சுயமரியாதை - 7 இடங்கை - வலங்கை

19 03 2018

சுயமரியாதை - 7 இடங்கை - வலங்கை

பெரியாருக்கு முன்பும் கடவுள் மறுப்புக் கோட்பாடுகள் இருந்துள்ளன என்றாலும், அவற்றிற்கும், இதற்கும் வேறுபாடு உண்டு என்பதைப் பார்த்தோம். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது ஜாதி மறுப்பையும், சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதையும் பார்த்தோம். ஆனால் ஜாதி மறுப்பும் கூடப் பெரியாரிடமிருந்துதான் தொடங்கிற்று என்று சொல்ல முடியாது. அவருக்கு முன்பும் அது குறித்த செய்திகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலேயே வருணப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொருளதிகாரம், மரபியலில் உள்ள பல நூற்பாக்கள் வருணம் பற்றிப் பேசுகின்றன.

"நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க் குரிய"

என்னும் நூற்பா தொடங்கிப் பல நூற்பாக்களில் அரசன், வைசியன், உழுதூண் மக்கள் போன்ற சொற்களைக் காண முடிகிறது. இவையெல்லாம் இடைச் செருகல் என்று கூறும் தமிழ் அறிஞர்கள் உள்ளனர். அவர்களின் கூற்று ஏற்கத் தக்கது எனினும், முடிந்த முடிவன்று. பிற்காலத்தில் சித்தர்கள் சாதி அமைப்பையும், பார்ப்பனியத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார். சிவவாக்கியார் அத்தகைய கடும் தாக்குதல்களைத் தம் பாடல்களில் தொடுத்துள்ளார். "பணத்தி யாவது ஏதடா, பறைச்சி யாவது ஏதடா?" என்று கேட்கிறார். "எச்சில் அசுத்தமானது என்றால், எச்சில் உள்ள வாயில் குதப்பிக் குதப்பிக் கூறப்படும் வேதம் எப்படிப் புனிதமாகும்?" என்பதும் அவருடைய கேள்விதான்.

இடைக்காலத்தில் எழுந்த பக்தி இயக்கம், வருணம், சாதி போன்றவைகளைக் கடந்து மக்கள் அனைவரையும் பக்தியாலும், இசையாலும் இணைக்க முயற்சித்தது. ஆனால் அதனையும் முழுமையான சமத்துவக் கோட்பாடு என்று கூற முடியாது. அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் பாடல் ஒன்றை அடிக்கடி பலரும் சமத்துவக் கோட்பாட்டிற்கான எடுத்துக் காட்டாகக் கூறுவர் .

"ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே"

என்பார் அப்பர். மிக உயர்வான சிந்தனை என்று சொல்லப்படும் இப்பாடலில் கூட, எண்ணிப் பார்த்தால் இரண்டு சிக்கல்கள் உள்ளன. "புலையரேனும்" என்னும் சொல்லில் உள்ள 'உம்' என்பது, தமிழ் இலக்கணத்த்தின்படி இழிவும்மை என்ற பெயர் கொண்டது. அதாவது, ஒருவரை இழிவு படுத்தக் கூடியதே அந்தச் சொல். அது மட்டுமின்றி, அப்பரின் சமத்துவக் கோட்பாடு, ஒரு நிபந்தனைக்கு உட்பட்டதாகவும் உள்ளது. சிவபெருமானை ஏற்றுக் கொண்டால்தான், அப்பர் அவர்களை ஏற்றுக் கொள்வார் என்பது தெரிகிறது. சிவனை ஏற்றுக் கொள்ளாத ஒருவர் ஒடுக்கப்பட்டவராக இருந்தால், அவரை அப்பர் சமமாக ஏற்க வாய்ப்பில்லை. சமத்துவம் என்பது எந்த நிபந்தனைக்கும் உட்பட்டதில்லை என்பதை நாம் முதலில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்! மேலும் அது யாருடைய ஏற்பிசைவிற்காகவும் காத்திருப்பதில்லை. இவை போன்ற எல்லாக் கருத்துகளையும் தாண்டி, இந்தியச் சமூகமும், தமிழ்ச் சமூகமும் இன்று வரை ஏற்றத் தாழ்வு உள்ள சமூகமாகவே உள்ளது என்பதுதான் நாம் காணும் நடைமுறை.. இடையில், 10ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில், இடங்கை-வலங்கைச் ஜாதிகள் என்னும் இரு பிரிவுகள் திடீரென்று தோன்றி ஆயிரம் ஆண்டுகள் அவை நிலைத்திருந்தன.

18ஆம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்த ரெங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பில், கீழ்க்காணுமாறு குறித்துள்ளார்: "மொத்தத் தமிழ் மக்களும் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல, முதல் இரண்டு வருணத்தாரே சகல அந்தஸ்துகளையும், அதிகாரங்களையும் உடையவர்களாக இருந்தனர் என்பது மட்டுமல்ல, வைசியர்கள், சூத்திரர்கள், சண்டாளர்கள் ஆகியோர் இடங்கை, வலங்கை என இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு மோதிக் கொண்டிருந்தனர். அப்படி இருக்கும்படி செய்யப்பட்டிருந்தனர். அதில் குளிர்காயும் மத்தியஸ்தர்களாக முதல் இரண்டு வருணத்தவர் இருந்தனர்." (தொடரும்)subavee blog aug 2016