மறுபக்கம் 04 05 2014

thinakkural.lk 04 05 2014

மறுபக்கம் 04 05 2014

தமிழர் தேசியக் கூட்டமைப்பினரிடமிருந்து முத்தான தகவல்களும் சத்தான கருத்துகளும் எப்போதேன் வருவதுண்டு. ஆனால், அவர்கள் அவற்றால் பயன் பெறுவதில்லை என்பது வருந்தத் தக்க உண்மை. சில நாட்கள் முன்பு, வட மாகாண முதலமைச்சர் நாம் பிறரிடமிருந்து இலவசமாகப் பொருள் பெறுவதிற் தங்கியிருப்பதன் தவறு பற்றியும் மாணவர்கள் பரீட்சைக்காக மட்டுமே கற்பதன் தவறு பற்றியும் விரிவாகப் பேசியிருந்தார். அவருடைய கருத்துக்களுடன் நான் மிகவும் உடன்பட்டேன். எனவே, அவர் சொன்னவற்றைத் தமிழ்ச் சமூகத்தின் வேறு துறைகட்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றியது.

இப்போது தமிழ் மக்களின் விடுதலைக்கும் அதைப் பற்றி நிச்சமில்லா விட்டால் அவர்களின் சில பல உரிமைகட்கும் நமது மக்கள் பிறரிடமிருந்து உதவியை நம்பியிருப்பது சரியென்று வடமாகாண முதலமைச்சர் சொல்லமாட்டாரென நினைக்கிறேன். ஏனெனில், அவருடைய கூற்றின் தர்க்கம் அதற்கு இடமளிக்காது. ஆனாலும், நம்முடைய தலைவர்கள் எல்லாரும் என்ன சொல்லுகிறார்கள்? சர்வதேசம், ஐ.நா. இப்போது நரேந்திர மோடி என்று நமது மனவிளக்குகளிற் சுடரேற்ற எண்ணெய் என்று சொல்லி எதையோ ஊற்றுகிறார்கள். எங்கள் மன விளக்குகள் திரி எரிந்து போய்க்கிடக்கின்றன. நமது தலைவர்கள் அதில் ஊற்றுவது எண்ணெய்யுமல்ல, வேறெந்த எரிபொருளுமல்ல. அங்கே சுடர் எழுப்பப் புதிய திரியும் எண்ணெய்யும் தேவை அவற்றைப் பெற நாம் அந்நிய ஆதிக்கக்காரர்களிடம் கையேந்துகிறவர்களை நம்பியிருக்க இயலாது. மற்ற விடயம் மாணவர்கள் பரீட்சையிற் தேறுவதை விட வேறு நோக்கமின்றிக் கற்பதைப் பற்றியது. கல்வி என்பது வெறும் உத்தியோகப் போட்டியாகப் போய்விட்டதற்கு மாணவர்களை மட்டும் பழி சொல்ல மாட்டேன். எனினும், முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்றோரும் ஆசிரியர்களும் கவனிப்பது தகும். பரீட்சையிற் தேற மட்டுமே படிப்பது பிழையென்றால், பாராளுமன்ற, மாகாணசபை, பிரதேச சபை, உள்ளூராட்சித் தேர்தல்களை வென்று பதவியில் அமர்வதற்காக மட்டுமே அரசியலில் இறங்குவது சரியா? முதலமைச்சரின் ஆலோசனையையிட்டு அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் ஆழச் சிந்திப்பது நல்லதென நினைக்கிறேன்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சர்வதேசச் சமூகம் நடந்து முடிந்த போரில் யாருடைய தரப்பில் நின்றது என்று சிங்களப் பேரினவாதிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். ஒரு பெரிய நாடு விடாமல் அனைத்துமே இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பல்வேறு வகைகளிலும் உதவின என்றும் அதனாற் சிங்களப் பேரினவாதிகள் சர்வதேச சமூகம் பயங்கரவாதத்திற்கெதிரான போரை வென்றதற்காகத் தங்களைத் தண்டிக்க முயல்வதாகக் கூறுவது பொருந்தாது என்றும் மிகச் சரியாகவே சொல்லி இருக்கிறார். மேற்படி, உண்மை குறிப்பாக

