சுயமரியாதை - 12 சமூக ஆவணம்

23 04 2018

சுயமரியாதை - 12 சமூக ஆவணம்

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் உலகம் முழுவதும் குறிக்கத்தக்க பல மாற்றங்கள் நடைபெற்றன. இருண்ட உலகத்தின் மீது ஒளி படர்ந்த காலம் என்று அதனைக் கூறலாம். 1855-60 கால கட்டத்தில்தான், மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்ட பொதுவுடமைக் கட்சி அறிக்கை, டார்வினின் பரிணாமத் தத்துவம் ஆகிய இரண்டும் வெளியாயின. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின் விளக்குகள் நடைமுறைக்கு வந்தன என்றாலும், மின்சாரம் பற்றிய தேடலும், ஆராய்ச்சிகளும் 1850களில் தொடங்கி விட்டன. அறிஞர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் 1856இல் வெளிவந்தது. அது வெறும் நூல் அன்று. 'நூல்களின்' ஆதிக்கத்தைப் புரட்டிப்போட்ட சமூக வரலாற்று ஆவணம்.

கால்டுவெல்லின் நூல் இரு பெரும் செய்திகளை உலகறியத் தந்தது. இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமற்கிருதமே தாய் என்னும் இமாலயப் புரட்டை முற்றிலுமாக மறுத்தது. இரண்டாவதாக, திராவிட மொழிக் குடும்பம் என்பது, இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மை உடையது என்னும் உண்மையை நிறுவியது. அத்தகைய திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழே மூத்த மொழியும் முதன்மையான மொழியும் ஆகும் என்றும் உரத்துச் சொன்னது. அதனால்தான், தமிழர் தவிர்த்த தென் இந்தியர்கள் எவரும் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்றே கூறிக் கொள்கின்றனர். திராவிடர் என்று ஒப்புக் கொண்டால், அவர்கள் மொழியை விடத் தமிழே மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடும் இல்லையா? திராவிடர் என்னும் சொல், தமிழருக்கே பெருமை சேர்க்கின்றது என்பதால் அவர்கள் அச்சொல்லைத் தவிர்க்கின்றனர்.

இந்தச் செய்திகள் ஒருபுறமிருக்க, இதற்குள் இன்னொரு முதன்மையான வரலாற்றுக் குறிப்பும் உள்ளது. 1856இல் முதல் பதிப்பை வெளியிட்ட கால்டுவெல் அத்துடன் நிறைவடையவில்லை. தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்த அவர் தொடர்ந்து அது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். மொழி ஆய்வோடு நின்றுவிடாமல், சமூக ஆய்வையும் அதனுடன் இணைத்துக் கொண்டார். அதன் விளைவாக, 1875 ஆம் ஆண்டு அந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். இரண்டாம் பதிப்பின் முகப்பிலேயே, "திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு" (Revised and enlarged edition) என்று குறித்திருந்தார். ஆனால் அவர் மறைவுக்குப் பின் 1913 ஆண்டு வெளிவந்த மூன்றாம் பதிப்பு, சுருக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. உண்மையான, கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பு மீண்டும் அச்சிடப்படவே இல்லை. மூன்றாம் பதிப்பே மீண்டும் மீண்டும் அச்சாகி வெளியாகிக் கொண்டிருந்தது.

இரண்டாம் பதிப்பு மறைக்கப்பட்டது அல்லது சுருக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அப்பதிப்பில் அவர் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிப் பேசியிருந்தார். ஏழாவது இயலின் நான்காவது பகுதி ஆதி திராவிடர்களைப் பற்றியும், ஐந்தாவது பகுதி நீலகிரித் தோடர்களைப் பற்றியும் பேசுகின்றது. அவர்களை இந்து மதம் ஒதுக்கி வைத்துள்ளது. அவர்களும் திராவிடர்களே என்கிறார் கால்டுவெல். இங்கே இந்து மதம் என்பதே பார்ப்பனிய அல்லது வைதீகப் புராணிக மதமாக உள்ளது என்பதையும் அவர் குறிப்பிடுகின்றார். மேலை நாடுகளில் பணக்காரர், ஏழை என்னும் இரு பிரிவுகள் உண்டு. ஆனால் இங்கே ஆண்டான் , அடிமை என்னும் பிரிவுகளும் உள்ளன என்கிறார். இப்படிப்பட்ட செய்திகளையெல்லாம் உள்ளடக்கி இருப்பதால்தான் அந்தப் பதிப்பு மக்கள் மன்றத்திற்கு வரவிடாமல் தடுக்கப்பட்டு விட்டது. 133 ஆண்டுகளுக்குப் பின், மறைந்த நாமக்கல் நா.ப. ராமசாமி அவர்களின் இல்ல நூலகத்திலிருந்து இரண்டாம் பதிப்பைக் கண்டெடுத்து, பொ.வேல்சாமி, பெருமாள் முருகன், வீ.அரசு ஆகியோர் கவிதாசரணிடம் தர, அவர் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து 2008இல் வெளியிட்டுள்ளார்.

திராவிடம் என்பது வெறும் மொழிப் பெருமையன்று. சமூக நீதிச் சிந்தனையும் அதனுள் அடக்கம். கால்டுவெல் இரண்டையும் இணைக்க முயன்றார். சமற்கிருத ஆதிக்க மறுப்பு, சாதி ஆதிக்க மறுப்பு என்னும் இரண்டும் கால்டுவெல், வள்ளலார் ஆகிய இரு பெரு மக்களிடமும் இருந்தது. இவற்றோடு தந்தை பெரியார், 20ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சேர்த்துக் கொண்டார். சுயமரியாதை இயக்கம் இம்மண்ணில் பிறந்தது. (தொடரும்) subveeblog  23 08 2016