திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 41

20 07 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 41

சென்னையில் ஈ.வெ.ரா. சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு

சென்னை, பெத்துநாயக்கன்பேட்டைத் தமிழர் கழகத்தின் ஆதரவில் 14-11-1938 அன்று நடைபெற்ற 5000 மக்கள் கொண்ட பொதுக் கூட்டத்தில் பெரியார் ஈ.வெ. ராமசாமி பேசியதாவது :

தாய்மார்களே! தோழர்களே! அருமைச் சிறுவன் லூர்து சாமியும், சகோதரி பார்வதியம்மையாரும் பேசிய பேச்சு என் மனதை உருக்கிவிட்டது. அதனால் நான் பேசக்கருதியிருந் ததை மறந்தேன். நிற்க. காலை நடைபெற்ற சம்பவம் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற 5 தாய்மார்கட்கும், 2 தொண்டர் கட்கும் 6 வாரம் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஒரு முத்துக்குமாரசாமிப் பாவலருக்கு 18 மாதம் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே இந்த நாள் மிக வன்மத்துடன் மனதில் வைக்க வேண்டிய நாளாகும். உண்மையுடன் சிறை செல்பவருக்கு அங்கு ஒருவித கஷ்டமுமில்லை. கஷ்டமென்று நினைப்ப வர்க்கு வெளியில் கூடக் கஷ்டமாய்த் தானிருக்கும். என் அனுபவத்தில் 5, 6 முறை சிறை சென்றிருக்கின் றேன். 18 ஆண்டுகளுக்கு முன் நான் சிறைசென்ற காலத்து மூத்திரம் கழிப்பது, தண்ணீர் குடிப்பது எல்லாம் ஒரே சட்டியில்தான். அவ்வளவு கொடுமையாக இருந்தது. கேள்வி முறையில்லை. ஆனால் இன்றைய சிறையோ பெரிதும் மாற்றமடைந்துள்ளது. காங்கிரஸ்காரர் சிறை சென்ற காலத்துப் பெருங் கூச்சலிட்டு, வேண்டிய வசதி கள் செய்துவிட்டார்கள். அங்குள்ள சில அதிகாரிகள் ஒருவித வன்மத்துடன் பார்த்தால், சிறிது கஷ்டம். உண் மையாகவே நடப்பார்களானால் சிறை செல்பவர்கட்கு ஒருவிதத் தொல்லையும் இல்லை. சிறையில் வார்டர்கள் நேசிக்கிறார்கள். சில அதிகாரிகள் மட்டும் வகுப்பு கருதி நம்மை வெறுக்கின்றார்களெனக் கேள்விப்படுகின் றேன்.

கடின மனம் மாறும் விதம்

வீட்டில் ராஜாவாயிருந்தாலும் தினம் ஒரு குறிப் பிட்ட நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. சிறையில் ஏழையானாலும் நேரத்தில் உணவு; மணியடித்தால் சாப்பாடு (கைதட்டல்). அப்படிக் கஷ்டமென்றே வைத்துக் கொள்வோம். சாப்பாட்டை நினைத்தா சிறைக்குப் போகின் றோம்? காரியத்தின் மேலுள்ள ஊக்கம் உணர்ச்சி அல்லவோ நம்மைப் பிடித்துத் தள்ளுகிறது. யார்மேலும் கோபத் தாலோ அன்றி விரோதத்தாலோ நாம் சிறை செல்லவில்லை. தமிழர்கட்கு ஒரு சமூகத்தாரால் செய்யப்படும் இன்னல்களை, தொல்லைகளை ஒழிக்கவே செல்ல நேரிடுகிறது. நீங்கள் இந்தியை எதிர்ப்பது உண்மையானால், ஆயிரக்கணக்காகச் சிறை செல்ல வேண்டும். இந்நிலை யில் கவர்னர் கெட்டவருமல்ல; அவ்வளவு முட்டாளு மல்ல. அவருக்கு இன்னும் தமிழர்கள் இந்தியை உண் மையில் எதிர்க்கின்றார்களா என்பது சந்தேகமாக விருக்கின்றது. எனவே அவருக்கு நன்றாகத் தெரிவிப் பதற்காக, பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை செல்ல வேண்டும். பட்டினி கிடக்கச் செல்ல வேண்டும். ஒரு சிறிதும் நன்மை கேட்கக் கூடாது. இந்த உணர்ச்சி தமிழர்கட்கிருந்தால் அவர்களது கடின மனம் மாறும். தோழர் ஆச்சாரியார் புத்திசாலி. அவர் மனத்தில் இன்னும் படவில்லை. அவர் கூறுகின்ற மாதிரி, நீங்களும் சில சமயங்களில் உணர்ச்சி மிகுதியில் நானே தான் என்று கூச்சல் போட்டு விடுகின்றீர்கள். இந்தி எதிர்ப்பை விட்டு ராமசாமி ஓடினாலும் நாங்கள் விடப்போவ தில்லை என்று காட்டினீர்களானால் அவர் இந்தியை விட்டுவிடுவார்.

