தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 113)

10 08 2018

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 113) ‘மனிதாபிமானத் தலையீடு’ எனும் துருப்புச் சீட்டு

சர்வதேசத் தலையீடு

நவீன சர்வதேசச் சட்டவியலின் தந்தை என்று கருதப்படும் லஸ்ஸா பிரான்ஸிஸ் லோரன்ஸ் ஒப்பன்ஹய்ம், ‘சர்வதேசத் தலையீடு’ என்பதை, ‘ஒரு நாடு, பிறிதொரு நாட்டின் மீது, அந்த நாட்டில் சில நடவடிக்கைகளை அல்லது விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கில், பலாத்காரமாக அல்லது எதேச்சாதிகாரமாக தலையீடு செய்தல்’ என்று வரையறுக்கிறார். தலையீடு என்பது, நேரடி இராணுவத் தலையீடுகளைத் தாண்டி, பொருளாதாரத் தலையீடுகள், இராஜதந்திரத் தலையீடுகள் என்றும் வகைப்படும். சர்வதேசத் சட்டத்தின்படி, ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது பலாத்காரமாக, அல்லது எதேச்சாதிகாரமாகத் தலையிடுதல் சட்டவிரோதச் செயற்பாடாகும். இதற்குக் காரணம், ஒவ்வோர் அரசும் (நாடும்) கொண்டுள்ள இறைமை. ‘இறைமை’ என்ற பதம் உணர்த்தும் கோட்பாட்டின் பொருள் பற்றி உலகளாவிய உடன்பாடு ஏதுமில்லை. ஆனால் சுருக்கமாகச் சொல்வதானால், எவராலும் முறியடிக்கப்பட முடியாது; முற்று முழுதான மீயுயர் அதிகாரமே இறைமை எனலாம். இந்த இறைமையின் வழியேதான், அரசுகள் தங்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்துகின்றன; அதுபோல, இந்த இறைமையின் வழியாகத்தான் ஏனைய அரசுகள், தம்மீது அதிகாரம் செலுத்துவதிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன. ஆகவே, இறைமையுள்ள ஒரு நாட்டின் மீது, அந்நாடு வேண்டிக் கொண்டாலன்றி, தலையிடுதல் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.

மனிதாபிமானத் தலையீடு

அதேவேளை, மனிதாபிமான காரணங்களுக்காகத் தலையிடுவதன் நியாயம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள், இன்று வரை தொடர்கின்றன. 1999 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் உரையாற்றிய அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனான், “பாரதுரமான, திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் பொழுது, உலகம் ஒரு மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார். ருவாண்டாப் படுகொலைகளைச் சுட்டிப் பேசிய அவர், “அந்தக் கறுப்பு நாட்களில், பெரும் இனஅழிப்பு நடைபெறவிருந்த மணித்தியாலங்களில், டுட்ஸி மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்த இணைந்த அரசுகள் சிலவற்றுக்கு, சபை அங்கிகாரம் அளிக்காது விட்டிருந்தால், அந்த இணைந்த நாடுகள் ஒரு மூலையில் நின்று கொண்டு, ஒரு பெருங்கொடுமையை அரங்கேற விட்டுப் பார்த்திருந்திருக்க வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினார். ‘மனிதாபிமானத் தலையீடு’ என்ற சித்தாந்தம், புனித அகஸ்தீனார் காலமளவுக்கு (ஐந்தாம் நூற்றாண்டு) பழமையானது. புனித அகஸ்தீனார், இதை ‘நியாயமான போர்’ என்றழைத்தார். ஆனால்,

