தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-112) இலங்கையும் தமிழரும் இந்திய நலனும்

03 06 2018

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-112) இலங்கையும் தமிழரும் இந்திய நலனும்

இந்திய சுதந்திர தினத்தில், விசேட விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு, இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அளித்த மரியாதை, ஜனாதிபதி ஜே.ஆருக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், கடும் சினத்தையும் விசனத்தையும் அளித்தது. இதன் எதிரொலியை, தேசிய நாளேடுகளில் வந்த இந்திய எதிர்ப்புக் கருத்துகளில் காணலாம். இந்திரா காந்தி, இலங்கையைக் கண்டிக்கும் வகையில் பேசியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு வெளியுறவுக் கொள்கையுண்டு. அரசாங்கங்கள் மாறினாலும், வெளியுறவுக் கொள்கைகள், பெருமளவில் மாறுவதில்லை என்பது, பொதுவாக அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படும் கருத்து. இதற்குக் காரணம், வெளியுறவுக் கொள்கைகளானவை, அந்த நாட்டின் தேசிய நலன்களை முன்னிறுத்திக் கட்டமைக்கப்படுகிறது. எந்த அரசாங்கம் வந்தாலும், நாட்டின் தேசிய நலன்கள் பற்றிய எண்ணப்பாடுகள் பெருமளவு மாறுவதில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், உலகளாவிய வர்த்தகம், அதன் பிரதான நலன். அதன் வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்காகவும் அதன் பொருளாதார நலன்களை மையப்படுத்தியுமே, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை கட்டமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் வரை, “தலையீட்டு” (interventionist) வெளியுறவுக் கொள்கை, அமெரிக்காவிடம் காணப்படவில்லை எனலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின், “தலையீடு” என்பது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரதானமானதோர் அங்கமாகவே மாறிவிட்டது. இதன் பின்னணியில், அதன் வணிக, வர்த்தக நலன்களே பிரதானமாக இருக்கின்றன. அமெரிக்க-சோவியத் பனிப் போரின் முடிவின் பின்னர், சோவியத் ஒன்றியம் பிளவடைந்ததன் பின்னர், சமகாலத்தில் நிகரில்லா வல்லரசாக அமெரிக்கா திகழ்கிறது என்பது, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மறுக்க முடியாத உண்மையாகிறது. “நீல நீர் கடற்படைகளில்” அமெரிக்கக் கடற்படையின் பலத்துக்கும் பரவலுக்கும் வீச்சுக்கும் நிகராக, சமகாலத்தில் இன்னொரு கடற்படை கிடையாது. சீனா, இப்பொழுதுதான் மிகப்பெரும் “நீல நீர் கடற்படையை” உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, உளகளவில் வல்லரசு என்று கருதும் நிலையில், அமெரிக்கா இருப்பினும், பிராந்திய வல்லரசுகளாக வேறு சில நாடுகள் உருவெடுத்துள்ளன. அந்த வகையில், சீனா தன்னை, தென்கிழக்காசிய பிராந்தியத்தின் வல்லரசாகக் கருதுகிறது. இதைப் போலவே, இந்தியா தன்னை தெற்காசியாவின் வல்லரசாகப் பார்க்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும், இந்த அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நேருவின் காலம் முதல், சுதந்திர இந்தியாவானது, சர்வதேச அளவில் தன்னை அணிசேரா நாடாக முன்னிறுத்தி வருகிறது. ஆனால், அதன் பிராந்திய வெளியுறவுக் கொள்கைகளிலும், அணுகுமுறைகளிலும் 1980ஆம் ஆண்டுக் காலப் பகுதியளவில், சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இவை பெரும்பாலும் பிராந்திய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டமைந்தவை. சுர்ஜித் மான்சிங், ராஜு தோமஸ் ஆகிய இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய ஆய்வாளர்கள், இந்திய வெளியுறவுக் கொள்கைகள், 30 ஆண்டுகளில் பெருமளவு மாறியிருந்தாலும், அமெரிக்காவின் “மொன்றோ கோட்பாடு”, “ஐசன்ஹவர் கோட்பாடு”, “நிக்ஸன் கோட்பாடு” (குவாம் கோட்பாடு) போன்று வெளிப்படையானக் கொள்கைகளை, இந்தியா, பிராந்திய பாதுகாப்புத் தொடர்பில் கொண்டிருக்கவில்லை என்று கருத்துரைக்கிறார்கள். ஆனால், பிரபலமான அரசறிவியலாளரும் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஆய்வாளருமான பபானி சென் குப்தா, வெளிப்படையாக இந்தியா அறிவிக்காவிட்டாலும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பில், வெளிநாட்டுக் கொள்கை ஒன்றைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

