சுயமரியாதை - 19 பெண் என்பவள் பொருளா?

12 06 2018

சுயமரியாதை - 19 பெண் என்பவள் பொருளா?

பெண் பார்த்தல் மட்டுமின்றி, திருமணத்தையே பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் போன்ற சொற்களால் பேச்சு வழக்கில் நாம் குறிக்கின்றோம். கணவனைக் 'கொண்டான்' என்று கூறுகின்ற பழக்கம் உள்ளது.அதனையொட்டியே 'கொண்டான், கொடுத்தான்' என்ற வழக்கு உள்ளது. இவை அனைத்தும், பெண்ணைக் கொடுப்பது, பெண்ணைக் கொள்வது என்ற பொருளில்தான் ஆளப்படுகின்றன. ஆகவே பெண் என்பவள், கொடுப்பதற்கும், கொள்வதற்கும் உரிய பொருள் ஆகி விடுகிறாள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், திருமணத்தை 'தாரா முகூர்த்தம் ', கன்னிகாதானம்' என்றே குறிப்பிடுகின்றனர். மணமகளின் பெற்றோர், மணமகளின் கையைப் பிடித்து, மணமகனின் கைமேல் வைத்து, எள்ளும் தண்ணீரும் விட்டு, இனி இவள் உனக்கே சொந்தமென்று தாரை வாரத்துக்கு கொடுப்பதும், கன்னியாக உள்ள மகளைத் தந்தை தன் மடியில் அமர வைத்து மணமகனிடம் தானமாகக் கொடுப்பதும் இந்தச் சொற்களின் பொருள். இத்திருமண முறைகளில் எங்கேனும் பெண் ஒரு ஜீவனாகக் கருதப்படுகின்றாளா? அன்று அமெரிக்காவில், ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக விற்கப் பட்டதைப் போல, இங்கு பெண்கள் தானமாகக் கொடுக்கப்படுவதைத் திருமணம் என்று எப்படிச் சொல்வது என்று கேட்டார் பெரியார்.

அப்படித் தானமாகக் கொடுக்கப்படுவதால்தான், கணவன் என்ன செய்தாலும் அதை பொறுத்துக்க கொண்டு மனைவி குடும்பம் நடத்த வேண்டும் என்ற நிலை இங்கு இருந்தது. இன்றும் பரவலாக இருக்கவே செய்கிறது. அது மட்டுமல்லாமல், மனைவி இறந்துபோனால், கணவன் மறுமணம் செய்துகொள்ள எ ந்தத் தடையும் இங்கு இல்லை. ஆனால் கணவன் இறந்து போனால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும் அல்லது காலமெல்லாம் கைம்பெண்ணாக (விதவை) இருக்க வேண்டும் என்பதுதானே சமுதாய விதி! முன்பெல்லாம் குழந்தைத் திருமணங்கள் (பால்ய விவாகம்) நடந்தன. 5,6 வயதில் அந்தக் 'கணவன்' இறந்துவிட்டால், இரண்டு அல்லது மூன்று வயதில் உள்ள அந்த 'மனைவி' காலமெல்லாம் விதவைக் கோலத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் சமூகம் கட்டாயப்படுத்தியதே! என்ன கொடுமை இது!

இவைகள் எல்லாம் சுயமரியாதைத் திருமணத்தில் இல்லை என்பதைச் சற்றுக் கடுமையான சொற்களிலேயே கூறுகின்றார் பெரியார். " சுயமரியாதைக் கலியாணத்தில் இவ்வித அக்கிரமும், அயோக்கியத்தனமும், அறியாமையும், கொடுமையும், மூர்க்கத்தனமும், காட்டுமிராண்டித்தனமும் இல்லை" என்பது அவருடைய கூற்று.

சுயமரியாதைத் திருமணம் என்பது கருத்தொருமித்த இருவரிடையே ஏற்படும் ஓர் ஒப்பந்தம். அவ்வளவுதான். ஒருவருக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் மற்றவருக்கும் உண்டு என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாரம். அந்த உறுதிமொழியை அவையோர் முன்னிலையில் ஏற்றே அவர்கள் இருவரும் சம உரிமை உள்ள வாழ்விணையர் ஆகின்றனர். ஆதலால், மனம் ஒவ்வா இடங்களில் மணமுறிவும் அங்கே ஏற்கப்பட்ட ஒன்றாகும். "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" என்ற விதி எல்லாம் சுயமரியாதை உலகில் செல்லுபடி ஆகாது. மறுமணம் என்பதும் இருவருக்கும் பொதுவானதே. சுருக்கமாகச் சொன்னால், ஆணும் பெண்ணும் சமம் என்பதே, சுயமரியாதைத் திருமணத்தின் முதல் அடித்தளம்.

சரி போகட்டும், சமற்கிருத மந்திரங்கள் திருமணத்தில் ஓதப்படுவதை பெரியார் ஏன் எதிர்த்தார் என்று கேட்கலாம். அந்த மந்திரங்கள் பிற மொழியில் உள்ளன என்பதால் மட்டுமின்றி, அவற்றின் பொருள் நம் பெண்களை மானக் கேட்டிற்கு உள்ளாக்குகிறது என்பதாலும் அவர் அதனை எதிர்த்தார். இதோ அந்த மந்திரம்;

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விதித உத்தர

த்ருதீயோ அக்நிஷ்டே பதி துரியஸ்தே மனுஷ் யஜா"

இந்த மந்திரத்துக்கு என்ன பொருள் என்று சமஸ்கிருதம் தெரிந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். சுயமரியாதைத் திருமணத்தின் தேவையும் பெருமையும் என்னவென்று நமக்குப் புரியும்!