‘மனிதாபிமானத் தலையீடு’ என்பது மதம், இனம், ஓர் அரசின் சுயநலம் என்பவற்றை நோக்காகக் கொண்ட, எதேச்சாதிகார படையெடுப்புகளுக்கு நியாயம் கற்பிக்கும் செயலாக மாறிய வரலாற்றை, நாம் 19 ஆம் - 20 ஆம் நூற்றாண்டுகளிலே பார்க்கக் கூடியதாக இருந்தது. அந்நிய மண்ணில், ஜேர்மன் இனச் சிறுபான்மையினர் அடக்குமுறைக்கானதைத் தடுக்க, ‘மனிதாபிமான நடவடிக்கை’ எடுக்கப்படும் என்று, ஹிட்லர் முழங்கியமை, இங்கு ஞாபகப்படுத்தத்தக்கது. அமெரிக்கா தோல்வியடைந்த ‘நிக்கரக்குவா’ வழக்கில், சர்வதேச நீதிமன்றமானது, அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராக நிக்காரக்குவாவுக்குச் சார்பாகத் தீர்ப்பளித்திருந்தது. அதில் நீதிமன்று, “மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கும், மனித உரிமைகள் மீதான மதிப்பை உறுதிப்படுத்தவதற்கும் பலத்தைப் பிரயோகித்தல் என்பது பொருத்தமானதாக இருக்காது” என்ற அபிப்பிராயத்தை உரைத்திருந்தது. ஆகவே, ‘மனிதாபிமானத் தலையீடு’ என்ற விடயத்தில் கூட, இருவேறுபட்ட கருத்துகளே நிலவுகின்றன. ஆனால், ஒரு நாடு, இன்னொரு நாட்டில் தலையிடுவதற்கான ஒருசாராரேனும் ஏற்றுக் கொள்ளும் காரணமாக ‘மனிதானிமானமே’ திகழ்கிறது.

இந்தியாவின் உபாயம்

இந்தியாவைப் பொறுத்தவரை, பூகோள அமைவியலின்படி, இலங்கையானது இந்தியாவுக்கு மிகமுக்கியமானதொரு தந்திரோபாயப் புள்ளியில் அமைந்திருக்கிறது. இலங்கை மீது, இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதை விட, வேறு நாடுகள் ஆதிக்கம் செலுத்தி விடக் கூடாது என்பதில்தான், இந்தியா குறியாக இருக்கிறது என்பதை பபானி சென் குப்தா வரையறுத்த ‘இந்தியக் கோட்பாடு’ வெளிப்படுத்தி நிற்கிறது. இந்தப் பின்புலத்தில், இலங்கையின் இனப்பிரச்சினையையும் அதில் இந்தியாவின் வகிபாகத்தையும் நாம் உற்று நோக்குதல் அவசியமாகிறது. ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம், மேற்கு சார் அரசாங்கம் என்பது வெளிப்படையாகவே தெரிந்த விடயமாக இருந்தது. ஜே.ஆர் மிக வெளிப்படையாகவே அவரது அமெரிக்க சார்பைக் குறிக்கும் வகையில் ‘யங்கி டிக்கி’ (Yankie Dickie) என்றழைக்கப்பட்டார். ஒப்பீட்டளவில் இந்திரா காந்திக்கு, ஜே.ஆரைவிட சிறிமாவுடன் நெருங்கிய உறவு இருந்தது என்று பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, ஜே.ஆர் ஆட்சி மீதான ஐயப்பார்வை, இந்திரா காந்தியின் இந்தியாவுக்கு இருந்தது. ஜே.ஆர் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியொன்றைச் சந்தித்த வேளையில், இந்தியா பெருமளவுக்குப் பொருளாதார உதவிகளை அளித்திருந்தது. ஆனாலும், ஜே.ஆர், முழுமையாக இந்தியாவின் நம்பிக்கையை வென்றிருந்தவர் அல்ல. சர்வதேச அரசியலைப் கவனித்தால், அனைத்து நாடுகளும், தமக்கு வரக்கூடும் என்று அவை எண்ணும் மோசமான சூழலை, எதிர்கொள்ளத் தம்மைத் தயாராக்கும் நடவடிக்கைகளையே, தொடர்ந்து செய்வதைக் காணலாம்.