ஆச்சாரியாருக்கு நடுக்கம்

இன்று பெண்கள் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேட்டவுடன் ஆச்சாரியருக்கு நடுக்கமேற் பட்டிருக்கும். மேலும் அவர்கள் உற்சாகத்துடன் சிறைக் குச் சென்றனர் என்பதைக் கேட்க அளவுக்குமீறி நடுங்கி இருப்பார். இன்று கோர்ட்டில் தாய்மார்கள் இந்தி ஒழிய வேண்டும் - அல்லது நாங்கள் ஒழிய வேண்டும் என வீரத்துடன் பதில் கொடுத்தார்கள். ஆனால் ஆச்சாரியார் இனி வேறு பெண்களில்லை எனச் சமாதானப்பட்டிருப்பார். யாராவது துர்மந்திரிகளும் அவ்வளவுதான்-இனிப் பெண்கள் வரமாட்டார்கள் என்று கூறியிருப்பார்கள். இல்லாவிட்டால், நான் பழகியவரை ஆச்சாரியார் இப்படிக் கவலையில்லாதிருக்கமாட்டார். மேலும் 2, 3 சாமியார்கள் தான் இருக்கிறார்கள்; சிலர் தான் எதிர்க் கின்றார்கள் என்று அவர் கருதக் கூடாது. அதற்காவன நீங்கள் செய்ய வேண்டும். தோழர் பொன்னம்பலம் அவர்கள் கூறியதுபோல். ஒன்றரை ஆண்டில் 4.5 கோடி கடன் வாங்கிவிட்டனர். அதைப் பார்த்து கவர் னருக்கு இப்பொழுதுதான் சிறிது தலை வலிக்க ஆரம் பித்திருக்கின்றது. இது 2 நாளில் நின்றுவிடும் என ஆச்சாரியார் நினைக்கின்றார்.