இதனை அவர் முதலில், “பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியக் கோட்பாடு” என்று விளித்தார். காலவோட்டத்தில், அது “இந்தியக் கோட்பாடு” என்றும் “இந்திரா கோட்பாடு” என்றும், பின்னர் “ராஜீவ் கோட்பாடு” என்றும் குறிக்கப்பட்டது. பபானி சென் குப்தா குறிப்பிட்ட இந்தியக் கோட்பாடானது, மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும். இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த வகையில் எதிராக அமையும் வகையில், வெளிநாடொன்று, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும் இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடொன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது. மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ள அல்லது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும். இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்டதுதான் “இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக் கொள்கை” என்று 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி, ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் பபானி சென் குப்தா எழுதியிருந்தார். சுருக்கமாக இந்தக் கொள்கையானது, இந்தியா, தன்னை தெற்காசியப் பிராந்தியத்தின் (பாகிஸ்தான் தவிர்த்து) “பெரியண்ணனாக” உருவகித்துக் கொள்வதைச் சுட்டுகிறது. இலங்கை விவகாரத்தை “இந்தியக் கோட்பாட்டின்” பின்னணியில் ஆராயும் போது, நடைபெற்ற சம்பவங்களுக்கு மேலும் வெளிச்சம் கிடைப்பதைக் காணலாம். 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பு, அதற்குப் முன்னரான தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் ஆகியவற்றின் பின்னணியில், இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு உதவியை, குறிப்பாக மேற்கின் இராணுவ உதவியை வேண்டியதாகச் செய்தி பரவியது. இந்தச் செய்தி, டெல்லியையும் எட்டியது. இதன் பின்னணியில்தான், 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பின் நிமித்தம், இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்பவிருந்ததென, இலங்கை அச்சம் கொண்டது. இதனைத் தொடர்ந்துதான், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டின், உடனடி இந்திய விஜயமும் இலங்கை யாரிடமும் இராணுவ உதவி கோரவில்லை என்ற தெளிவுபடுத்தலும், இந்தியா, இலங்கை மீது நேரடியாக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாது என்று உறுதிமொழியும் பெறப்பட்டது.

