மறுபக்கம்

thinakkural.lk 02 03 2014 

ஜெனீவா திருவிழா நெருங்க நெருங்க நமது அரசியற்கட்சி கட்கும் அவற்றை விட முக்கியமாக நமது ஊடகத் துறையினருக்கும் ஆவேசம் மிகுந்து வருகிறது. அநேகமாக ஐ.நா. மனித உரிமைகள் கழகத்தில் எத்தகைய தீர்மானம் முன்வைக்கப்படும் என்றோ அது நிறைவேறுமா நிறைவேறாதா என்பதையிட்டோ பல் வேறு தரப்பினருக்கும் அதிகம் ஐயமில்லை. தீர்மானம் எவ்வளவு கடினமாயிருந்தாலும் அது இப்போதைக்கு இலங்கை மீதான பொருளாதாரத் தடையாகவோ இலங்கை மீது திணிக்கக் கூடிய சர்வதேச விசாரணையாகவோ அமையாது என்பதற்கான சாடைகள் வலுவானவை.

எனவே, இலங்கை அரசாங்கத்தினதோ அதன் ஆதரவாளர்களதோ விருப்பங்களையும் கடும் பிரயத்தனங்களையும் தமிழ்த்தேசியவாதிகளதும் அவர்களுடைய புலம்பெயர்ந்த மேட்டுக் குடிக்கூட்டாளிகளதும் இறைஞ்சுதல்களையும் பிற வெற்று வேட்டுத்தனமான கதைகளையும் பற்றிய கணிப்பேதும் இல்லாமலே மேற்குலகு அதாவது “சர்வதேச சமூகம்’ தனது நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுகிறது. உடனடியாக எவ்விதமான ஆபத்து இல்லாவிடினும் அரசாங்கத்தால் மேற்குலக அழுத்தங்களை அப்படியே அசட்டை செய்ய இயலாது. ஏனெனில், இலங்கையின் முக்கிய ஏற்றுமதி வருமானம் மேற்குலகிலிருந்தே கிடைக்கிறது. குறுகிய காலத்தில் என்ன நடக்கும் என்பதை மேற்குலகு இலங்கையில் எத்தகைய முதலீடுகளைக் செய்கிறது; எத்தகைய விருத்திகளை ஊக்குவிக்கிறது; யார் யார் பெரிய கடன்களை வழங்குகிறார்கள் என்பவற்றைப் பார்த்து ஓரளவுக்கு மதிப்பிடலாம். எவ்வாறாயினும், இவையெல்லாம் இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் இலங்கையை எதிர்காலத்தில் எவர் ஆண்டாலும், மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள கடன் சுமையும் நாட்டின் பொருளாதார முனைப்பும் இலங்கையின் சுயாதீனமான இருப்பிற்குப் பகையானவை. எனவே, ஒவ்வொருவரும் தத்தமது குறுகிய எல்லைகட்குள் நின்றுகொண்டு, எங்கேயோ யாரோ ஆடுகிற ஆட்டத்தைப் பற்றித் தங்களுடைய அகச்சார்பான எதிர்பார்ப்புகளை முன்வைத்து சண்டையிடுவதால், நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மையில்லை.

 ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் அதனால் இலங்கையின் எந்தத் தேசிய இனத்திற்கும் நன்மையில்லை. அதைத் தெரிந்தோ தெரியாமலோ பேரினவாதிகளும் குறுந்தமிழ்த் தேசியவாதிகளும் நாட்டை ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் தள்ளுகிற வேலைகளையே செய்து வருகிறார்கள். எனினும் இரண்டு பக்கமும் மக்கள் கொஞ்சம் விழிப்புறத் தொடங்கியுள்ளனர். அது பேரினவாதிகளது இருப்பிற்கு மிரட்டலாகலாம். குறுந்தேசியவாதத் தலைமைகளின் இருப்பிற்கும் மிரட்டலாகலாம். எனவே, மக்கள் தங்களுடைய பிரச்சினைகளைப் பேசுவதை இரு தரப்பினரும் விரும்ப நியாயமில்லை. தங்களுக்கு உடனடி அரசியல் இலாபம் கிட்டா எந்த விடயத்திலும் அவர்கள் தலையிடாததோடு, எந்தப் பிரச்சினையும் தங்கள் கையை மீறி வளர்ந்து மக்களை அரசியல் செயலூக்கமுடையோராக மாற்றும் என்று நினைத்தால் உடனேயே குறுக்கிட்டுத் திசைதிருப்பவும், தயங்க மாட்டார்கள் என்பதை அண்மைய நிகழ்வுகள் நினைவூட்டியுள்ளன. மறுபுறம், அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி எப்போதுமே அஞ்சி வந்துள்ளது. இன்று மேற்குலகின் நெருக்குவாரங்களில் ஊடகச் சுதந்திரமும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் முக்கியமான விடயங்களாக உள்ளன. அண்மையில் ஊடகவியலாளர்கள் மீதான நேரடித் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதென்றாலும் அவை தொடர்ந்தும் நடக்கின்றன. வெலிவேரியவில் நன்னீருக்காக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, முதலில் இலக்கு வைக்கப்பட்டோர் ஊடகவியலாளர்களே. குடாநாட்டில் இப்போதும் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் கடும் நெருக்குவாரங்கட்குட்பட்டே இயங்குகின்றன.  

அரசாங்கத்தைப் பொறுத்தவரை மின்னியல் ஒலிஒளி ஊடகங்கள் பெருமளவும் அதன் கட்டுப்பாட்டிலேயே செயற்படுகின்றன. பம்மாத்தான சில விமர்சனங்களை விட்டால், போர் மீண்டும் தொடங்கிய பின்பு மின்னியல் ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதைப் படிப்படியாக குறைத்துப் போரின் முடிவோடு ஏறத்தாழ நிறுத்திவிட்டன. அச்சு ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்து இடையிடையே கருத்துக்கள் வந்தாலும், அவை சில விடயங்களில் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்புவதில்லை. முக்கியமாகத் தேசிய இனப்பிரச்சினையில் சிங்கள ஆங்கில நாளேடுகள் பேரினவாத நிலைப்பாட்டுடனேயே உள்ளன. அதைவிடத் தீவிரமாக, அரசாங்கம் போர்க்குற்றங்கள் பற்றி எடுத்துள்ள நிலைப்பாட்டை எவ்வகையிலும் விசாரித்து விமர்சிக்க அவை ஆயத்தமாக இல்லை. சனல்4 தயாரித்தளிக்கும் காணொளிகளின் நோக்கங்களைப் பற்றி நம்முள் ஐயங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் உள்ள சாட்சியங்கள் உண்மையற்றவை என்று கூற ஊடகத்துறையில் உள்ள எவருக்கும் இயலுமா? போலி ஆவணமொன்றிற்கும் உண்மையானதற்கும் வேறுபாடு தெரியாமல் நமது ஊடகத்துறையினர் உள்ளனர் என்று நம்ப நான் மிகவும் அஞ்சுவேன். என்னுடைய கருத்தில், அரசாங்கம் மட்டுமல்லாமல் நமது ஊடகத்துறையும் பெருமளவுக்கு உண்மைகளை அஞ்சுகிறது. 