நாட்டில் இந்நிலையை அவர் உண்டாக்கி இருக்கா விட்டால், இவர்கள்-எனது தாய்மார்கள் முன் வந்திருப் பார்களா? தாய்மார்கள் வந்து எங்கட்குப் புத்தி கற்பிக்க - ஊக்கமூட்ட - வேண்டுமென்றால் இது யாருடைய தர்மம்? தோழர் ஆச்சாரியார் அளித்தது தானே! அவர் அன்புடன் நல்கியது தானே! உண்மையோடு உழைப் பதன் மூலம் வெற்றியடைந்து, இனி தமிழர்களிடத்து ‘வால் நீட்டக்கூடாது’ என்ற எண்ணத்தை அவர்கள் அடையுமாறு செய்ய வேண்டும். தமிழர்கள் - தமிழ்ப் பெண்கள் - சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் அவர் கொடுமை செய்து வந்தார். இப்பொழுது சற்று யோக்கியமாக நடந்து வருகிறார். தமிழர்கள் வெறுப்பிற்குப் பயந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போல் இரகசியங்களில் காரியங்கள் செய்து வருகிறார். இன்றைய தாய்மார்களைப் போல் நாமும் நடந்தால் நமது தொல்லைகள் நீங்கும். சிறை செல்லச் சிறிதும் பயப்படக்கூடாது. இத்தகைய நிலையில் பெண்களைச் சிறையிட்ட அரசு எங்கும் கிடையாது. அரசாங்கத் திற்கு விரோதமாக ஏதாவது குற்றம் செய்தால், சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு. ஆனால் இன்றைய ராம ராஜ்யத்தில் தாய்மொழியிடத்து அன்பு கொண்டால் போதும்-உடனே சிறைத்தண் டனை. நமக்குப் பல காலமாகத் தொல்லை கொடுத்து வருவதோடில்லாது வீணே இன்று சிறை என்றால் என்ன நினைப்பது?

தமிழன் வாழ்வு அவருக்குப் பொறுக்கவில்லை

நேற்றுவரை சட்டமீறலைத் தவறெனக் கண்டித்து வந்தேன். பொதுமக்கள் மனதை அவ்வாறு வளர்க்கக் கூடாது என நினைத்து வந்தேன். இனி நீங்கள் சிறைக் கூடத்தை மாமனார் வீடுபோலவும், படுக்கையறை போவும் எண்ணிச் செல்லுங்கள். நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை. ஒருவரை வையவோ அன்றி அடிக்கவோ வேண்டுவதில்லை. ‘தமிழ் வாழ்க’ என்றால் போதும் உடனே ‘தம்பி! வா’வென ஆச்சாரி யார் அழைத்துக் கொள்ளுவார். நான் பிழைக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்; எதிரிகள் சாக வேண்டுமென நினைக்க வேண்டாம். தமிழன் வாழ்வு அவர்கட்குப் பொறுக்கவில்லை. என்றென்றும் நம்மை அடக்கி அடிமைப்படுத்தி ஆளவே விரும்புகின்றார்களென்று சென்ற 20 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றேன். பனகல் அரசர் வெற்றி பெற்ற காலத்துப் ‘பனகல் இறந்தார்’ என ஒரு செய்தியைப் பரப்பிப் புகையிலை வழங்கினர். ஜஸ்டிஸ் மந்திரி களை இராட்சதர்களென்றும், அரக்கர்கள் என்றும், இராவணர் என்றும் கூறினர். ஆனால் இன்று ‘உச்சிக் குடுமி ஒழிக’ எனத் தொண்டர்களேக் கூறினார் களென்று ஆச்சாரியார் தனது உச்சிக்குடுமியைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறார். உச்சிக்குடுமி ஒழிக என்றால், என்ன? உச்சிக்குடுமித் தன்மை தானே ஒழிய வேண்டுமென்பது-இதற்கு இவ்வளவு ரோஷம் வருவானேன்? சிறிதாவது ஞானம் வேண்டாமா? அன்று ‘சரிகைக் குல்லாய் ஒழிக’ என்று இவர்கள் சொல்லவில்லையா? 2000 - தர்ப்பையோ அன்றி உச்சிக்குடுமியோ ஒழிக என்றாலும் ஒரு அரக்கன் ஒழிய என்றதற்குச் சரியாகாதே! (கைதட்டல்). பிறன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான், இராவணன் என்று எதை எழுதி வைத்து, அந்தப் பெயரால் தமிழர்களை அழைக்கும் போது உச்சிக் குடுமி, டவாலி, தர்ப்பை ஒழிக என்றால் என்ன? அத் தன்மைகள் ஒழிய வேண்டும் என்பதுதானே பொருள்.