இந்தியாவுக்கு, இலங்கை அரசாங்கத்தின் இந்தியா தொடர்பான நிலைப்பாடு பற்றிய ஐயம் தொடர்ந்த வேளையில், இந்தியா தனக்கு வரக்கூடும் என்ற மோசமாக சூழலுக்குத் தன்னைத் தயார்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், இலங்கை, அமெரிக்காவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ நல்லுறவை ஏற்படுத்தினால், அதை இந்தியாவால் நேரடியாகத் தடுக்க முடியுமா? அல்லது இந்தியா தன் படைகளை, இலங்கைக்கு அனுப்பி, இலங்கையை ஆக்கிரமிக்க முடியுமா? அத்தகைய ஆக்கிரமிப்புகள் சர்வதேசச் சட்டங்களின் கீழ் ஏற்புடையவையல்ல. அதை அவ்வளவு இலகுவாக இந்தியாவால் செய்ய முடியாது. அப்படியானால் இலங்கை, இந்தியாவுக்கு விரோதமான போக்கை எடுக்கும் சூழலொன்று உருவானால், இந்தியா அதைத் தடுப்பதற்கு, இலங்கை மீது நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கான வெளியொன்று அவசியமாகிறது. இலங்கையின் இனப்பிரச்சினை என்பதுதான் அந்த வெளி; அந்த வெளிதான், இந்தியாவின் துருப்புச்சீட்டு என்று வாதிடுபவர்களின் வாதத்தில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. இந்த அடிப்படையிலான வாதத்தை முன்வைப்பவர்கள், இந்தியா, இலங்கையில் தனிநாடு கோரிய, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் பலவற்றுக்குப் பயிற்சியும் உதவியும் அளித்ததன் பின்னணி இதுதான் என்கிறார்கள். இந்த இடத்தில்தான் முக்கியமானதொரு கேள்வி எழுகிறது. இலங்கையில் நடந்து முடிந்த 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு என்பது, ‘மனிதாபிமான ரீதியில்’ இந்தியா, இலங்கையில் தலையிடவும், தமிழ்த்தரப்புக் கோரிய பிரிவினையை ஏற்படுத்திக் கொடுக்கவும் பொருத்தமான ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே; அப்படி ஒரு தனி நாடு, இந்திய உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்டால், அது இந்தியச் சார்பாக இருந்திருக்குமே; அதை ஏன் இந்தியா செய்யவில்லை?

ஒரு சாரார், அது இந்தியாவின் தமிழ் நாடு பிரிவடைவதற்கு வழிவகுத்திருக்கும். தமிழ் நாடும், தமிழீழமும் ஒன்றிணைந்து தனித் தமிழரசு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் என்று காரணமுரைப்பார். ஆனால், தமிழ்நாடு, இந்தியாவிலிருந்து பிரிவதற்கான வாய்ப்புகள் ஈ.வே.ராமசாமி மற்றும் சீ.என்.அண்ணாதுரையின் ஆரம்பகால ‘திராவிடநாடு’ கொள்கை கூட, 1963களோடு கைவிடப்பட்டுவிட்டது. அதன் பின்னர், அத்தகையதொரு எழுச்சி எழவில்லை. மாறாக ‘இந்திய தேசிய’ அடையாளத்தை இந்தியாவெங்கும் வேரூன்றச் செய்வதில், இந்திய அரசு பெருமளவில் வெற்றிபெற்று விட்டது என்றே சொல்லலாம். மேலும், தமிழ்நாடு பிரிவதை வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும், தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தின் சமூகக்கட்டமைப்பையும், சித்தாந்த அடிப்படைகளையும் கொண்டு பார்த்தால், அவை இணைவதற்கான சாத்தியக் கூறுகள் என்பது ஐயத்துக்குரியதே. இன்னொரு பார்வையில் பார்த்தால், இலங்கையில் தமிழர் அரசு ஒன்று உருவாவதற்கான பிரிவினையை, இந்தியா சாத்தியப்படுத்தியிருக்குமானால், அது இந்தியாவின் பிரச்சினையை இரட்டிப்பாக்கியிருக்கும் என்பதோடு, இன்னும் சிக்கல்மிக்கதாக ஆக்கியிருக்கும் எனலாம்.

இன்று, இந்தியாவின் தென் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரே நாடு இலங்கை. தனித்து இலங்கை என்ற நாடு இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல் அல்ல; ஆனால் இலங்கையில், இந்திய நலன்களுக்கு எதிரான வேறொருநாடு மையம் கொள்ளுமானால், அது இந்தியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். குறிப்பாக, இந்துசமுத்திரத்தின் கடல் போக்குவரத்திலும், அதைக் கண்காணிப்பதிலும் இலங்கை என்ற நிலப்பரப்பு ஒரு முக்கிய தந்திரோபாயப் புள்ளி. ஆகவே, வேறு நாடுகள் இலங்கையில் தலையிடாதவாறு, இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்வதுதான், இந்தியாவுக்கு ஏதுவான தந்திரோபாயமாக இருக்கும். இலங்கைக்குள் ஒரு பிரிவை உண்டாக்கினால், அது அந்த நிலப்பரப்பில் ஒன்றுக்கொன்று, பகையான இரண்டு அரசுகளைத் தோற்றுவிக்கும்; இந்தச் சூழலில் பிரிவினைக்குத் துணைபோன இந்தியாவுக்கு, முற்றிலும் எதிரான நாடாக இலங்கை அரசு மாறும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் அரசும் எப்போதும் இந்திய சார்புடையதாகவே இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. அப்படி இருந்தாலும் கூட, அது இலங்கை என்ற நிலப்பரப்பின் ஒரு பகுதிக்கே மட்டுப்பட்டதாக இருக்கும். எஞ்சிய பகுதி வெளிப்படையாக இந்தியாவுக்கு விரோதமாகவே இருக்கும். இது நடப்பில் உள்ளதைவிட, இந்தியாவுக்கு நிச்சயமாக, மேலும் அச்சுறுத்தலான சூழலையே உருவாக்கும். ஆகவே, இலங்கை ஓர் அரசாக இருப்பதுதான், இந்தியாவுக்குச் சாதகமான தீர்வாக இருக்கும்.