தினக்குரல் மாதுளுவாவே சோபித தேரரின் நேர்காணலை வெளியிட்டு மூன்று வாரங்கள் கழித்தே அது பற்றி ஆங்கில, சிங்கள ஏடுகள் தகவல் தெரிவித்தமை நமது கவனத்துக்குரியது. ஆங்கிலத்தில் எழுதிய ஒருவர் அந்த நேர்காணலே அண்மைய இலங்கை அரசியலில் அதி முக்கியமானதும் தரமானதுமான நேர்காணல் என்று மெச்சியிருந்தார். அது எனக்கு முற்றிலும் உடன்பாடானது. அந்தக் குறிப்பு வெளியான பின்பே, வேறுவழியின்றி, அந்த நேர்காணலைப் பற்றிய குறிப்புகள் தென்னிலங்கை ஊடகங்களில் வெளிவந்தன. அது ஏனென்று விசாரித்தால் நமது ஊடகங்களின் உளவியல் கொஞ்சமேனும் விளங்கும். தேரர் சனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பொது வேட்பாளராகத் தேர்தலில் நிற்கத் தான் ஆயத்தம் என்று அறிவித்த நாள் முதலாக, அவர் கூறுகிற விடயங்களுக்கு ஊடகங்கள் முக்கியம் வழங்கின. ஆனால், அவர் தனது தமிழ் ஊடக நேர்காணலில் தான் முன்பு சொல்லியிராத ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். அது மிகவும் தைரியமானதொரு கூற்றாகும்.

இலங்கை அரசாங்கம் இங்கு போர்க்குற்றங்கள் நிகழவில்லை என்று கூறுகிறது. போர்க்குற்றங்கள் நிகழவில்லை என்றால் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக்கு ஏன் தயங்க வேண்டும் என்ற அடிப்படையில் போர்க்குற்ற விசாரணையை ஏற்பதாக அவர் கூறியதை நமது சிங்கள, ஆங்கில ஊடகத்துறையினரால் சீரணிக்க இயலவில்லை என்பதை விட வேறு காரணத்தைத் தேடுவது கடினம். இத்தகைய ஒரு சூழலிலேயே இணையத்தளம் அரசாங்கத்திற்கு ஒரு மிரட்டலாகத் தெரிகிறது. எல்லாரும் இணையச் சஞ்சிகைகளைப் பார்க்கிறார்கள் என்று கூறும் நிலையை நாம் எட்ட நீண்டகாலமாகும். ஆனால், செய்திகளும் வதந்திகளும் வேகமாகப் பரவுவதற்கு ஏதுவான ற்விற்றர், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் துரிதமாகப் பரவி வருகின்றன. அது மட்டுமன்றி அவற்றை நவீன கைத் தொலைபேசிகள் மூலமும் அடையக்கூடிய நிலையில், தகவல்களைப் பகிர்வதும் பரவுவதும் மிக எளிதாகியுள்ளது. ற்விற்றர் இந்தியாவில் இனத்துவேஷத்தைக் கிளறப் பயன்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

பேஸ்புக் காதல்கள் இங்கு தற்கொலைக்கு இட்டுச் சென்றுள்ள என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இவை ஒரு சமூக நோயாகுமளவுக்கு வலுக்கவில்லை. இணய வழித் தொடர்பாடல்கள் அனைத்திலும் பலவாறான மக்கள் அறியாத அபாயங்கள் உள்ளன. அவை பற்றி மக்களை எச்சரிக்க வேண்டும், அதைவிடுத்து அரசாங்கம் ஃபேஸ்புக் தடை பற்றிப் பேசுவதன் நோக்கம் வேறு. ஃபேஸ் புக் துஷ்பிரயோகம் பற்றி அரசாங்கத்தினதும் சில ஊட கங்களதும் தீவிரமான கவலை குறுகிய நோக்கங்களால் வழி நடத்தப்படுகிறது. ஃபேஸ் புக் பற்றிய அரசாங்க அச்சம், சனநாயகம் பற்றிய அதன் அச்சத்தின் ஒரு முனைப்பான வெளிப்பாடு என்பதே உண்மை.அரசாங்கம் மிகவும் அஞ்சுவது ஜெனீவாத் தீர்மானத்தையல்ல. மக்கள் உண்மைகளை அறிவதையே அது மிக அஞ்சுகிறது