விநோத சாட்சியம்

இன்று காலை, கோர்ட்டு நடவடிக்கைகளை நேரில் கவனித்தேன். ஒரு சாட்சியம் கூறும் சப்-இன்ஸ்பெக் டர் தாய்மார்கள் கூறாதவற்றைச் சேர்த்துக் கூறுகின் றார். அவரது மயிர்க்காம்பிலுள்ள ஒவ்வொரு துளி இரத்தமும் நம்முடைய உழைப்பினால் கிடைத்த பணத்தினால் ஊறியது என்பதை நினைக்கவில்லை. அவர் என்ன செய்வார்? மேலே உள்ளவர்களின் தயவுக்காகக் கிளிப்பிள்ளை போல் கூறுகிறார். அது பற்றி நமக்குக் கவலையில்லை. இதுதானா சத்திய ஆட்சி, ராமராஜ்ய ஆட்சி, காந்தியின் அகிம்சா ஆட்சி எனக் கேட்கின்றேன். எனக்குச் சத்தியத்தில் சிறிதும் நம்பிக்கையில்லை. ஆனால் உண்மைக்கு மதிப்புக் கொடுக்கின்றேன். சத்தியம் என்று நினைத்தால் பழுக்கக் காய்ந்த கொழுவை உருவலாம் என்றும் பண்டைப் பெண்கள் மணலைச் சோறு ஆக்கியிருக்கின்றனர் என்றும் கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதே கொழுவை இன்று சத்தியத்தில் நம்பிக்கையுள்ள சத்திய மூர்த்தியாலும் உருவ முடியாது. அல்லது காந்தியாலும் முடியாது (கைதட்டல்). எனவே எனக்கு அதில் சிறிதும் நம்பிக்கையில்லை. இன்று தாய்மார்கள் எந்தப் பையனை அல்லது உபாத்தியாயரைக் காலைக் கட்டிப் பள்ளிக்கூடத்திற்குப் போகக் கூடாதெனத் தடுத்தனர். ஆனால் சென்ற ஆண்டு காங்கிரஸ்காரர்கள் கிராம்பு மறியலில், கப்பலை விட்டு மூட்டைகளை இறக்கக் கூடாதெனத் தடுத்தனர். மூட்டை ஏற்றிய வண்டியை ஓட்டவிடாது சக்கரத்தின் கீழ்படுத்துத் தடுத்தனர். கடை யில் விற்கக் கூடாதென்றும், வாங்க வருபவர்களையும் தடுத்தனர். இதற்குக் காங்கிரஸ் மந்திரிகள் உத்தரவு கொடுத்தனர். தொண்டர்களைப் பாராட்டினர். அதை விட ‘இந்தி ஒழிக’ என்று கூறுவது தவறானதா? இந்தி உண்மையில் ஒழிந்துவிட்டது. செத்த பாம்பை ஆச்சாரி யார் ஆட்டுகிறார். இந்தி எதிர்ப்பாளர்கள் என்ன செய் தார்கள்? அவர்களுக்கு 18 மாதம், 2 வருஷம் தண்டனை விதிக்கப்படுகின்றது.

மனம் மாறாவிட்டால்....?

