தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 111)

25 05 2018

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 111) இந்தி(யா)ரா காண் படலம் - 3 கொதித்தெழுந்த தமிழகமும் இந்திராவின் நிலைப்பாடும்

கொதித்தெழுந்த தமிழகம் இலங்கை - இந்திய அரசியல் தலைமைகளின் சந்திப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருந்தது. தமிழக அரசியல் தலைமைகளும் ஈழத் தமிழர் அரசியலை தமது அரசியலுக்கு உவப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைப்போரும் உளர். ஆயினும், தலைமைகளின் எண்ணம் எதுவாக இருப்பினும், கொதித்தெழுந்த அந்த மக்கள் எண்ணம் தூய்மையானது. அது தமது சகோதரர்கள், அல்லது பொதுவாக பலரும் குறிப்பிடுவது போல “தொப்புள் கொடி உறவுகள்” அனுபவித்த பெருந்துயரின் கொடுமை கண்டு கனன்று எழுந்த ரௌத்திரத் தீ! தமிழகத்தின் திராவிட அரசியலிலும், வாக்குவங்கி அரசியல் தந்திரோபாயங்களிலும் மு.கருணாநிதி ஒரு தகையுயர் அரசியல்வாதி என்று சொன்னால் அது மிகையோ, வெறும் புகழ்ச்சியோ ஆகாது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை ஆட்சியிலிருந்து அகற்ற, ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக எதிர்ப்பலையை உருவாக்கக் காத்திருந்த கருணாநிதிக்கு “கறுப்பு ஜூலை” ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.

ஈழத் தமிழ் மக்களைக் காக்க மத்திய அரசுக்கு எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, போதுமான அழுத்தத்தைத் தரவில்லை என்று குற்றம் சுமத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த கருணாநிதி, ஈழத் தமிழ் மக்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 1983 ஓகஸ்ட் 10ஆம் திகதி தன்னுடைய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்து, இராஜினாமாக் கடிதத்தை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் கே.ராஜாராமிடம் கையளித்தார். கருணாநிதியோடு இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் கே.அன்பழகனும் தனது இராஜினாமாக் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.

ஆனால், குறித்த இராஜினாமாக் கடிதங்கள் அதற்குரிய வகைமுறையில் அமையவில்லை என்ற தொழில்நுட்பக் காரணத்தைக் காட்டி, சபாநாயகர் கே.ராஜாராம் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். கருணாநிதியோ, அன்பழகனோ மீண்டும் உரிய வகைமுறையிலான இராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுமில்லை, அதேவேளை அவர்கள் சட்டசபைக்குச் செல்வதையும் தவிர்த்தனர். ஆகவே நடைமுறையில், சட்டசபையிலிருந்து ஒதுங்கியிருந்தனர். இதே காலப்பகுதியில் தான் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் ஆதரவாளராக அறியப்படும் பழ.நெடுமாறன் இலங்கை நோக்கிய பெரும் நடைப் பயணம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். 1983 ஓகஸ்ட் 7ஆம் திகதி தொடங்கிய அந்த நடைப் பயணத்தின் இலக்கு, இராமேஸ்வரத்தை அடைந்து அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கையை அடைதல். இந்த நடைப் பயணத்தில் ஏறத்தாழ 5,000 பேர் கலந்து கொண்டதாகச் சில பதிவுகள் சொல்கின்றன.