இலங்கையின் முக்கியத்துவம்

இலங்கை ஒரு சிறிய தீவு. நேபாளத்தின் அளவில் பாதியளவே இலங்கை. இந்தியாவைக் கொலனித்துவ ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்த பிரித்தானியா, நேபாளத்தையும் பூட்டானையும் போரிலே வெற்றி கொண்டிருப்பினும், அந்நாடுகளைக் கொலனியாதிக்கத்துக்குள் கொண்டு வரவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், அங்கிருந்து எடுத்துக் கொள்வதற்கு கிழக்கிந்திய கம்பனிக்கு எதுவுமில்லை என்பதே. இலங்கை கூட, பெரும் இந்திய நிலப்பரப்போடு ஒப்பிடுகையில், கிழக்கிந்தியக் கம்பனி விரும்பத்தக்க வர்த்தக வலுவுடைய வளங்கள் நிறைந்த நிலப்பரப்பாக இருக்கவில்லை. அப்படியானால், அந்நியர், இலங்கை மீது ஆர்வம் கொள்ளக் காரணமென்ன? இன்று சீனா, பெரும் உற்பத்திவளம், கவர்ச்சிமிகு மனிதவளம் இல்லாத இலங்கை மீது இத்தனை அக்கறை கொள்ளக் காரணமென்ன? இலங்கையின் உலகளாவிய முக்கியத்துவத்துக்குக் காரணம், இலங்கையில் பூகோள அமைவிடம். இந்தப் பூகோள அமைவிடம்தான், இலங்கையின் பெரும் வளம்; பெரும் பலம் எல்லாமே. கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஒரு மத்திய நிலையம். இது இவ்வாறாக இருக்க, இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் தென் எல்லையாக இலங்கை இருக்கிறது. பாகிஸ்தான் என்பது, இந்தியாவின் மாற்றமுடியாத “தலைவலி”. ஆனால், அதைத்தாண்டி, மற்றைய தெற்காசிய நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில், அல்லது தன்னுடைய சார்பு நாடுகளாக வைத்துக் கொள்வதில், இந்தியா எப்போதும், அதுவும் குறிப்பாக இந்திரா காந்தியின் காலத்திலிருந்து, முனைப்பாக இருந்திருக்கிறது. இலங்கை - இந்திய வரலாற்று உறவுகள் இனிப்பும் கசப்பும் கலந்தவையாகவே இருந்திருக்கின்றன. படையெடுப்புகளும் கைப்பற்றல்களும் நடைபெற்ற அதேவேளை, சில மன்னர்களிடையே சுமூகமான, நட்பான உறவுகளும் இருந்திருக்கின்றன. எது எவ்வாறாயினும், இந்தியா மீதான ஓர் அந்நியப் பார்வை, இலங்கையிடம், குறிப்பாக பெரும்பான்மை இலங்கை மக்களிடையே இருக்கவே செய்தது. 1981ஆம் ஆண்டு நடந்த சம்பவமொன்றை, இங்கு சுட்டிக்காட்டுதல் முக்கியமாகிறது.

1981ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கை முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ, தென் கிழக்காசியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்த பிரதமர் பிரேமதாஸ, பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை “ஆசியான்” (ASEAN) அமைப்பில் இணைய விருப்பம் கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்திருந்தார். இதை, பிரேமதாஸ கூ‌றியதற்கு ஒரு வாரமளவுக்கு முன்னர்தான், தெற்காசிய அமைப்பொன்றை ஏற்படுத்துவது தொடர்பான பங்களாதேஷின் முன்மொழிவை, ஏலவே ஏற்றிருந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர், கொழும்பில் அது பற்றிய கூட்டமொன்றை நடத்த அழைத்ததன் பேரில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள், இலங்கை ஆகியவற்றின் வெளிவிவகார அமைச்சர்கள், கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில்தான், பிரேமதாஸவின் கருத்து வெளிவந்திருந்தது. நுட்பமாகப் பார்த்தால், இலங்கை, தென்கிழக்காசிய நாடு அல்ல; ஆனால், தெற்காசிய அமைப்பொன்று உருவானால், அதில் இந்திய ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. ஆகவே, பிரேமதாஸ உள்ளிட்ட இந்திய ஆதிக்க எதிர்ப்புக் கொள்கையுடையவர்கள், தெற்காசிய ஒன்றியம் ஒன்றுக்குப் பதிலாக, ஆசியானில் இணைய விரும்பியிருக்கலாம். அண்மையில் கூட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை “சார்க்” (SAARC) அமைப்புக்கு பதிலாக “ஆசியான்” (ASEAN) அமைப்பில் இணைந்திருக்கலாம் என்ற அர்த்தப்படக் கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார். இலங்கையின் இந்தப் போக்கு இந்தியாவுக்கு, குறிப்பாக “பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இந்தியக் கோட்பாட்டுக்கு” முரண்பாடாகச் செல்வதை, இந்தியா அவதானித்துக் கொண்டுதான் இருந்திருக்கும். இந்தியாவின் இந்த அதிருப்தியை, ஜே.ஆரும் அவரது அரசாங்கமும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

