திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 27

25 04 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 27
சிந்தனையாளன்

தமிழர் பெரும்படை ஆகசுட்டு 1 அன்று திருச்சி யில் புறப்பட்டது. தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் வழி அனுப்பு விழா திருச்சி டவுன் ஹாலில் நடைபெற்றது. விழா முடிவுற்று தமிழர் பெரும்படை வீரர்கள் 101 பேரும் வரிசையாக அணிவகுத்துச் செல்லும் காட்சியை கீழே உள்ள படத்தில் காணலாம்

தமிழர் பெரும்படை புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக 31.7.1938இல் சென்னை கடற்கரையில் இந்தியை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீதிக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சர். பி.டி. ராசன் (பொன்னம்பலம் தியாகராசன்) தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கே.எம். பாலசுப்பிரமணியம், சர்.கே.வி. ரெட்டி நாயுடு, எ.பி. பாத்ரோ, முத்தையா முதலியார், என். நடராஜன், சாமி சண்முகானந்தா, சாரங்கபாணி, மறை. திருநாவுக்கரசு நாராயணி அம்மாள், சுவாமி நித்தியானந்த மீனாம்பாள் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அக்கூட்டத்தில் உரையாற்றிய கே.எம். பாலசுப்பிர மணியம் பேசும்போது “இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் சம்பந்தம் வைத்ததால் இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் சிறைக்கு அனுப்பப்பட்டு விடுவேன். அதே குற்றத்திற்காகச் சந்நியாசிகள் உட்பட பல பேர் இதுவரை சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். தலைவரும் சிறைக்கு அனுப்பப்படலாம்” என்று பேசினார். கே.எம். பால சுப்பிரமணியம் மேடையில் கூறியவாறே அவருக்கு 6.8.1938-இல் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கே.எம். பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையிலடைக்கப்பட்டபோது 8.8.1938 விடுதலையில் கே.எம். பாலு என்ற தலைப்பில் அவரைப் பற்றி மிகச் சிறந்த தலையங்கம் எழுதப்பட்டது.

“பாலு-பாலு-பாலு-ஆம் தென்னாட்டுப் பெருங்குடி மக்களான தமிழர்களின் இரு கண்மணியென விளங்கிய பாலு - பா-லு என்ற இரண்டு எழுத்துகளால் தமிழர்கள் அருமைப் பெயர் சூட்டியழைக்கும் நமது பாலு சென்ற ஆகஸ்டு 6ஆம் தேதி சனியன்று சிறைபுகுந்து விட்டார் - ஏன்? நம் அருமைத் தமிழ் அன்னையை இந்திச் சிறையிலிருந்து மீட்க நம் தாயைச் சிறை மீட்கும் முயற்சியில் முதல் முதல் சிறைபுகும் பாக்கியம் பெற்ற தோழர் பாலு இந்தி எதிர்ப்புக் காரியக் கமிட்டி மெம்பர்களில் மிகவும் அதிர்ஷ்டமுடையவரேயாவார். தமிழர் முன்னேற்றத்தில் அதிதீவிர ஆர்வங் கொண்ட இளைஞர்களில் தோழர் கே.எம். பாலு தலைசிறந்தவர். எல்லாத் துறைகளிலும் தமிழர் மிக்க கீழ்நிலையில் இருந்து வருவதையும் எங்கணும் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்திருப்பதையும் கண்ட தோழர் பாலு மிக்க மனம் நொந்து தமிழ் விடுதலைக்குப் போராட தம் வாழ்நாளை அர்ப்பணம் செய்துகொண்டார். ஒரு முதல் தர வழக்கறிஞராவதற்கு இன்றிய மையாத பண்புகள் எல்லாம் நிரம்ப அமைந்திருந்தும் அவர் வக்கீல் தொழிலில் தமது பூரண கவனத்தையும் செலுத்தவில்லை. அவர் பொது வாழ்வில் ஈடுபட்டதும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக உழைத்தார்.