இந்திரா-அமீர் சந்திப்பின் தொடர்ச்சி

இவையெல்லாம் நடந்து தமிழகம் கொதிநிலையிலிருந்த போதுதான், இந்திரா-எச்.டபிள்யூ.ஜெயவர்தன சந்திப்பும் அதனைத் தொடர்ந்துஇந்திரா-அமீர் சந்திப்பும் நடைபெற்றன. இந்திரா-அமீர் சந்திப்பு பெரும் இணக்கமான சந்திப்பாகவே அமைந்தது. எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான சந்திப்புப் பற்றி அமிர்தலிங்கத்துடன் பகிர்ந்து கொண்ட இந்திரா காந்தி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபைகளைப் பலப்படுத்துவதனூடாக இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தன்னிடம் தெரிவித்ததாகவும், ஆயினும் அது மட்டுமே தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதல்ல என்று தான் சுட்டிக்காட்டியதாகவும், அதற்கு வேறு முன்மொழிவுகளை பரிசீலிக்கத் தனது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்காக சர்வகட்சி மாநாடொன்றை நடத்தவிருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் அமிர்தலிங்கம் குழுவினருக்கு தெரிவித்ததுடன், அந்தச் சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்திடம் முன்வைத்தார். இந்திரா காந்தியின் இந்தக் கோரிக்கை, அமிர்தலிங்கத்தை ஒரு தர்மசங்கடமான சூழலில் தள்ளியது. ஜே.ஆர் அரசாங்கத்துடன் பேசுவதில்லை என்ற தீர்மானத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏலவே எடுத்திருந்தது. ஆனால் இந்தியாவையும் இந்திராவையும் தமக்குச் சாதகமாக வைத்திருக்க வேண்டிய தேவையும் அமிர்தலிங்கத்துக்கு இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமது மன்னார் மாநாட்டில், ஜே.ஆருடன் இனிப் பேசுவதில்லை என்று முடிவெடுத்திருந்ததாக இந்திரா காந்தியிடம் சொன்ன அமிர்தலிங்கம், ஜே.ஆர் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார், ஆனால், ஒருபோதும் அவற்றை நடைமுறைப்படுத்த மாட்டார் என்று சொன்னவர், இந்திரா காந்தியிடம் ஜே.ஆருடனான தன்னுடைய 11 மாதகால பேச்சுவார்த்தை விளையாட்டின் கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இந்திரா காந்தியின் கோரிக்கையை மறுக்காது, அதனை ஒதுக்காது, தமது பக்க அனுபவத்தை அமிர்தலிங்கம் இந்திராவுக்கு எடுத்துரைத்ததுடன், “இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம். ஏனெனில் முன்னர் நாம் இணங்கிய விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை” என்று தனது ஆதங்கத்தை இந்திரா காந்தியிடம் முன்வைத்தார். இதனை செவிமடுத்த இந்திரா, தனக்கும் ஜே.ஆரில் நம்பிக்கையில்லை என்று சொன்னதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். ஆயினும் தான் முன்னர் சொன்னது போல இந்தப் பிரச்சினை, பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதனால், பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மறுக்கக்கூடாது என்று இந்திரா காந்தி எடுத்துரைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளையை இந்திரா காந்தி இராஜதந்திர மொழிகளில் சொன்னார் என்றும் பொருள் கொள்ளலாம்.

