர அறிவு ரத்தம் பாய்ச்சப்பட்டாக வேண்டும். ஏனெனில், பார்ப்பனியம் இன்று இந்தியைத் தமிழ் மகக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதின் உண்மைக் கருத்து என்னவென்றால், அரசியலுக்காக அல்ல; பொருளியலுக்காக அல்ல; அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்காக அல்ல. இவைகளுக்காக என்று சொல்லுவதும், நம்மைக் கருதும்படிச் செய்வதும் நம்மை ஏமாறச் செய்வதற்காகவே யாகும்.

இந்திப் புரட்டின் அந்தரங்க நோக்கம்

மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால், இன்று தமிழ்மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியைத் தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி, அதைக் கெட்டிப்படுத்திப் பார்ப்பனியத்துக்குத் தமிழ் மக்களைப் புராணக் காலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். பெரியாரின் இந்த தீர்க்கதரிசனம் நூற்றுக்கு நூறு உண்மையானதாகும். அதனால்தான் உ.வே. சாமிநா தய்யர் உட்பட எல்லா பார்ப்பனர்களும் இராசாசியின் கட்டாய இந்தித் திணிப்பை ஆதரித்தார்கள். (தொடரும்) keetru.com mar 2014