சுயமரியாதை - 14
07 05 2018
சுயமரியாதை - 14
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தவர்கள் இரண்டு சுப்பையாக்கள். ஒருவர் என் அப்பா காரைக்குடி ராம சுப்பையா. இன்னொருவர் சுவரெழுத்து சுப்பையா. இருவருமே பெரியார் மீது அளவு கடந்த பற்றும், மதிப்பும் உடையவர்கள். அன்றும் இன்றும் பெரியாரிடம் மாறாத பற்றுக் கொண்ட 'முரட்டுப் பற்றாளர்கள்' பல்லாயிரவர் உண்டு. அய்யா இறந்தபின்னும், நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஓரிடத்தில் பதிவு செய்துள்ளார்.
"பெரியார், கூட்டங்களில் மாலைகளைப் போடும் சடங்குகளை வீண் விரயம் என்று கூறினார். அதற்குப் பதிலாக நிதி தரும் வழக்கம், திராவிட இயக்க மேடைகளில் அறிமுகமானது. பெரியாருக்கு, மாலைக்குப் பதிலாக ஒரு ரூபாய் நிதி அளிக்கும் தோழர்கள் ஏராளம். பெரியார் மறைந்து உயிரிழந்த நிலையில் சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி அரங்கில் இறுதி மரியாதைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. நீண்ட கியூ வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து உடல் அருகே வந்து ஒரு கருஞ்சட்டைக் கிராமத்துத் தோழர் குழந்தையைப் போல் தேம்பி அழுது, தனது சட்டைப்பைக்குள் இருந்த ஒரு ரூபாய் நோட்டை எடுத்துப் பெரியாரின் காலடியில் வைத்து, 'ஐயா, மாலைக்குப் பதில் ஒரு ரூபாய்' என்று கதறிய காட்சி என் நினைவை விட்டு நீங்காத ஒன்று" என்கிறார் ராஜேந்திரன்
இப்படிப்பட்ட தொண்டர்களில் ஒருவர்தான் சுவரெழுத்து சுப்பையா. சுவர்களில் தார் கொண்டு அவர் எழுதிய எழுத்துகள் எனக்குள் பல வினாக்களை எழுப்பின. அப்போது நான் காரைக்குடியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி செல்லும் வழியில் உள்ள சுவர்களில் எல்லாம் அவருடைய 'தார் இலக்கியம்' என்னை ஈர்க்கும். "சக்தியுள்ள சாமியின் கோயிலுக்குச் சாவியும் பூட்டும் ஏன்?" என்று அவர் எழுப்பியிருந்த கேள்வி பல நாள்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டியது. நண்பர்களிடம் விவாதத்தை உருவாக்க அது வழி செய்தது. கடவுள் நம்மைப் பாதுகாப்பார் என்று சொல்கின்றனர். ஆனால் நாமல்லவா கோயிலைப் பூட்டி வைத்து அவரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது என்ற ஐயம் வரும்.
பெரியாரின் கருத்துகள்தாம். ஆனாலும், அவற்றை மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் ஊர் ஊராக மக்களிடம் கொண்டு சென்ற பெருமை சுப்பையாவைச் சேரும். "போவது யாத்திரை, போடுவது மாத்திரை" என்று எழுதி வைத்திருப்பார். யாத்திரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் என்றால் , பிறகு ஏன் அவர்கள் மாத்திரை உட்கொள்கின்றனர் என்ற வினா எத்தனை நியாயமானது. குப்பைத் தொட்டிகளையும் அவர் விடுவதில்லை. "புராணங்களை இதில் போடு" என்று குப்பைத் தொட்டிகளில் எழுதி வைத்திருப்பார்."அண்டாவில் இருந்தால் தண்ணீராம்,, அதையே கிண்டியில் கொடுத்தால் தீர்த்தமாம். என்னே பார்ப்பனர் புரட்டு" என்று அவர் எழுதி வைத்திருந்த வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளன. என்னை மட்டுமில்லை, என் போன்ற அன்றைய சிறுவர்கள் பலரையும் அவர் தன் எழுத்தால் கவர்ந்திழுத்தார். பகுத்தறிவுச் செய்திகளை பகிர்ந்தளித்தார்.
யார் அந்தச் சுவரெழுத்து சுப்பையா? அப்போது எனக்கும் அவர் குறித்து யாதொன்றும் தெரியாது. அப்பாவிடம் கேட்டபோது ஒரு சில செய்திகளை அறிந்தேன். பின்பு, 2010 ஆம் ஆண்டு, அவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவையிலிருந்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட "சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்" என்னும் நூலைப் படித்தபின்தான் அந்தக் கருப்பு கெழுவத்தியைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன். சுயமரியாதை இயக்கம் எத்தனை சோதனைகளைக் கடந்து, எத்தனை தொண்டர்களை இழந்து முன்னேறியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சுவரெழுத்துக்காரரைப் பற்றி நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். (தொடரும்) subavee blog 29 aug 2016