அதேவேளையில், இலங்கையின் போக்கைக் கட்டுப்படுத்த, இலங்கை, இந்தியாவை விட்டுவிலக முடியாதபடி ‘செக்’ வைத்துக் கொண்டிருக்க ஒரு துருப்புச் சீட்டு இந்தியாவுக்குத் தேவை. இனப்பிரச்சினை என்பது அத்தகையதொரு துருப்புச் சீட்டு. எப்போது வேண்டுமானாலும், இந்தியா ‘மனிதாபிமானத் தலையீட்டை’ செய்வதற்கான ஏதுநிலையை எப்போதும் ஏற்படுத்தி வைத்திருக்கும். இந்தத் தர்க்கத்தின் மீது, பின்வரும் சம்பவங்களைப் பொருத்தி வைத்துப் பாருங்கள். இந்திரா காந்தி, 27 வருடங்களாகப் பேச்சுவார்த்தைகளில் தொடர் ஏமாற்றத்தை மட்டுமே கண்ட அமிர்தலிங்கத்தை, பேச்சுவார்த்தை மூலம் ஒரே நாட்டுக்குள் (அரசுக்குள்) தீர்வைப் பெறச் சம்மதிக்க வைக்கிறார். எச்.டபிள்யு.ஜெயவர்த்தனவிடம் தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை மேசையில் பரிசீலிக்க வேண்டுகிறார். அதேவேளை, இலங்கையில் நடைபெற்ற ‘இனப்படுகொலையை’ கண்டித்து உரையாற்றுகிறார். பின்னணியில், இந்திய உளவுத்துறை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு உதவிகளைச் செய்கிறது. இந்திய மண்ணில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் ‘விடுதலை’ அதாவது, பிரிவினைக்காகப் போராடப் பயிற்சி பெறுகிறார்கள்.

தவிர்க்க முடியாத இந்தியா

இந்திய தலையீடு பற்றி இத்தனை நீண்ட தர்க்கமும் பார்வையும் அவசியப்படுவதற்குக் காரணம், அடுத்த 26 வருட இனப்பிரச்சினை வரலாற்றில், அரசியலிலும் போரிலும் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக அமைகிறது. இந்த, இந்தியத் தலையீட்டின் முன்னணி ‘மனிதாபிமானம்’, ‘தமிழர் நலம்’ எனப்பட்டாலும், அதன் பின்னணி மீதான ஐயங்கள் தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட, ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்களால் முன் வைக்கப்பட்டே வந்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றை, மிகக் குறிப்பாக 1980களுக்குப் பிறகு இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, நாம் ஆராய முடியாது.

இலங்கை வந்த கோபால்சாமியும் இந்தியா சென்ற தொண்டமானும்

இந்திய சுதந்திர தினத்தன்றே, இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் கோபால்சாமி பார்த்தசாரதி, இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கையில் பலரையும் சந்தித்த பார்த்தசாரதி, அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமானையும் சந்தித்தார். 1983 ‘கறுப்பு ஜூலை’யில் பெருமளவில் மலையகத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தொண்டமான் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தாலும் பதவி விலகுவது போன்ற முடிவுகளை எடுக்கவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறாம் திருத்தத்தை தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் தொண்டமான் தான். தனது சந்திப்பின் பின்னர், தொண்டமானை இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பார்த்தசாரதி அழைத்திருந்தார். அதை ஏற்றுத் தொண்டமானும் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்திய சுதந்திர தினத்தில், விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே தங்கியிருந்தார். அவரோடு, எம்.சிவசிதம்பரமும் இரா.சம்பந்தனும் கூட அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்தனர். இலங்கையில் காணப்பட்ட நிலைவரம், இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியா வந்த தொண்டமான் பலரையும் சந்தித்ததோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். (தொடரும்) yarl.com  oct19 2017