சுயமரியாதை - 10 சைவம் காத்த சமரர்

09 04 2018

சுயமரியாதை - 10 சைவம் காத்த சமரர்

வள்ளலார் மீது மட்டுமின்றி, சைவ சமய விதிகளைச் சரிவரப் பின்பற்றாத சைவர்கள் மீதும் ஆறுமுக நாவலர் கடுங்கோபம் கொண்டார். சைவ ஆகம விதிகளின்படியே எல்லாம் நடக்க வேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனால்தான் "நாவலர்" என்னும் பெயரைத் திருவாவடுதுறை ஆதினம் அவருக்கு வழங்கிற்று. யாழ்ப்பாணத்திலேயே பல சைவக் கோயில்கள் ஆகம விதிப்படி செயல்படவில்லை என்பதைத் தன்னுடைய "யாழ்ப்பாணச் சமய நிலை" என்னும் நூலில் அவர் விளக்கினார்.

நாவலர் வாழ்ந்த காலம், ஆங்கிலேயர்களின் காலம் என்பதை நாம் அறிவோம். அதனால் அப்போது கிறித்துவ சமயம் விரைந்து பரவிக் கொண்டிருந்தது. கல்விக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவிய கிறித்துவ மதத்தினர் மக்களை வெகுவாகக் கவர்ந்தனர். அந்த மதத்தை எதிர்த்தும் நாவலர் அங்கு கடுமையாகப் போராடினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை, "ஆறுமுக நாவலர் சரித்திரம்" என்னும் பெயரில் எழுதியுள்ள கைலாசபிள்ளை, கிறித்துவ மதம் குறித்த நாவலரின் பார்வையை வெளியிட்டுள்ளார்.

"பள்ளிக்கூடங்களை வைத்து பிழைப்புக்கேற்ற இங்கிலிஷ் பாஷையை உத்தியோகம் வாங்கித் தருகிறோம் என்று சொல்லிப் படிப்பித்துப் பலரை கிறிஸ்தவராக்கினார்கள். சிலரை சோறு சீலை கொடுத்துக் கிறிஸ்தவராக்கினார்கள். சிலரைக் கல்யாணச் செலவு கொடுத்து கிறிஸ்தவராக்கினார்கள். கீழ்சாதியா உள்ளவர்கள் சிலரை மேல் சாதியாரோடு சமமாய் இருக்கச் செய்வோம் என்று சொல்லி கிறிஸ்தவராக்கினார்கள்.சைவ சமயத்தை மிக இகழ்ந்து பிரசங்கங்களை செய்தார்கள். பத்திரிகைகளும் எழுதி பரப்பினார்கள். யாழ்ப்பாணத்தை முழுதும் பிடித்து விட்டோம் என்று ஓதுதற்கு வெற்றிச் சங்கை கையில் எடுத்தார்கள்."

பேராசிரியர் ந.முத்துமோகன் எடுத்துக்காட்டியுள்ள நாவலரின் மேற்காணும் வரிகள், கிரித்த்துவ மதத்தின் மீது நாவலர் கொண்டிருந்த சினத்தை நன்கு எடுத்துக் காட்டுகிறது. அதே வேளையில், கிறித்துவர்களின் வழியையே தானும் மேற்கொண்டு மக்களை மாற்றிவிட முடியும் என்று அவர் கருதினார். 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே அவர் கல்விக் கூடங்களைத் தொடங்கினார். அவை ஒரு விதத்தில் சைவ வித்தியாலயங்களாகவும் இருந்தன. அவர்களைப் பின்பற்றி, 'சமயச் சொற்பொழிவுகள்' என்னும் ' பிரசங்க' வடிவத்தையும் முன்னெடுத்தார். சைவ சமயம் தொடர்பான பல துண்டறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் சைவ மதத்தைப் பரப்பினார்.

யாழ்ப்பாணத்துச் சைவர்கள் அவரைக் கொண்டாடினார்கள். ஆறுமுக நாயனார் என்றே அழைத்தனர். அப்பர், சம்பந்தர் வரிசையில் 'ஐந்தாம் குரவர்' என்றும் அழைத்தனர். கடல்தாண்டி வந்து, தமிழகத்திலும், சிதம்பரத்தில், 1864 ஆம் ஆண்டு 'சைவப் பிரகாச வித்தியாசாலை' என்னும் கல்விக்கூடத்தையும் உருவாக்கினார். ஆனால் சிதம்பரம் தீட்ஷிதர்களோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை.

சிதம்பரத்தில் அவர் தங்கியிருந்த நாள்களில், அங்கு ஆகம விதிப்படி அனுட்டான, ஆச்சாரங்கள் பின்பற்றப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். தீட்சிதர்கள் சிவதீட்சை பெறாதவர்கள் என்றும் அறிந்து கொண்டார். எனவே அந்நிலையைக் கண்டித்து, "சிவதீட்சை பெறாத வைதீகப் பிராமணர்கள் கையால் விபூதி வாங்குதல் கூடாது" என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் அவர்களுக்கும், நாவலருக்குமிடையே பகை உண்டாயிற்று. நாவலரால் சிதம்பரத்தில் நெடுநாள் தங்க இயலவில்லை. அவர் மயிலாடுதுறைக்கு வந்து சேர்ந்தார்.

இந்தக் கால கட்டத்திலேதான், அருட்பா-மருட்பா அறிக்கைப் போர் தொடங்கியது. அது குறித்த அனைத்துச் செய்திகளையும், அப்போது வெளியிடப்பட்ட நூற்றுக் கணக்கான துண்டறிக்கை களையும் திரட்டி ஆய்வாளர் ப. சரவணன், 1190 பக்கங்களில் "அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு" என்னும் பெரியதொரு ஆவண நூலை வெளியிட்டுள்ளார். "அந்நூல் ஒரு புலமைக் களஞ்சியம், அறிவுத் தளங்களை ஆராய முயல்வோருக்குக் கிடைத்த அரிய புதையல்" என்று பாராட்டுகிறார் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. (தொடரும்)  subaveeblog aug 17 2016