இந்தியாவும் மேற்குலகும் இலங்கையின் பேரினவாத அரசிற்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்தன என்ற உண்மை, அவருக்கு இன்று நேற்றுத்தான் தெரிய வந்தது என்று நான் நினைக்கவில்லை. அந்த ஞானம் எப்போது பிறந்திருந்தாலும், மேற்குலகின் நடத்தையை அவர் எப்படி விளங்கிக் கொள்கிறாரென்பது முக்கியமானது. இந்தியாவோ மேற்குலகோ தமிழருக்கு ஆதரவாக இருக்கவில்லை என இப்போதேனும் அவர் அறிவார். போர் முடிந்த கையோடேயே அவசர அவசரமாக அமெரிக்கா ஒரு ஐ.நா. மன்ற உரிமைக் கழக விசாரணையை முடுக்கப் போய் அது கவிழ்ந்த பிறகு இப்போது அடுத்து மூன்றாவது முறையாக வெற்றிகரமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறதென்றால், அதைச் சிங்களத் தேசியவாதிகள் எவ்வாறு விளங்குவது? தமிழ்த்தேசியவாதிகள் எவ்வாறு விளங்குவது? அவர்கள் எல்லாரையும் விட, இலங்கையின் குடும்ப சர்வாதிகாரத்தின் கீழ் அல்லாடுகிற பொது மக்கள் எவ்வாறு விளங்குவது? மேற்குலகையோ இந்தியாவையோ தமிழ் மக்கள் நம்பியிருக்க முடியாது என்பதைத் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இப்போதுதான் ஏற்கிறாரென்றால், அவர் தமிழ் மக்களிடம் இவ்வளவு காலமும் சொன்னவற்றுக்கான விளக்கத்தை முன்வைக்க வேண்டும். அவர் இவ்வளவு காலமும் கண்டனுபவித்ததை நன்கு உணர்ந்தும், இனியும் மேற்குலகையும் இந்தியாவையும் நம்பியே நாம் சும்மா கிடக்க வேண்டும் என்று பரிந்துரைப்பாராகில் அதற்கான விளக்கத்தை அவர் தெளிவாக முன்வைக்க வேண்டும்.

அடுத்த இந்திய அரசாங்கம் காங்கிரஸ் தலைமையிலானதாக இராது என்று கருத்தப்படுகிற நிலையில், மோடி என்கிற ஒரு தனிமனிதரை இந்தியாவின் பெரிய ஊடகங்களும் பெரு முதலாளிகளும் இன்னொரு அவதாரமாக ஊதிப்பெருப்பித்து வந்துள்ளனர். “சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் நம்பி ஏமாந்த நாங்கள் இனி அவர்களை நம்பி ஏமாறமாட்டோம், மோடியை நம்பியே ஏமாறுவோம்’ என்று தமிழ்த்தேசியத் தலைமைகள் அத்தனையும் உறுதியாக முடிவெடுத்து விட்டன. அதற்குக் காரணங்கள் உள்ளன. த.தே.கூட்டமைப்பை பொறுத்தவரை, அவர்களுக்கு இந்தியாவை ஆளுவோர் எவரோ அவரே அவர்களையும் ஆளுவோரவர். மற்றவர்களுக்கான சைகைகள் வெகு தொலைவிலிருந்து வருவன.

ஈழத்தமிழரின் கண்ணீரில் அரசியற் படகோட்டம் விடுகிற கோபாலசாமி, ராமதாஸ், தலைமைகள் இப்போது மோடி அலையில் அள்ளுண்டு போய்விட்டன. அவர்களையும் புலம்பெயர்ந்த தமிழரின் நிதியில் அரசியல் பிழைப்பு நடத்துகிற மற்றவர்களையும் நம்புகிறவர்கள் இங்கும் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்தும் இருக்கிறார்கள். எனவே, நமது தீவிர தமிழ்த்தேசியவாதிகள் நரேந்திர மோடி என்கிற, தண்டனைக்குத் தப்பிய இனப்படுகொலையாளனை மறுத்து வாய் திறக்கப் பஞ்சிப்படுகிறார்கள்.

வியட்நாம் முதல் ஈராக்கும் ஆஃப்கானிஸ்தானும் வரை குருதிக் கறை படிந்த தனது கைகளை இப்போது சிரியாவிலும் வெனசுவேலாவிலும் உக்ரேனிலும் மறுபடி குருதியில் நனைக்கத் துடிக்கிற மேற்குலகை விமர்சிக்க வக்கில்லாத பேர்கள் தமிழ் மக்களுக்கு நடந்தது போர்க்குற்றமா அன்றி இனப்படுகொலையா என்று பட்டி மன்றம் நடத்துகிறார்கள். இம்மாதிரியாக அற உணர்வு சிறிதுமில்லாது மேற்குலகின் கூலிப்படை மனநிலையில் உள்ளவர்களையும் மக்களைப் போராட்டப் பகடைக்காயாக்குவதற்கப்பால் அரசியலிலிருந்து ஒதுக்கவே அக்கறையிருப்போரையும் மக்கள் கேள்விக்குட்படுத்தாத வரை, மக்கள் பெரிய விலையைக் கொடுத்தே தீருவர்.