ஆனாலும், சுயமரியாதைத் திருமணத்தைப் புதுமை என்றோ, புரட்சி என்றோ பெரியார் கூறவில்லை. "சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும், அனாவசியமான அதிகச் செலவும், அதிகக் காலக்கேடும் இருக்கக் கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும்" என்று தெளிவாக எடுத்துரைத்தார் பெரியார்.

அவர் சொன்னதில் எந்த மிகையும் இல்லை. பழந்தமிழ் நாட்டில் நடைபெற்ற திருமணங்கள் பெரிதும் இப்படித்தான் நடந்துள்ளன. சங்க இலக்கியமான அகநானூறு என்னும் நூலின் 86 மற்றும் 136 ஆம் ,பாடல்களில் திருமணம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் மந்திரங்களோ, வேள்விகளோ நடைபெற்றதாக ஒரு குறிப்பும் இல்லை. மங்கல மகளிர் போன்ற சில சொற்கள் காணப்படுவது உண்மைதான். அப்படிப் பெண்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கும் சுயமரியாதைத் திருமணத்தில் இல்லை.

சுயமரியாதைத் திருமணங்கள் அடிப்படையில் மூன்று நோக்கங்களைக் கொண்டவை என்று சொல்லலாம்.

1. பெண்களுக்கான சமத்துவம்

2. தேவையற்ற சடங்குகள், வடமொழி மந்திரங்களைத் தவிர்த்தல்.

3. பொருளையும், காலத்தையும் வீணடிக்காதிருத்தல் மேலும் பல சிறு பயன்பாடுகள் உள்ளன என்றாலும், இவை மூன்றுமே முதன்மை வாய்ந்தன என்று கூறலாம்.

தொடக்கம் முதற்கொண்டே, பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்குச் சு.ம. இயக்கம் எதிர்க் குரல் கொடுத்து வந்தது. இது ஒரு சாதியச் சமூகம் என்பதால், சாதியின் பெயரால் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். கூடுதலாக, ஒவ்வொரு சாதியிலும் உள்ள பெண்கள் ஆண்களாலும் ஒடுக்கப்பட்டனர். எனவே இருவிதமான ஒடுக்குதல்களுக்கு ஆளாகியுள்ள பெண்களுக்கு ஆதரவாகச் சு.ம.இயக்கம் குரல் கொடுத்தது. பெண்களின் உரிமைகளுக்காகப் பெரியாருக்கு முன்பாகவே அறிஞர்கள், கவிஞர்கள் பலர் எழுதியும், பேசியும் உள்ளனர் என்றபோதிலும், அவர்களெல்லாம் அதற்காக ஓர் இயக்கம் கட்ட முயன்றதில்லை. சு.ம. இயக்கமே தமிழகத்தின் முதல் பெண்ணுரிமை இயக்கமாக விளங்கியது என்று கூறலாம்.

குறிப்பாக, திருமணம் என்று வரும்போது பெண்கள் மீதான ஒடுக்குமுறை பலமடங்கு உயர்வதை நாம் பார்க்க முடியும். திருமணத்தை முன்னிறுத்தியே, ஒரு பெண் பருவம் எய்தியதும், பெற்றோர்களும், உறவினர்களும் பாதுகாப்பு என்ற பெயரில் அடக்குமுறைகளைத் தொடங்கி விடுகின்றனர். பருவம் எய்துதலை ஒரு சடங்காகவே ஆக்கி, அன்றிலிருந்து அவளின் பொதுவெளி குறைக்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன், பருவம் அடைந்தவுடன் அந்தப் பெண்ணின் பள்ளி வாழ்க்கை முடிந்து போகும். வெளி நடமாட்டம் குறைந்து போகும். திருமண ஏற்பாடுகள் தொடங்கியதும், அவளுடைய அனைத்து நடவடிக்கைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

ஒரு பெண்ணைக் காட்சிப் பொருளாக்கி, "பெண் பார்க்கும் " படலம் தொடங்கும். சமைக்கத் தெரியுமா என்ற கேள்வியில் தொடங்கி, ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா என்று ஆயிரம் கேள்விகள் அணிவகுக்கும். சில இடங்களில், "பெண்ணைக் கொஞ்சம் நடக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்று நடக்கச் சொல்லி, கால்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்வதும் உண்டு. எல்லாம் சரியாக இருந்தால், பிறகு "வரதட்சிணை" என்னும் பெயரில் 'வியாபாரம்' தொடங்கும்.

இந்த அவலங்கள் எல்லாம் இன்றும் முழுமையாக ஒழிந்து விடவில்லை. இவற்றை எல்லாம் 80, 90 ஆண்டுகளுக்கு முன் எதிர்ப்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்! அந்தத் துணிச்சல் சுயமரியாதை இயக்கத்திற்கு இருந்தது! (தொடரும்) subvee blog 03 09 2016