உளவு அரசியல்

இங்கு இன்னொரு விடயமும் குறிப்பிடப்பட வேண்டும். சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிகம் உச்சரிக்கப்பட்ட உளவு நிறுவனமொன்றின் பெயர் என்றால், அது “றோ” (RAW) ஆகத்தான் இருக்கும். இந்திரா காந்தியின் ஆட்சியில், பிரதமர் அலுவலகத்துக்குக் கீழாக இயங்கும் படி உருவாக்கப்பட்ட இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனம் தான் இந்த “றோ” என்று சுருக்கமாக அறியப்படும் “ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு” (Research and Analysis Wing). இலங்கையின் ஆரம்பகால தமிழ் இளைஞர், ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சிகளையும் வளங்களையும் வழங்கியதில், RAW வின் பங்கு உண்டு என்று, அந்த வரலாற்றை எழுதிய பலரும் குறிப்பிடுகிறார்கள். இந்திரா காந்தியின் ஆட்சி, 1977ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து, மொரார்ஜி தேசாய் பிரதமரானபோது, “றோ”வின் முக்கியத்துவம் குறைந்தது. ஆனால், மீண்டும் இந்திரா பிரதமரான பின்பு, “றோ”வின் செயற்பாடுகள் புத்துணர்ச்சிபெற்று ஆரம்பமாயின. மீண்டும், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களை வளர்த்து விடுவதில், “றோ”வின் பங்கு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள், அதிலிருந்து பிரிந்து உமா மகேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்ட புளொட், இதைவிடவும், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும், டெலா, டெலே, ஈ.என்.டீ.எல்.எப் என்று ஏறத்தாழ இன்னும் 25 இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. இவற்றில், கணிசமானவை, இந்தியாவோடு தொடர்புகளைக் கொண்டிருந்தன.

பிரச்சினைதான் துருப்புச் சீட்டு

இந்தியா விரும்பியிருந்தால், தமிழர்களுக்குத் தனிநாட்டை உருவாக்கியிருக்கலாம். ஓர் இன அழிப்பு இடம்பெற்று முடிந்த சூழலை விட, அதற்குச் சாதகமான வேறொரு சூழல் இருந்திருக்க முடியாது என்பதுடன், அதற்கான படைபலமும் அரசியல் பலமும் கூட, அன்று இந்தியாவிடம் இருந்தது. இந்தியா அதை அன்று ஏன் செய்யவில்லை? ஏன் என்றுமே அதைச் செய்யப் போவதில்லை? வெறுமனே இன்னொரு தெற்காசிய நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாத அதன் வெளிநாட்டுக் கொள்கை மட்டும்தான் காரணமா? அப்படியானால், வேறு தெற்காசிய நாட்டுக்குள் பிரிவினை கோரும் இயக்கங்களுக்குப் பயிற்சியளித்தல், அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயற்பாடில்லையா? இந்தியாவோ, வேறு எந்த நாடோ, அதன் முதலும் கடைசியுமான அக்கறை அதனுடைய சொந்த நலனில் மட்டும்தான். இலங்கையின் பிரிவினையைவிட, இலங்கையில் பிரச்சினையிருப்பதுதான், நிச்சயமாக இந்திய நலனுக்கு சாதகமானது என்பதுடன், இந்தியா இலங்கையின் மீது ஒரு கைவைத்திருக்கக் கூடிய நிலையையும் தரும் என்பதை, இந்தியா நிச்சயம் அறிந்திருந்திருக்கும். ஏனென்றால், இலங்கையின் இனப்பிரச்சினைதான், இந்தியாவின் துருப்புச் சீட்டு. (தொடரும்) yarl.com oct 12 2017