சுயமரியாதை - 18 பெண் விடுதலைக்கான முதல் இயக்கம்
05 06 2018
சுயமரியாதை - 18 பெண் விடுதலைக்கான முதல் இயக்கம்
ஒரு திருமணம் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுமா என்னும் வினாவிற்கு, ஆம் என்பதே விடை. 1928 ஆம் ஆண்டு சுக்கிலநத்தம் திருமணத்திற்கு முன்பே நாகை காளியப்பன் போன்றோர் அத்தகைய திருமணத்தைச் செய்து கொண்டுள்ள செய்தி இப்போது கிடைத்துள்ளது. எனினும் முறையாக அறிவிக்கப்பட்டு நடைபெற்ற அத்திருமணமே, அதற்குப் பின் மேலும் பல சுயமரியாதைத் திருமணங்களுக்கு வழிவகுத்தது. திருமணம் என்றால் எந்த மாதிரித் திருமணம் என்று கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும், சுயமரியாதைத் திருமணத்தைப் புதுமை என்றோ, புரட்சி என்றோ பெரியார் கூறவில்லை. "சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும், அனாவசியமான அதிகச் செலவும், அதிகக் காலக்கேடும் இருக்கக் கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும்" என்று தெளிவாக எடுத்துரைத்தார் பெரியார்.
அவர் சொன்னதில் எந்த மிகையும் இல்லை. பழந்தமிழ் நாட்டில் நடைபெற்ற திருமணங்கள் பெரிதும் இப்படித்தான் நடந்துள்ளன. சங்க இலக்கியமான அகநானூறு என்னும் நூலின் 86 மற்றும் 136 ஆம் ,பாடல்களில் திருமணம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் மந்திரங்களோ, வேள்விகளோ நடைபெற்றதாக ஒரு குறிப்பும் இல்லை. மங்கல மகளிர் போன்ற சில சொற்கள் காணப்படுவது உண்மைதான். அப்படிப் பெண்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கும் சுயமரியாதைத் திருமணத்தில் இல்லை.
சுயமரியாதைத் திருமணங்கள் அடிப்படையில் மூன்று நோக்கங்களைக் கொண்டவை என்று சொல்லலாம்.
1. பெண்களுக்கான சமத்துவம்
2. தேவையற்ற சடங்குகள், வடமொழி மந்திரங்களைத் தவிர்த்தல்.
3. பொருளையும், காலத்தையும் வீணடிக்காதிருத்தல் மேலும் பல சிறு பயன்பாடுகள் உள்ளன என்றாலும், இவை மூன்றுமே முதன்மை வாய்ந்தன என்று கூறலாம்.
தொடக்கம் முதற்கொண்டே, பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்குச் சு.ம. இயக்கம் எதிர்க் குரல் கொடுத்து வந்தது. இது ஒரு சாதியச் சமூகம் என்பதால், சாதியின் பெயரால் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். கூடுதலாக, ஒவ்வொரு சாதியிலும் உள்ள பெண்கள் ஆண்களாலும் ஒடுக்கப்பட்டனர். எனவே இருவிதமான ஒடுக்குதல்களுக்கு ஆளாகியுள்ள பெண்களுக்கு ஆதரவாகச் சு.ம.இயக்கம் குரல் கொடுத்தது. பெண்களின் உரிமைகளுக்காகப் பெரியாருக்கு முன்பாகவே அறிஞர்கள், கவிஞர்கள் பலர் எழுதியும், பேசியும் உள்ளனர் என்றபோதிலும், அவர்களெல்லாம் அதற்காக ஓர் இயக்கம் கட்ட முயன்றதில்லை. சு.ம. இயக்கமே தமிழகத்தின் முதல் பெண்ணுரிமை இயக்கமாக விளங்கியது என்று கூறலாம்.
குறிப்பாக, திருமணம் என்று வரும்போது பெண்கள் மீதான ஒடுக்குமுறை பலமடங்கு உயர்வதை நாம் பார்க்க முடியும். திருமணத்தை முன்னிறுத்தியே, ஒரு பெண் பருவம் எய்தியதும், பெற்றோர்களும், உறவினர்களும் பாதுகாப்பு என்ற பெயரில் அடக்குமுறைகளைத் தொடங்கி விடுகின்றனர். பருவம் எய்துதலை ஒரு சடங்காகவே ஆக்கி, அன்றிலிருந்து அவளின் பொதுவெளி குறைக்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன், பருவம் அடைந்தவுடன் அந்தப் பெண்ணின் பள்ளி வாழ்க்கை முடிந்து போகும். வெளி நடமாட்டம் குறைந்து போகும். திருமண ஏற்பாடுகள் தொடங்கியதும், அவளுடைய அனைத்து நடவடிக்கைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
ஒரு பெண்ணைக் காட்சிப் பொருளாக்கி, "பெண் பார்க்கும் " படலம் தொடங்கும். சமைக்கத் தெரியுமா என்ற கேள்வியில் தொடங்கி, ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா என்று ஆயிரம் கேள்விகள் அணிவகுக்கும். சில இடங்களில், "பெண்ணைக் கொஞ்சம் நடக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்று நடக்கச் சொல்லி, கால்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்வதும் உண்டு. எல்லாம் சரியாக இருந்தால், பிறகு "வரதட்சிணை" என்னும் பெயரில் 'வியாபாரம்' தொடங்கும்.
இந்த அவலங்கள் எல்லாம் இன்றும் முழுமையாக ஒழிந்து விடவில்லை. இவற்றை எல்லாம் 80, 90 ஆண்டுகளுக்கு முன் எதிர்ப்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்! அந்தத் துணிச்சல் சுயமரியாதை இயக்கத்திற்கு இருந்தது! (தொடரும்) subvee blog 10 09 2016