சுயமரியாதை - 17 வரலாற்று அதிசயம்

28 05 2018

சுயமரியாதை - 17 வரலாற்று அதிசயம்

இவ்வளவு எதிர்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும், பெரும் ஆதரவும் பெரியாருக்கு இருந்தது. உலகில் எவ்வளவோ பகுத்தறிவாளர்கள் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அறிவாளர்கள் என்றும், சிந்தனையாளர்கள் என்றும் போற்றப்படுகின்றனரே அல்லாமல், மக்கள் தலைவர்களாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால், மிகப் பெரும்பான்மையான மக்களால் ஏற்க முடியாத கருத்தைச் சொல்லி, அந்தப் பெரும்பான்மை மக்களாலேயே தங்களின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே உலகத் தலைவர் பெரியாராக மட்டும்தான் இருக்க முடியும். இது ஒரு வரலாற்று அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.

இன்று தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும், பெரியாரிடமிருந்துதான் தங்கள் அரசியல் வரலாற்றைத் தொடங்கியுள்ளனர். அவற்றுள் ஒன்றான ஆளும் கட்சி, உள்மனத்தில் பெரியாரை ஏற்கிறதோ இல்லையோ, வெளியே ஏற்பதாகத்தான் சொல்கிறது. சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்விரு பெரும் கட்சிகள் மட்டுமின்றி, பெரியாரை, அண்ணாவை மறுத்துவிட்டு எந்த ஒரு கட்சியும் தமிழக மக்களிடம் செல்வாக்குப் பெற முடியவில்லை. ஈடுபாடு இருக்கிறதோ இல்லையோ, 'திராவிட' என்னும் சொல்லைத் தங்களின் கட்சியின் பெயரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய தேவை தமிழ்நாட்டில் உள்ளது. அந்த அளவிற்கு வெகு மக்கள் பெரியாரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்னொரு பக்கம், பெரியார் இறந்துபோய், 43 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், இன்னும் அவரை ஒரு சிறு கூட்டம் மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் தொடங்கிய அந்த எதிர்ப்பு இன்றுவரை தொடர்கிறது. இறந்தபிறகும் எதிர்க்கப்படும் மிகச் சில தலைவர்களில் ஒருவராகப் பெரியார் உள்ளார். அதுவே அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்குமான சான்றாகவும் உள்ளது. காலம் கடந்தும் வாழ்வதற்கு அவரின் நுண்மாண் நுழைபுலமே காரணம். தன்னுடைய கொள்கைகளை வெறும் சித்தாந்தமாக மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடாமல், அவற்றை நடைமுறை வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளோடும் இணைத்ததே அவ்வெற்றியின் பின்புலம். வாழ்வியல் நிகழ்வுகள் (சடங்குகள்) ஒவ்வொன்றையும் கேள்வி கேட்டு, அவற்றுள் பகுத்தறிவுக்குப் புறம்பானவைகளை அம்பலப்படுத்தி, நூற்றாண்டுக் களைகளை அகற்றத் துணிந்த பெரியாரின் செயலே அவரைப் புறக்கணிக்க இயலாதவராக ஆக்கியுள்ளது.

குழந்தையின் பிறப்பில் தொடங்கி, பெயர் சூட்டுதல், காது குத்துதல் , பூப்பு நீராட்டுதல், திருமணம் என்று இறப்பு வரையில் சாதி மதச் சடங்குகள் நம்மைத் தொடர்கின்றன. அவை அனைத்தும் பார்ப்பனமயமாக உள்ளன. நம்மை அடிமைப்படுத்துகின்றன. நம் சுயமரியாதையைக் கேலி செய்கின்றன. எனவே அனைத்திலும் சுயமரியாதை இயக்கம் தலையிட்டது. மற்ற மற்ற கட்சிகள், இயக்கங்களைப் போல அரசியலை வீட்டுக்கு வெளியே தொடங்காமல், சுயமரியாதை இயக்கம் தன் அரசியலை வீட்டுக்குள் இருந்து தொடங்கியது. அதனால் அவ்வியக்கத்தின் கொள்கை பொது இடங்களில் மட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும் விவாதிக்கப் படக்கூடிய ஒன்றாக மாறியது. ஒவ்வொரு குடும்பத்திலும் காலம் காலமாய்ப் பின்பற்றப்பட்டு வந்த சடங்கு, சாங்கியங்களை இளைய தலைமுறை கேள்வி கேட்கத் தொடங்கியது. எங்கள் திருமணத்திற்கு ஐயரும், ஆடம்பரமும், சமஸ்க்கிருத மந்திரமும், புகையும், நெருப்பும் ஏன்? இரண்டு மாலைகளும், இணைந்த நெஞ்சங்களும் போதும் என்று சொன்னபோது, மூத்தவர்களுக்கு மூச்சடைப்பே வந்துவிட்டது.

'கலிகாலம், கலிகாலம் இந்த நாயக்கர் நம் பிள்ளைகளை எல்லாம் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்' என வீட்டுக்கு வீடு புலம்பல்கள் கேட்டன. புரோகிதர் இல்லாமல், புரியாத மந்திரங்கள் இல்லாமல், சடங்கு சாங்கியங்கள் இல்லாமல் தந்தை பெரியார் தலைமையில், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கிலநத்தம் என்னும் கிராமத்தில், 1928 மே 5 ஆம் நாள் ஒரு சீர்திருத்தத் திருமணம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை அழகிரிசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அம் மணவிழாவில் கலந்து கொண்டனர். அந்தத் திருமணம் தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியது. (தொடரும்) subavee blog 7 sep 2016