சுயமரியாதை - 16 அன்பிற்கும் உண்டோ....?

21 05 2018

சுயமரியாதை - 16 அன்பிற்கும் உண்டோ....?

பகுத்தறிவு என்றாலே கடவுள் மறுப்பு மட்டும்தான் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்து விட்ட காரணத்தினால்தான், அவ்விதமான கருத்துகளுக்கு இவ்வளவு எதிர்ப்பு நாட்டில் உள்ளது. கடவுள் பக்தி என்பது வெறும் நம்பிக்கை மட்டுமன்று, அதற்குள் ஒரு விதமான அச்ச உணர்வும் கலந்திருக்கிறது அதனாலேதான் அதற்குப் பயபக்தி என்றே பெயர். கடவுளை நிந்தித்தால் அல்லது மறுத்தால் கூட தங்களுக்கு ஏதும் ஆகிவிடும் என்ற அச்சம் வெகு மக்களிடையே விரவிக் கிடக்கிறது. கடவுளை நம்புதல் எளிமையானதாகவும், ஆறுதல் தருவதாகவும் உள்ளது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது, எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான் என்பன போன்ற நம்பிக்கைகள், நமக்கு வசதியாக உள்ளன. யாரும் எதையும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள், நாம்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றால் அது கடினமாக உள்ளது. எனவே கடவுள் மறுப்பு என்னும் எதிர்நீச்சலை விட்டுவிட்டுக் கடவுள் நம்பிக்கையைப் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

கடவுள் மறுப்பாளர்கள் வீட்டிலும் சிறுபான்மை, நாட்டிலும் சிறுபான்மை. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதனைத் தாண்டி இன்னொரு உண்மை இருக்கிறது. கடவுள் மறுப்பாளர்கள் சிறையிலும் சிறுபான்மைதான். ஆம், உலகில் உள்ள எந்தச் சிறையை எடுத்துக் கொண்டாலும், அங்குள்ள கைதிகளில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் அல்லது அதற்கும் மேல் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்களாகவே இருப்பார்கள். தனக்கு கடவுள் நம்பிக்கை வந்தபின், கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில்,

திருடனும் அரகரா சிவசிவா என்றுதான் திருநீறு பூசுகின்றான் சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லி சீட்டைப் புரட்டுகின்றான் முரடனும் அரிவாளால் காரியம் பார்த்தபின் முதல்வனை வேண்டுகிறான் முச்சந்தி மங்கையும் முக்காடு நீகையில் முருகனைக் கூவுகின்றாள்

என்று எழுதுவார். எனவே கடவுள் நம்பிக்கையும், பக்தியும் வாழ்வில் தவறு செய்பவர்களைத் திருத்தவில்லை என்பது தெளிவாகின்றது.நாட்டில் பக்தி கூடியுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதன் விளைவாக ஒழுக்கமும், வாய்மையும் கூடியுள்ளனவா என்று கேட்டால் இல்லை என்பதுதானே விடை! பக்தியும் கூடிக் கொண்டுள்ளது, கொலை, கொள்ளைகளும் கூடிக் கொண்டிருக்கின்றன என்பதுதானே நடைமுறை உண்மை.

எனவே கடவுள் நம்பிக்கையோடு அச்சம், தன்னலம், ஆசை ஆகியனவும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பது வெளிப்படை. 'எத்தனையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி' இறைவனை வழிபடுவோர் எத்தனை பேர்? கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் தான் துயரப்படாமல் இருக்கலாம் என்பதும், இறைவனை வழிபட்டால் எல்லா நன்மைகளும் நம்மை வந்தடையும் என்பதும் பொதுவான நம்பிக்கைகளாக இங்கு இருப்பதால் கடவுள் பக்தி இங்கு வாழ்கிறது.

இவ்வாறு மிக மிகப் பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ள கடவுள் நம்பிக்கையின் மீது கல் எறிவது அவ்வளவு எளிய செயலன்று. அதைத்தான் பெரியார் செய்தார். அதனால் அவர் காலம் முழுவதும் சொல்லடியும், கல்லடியும் பட நேர்ந்தது. மதுரை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டது. எத்தனையோ கூட்டங்களில் அழுகிய முட்டைகளும், பழங்களும் வீசப்பட்டன. கழுதைகளும், பன்றிகளும் கூட்டத்திற்க்கு நடுவே விடப்பட்டன. பெரியாரின் மீது செருப்பு வீசப்பட்டது. அனைத்தையும் தாங்கி கொண்டுதான் பகுத்தறிவுப் பனியைப் பெரியார் இம்மண்ணில் ஆற்றினார்.

"உங்களை புரிந்து கொள்ளாமல், உங்கள் தொண்டினை ஏற்றுக் கொள்ளாமல், உங்களை அடித்தும்,இழிவு செய்தும் இன்பம் காணும் இந்த மக்களுக்காக ஏன் நீங்கள் இன்னும் உழைக்கின்றீர்கள்?" என்று ஒருமுறை அய்யா பெரியாரிடம், கால்நடை ஆய்வாளர்கள் கூட்டத்தில் அவர்பால் அன்பு கொண்ட சிலர் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சற்றும் தயங்காமல் ஒரு விடையைச் சொல்லியிருக்கிறார்.

"நீங்களெல்லாம் ஆடு, மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கின்றீர்கள். அவற்றுக்கு ஊசி போடுகின்றீர்கள். அவற்றின் நன்மைக்காக நீங்கள் பாடுபட்டாலும், அவை உங்களை உதைக்கத்தானே செய்கின்றன. உதைக்கின்றன என்பதற்காக நீங்கள் விட்டுவிடுகின்றீர்களா? திரும்பத் திரும்ப வைத்தியம் பார்க்கின்றீர்கள் இல்லையா? ஐந்தறிவு விலங்குகளிடமே நீங்கள் இவ்வளவு அன்பு காட்டும்போது, நம் சக மனிதர்களிடம் நான் அன்பு காட்ட வேண்டாமா?" இவர்தான் தந்தை பெரியார்!! (தொடரும்) subveeblog 04 sep 2016