பூகோள அரசியலின் முக்கியத்துவம்

இந்த இடத்தில் பூகோள அரசியல் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். பூகோள அரசியல் என்றால் என்ன? உலக அரசியலில் அமெரிக்காவின் தந்திரோபாயம் பற்றிய தனது நூலொன்றில் நிகலஸ் ஸ்பைக்மன் இப்படிச் சொல்கிறார்: “அமைச்சர்கள் வந்து போகலாம்; சர்வாதிகாரிகள் கூட மரணிக்கலாம்; ஆனால் நீண்ட மலைத் தொடர்கள் அசையாது நிற்கும்” என்கிறார். பூகோளவியல் நிலைமைகளை நாடுகளால் மாற்றமுடியாது. அந்த மாற்றமுடியாத நிலைமைகள், ஒவ்வொரு நாட்டினதும் சர்வதேச உறவுகளைத் தீர்மானிப்பதிலும், வௌிநாட்டுக் கொள்கையை வடிவமைப்பதிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. “ஒரு நாட்டின் பூகோளவியலை அறிந்து கொள்ளுதல், அதன் வெளிநாட்டுக் கொள்கையை அறிதலுக்குச் சமன்” என்று நெப்போலியன் போனபார்ட் சொன்னதாகத் தனது பூகோள அரசியல் நூலொன்றில் றொபேட் டீ. கப்லன் குறிப்பிடுகிறார். சுருங்கக் கூறின், பூகோள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு, அரசியலை அணுகும் வகைமுறையைத் தான் பூகோள அரசியல் என்கிறோம். சில உதாரணங்கள் பூகோள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்த உதவும். 2014 இல் உக்ரேனின் க்ரிமியா பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்யா, அதனை ரஷ்யாவுடன் இணைத்தது. இதற்கெதிராக மேற்குலகின் கடும் எதிர்ப்பு உருவானதோடு, ரஷ்யா மீதான சில தடைகளும் மேற்குலகால் அறிவிக்கப்பட்டது. ரஷ்யா ஏன் க்ரிமியாவை தன்னுடன் இணைத்தது? பல அரசியல் ஆய்வாளர்களும் பல கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

பூகோள அரசியலாளர்களின் கருத்துப்படி ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரேயொரு வெது நீர் துறைமுகம் க்ரிமிய பகுதியில் கருங்கடல் எல்லையில் அமைந்துள்ள ‘செவஸ்டபொல்’ துறைமுகமாகும். இங்குதான் ரஷ்யாவின் பெரும் கடற்படை நீண்டகாலமாக முகாமிட்டிருக்கிறது. ரஷ்யாவின் ஏனைய துறைமுகங்கள் குளிர் நீர்த் துறைமுகங்களாகும், குளிர்காலத்தில் அவை பனியுறைந்த நிலையில் பயன்படுத்த இயலாத துறைமுகங்களாகிவிடும். உக்ரேனின் நேட்டோவுக்கும், மேற்குக்கும் சாய்வான எழுச்சி, ரஷ்யாவை அச்சம் கொள்ளச் செய்தது. தனது ஒரேயொரு வெது நீர் துறைமுகத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே, உலக எதிர்ப்பையும் எதிர்கொண்டு, க்ரிமியாவை ரஷ்யா தன்னகப்படுத்தியது என்கிறார்கள் பூகோள அரசியலாளர்கள். இதுபோல இன்று சீனாவின் இன்றைய சர்வதேச முதலீடுகள் பெரும்பாலும், அதன் “பட்டுப்பாதையை” பலப்படுத்தும் வகையில் அமைவதையும் பூகோள அரசியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஜேர்மனியின் அமைச்சராக இருந்த ஈகொன் பஹர் “சர்வதேச அரசியல் என்பது ஒருபோதும் ஜனநாயகம் பற்றியதோ, மனித உரிமைகள் பற்றியதோ அல்ல, அது அரசுகளின் நலன் சார்ந்தது” என்று குறிப்பிடுகிறார். இந்தப் பூகோள அரசியல் அடிப்படைகளினூடாக நோக்கினால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை எத்தனை தூரம் பூகோள முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணரலாம். இது பற்றி இந்தத் தொடரில் உரிய இடங்களில் நாம் மேலும் தேடலாம்.

