சுயமரியாதை - 26 அரசியல் விடுதலை - யாருக்காக?

31 07 2018

சுயமரியாதை - 26 அரசியல் விடுதலை - யாருக்காக?

காங்கிரஸ் கட்சியின் சைமன் கமிஷன் எதிர்ப்பு போலித்தனமானது என்று பெரியார் கருதியதைப் போலவே அம்பேத்கரும் எண்ணினார். எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் சைமன் கமிஷன் முன்னிலையில் தன் கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும் என்று விரும்பினார். அவ்வாறே 1928 மே மாதம் 29 ஆம் நாள், மும்பை, தாமோதர் அரங்கில், சைமன் குழுவைச் சந்தித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை அவர் கோரினார். அவருடைய கோரிக்கையில் அட்டவணைச் சாதியினருக்கான கல்வித் தேவைகள் முதலிடம் பெற்றிருந்தன.உடனே அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் 'தேசபக்தர்கள்' சிலர் தேசவிரோதிகள் பட்டத்தை வழங்கினர். அது குறித்து இருவருமே கவலை கொள்கின்றவர்கள் இல்லை. அவர்களுக்கெல்லாம் முன்னோடியான ஜோதி ராவ் புலேவுக்கே அந்தப் பட்டம் அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறியாதவர்களா என்ன?

அடுத்த ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்திலும் சுயமரியாதை இயக்கம் கலந்து கொள்ளவில்லை. அதில் தனக்கும், தங்கள் இயக்கத்திற்கும் உடன்பாடில்லை என்றும் பெரியார் அறிவித்தார். முதலில் சத்தியம் போன்ற சொல்லே தெளிவற்றது என்று அவர் கூறினார். ஒருவருக்குச் சத்தியம் என்று படுவது, இன்னொருவருக்கு அசத்தியம் ஆகி விடலாம் இல்லையா என்றார்."மாட்டை அறுத்து அதன் மாமிசம் சாப்பிடுவது சத்தியமான தாகவும், நியாயமானதாகவும் மவ்லானா சவுகத் அலிக்குத் தோன்றலாம். அதைத் தடுக்க வேண்டியது சத்தியமாகவும், அதற்காக சத்தியாகிரகம் செய்ய வேண்டியது நியாயமாகவும் திரு காந்திக்குத் தோன்றலாம். இருவரும் கடவுள் பக்தர்கள், மத பக்தர்கள். இருவரும் சத்தியத்தில் நம்பிக்கை வைத்தே இந்தப்படி முடிவு காண்கிறார்கள். இதில் எது சத்தியம், அது அசத்தியம்?" என்று கேட்டார் பெரியார்.

எல்லா சாதியினருக்கும் ஒரே மாதிரி சத்தியம் இங்கு உண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். "மற்றொவன் சமைத்ததைச் சாப்பிடுவது பாவம் என்றும், மற்றொவன் தொட்ட தண்ணீரைக் குடிப்பது தோஷம் என்றும்.....பண்டித மாளவியா போன்ற 'உத்தம பிராமணர்களுக்குத்' தோன்றலாம். ஆனால் இந்தப்படி நினைப்பதே மகா அக்கிரமம் என்றும், ஜாதி ஆணவம் என்றும், அறிவீனம் என்றும், சுயநலம் என்றும், அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய நாடு ஒற்றுமையும், சமத்துவமும், முன்னேற்றமும் அடையாதென்றும், அதை ஒழிக்கச் சத்தியாகிரகம் பண்ணவேண்டும் என்றும் சமூகச் சீர்திருத்தக்காரர்களுக்குத் தோன்றலாம்" என்றும் தன் நிலைப்பாட்டைப் பெரியார் விளக்குவார்.இந்த அடிப்படையில்தான் நாடு முழுவதும் மிகப் பெரிய ஆதரவுடன் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தையும் அவர் எதிர்த்தார். எங்கள் உப்பை நாங்கள் பெறுவதற்கு வெள்ளையருக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் என்ற வினாவுடன் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. காந்தியாரின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தொலைவிலிருந்த 'தண்டி'யில் உப்பு எடுப்பதென்பதும், வெள்ளையரின் தடையை மீறுவதென்பதும், அப்போராட்டத்தின் அடிப்படை நோக்கம்.

1930 மார்ச் 12 ஆம் நாள் 79 தொண்டர்கள் பின்தொடரத் 'தண்டி யாத்திரை'யைக் காந்தியார் தொடங்கினார். தமிழ்நாட்டில், ராஜாஜி தலைமையில், வேதாரண்யம் நோக்கி யாத்திரை தொடங்கியது. வேதபாராயணம் முழங்க ராஜாஜி தன் யாத்திரையைத் தொடங்கியபோது, இது இந்தியாவிற்கான யாத்திரையா, இந்துக்களுக்கான யாத்திரையா என்று பெரியார் கேட்டார்.உப்பு வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனால் அதனைவிடத் தண்ணீர் மிக மிகப் பெரிய தேவையில்லையா? அந்தத் தண்ணீர் கூட இங்கு அனைவருக்கும் பொதுவாக இல்லையே ஏன் என்பது அவருடைய கேள்வி! "ஜீவாதாரமான தண்ணீரைக் கிணற்றிலிருந்து மொள்ள வொட்டாமல், சாதியின் பேரால் தடுக்கப்பட்டு எத்தனையோ லட்சம் மக்கள் இந்த ஜில்லாவில் வாட்டமுற்று, குட்டைகளிலும், பள்ளிகளிலும் தேங்கி கிடக்கும் அசுத்த நீரைக் குடித்து நோய்வாய்ப்பட்டு வருந்துகின்றனரே, அவர்களுக்கு என்ன செய்தீர்கள்?" இவைதான் பெரியார் முன்வைத்த வினாக்கள். சமூக விடுதலை பற்றிக் கவலைப்படாதவர்கள் அல்லது சமூக அநீதியை ஏற்றுக் கொள்பவர்கள் பெற விரும்பும் அரசியல் விடுதலை யாருக்குப் பயன்படும் என்ற ஆழ்ந்த கவலையின் வெளிப்பாடே அவரது எழுத்துகளாக வெளிப்பட்டன. 

(தொடரும்) subveeblog 04 10 2016