திருச்சிராப்பள்ளி தென்னிந்திய நல உரிமைச் சங்கத் தலைவரிடமிருந்து அவர் ஆற்றியத் தொண்டு அபாரமானது. சமூகச் சீர்திருத்தவாதியான அவர் சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டு வெகு மும்முர மாக உழைத்தார். அவர் தலைமை வகித்து நடத்திய சுயமரியாதை மாநாடுகள் பலப்பல; சீர்திருத்த மாநாடு களும் அநந்தம். தமிழிலும் இங்கிலீஷிலும் கடல்மடை திறந்ததுபோல் நாவன்மையுடையவர். நாவன்மையு டையோர் எழுத்து வன்மையில்லாராயிருப்பதும், எழுத்து வன்மையுடையோர் நாவன்மையில்லாதாரா யிருப்பதும் சாதாரண உலக வழக்கு. ஆனால், நமது பாலு இதற்குப் புறநடை என்றே சொல்ல வேண்டும். இங்கிலீஷிலும் தமிழிலும் மேடையேறிப் பேசும் ஆற்றல் பெற்றிருந்ததுடன் இங்கிலீஷிலும் தமிழிலும் வெகு அழகாகவும் பொருளமைதியுடனும் எழுதும் திறமையும் பெற்றிருந்தார். அவர் மேட்டுக்குடியில் பிறந்த ஒரு சீரியராயிருந் தும் சாமானிய இளைஞரைப் போலவே வாழ்க்கை நடத்தி வந்தார். ஆடம்பரம் என்பது கடுகத்தனையும் அவரிடம் கிடையாது.

தோழர் பாலுவைப் போன்றோர் பலர் மேலும் முன்வரவேண்டும் என்பதே நமது ஆசை தமிழ்நாட்டிலே குறைந்தபட்சம் பத்து பாலுக்களாவது தோன்றினால் தான் பார்ப்பனத் தொல்லை ஒழியும். ஜஸ்டிஸ் சுயமரியாதை இயக்கங்கள் தோன்றிய பிறகு தரைமட்டம் அடங்கிக் கிடந்த பார்ப்பனீயம் காங்கிரஸ் ஆட்சி தோன்றியது முதல் முன்னிலும் பன் மடங்கு தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. சென்னை யிலே பார்ப்பனீயப் பேய் ஆடும் கூத்து சகிக்க முடியாத தாயிருக்கிறது. பாலுவைப் போல் நாவன்மையும் எழுத்து வன்மையும் உடையவர்கள் முன்வந்து இடைவிடாது உழைத்தால்தான் இந்த பார்ப்பனீயக் கொடுமை ஒழியும். ஆகவே தோழர் பாலுவைப் பின் பற்றி மேலும் பல தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டுமென விரும்புகிறோம். பாலு வாழ்க! பாலு பிறந்த குடி வாழ்க! தமிழ் வாழ்க! தமிழகம் வாழ்க!” என்று விடுதலை ஏடு தலையங்கம் எழுதியிருந்தது. தலையங்கத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இங்கு எடுத்துக்காட்டியுள்ளேன். இதுபோல்இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் முகமலர்ச்சியுடன் சிறைச் சென்றனர்.

இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்காக உயர்நீதி மன்றத்தில் வழக்காடியவர் நீதிக்கட்சியின் முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் ஆவார். அவர் ‘கிரிமினல் திருத்தச் சட்டம் சென்னை மாகாணத்தில் அமலில் இல்லாத போது அந்தச் சட்டத்தின்படி இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களைக் கைது செய்வது சட்டப்படி சரியல்ல’ என்று தன் வாதங்களை முன்வைத்தார். ஆனால் நீதிபதிகள் அதைப் பொருட்படுத்தாமல் இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினர். காங்கிரசார் இந்திக்கு ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அனைத்துக் கட்சி இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்ற 31.7.1938-க்கு அடுத்த நாள் 01.8.1938 அன்று சென்னைக் கடற்கரையில் ஒரு கூட்டம் நடத்தினர். இந்தி ஆதரவுக் கூட்டம் என்ற பெயரில் நடத்தாமல், காங்கிரஸ் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் நடத்தினர்.

அவர்கள் கூட்டத்திற்கு வந்த மொத்த மக்கள் தொகை வெறும் 320 பேர்தான். பெண்கள் ஒருவர் கூட இல்லை. கூட்டத்தில் சரமாரியான கேள்விகள் கேட்கப்பட்டதால், தலைவர் முத்துரங்க முதலியார் பாதியிலே எழுந்து சென்றுவிட்டார். கூட்டத்தில் இருந்த வர்களில் 250 பேர் கல்லூரியில் படித்துக் கொண் டிருந்த பார்ப்பனப் பிள்ளைகள் ஆவர் (விடுதலை 3.8.1938). இதற்கு நேர்மாறாக இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். (குடிஅரசு 7-8-38) தொடரும் ketru.com dec 2014