விசேட விருந்தினராக அமீர்

இந்திய நலனுக்கு இலங்கையுடனான பகை ஏற்புடையதல்ல என்பதை இந்தியா நன்கறியும். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து கடும் அழுத்தம் இந்திரா காந்திக்கு இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அலட்சியம் செய்துவிட முடியாது சந்தர்ப்பசூழலை உருவாக்கியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் ஜே.ஆர் அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு தயார்படுத்தியபின், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பேச்சுவார்த்தைக்கு உடன்படச் செய்யும் நகர்வை இந்திரா காந்தி முன்னெடுத்திருக்க வேண்டும். இந்திரா காந்தியின் அழைப்பை அமிர்தலிங்கம் ஏற்றுக் கொண்டார்.அமிர்தலிங்கத்தின் அணுகுமுறை இந்திரா காந்திக்கு மிகப் பிடித்திருக்க வேண்டும், அவர் அமிர்தலிங்கத்துக்கு ஒரு மிகப்பெரிய கௌரவத்தை அளித்தார். மறுநாள், ஓகஸ்ட் 15ஆம் திகதி இந்தியாவின் சுதந்திரதின நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அமிர்தலிங்கத்துக்கு அழைப்பு விடுத்தார். டெல்லி, செங்கோட்டையில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் வழமையாக வௌிநாடுகளின் அரசுத் தலைவர்கள் விருந்தினராகக் கலந்துகொண்டு அமரும் பகுதியில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அமரவைக்கப்பட்டிருந்தார். தனது சுதந்திரதின உரையில், இலங்கையில் தமிழருக்கெதிராக நடைபெற்ற வன்முறைகளை இனஅழிப்பு என்று இந்திரா காந்தி குறிப்பிட்டு அதனைக் கண்டித்ததுடன், தமிழ் மக்கள் கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழ இந்தியா உதவிசெய்யும் என்று குறிப்பிட்டதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். இந்திரா காந்தி, இந்திய சுதந்திர தின உரையில், இலங்கைத் தமிழர் பற்றியும் குறிப்பிட கொதித்துக் கொண்டிருந்த தமிழகம் முக்கிய காரணம் எனலாம்.

இராமேஸ்வரத்துடன் முற்றுப்பெற்ற நடைபயணம்

மறுபுறத்தில், ஓகஸ்ட் 15ஆம் திகதி, இந்திய சுதந்திர தினத்தன்று இலங்கை நோக்கிய தனது நடைப் பயணத்தின் எட்டாவது நாளில் இராமேஸ்வரத்தை அடைந்து, அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கையைக் கடக்கும் திட்டத்துடன் நெடுமாறன் பயணித்துக் கொண்டிருந்தார். இது பற்றித் தகவலறிந்த ஜே.ஆர், இலங்கை எல்லைகளுக்குள் எந்தப் படகுகளும் நுழையாது பாதுகாக்க இலங்கை கடற்படைக்குக் கட்டளையிட்டிருந்தார். இந்திய மத்திய அரசுக்கும் இது பெரும் சிக்கலைத் தோற்றுவித்திருந்தது. தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை தொடர்புகொண்ட இந்திரா, சுதந்திர தினத்தில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்றும், நெடுமாறன் இலங்கைக்கு படகேறிச் செல்வதைத் தடுக்குமாறும் வேண்டினார். எம்.ஜி.ஆரின் துரித நடவடிக்கையில் இராமேஸ்வரத்திலிருந்த படகுகள் அகற்றப்பட்டன. இராமேஸ்வரத்தை அடைந்த நெடுமாறன் இலங்கை செல்லப் படகுகள் இல்லாது, தனது நடைப் பயணத்தை அங்கேயே முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் எம்.ஜி.ஆரைக் கடுமையாகச் சாடினார்.

ஜே.ஆரின் சினம்

ஓர் அரசுத்தலைவருக்கு தர வேண்டிய மரியாதை எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு வழங்கப்பட்டதும், இலங்கையைக் கண்டித்து இந்திரா காந்தி தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களும், ஜே.ஆருக்கு அதிருப்தியையும் விசனத்தையும் தந்தது என்று சொல்வதைவிட சினத்தை உண்டாக்கியது என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஊடகங்கள் பொங்கியெழுந்தன. இதில் அரச ஊடகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வல்லாதிக்கத்தையும் “பெரியண்ணன்தனத்தையும்” கண்டித்து இலங்கை ஊடகங்களில் கட்டுரைகள் பிரசுரமாயின. (தொடரும்) yarl.com oct5 2017