சுயமரியாதை - 25 ரௌலட் - சாஸ்திரி சட்டம்

25 07 2018

சுயமரியாதை - 25 ரௌலட் - சாஸ்திரி சட்டம்

பிரித்தானிய அரசினால் 1918ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி ரௌலட் தலைமையிலான குழு அளித்த வரைவறிக்கையினை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமே ரௌலட் சட்டம் என்று வழங்கப்படுகிறது. 'இந்திய அரசியல் பயங்கரவாதம்' உருவாகி வருவதாக எண்ணிய ஆங்கில அரசு, அதனைத் தடுப்பதற்காகவே அச்சட்டத்தைக் கொண்டுவருவதாகக் கூறியது. ஜெர்மனானிய அரசு மற்றும் ரஷ்ய போல்ஷ்விக்குகள் இந்தியாவிற்குள் பயங்கரவாதம் பரவுவதற்கு முயற்சிகள் செய்வதாகவும், குறிப்பாக, வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அவர்கள் ஊடுருவி இருக்கக்கூடும் என்றும் கருதிய பிரிட்டிஷ் அரசு அச்சட்டத்தைக் கொண்டுவந்தது. நீதிபதி சிட்னி ரௌலட் குழுவில் அவர் உட்பட அறுவர் இருந்தனர். அவர்களுள் முதன்மையானவர், இந்தியரான திவான் பகதூர் சி.வி.குமாரசாமி சாஸ்திரி. அவரே அந்தச் சட்டத்தின் வரைவை முதலில் எழுதியவர். அது ஒரு கறுப்புச் சட்டம் என்றும், ஜனநாயக விரோதச் சட்டம் என்றும் காங்கிரஸ் அதனை வருணித்தது. ஆனால் விடுதலை பெற்றபின் இயற்றப்பட்ட பல சட்டங்கள் ரௌலட் சட்டத்தின் மறுபதிப்புகளாகவே இருந்தன - அண்மைக்கால தடா, பொடா வரையில்.

நீதிபதி சி.வி. குமாராசாமி சாஸ்திரியின் சகோதரி சீத்தம்மாளைத்தான் சர் சி.பி.ராமசாமி ஐயர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் மைத்துனர்கள். சி.பி.ஆர், 1917 ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் செயலாளர். பிறகு அரசு சார்ந்த சட்டத்துறைப் பொறுப்புகளிலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாகவும் இருந்தவர். அவருடைய பரிந்துரையில்தான் சி.வி.குமாரசாமி ரௌலட் குழு உறுப்பினராகிறார். ரௌலட் சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்புகிறது. குறிப்பாக பஞ்சாப், அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலா பாக் என்னும் பூங்காவில் மிகப் பெரிய துயர நிகழ்வு ஒன்று நடைபெறுகிறது. அச்சட்டத்தை எதிர்த்து அங்கு கூடிய மக்களின் மீது, வாயில் கதவை அடைத்துவிட்டு, ரெஜினால்ட் டயர் என்னும் காவல்துறை அதிகாரி, 1650 முறை துப்பாக்கியால் சுட ஆணையிடுகிறான். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகின்றனர். அரசாங்கத்தின் கணக்குப்படியே, 379 பேர் கொல்லப்பட்டதாகவும், 1170 பேர் காயப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அவ்வளவு பெரிய துயர நிகழ்வைக் காங்கிரஸ் அடுத்து வந்த மாநாட்டில் கண்டிக்கவில்லை. மக்கள் கற்களைக் கொண்டு காவல்துறையைத் தாக்கியிருக்கக் கூடாது என்று "நியாயம்" பேசியது. மக்கள் எதிர்ப்பு மிகுதியாக இருப்பதைக் கண்டதும், சாஸ்திரியின் பெயர் மொத்தமாக மறைக்கப்பட்டு, அது வெறும் ரௌலட் சட்டமாகப் பாடப் புத்தகங்களில் இன்று இடம் பெற்றுவிட்டது. இதனைத்தான், சைமன் குழுப் புறக்கணிப்பின் போது பெரியார் கேட்கிறார். "அன்று அந்தக் குழுவில் இந்தியர் ஒருவர் உறுப்பினராகத்தானே இருந்தார், என்ன ஆயிற்று?' என்று கேட்கிறார். இப்போதும் இந்தியர் ஒருவர் இடம்பெற்றிருந்தால் அவர் யாராக இருந்திருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே என்கிறார். "கமிஷனில் இடம்பெறக் கூடியவர்கள், ஏகபோக உரிமையாளர்களான பாப்பனர்களாகவே இருந்துவிடக்கூடும் என்கிறதை நினைக்கும்போது, அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்" என்று மிகத் துணிச்சலாகத் தன் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

அன்றைக்குப் பஞ்சாபில் நடைபெற்ற கொலை மற்றும் சித்திரவதைகளைக் கண்டிக்காமல், மக்களைக் குறை கூறிய பார்ப்பனர்கள், பெசன்ட் அம்மை போன்றவர்கள் இன்று 'இந்தியர் ஒருவர் இடம்பெறாததால் சுயமரியாதை போய்விட்டது என்பது கேலிக்கூத்தல்லவா' என்பது பெரியாரின் வாதம். வெள்ளையர்களின் சட்டசபைகளை ஏற்றுக்கொண்டு, நீதிமன்றத்திற்குப் போய் 'மை லார்டு' என்று சொல்லிக்கொண்டு, வெளியில் சுயமரியாதை பேசும் சுயராஜ்யக் கட்சியினர் போன்றவர்களைச் சற்றுக் கடுமையாகவே பெரியார் விமர்சிக்கிறார். "எதிரிகளுக்கு உளவாய் இருந்து கூலி வாங்கின இந்தத் துரோகிகள், வஞ்சகர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், அயோக்கியர்கள் இப்போது தங்களுக்குத் திடீரென்று சுயமரியாதை ஞானம் வந்துவிட்டதென்று சொன்னால், கடுகளவு மூளை உள்ளவனாவது இவற்றை நம்ப முடியுமா என்றுதான் கேட்கின்றோம்" என்று சொற்களால் அடித்துத் துவைக்கின்றார் அவர். (தொடரும்) xubveeblog  01 10 2016