உண்மையில் சொல்லுகிறேன் தினம் 5 பேர் வீதம் பெண்கள் ஒரு மாதம் தொடர்ச்சி யாகச் சென்றால் கட்டாயம் ஆச்சாரியார் நிலை மாறும். மாறாவிட்டால் தமிழர்கள் இரத்தம் கொதிக்கும்; உணர்ச்சி பெருகும். உதாரணமாகச் சென்ற வாரம் நான் திருவிதாங்கூர் சென்றிருந்த போது அங்கு நடைபெற்ற அடக்குமுறை காரணமாகத் தோழர் சி.பி. ராமசாமி அய்யர் எதேச் சையாக வெளியில் வர முடியவில்லை. பொதுமக்கள் மனத்தில் உண்டாயிருக்கும் கொதிப்பு கண்டு பயப்படு கிறார். இதைச் சமாளிக்க, சிறையிட்டவர்களையெல் லாம் வெளியில் திறந்துவிட்டார். மக்கள் மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மீண்டும் ஒரு வக்கீல் அம்மையார் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இதைப்பற்றித் தோழர் ராமசாமி அய்யரின் அடக்குமுறையைப் பற்றி எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது கண்டித்தெழுதிற்றா? கவர்னருக்கு பயந்து தேசியக் கொடி, மூவர்ணக் கொடியாயிற்று. இன்று காந்தியார் அக்கொடியைக் கண்ட இடத்தில் கட்ட வேண்டாம்; யூனியன் ஜாக் இருந்தால், அவிழ்த்து விடுங்கள் எனக் கூறுகிறார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே இன்னும் அதைத் தேசியக் கொடியென்றே பொய் சொல்லி வருகின்றனர். முஸ்லீம் கள் எதிர்ப்பிற்குப் பயந்து வந்தேமாதரம் கைவிடப்பட்டது. விசுவபிராமணருக்குப் பயந்து விசுவகர்மா உத்தரவு நீக்கப்பட்டது. பேரிச்செட்டிகளுக்குப் பயந்து, தணிகாசலம் ரோடின் பெயர் மாற்றம் தள்ளப்பட்டது. வக்கீல்கள் எல்லாம் சேரவே பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமன உத்தரவு பின்வாங்கிக்கொள்ளப்பட்டது. 1500 ரூபாய் சம்பளம் வாங்கி வந்த மாகாண அதி காரியைத் தள்ளி வைத்தனர். நமக்கு உண்மையான உணர்ச்சியிருக்கின்றதென்று தெரிந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது அவர்கட்குத் தெரியும். சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வார் கள். எதற்கும், அவர்கள் பார்ப்பார்களல்லவா! (கைதட்டல்)

ஒரு கதை

நிற்க. சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால் நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந் தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந் தார். ‘தேங்காய் மூடி’ என்று அவரை ஒருவர் அழைத் தால் போதும் உடனே கோபம் வந்துவிடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல் இன்று யார் சொன்னாலும் போதும், ஆச்லரி யார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன், இனி தேங்காய் மூடி என்றாலே போதும், அவர் நிச்சயம் வருவார் (கைதட்டல்). ஏன்? அவர் ஒரு பைத்தியக்காரர். உங் களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையைப் பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித் தால், நான் அடிக்கடி இங்கு வரவேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக் கதை. நமது நண்பர் இராமநாதன் ஆச்சாரியார் பக்கத்தி லிருந்து கொண்டு ‘நெருப்பு சிலீரென்றிருக்கிறது’ என்று கூறிவருகின்றார். அவருக்கும் சுட்டால் தெரியும். இன்று சென்ற தாய்மார்களைப் போல் நாளையும் தொடர்ந்து நடக்குமென்று நம்புகிறேன். தொண்டர்களும் கருத்து வேற்றுமைகளை விளக்கிக் கூறிவந் தால், இரண்டு கட்சிகளிலும் சேராது பொதுவிலிருக் கின்றவர்களும் இதலீடுபடுவார்கள். நாம் சொல்லும் காரணங்களைப் பார்த்து நம்மிடத்துக் குற்றமில்லை என்றால், தானே வருகின்றார்கள். 75 ரூபாய் வாங் கும் சில பெரியோர்களுக்குக்கூட இன்றைய நிகழ்ச்சி யால் மனமிளக்கம் ஏற்பட்டிருக்கும்.

தூங்கினால் தலையெடுக்க முடியாது

ஒரு எம்.எல்.சி. கூறினார் : ஆச்சாரியை விட டாக்டர் ராஜன் செய்வது பிடிக்கவில்லையென்று. நம்மைப் பற்றியும், நம் தாய்மார்களைப் பற்றியும் பல பத்திரி கைகள் கேவலமாக எழுதி வருவது எனக்குத் தெரியும். கொச்சி திவான் தோழர் சண்முகம் செட்டியார்யாராலும் செய்ய முடியாத பொறுப்பாட்சியை வழங்கி சுதேச சமஸ்தானங்கட்கு வழிகாட்டினார். இதைச் செய்ய மற்ற திவான்கள் பயப்படுகிறார்கள். செட்டியார் சிறந்த அரசியல் அறிவாளி. அவரைப் பற்றி ஒரு சமயம் ஒரு குரங்குப் பத்திரிகை அவர் சாதியை இழித்து ‘செக்கு’ப் படம் போட்டுக் கேலி செய்திருந்தது. ஆனால் இன்று திரு விதாங்கூரில் ஒரு அய்யர் அமளிப்படுத்துகின்றார். பார்ப்பனப் பத்திரிகைகள் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாமல் செக்கோவைப் பற்றியும், ஸ்பெயின், சீனாவைப் பற்றியும் உருகித் தலையங்கம் எழுதுகின்றன. இந்தச் சமயம் தூங்கிவிட்டார்களானால், இனி என் றென்றைக்கும் தலையெடுக்க முடியாது. தமிழர்களைப் பற்றிப் பேச, சட்டசபையில் சர். பன்னீர்செல்வம் 6 தடவை எழுந்தார். ஆனால் அவரைப் பேச விடாது அடக்கி விட்டனர். நிற்க. இன்று “விடுதலை” மேல் தொடுக்கப் பட்டிருக்கும் வழக்கில் வாதாட, பிரத்யேகமாக பல ஆயிரக்கணக்கான செலவில் தோழர் எத்தி ராஜைக் கோவைக்கு அனுப்பியிருக்கின்றனர். ஏன்? கோவையில் தகுந்த வக்கீலில்லையா? “விடுதலை”யை எப்படியாவது அழித்துவிட வேண்டு மென்றுதானே எண்ணம். எனவே இன்று ‘விடு தலை’ மயிர்ப்பாலத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வழக்கில் நம்மவர் தோல்வியடைந்தால், நம்பின் சந்ததியின் கதி என்னாவது? தனிப்பட்ட முறையில் எங்கட்கு என்ன வேண்டும்? எங்கள் வாழ்க்கையை ஊரிலிருந்தே எங்களால் நடத்த முடியாதா? அல்லது தோழர் இராமநாதனைப்போல் ஆச்சாரியாரிடம் நான் சென்றால், எனக்கு ஒரு மந்திரி பதவி கிடைக்காதா? எனது காரோட்டிக்கு ஒரு மந்திரி பதவி கொடு என்றால் ஆச்சாரியார் கொடுக்க மாட்டாரா? ஆகவே நாமனைவரும் ஒற்றுமையுடன் பாடு பட்டால் தான் வெற்றியடைய முடியும். நம்மை சூத்திரன் என்றும், தாசிமகனென்றும் பலவிதத்தில் இழித்துக் கூறிவரும் அவர்களை, இன்றும், ‘சாமி இட்லி கொண்டு வா’ என்று தானே கேட்கின்றோம். நாட்டை யாராண்டாலும் நமக்குக் கவலையில்லை. நமக்கு வேண்டியது நன்மையே. எனவே நான் கூறியுள்ளவைகளை ஆராய்ந்து பாருங்கள். இன்று சென்னையை, ஏன் தமிழ் நாட்டையே சிறப்பித்த - தமிழ்ப்பெண்களின் வீரத் தை இந்தியா முழுவதும் அறியச் செய்த தாய்மார் களைத் தொடர்ந்து அவர்களுக்குக் கௌரவ மளிக்க வேண்டுகிறேன் (நீண்ட கைதட்டல்). (குடிஅரசு 27-11-1938) - தொடரும்  சிந்தனையாளன் aug 2016